தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்!

பெண்களின் தலையாய பிரச்னையான, முடி பராமரிப்பு குறித்து, சென்னை, பிரபல யுனானி மருத்துவர் தலத் சலிம்: முடி உதிர்வுக்கு மரபணு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்னைகள் என, பல காரணங்கள் இருக்கலாம். ஆரோக்கியமான முடி வேண்டும் என்றால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எனினும், குளிக்கும் தண்ணீரில் அதிக ரசாயனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறு முதல், எட்டு வாரங்களுக்கு ஒரு முறை, முடியை நுனியில் டிரிம் செய்ய வேண்டும். முடி, புரதத்தால் ஆனது. முடி ஆரோக்கியமாக இருக்க, அதிக புரதச் சத்துகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, பச்சை கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கீரையில், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி, இ, இரும்புச்சத்து, ஒமேகா - 3, பேட்டி ஆசிட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. அதுபோல, பாதாம், வால்நட் ஆகியவற்றுடன், வைட்டமின் - டி சத்துகளும் கொடுக்க வேண்டும். வைட்டமின் பி - 12 குறைபாட்டால், இளநரை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இளநரை உள்ளவர்கள், பி - 12 மாத்திரை, டானிக் எடுத்துக் கொள்ளலாம்.அசைவம் சாப்பிடுவோர், ஆட்டு கல்லீரல் சமைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலை, நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி இலை, சின்ன வெங்காய சாறு எடுத்து, எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால், இளநரை பிரச்னை தீரும். அதுபோல, காபி, டீ போன்றவற்றை நிறைய குடிக்காமல், ஒரு நாளைக்கு, ஒன்றிரண்டு கப் குடித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும். எனினும், காபி, டீக்கும், முடிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.முடி ஆரோக்கியமாக செழித்து வளர, தேங்காய் பாலை தலையில் தேய்த்து, அரிசி களைந்த தண்ணீரால் முடியை அலசி வர வேண்டும். மேலும், வெங்காயம், பூண்டு, நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, பேஸ்ட் ஆக்கி, தலையில், முடியில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து அலசி விட வேண்டும்.வெங்காயத்தில் சல்பர் நிறைந்திருப்பதால், பொடுகுத் தொல்லை தீரும்; முடி வளர்ச்சிக்கு பாதிப்பான நுண்ணுயிரிகளை கொல்லும்.மேலும், வாரத்திற்கு இருமுறை தலையில் தயிர் தேய்த்து, ஆப்பிள் சிடார் வினிகர் தடவி, ஆன்டி டான்ட்ரப் ஷாம்பு பயன்படுத்தி, தலையை அலசி குளிக்க வேண்டும்.சிலருக்கு தலையில் பேன் தொல்லை அதிகம் இருக்கும். அத்தகையோர், ரசாயன திரவங்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து, தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, நன்கு அலசி விட, படிப்படியாக பேன் தொல்லை தீரும்!
No comments:
Post a Comment