ஆல் இஸ் வெல்
நன்றி: அவள் விகடன் - 25 Aug, 2015
நன்றி: அவள் விகடன் - 25 Aug, 2015
‘வெர்பல் அப்யூஸ்’...வெறுத்து ஒதுக்குங்கள்!
சமீபத்தில் என்னிடம் ஒரு கல்லூரி மாணவியை, அவள் தோழி அழைத்து வந்திருந்தாள். ‘‘ஃபேஸ்புக்ல இவளை, இவ பாய்ஃப்ரெண்ட், கீழ்த்தரமான வார்த்தை சொல்லித் திட்டிட்டான். அதனால ரொம்ப அப்செட்டா இருக்கா’’ என்று தோழி சொல்ல, ‘‘என்னால அந்த வார்த்தையைத் தாங்கிக்கவே முடியல. எப்படி அவ்வளவு கேவலமான வார்த்தையால அவன் யோசிக்காம என்னை எல்லார் முன்னிலையிலும் திட்டலாம்? அவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? ‘கோபத்துல சொல்லிட்டேன்’னு அப்புறமா அவன் எங்கிட்ட ‘ஸாரி’ சொன்னாலும், சொன்ன வார்த்தையை அவனால திருப்பி வாங்க முடியுமா? அத்தனை பேர் முன்னாடியும் போன என் மானம் திரும்ப வருமா? அந்த ஒரே வார்த்தையால அவனோட ஃப்ரெண்ட்ஷிப்புக்கே `குட்பை’ சொல்லிட்டேன். ஆனாலும், அந்த வார்த்தை என் மனசை அறுத்துட்டே இருக்கு...’’
- அவளை அந்த வார்த்தை ஏற்படுத்திய காயத்தில் இருந்து மீட்பது சிரமமாகத்தான் இருந்தது.
கெட்ட வார்த்தைகள்... நம் முந்தைய தலைமுறைகளில் துரோகம், கோபம், குரோதம், பழிவாங்கும் உணர்வு போன்ற கட்டுப்படுத்த முடியாத உணர்வு ரீதியாக பெரும் சண்டை வெடிக்கும்போதே, இந்த வார்த்தைகளும் வந்துவிழும். அப்போதும்கூட, நாகாக்கும் பண்பாளர்கள் பலர் இருந்தனர். ஆனால் இன்றோ... கெட்ட வார்த்தைகள் பேசுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால்... சண்டை, கோபத்தின்போது மட்டும் அல்ல... சந்தோஷமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட கெட்ட வார்த்தைகளை ஏதோ ‘பெட் நேம்’ போல அள்ளித் தெளிக்கிறார்கள்; ‘ஹாய்’, ‘பை’ சொல்வதுபோல சொல்லிக்கொள்கிறார்கள். அவை குறிக்கும் பொருள் என்ன, அவை எவ்வளவு கேவலமானவை என்பதை சொல்பவரும் உணர்வதில்லை... சொல்லப்படுபவரும் உணர்வதில்லை.
போதாக்குறைக்கு, இன்றைய திரைப்படங்கள் கெட்ட வார்த்தைகளை ‘ஃபேஷன்’ ஆக்கி குழந்தைகளையும் சர்வசாதாரணமாகப் பேசச் செய்யும் முக்கிய சமுதாய சீர்கேட்டுக் கடமையாற்றி வருகின்றன. வில்லன்கள் மட்டுமல்ல... காமெடியன்களும், கதாநாயகன்களும்கூட கெட்ட வார்த்தைகளை திரையில் `ஹிட் வார்த்தை’களாக்குகிறார்கள். இன்னொரு பக்கம், சேனல்களின் அட்டூழியம். முன்பெல்லாம் அழகான தமிழில், பண்பாகப் பேசும் தொகுப்பாளர்களை மட்டுமே அறிந்தவர்களாக இருந்தோம் நாம். இன்றோ சில குறிப்பிட்ட சேனல்களில், தொகுப்பாளரும், தொகுப்பாளினியுமாக இணைந்து ஒரு நிகழ்ச்சியை வழங்கும்போது, ‘கலகலப்பு’ என்ற பெயரில் அவர்கள் தங்களுக்கு இடையில் பேசிக்கொள்ளும் வார்த்தைகள்... சகிக்க முடியாதவை. ‘போடா’, ‘போடி’ என்று ஒருமையில் அழைப்பதில் இருந்து, சமயங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகளை சேனலே சென்சார் செய்து (மியூட்) ஒளிபரப்பும் அளவுக்கு... கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மேடை கலாசாரத்தை!
