ஹிந்துக்கள் திருந்துவது எப்போது?
நம் நாட்டிலேயே, அதிக திருக்கோவில்கள் உள்ள தமிழகத்தில், ஹிந்து கடவுள்கள், ஹிந்துக்களாலேயே அவமதிக்கப்படுகிறது. ஹிந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது, ஹிந்து தானே தவிர்த்து, பிற மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என சிந்தித்தால், ஹிந்துக்களில் பெரும்பாலானோர், தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே, ஹிந்துவாக, ஹிந்து கடவுள்களை வழிபாடு செய்கின்றனர். மற்றதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. அத்தகையவர்கள் தான், பிள்ளையாரை ரோட்டில் போட்டு உடைத்தாலும், அருகே போனாலும், ஏன் என்று தட்டி கேட்க மாட்டார்கள்.
சுயநல வழிபாடு
ஆனால், பிள்ளையாரை வழிபடுவதை விட மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களுடைய சுயநலத்திற்காக நடைபெறும் வழிபாடாக இருக்கும். அதுபோல, எந்த ஹிந்து சுவாமிகளை அவமதித்தாலும், இவர்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு சுயநலவழிபாடே முக்கியம்; அது தான், இறைவனை வழிபடும் இலக்காக இருக்கும்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எவ்வளவு கூட்டம்... மலையப்பரை பார்க்க, ஐந்து நாட்கள் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். எங்கும் பக்தி பிரவாகம், ஊற்றெடுத்து ஓடுகிறது. எனினும், அது சுயநலமே தவிர்த்து, ஹிந்து மத மேன்மைக்காகவோ, ஹிந்து சமய உயர்வுக்காகவோ இருக்காது.
அதுபோல, 40 வருடங்களுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளிவந்த, காஞ்சிபுரம் அத்தி வரதரை பார்க்க லட்சம் பேர் திரண்டனர்; நான்கைந்து கோடி பேர், அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.அப்படியே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண காட்சியை பார்க்கவும், கள்ளழகர் எதிர்சேவையை தரிசிக்கவும், கணக்கில் அடங்காத கூட்டம், ஆண்டுதோறும் கூடுவது வழக்கம். பொங்கல், தீபாவளி, மஹா சிவராத்திரி, ஸ்ரீராமநவசி, இப்படி கூறிக்கொண்டே போகலாம். இவ்வாறு, வருடத்திற்கு, 49 ஹிந்து பொது பண்டிகைகள் வருகின்றன. அவற்றில் எல்லாம், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திரளும். ஒரு நபருக்கு, 1 ரூபாய் கட்டணம் வைத்தால் கூட, ஓராண்டில், சில ஆயிரம் கோடி ரூபாய் சுலபமாக சேர்ந்து விடும்.
இந்த ஹிந்து பக்தர்களில், ஒரு சிலரை தவிர, நாட்டிற்காகவும், ஹிந்து சமயத்திற்காகவும், ஹிந்து சமயத்தை சேர்ந்தவர்களுக்காகவும் வழிபாடு செய்வோர் எண்ணிக்கை மிகக் குறைவே. தான் நன்றாக இருக்க வேண்டும்; தன் குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்று, இறைவனை வழிபடுவோர், 75 சதவீதம் பேர் இருப்பர்.மீதமுள்ள, 25 சதவீதம் பேர், தான், பொதுவாக, நாட்டிற்காக, தங்கள் சமயத்திற்காக வழிபாடு செய்பவர்களாக இருப்பர். ஹிந்துக்கள் என்று கூறி, ஹிந்து மதத்தை வழிபடுவோரிடம், ஹிந்து மதத்தின் மேன்மை பற்றி கேட்டால், பதிலளிக்கத் தெரியாது. அவரிடம் உள்ள ஹிந்து தன்மை, முழுக்க முழுக்க தன் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கோடை காலத்தில், வெயில் அதிகமாகும் போது, 'இறைவா, வெயில் குறைவாக இருக்க வேண்டும்; தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும்' என, பூஜைகள், ஹோமங்கள் மேற்கொள்வர். எனினும், அவர்களுக்கு, ஹிந்து மதம் மீது பெரிய பிடிமானம் எதுவும் இருக்காது.மழையில்லை என்று இறைவனை வேண்டி, விதவிதமான பூஜைகள் நடைபெறுகின்றன. எனினும், அந்த வழிபாடுகள் தானே, நம் மதத்தின் அடையாளம் என்ற எண்ணமே, அந்த ஹிந்துக்களிடம் கிடையாது.ஹிந்து கடவுள்களை வணங்கியபடி, ஹிந்து சமயத்தின் முக்கிய தலைவரை அல்லது மதகுருவை, சிறையில் பிடித்து தள்ளவும் செய்வர். ஹிந்துக்களின் ஓட்டுகள் மெஜாரிட்டியாக உள்ளதே என்பது பற்றி, ஆட்சியாளர்கள் பயப்பட மாட்டார்கள். பல கட்சிகளில், முக்கிய தலைவர்களாக ஹிந்துக்கள் தான் உள்ளனர்; அனைத்து கட்சிகளிலும், ஹிந்துக்கள் தான், அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனினும், அவர்களுக்கு ஹிந்து என்ற உணர்வும், ஹிந்து மத பற்றும் அறவே கிடையாது; ஆனால், பிற மதங்களில் அப்படியில்லை.