இவை அனைத்தையும் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினருக்கு, தகாத வார்த்தை என்பது தகாதது என்ற உணர்வே வருவதில்லை. வீட்டிலும் பதின்பருவ பெண்ணோ, பையனோ நாகரிகமற்றுப் பேசும்போது, ‘என்ன வார்த்தை பேசுற நீ? அந்த வார்த்தையோட அர்த்தம் தெரியுமா?’ என்று கண்டிக்கும் பெற்றோர்கள் சிலரே. பலரும், ‘நாம எல்லாம் இந்த வயசுல இப்படியா பேசினோம்? இதுங்க முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ள இப்படியெல்லாம் பேசுதுங்க’ என்று, புலம்பலோடு விட்டுவிடுகின்றனர். இப்படி அவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு உணர்த்தப்படாததால்... கூச்சமின்றி, தயக்கமின்றி கொட்டுகிறார்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை!
ஒருவரை வாளைவிடவும் காயப்படுத்தக்கூடிய, மனதுக்கு ஆறாத அவமானத்தைத் தரக்கூடிய, தகாத வார்த்தைகளால் சாடும் அணுகுமுறையை, ‘வெர்பல் அப்யூஸ்’ என்பார்கள் ஆங்கிலத்தில். உலகளவில், அடித்து துன்புறுத்துதல், பாலியல் வன்முறை இரண்டுக்கும் அடுத்தபடியாக அதிகமானோர் பாதிக்கப்படுவது வெர்பல் அப்யூஸினால்தான். ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்றார் வள்ளுவர். கிராமங்களில், எத்தனையோ வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தையால் இன்றும் சேராமல் பிரிந்துகிடக்கும் குடும்பங்களைப் பார்க்கலாம்.
அந்தளவுக்கு வலி தரக்கூடியவை, ஒருவர் வரம்பு மீறிப் பேசும் வார்த்தைகள். ஜாலிக்காக கெட்ட வார்த்தை பேசிக்கொள்ளும் இன்றைய இளைஞர்களேகூட, அதே வார்த்தை ஒரு கோபமான சூழ்நிலையில் வெளிப்படுத்தப்படும்போது, அவமானமாக உணர்ந்து ரோஷப்படவே செய்வார்கள். இப்படி நாவடக்கம் அற்றுப்போன பண்பால் முறிந்த நட்புகளும், காதல்களும் பல. தகாத வார்த்தைகளுக்குப் பழக்கப்பட்டுப் போனதால்தான், செல்ஃப் கன்ட்ரோல் இன்றி, ஃபேஸ்புக்கில் தன் கேர்ள்ஃப்ரெண்டை பலர் முன்னிலையிலும் கொஞ்சமும் யோசிக்காமல், பண்பற்று அப்படி ஒரு வார்த்தையால் சாடியிருக்கிறான் அந்தப் பையன்.
எனவே, தகாத வார்த்தைப் பயன்பாடுகளை கைவிடுங்கள் இளையோர்களே. ‘நோ இஷ்யூஸ், ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று சமாதானம் சொல்லலாம். ஆனால், கேளிக்கைக்கும் சந்தோஷத்துக்கும் மொழியில் எத்தனையோ வார்த்தைகள் இருக்கும்போது, ஒருவனை/ஒருத்தியை கேவலமாக, கீழ்த்தரமாகச் சுட்டும் ஒரு வார்த்தையை உபயோகிப்பது, பேசுகிறவர், கேட்டுக்கொள்பவர் இருவரின் பண்பையும் கீழிறக்கும். சபையில் இருவரின் மரியாதையைக் குறைக்கும். தவிர, ஒருவர் மீதான கோபத்தின்போதோ, வாக்குவாதத்தின்போதோ சட்டென அவரை தகாத ஒரு வார்த்தையால் சாடிவிடும், பழக்கப்பட்டுப்போன அந்த நாக்கு. அந்த வார்த்தை, அவருக்கு வாழ்நாளுக்கும் தீராத ரணம் கொடுப்பதாக அமைந்துவிடும்.
எப்போதும் நல்ல, பண்பான வார்த்தைகளையே பேசுவது எல்லா சூழலிலும் ஒருவருக்கு அவருக்கான மரியாதையைப் பெற்றுத் தருவதாக அமையும். அவரின் ‘பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்’டில் கைகொடுக்கும். மேலும், அது ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனையும் அவரைச் சுற்றி, அவரை சார்ந்திருப்பவர்களைச் சுற்றி உருவாக்கும். வளர்த்த இரண்டு செடிகளில், ஒரு செடியிடம் தினமும் ‘நீ நல்லா வளரமாட்ட, வேஸ்ட்’ என்றும், மற்றொரு செடியிடம், ‘நீ ரொம்ப நல்ல செடி, சூப்பரா வளருவ’ என்றும், ஒரு ஆய்வில்
சொல்லி வந்தனர். சில மாதங்களில் நல்வார்த்தைகள் சொன்ன செடி அழகாக வளர்ந்திருக்க, இன்னொரு செடி கருகிவிட்டது. ‘சாவுகிராக்கி’, ‘தண்டம்’, ‘பூட்டகேசு’வில் ஆரம்பித்து, வலிமையான, வக்கிரமான கெட்ட வார்த்தைகள் வரை சகஜமாக, சாதாரணமாகப் பேசுவதனால் ஏற்படும் பலனும் இதுபோலத்தான் இருக்கும்.
சொல்லி வந்தனர். சில மாதங்களில் நல்வார்த்தைகள் சொன்ன செடி அழகாக வளர்ந்திருக்க, இன்னொரு செடி கருகிவிட்டது. ‘சாவுகிராக்கி’, ‘தண்டம்’, ‘பூட்டகேசு’வில் ஆரம்பித்து, வலிமையான, வக்கிரமான கெட்ட வார்த்தைகள் வரை சகஜமாக, சாதாரணமாகப் பேசுவதனால் ஏற்படும் பலனும் இதுபோலத்தான் இருக்கும்.
‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்றார் வள்ளுவர். செழிப்பான, செறிவான சொற்கள் இருக்கும்போது, தகாத வார்த்தைகள் வேண்டாமே!
- ரிலாக்ஸ்...
தொகுப்பு: சா.வடிவரசு
டாக்டர் அபிலாஷா
நாவடக்கம் பழக்குங்கள்!
தவறை தவறு என்று எடுத்துரைக்கும் போதுதான் அதை குழந்தைகள் உணர்வார்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைகள் கீழ்த்தரமான சொற்களைப் பேசினால், அது எவ்வளவு பண்பற்ற செயல், அது அவர்களின் பண்பை எந்தளவுக்கு கீழிறக்கும் என்பதை கனிவாகவோ, கண்டிப்பாகவோ சொல்லிப் புரியவையுங்கள்.
அதையும் மீறி அவர்கள் பேசினால், ‘இந்தக் காலப் புள்ளைங்க...’ என்று அதையே அவர்களுக்கு சாக்காகக் கொடுக்காமல், ‘என்ன குடும்பத்துப் பிள்ளை இது?’னு மத்தவங்க எங்களை அவமானப்படுத்தத்தான் நீ இப்படிப் பேசுறியா?' என்று கேட்டு அவர்களின் நாவடக்குங்கள்.
வீட்டில் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி, வெளியிடங்களிலும் அவர்கள் மட்டமான வார்த்தைப் புழக்கத்துக்குப் பழகாமல் கண்காணியுங்கள். அவர்களை கண்ணியத்துடன் வளர்த்தெடுங்கள்.