அவதுாறு பரப்புவர்
இவர்கள் தான் இப்படி என்றால், மேடை ஏறி, ஹிந்து சமயச் சொற்பொழிவாற்றும் பேச்சாளர்கள், ஏற்கனவே பேசிய சமய இதிகாசங்களையே மறுபடியும் மறுபடியும் பேசுவர். ஆனாலும், அவர்கள், ஹிந்துக்களுக்கு ஒன்று என்றால், ஹிந்து மதத்திற்கு ஒரு தீங்கு என்றால், அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்; கவலைப்பட மாட்டார்கள்.மதத்திற்கும், கோவிலுக்கும், மதத்தினருக்கும் தீங்கு ஏற்பட்டாலும், இதைத்தட்டி கேட்போர், ஹிந்து மதத்தில் இல்லை. அநேகமாக, சுயநலம் ஒன்றே குறிக்கோளாக உள்ளது. ஒரு சிலர், எதிர்த்து குரல் கொடுப்பர்.
அவரை, ஜாதியின் பெயரை சொல்லி, அவர் செய்யும் தொழிலை கூறி, கேவலமாக சித்தரித்து, அவதுாறு பரப்புவர். அவ்வாறு செய்வது, பிற மதத்தினர் இல்லை; நம் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் தான்.இது போகட்டும். கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை, நம்ம ஹிந்து கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு வேண்டியது, கோவில் உள்ளே இருக்கும் சுவாமி மட்டும் தான். அதில் உள்ள அவரின் சுயநலம் படி, கோவில் எக்கேடு கெட்டு போனாலும், நம்ம ஹிந்து கவலைப்பட மாட்டார்.
ஆனால், அந்த, அறநிலையத் துறை அதிகாரியும், ஹிந்துவாகத் தான் இருப்பார். எனினும் அவருக்கு, நம் மதம் பற்றிய புரிதல்கள் அதிகம் இருக்காது. மத வழிபாடு பற்றி அறிந்திருக்க மாட்டார். எனினும், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறையில் அந்த நபர் பணியாற்றிக் கொண்டிருப்பார்.இன்னும் சில கோவில்களில், அந்த கோவில்களை கொள்ளை அடிப்பதே, அங்கு பணியாற்றும் ஹிந்து - அறநிலையத்துறை அதிகாரியாகத் தான் இருப்பார். அந்த கோவிலில் கொள்ளை அடித்து, தன் சொந்த கோவிலுக்கு நிறைய செய்வார் அல்லது சொந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் கூட மேற்கொள்வார்.
சுவர் இருந்தால் தானே, சித்திரம் எழுத முடியும். நம் கோவில்களும், அதன் உள்ளே இருக்கும் கடவுள்களும், அவற்றிற்கு பூஜைகள் செய்வோரும் நன்றாக இருந்தால் தானே, நம் மதம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எல்லாம், நாம் கூறும் ஹிந்துக்களுக்கு கிடையாது.பக்தியை, இசையால் வளர்க்கும் பாடகர்கள் இருப்பர். அவர்கள் பாடல்கள் தான், கோவில்களில் தினமும் இசைக்கப்படும். அந்த பாடல்களை கேட்டாலே, மனதில் பக்தி பெருக்கெடுத்து ஓடும். அந்த பாடகருக்காவது, நம் மதம், நம் கடவுள்கள், நம் அறநெறி மீது நல்ல நம்பிக்கை இருக்குமா என்றால், பெரும்பாலும் இருப்பதில்லை.பணத்திற்காகவே பாடுவார். பணத்திற்காக, பிற மதக் கடவுள்களைப் பற்றியும் பாடல்கள் இசைப்பார். ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள்களை பற்றியும் பிறர் உருக பேசுவோர், பலர் உண்டு. அதற்காக, லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவார். எனினும், அவராவது, ஹிந்து மதம் நன்றாக இருந்தால் தானே, நம் பிழைப்பு ஓடும் என, நினைக்க மாட்டார். இன்னும் சொல்லப் போனால், தன்னைத் தானே, ஒரு கடவுள் போல அவர் நினைத்துக் கொள்வார். அவரை வணங்குவோர் பலர் உள்ளனர். அந்த வணக்கத்திற்கான காரணத்தை, வணக்கத்திற்கு உரியவர் அறிய மாட்டார்.எனினும், இப்படித் தான் ஹிந்து மதம், காலம் காலமாக நிலைத்து நிற்கிறது. ஹிந்துவாக பிறந்தவர், தான் எந்த ஜாதியை சேர்ந்தவர் என சொல்லிக் கொள்வதில் தான் பெருமை உடையவராக இருப்பார். ஆனால், பிற மதங்களில், எந்த ஜாதியில் பிறந்தாலும், தன் மதத்தை தான் முன்னிலைப்படுத்துவார்.
அசட்டுத்தனம்
சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை, சண்டைக்கு செல்லாத பாங்கு என, பல விதமாக, இந்த அசட்டுத்தனங்களுக்கு பெயர் வைத்துக் கொள்வர். பெரிய கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர், சாதாரண கோவிலில் பூஜை செய்யும் பூசாரியை மதிப்பதில்லை. அவரும் இறைவனைத் தானே பூஜிக்கிறார் என நினைப்பதில்லை. எனினும், நம் ஹிந்து மதம், வளர்ந்து கொண்டே வருகிறது. மதத்தின் மீது பிடிமானம் இல்லாதவர்கள்; மதத்திற்கு அச்சாணியாக விளங்கும் கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதை மறந்திருப்பர். இப்படித் தான் இருக்கிறது ஹிந்து மதம்.இனியாவது, மதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுள்களுக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும், மதத்திற்கும் கொடுங்கள். மதம் இருந்தால் தான், ஹிந்து கடவுள்கள் போற்றப்படுவர்.தவறு, பிற மதத்தினரிடம் இல்லை; நம் மதத்தினரிடம் தான் உள்ளது. அத்தகையோர் திருந்த வேண்டும்! தொடர்புக்கு: எஸ்.குலசேகரன் பத்திரிகையாளர்மொபைல் எண்: 98430 94550