குடும்பச் சண்டையில்கூட நீங்கள் நாகரிகம் இழக்காமல் பேசுவது முக்கியம். அதைத்தான் பிள்ளைகளும் பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பண்பான, கனிவான சொற்களை நீங்களும் பேசுவதுடன் குழந்தைகளுக்கும் பழக்குங்கள். எதிர்காலத்தில் எந்த மேடையிலும், சபையிலும்... அலுவல், தொழில் சூழலிலும் அவர்கள் பேச்சுக்காக ரசிக்கப்படுவார்கள்; மதிக்கப்படுவார்கள்.
ஆல் இஸ் வெல்
எதுவும் கடந்து போகும்!
‘‘நானும் என் கணவரும் நாலு வருஷமா காதலிச்சு, வீட்டுல போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கஷ்டப்பட்டு உழைச்சு இப்போதான் நல்ல நிலமைக்கு வந்தோம். ஆனா, அதை அனுபவிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போச்சு. ஒரு விபத்துல சிக்கி, என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டாரு என் கணவர். அவர் இல்லாத இந்த உலகத்துல எனக்கு வாழப் பிடிக்கல. எங்க பார்த்தாலும் அவர் நிக்கிற மாதிரி, அவர் என்னைக் கூப்பிடுற மாதிரியே இருக்கு. அவர் பிரிவை என்னால தாங்கவே முடியல. எதுக்காக நான் வாழணும் என்ற கேள்விதான் என்னை அரிச்சிட்டே இருக்கு...’’
- கணவனை இழந்த இளம் வாசகி ஒருவர் கண்ணீரோடு கடிதம் எழுதியிருந்தார். அவருடன் நிறையப் பேசி, ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன். இருந்தாலும், அவர் கண்ணீர்க் கதறல் கேட்டபடிதான் இருக்கிறது.
`பிரிவுநிலை ஏன்?’, `இது இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்விகள், பிரிவுத்துயரால் பாதிக்கப்பட்ட பலருக்குள்ளும் அலையடித்தபடியே இருக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரிவு என்பது நிச்சயம் வந்தே தீரும் என்பது இயற்கை. சிலர் அதை ஏற்றுக் கடக்கிறார்கள், சிலர் அந்தப் புள்ளியிலேயே நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஒரு பிரிவு, அதன் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொருக்கும் ஏற்படுத்தும் தாக்கம் மாறுபடுகிறது. இருந்தாலும், எவ்வளவு துயரென்றாலும், `இதுவும் கடந்து போகும்’ என்ற வாழ்க்கையின் விதியை அங்கே பொருத்தித்தான் ஆகவேண்டும்.
உலகிலேயே, பிரிவுநிலையின் உளவியல் வெளிப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்தியர்கள்தான். புராணங் களில் இலக்கியங்களில் நண்பரின் பிரிவுக்காக வடக்கிருந்து உயிர்விட்டது தொடங்கி, இன்று வரை அதற்கு பல உதாரணங்கள் உண்டு.
பிரிவை ஏற்றுக்கொள்வதை `எமோஷனல் அடாப்டபிளிட்டி’ என்பார்கள். பிரிவுநிலையின் வெளிப்பாடாக உளவியலாளர்கள் ஐந்து விஷயங்களைச் சொல்கிறார்கள். ‘இல்ல, அவர் என்னைவிட்டுப் போயிருக்கமாட்டாரு... நீங்க பொய் சொல்றீங்க’ என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல் இருப்பது; ‘எப்படி என்னைத் தனியா விட்டுப் போகலாம்? இருக்கவே முடியாது!’ என்று கோபப்படுவது; ‘அப்படி இருக்காது. என் சொத்தெல்லாம் போனாலும் பரவாயில்ல, அவரைப் போக விடமாட்டேன்’ என்று அடம்பிடிப்பது; ‘அய்யோ,
என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்களே... என் வாழ்க்கையே போச்சே... இனி நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்...’ என்று புலம்புவது; பிரிவை ஏற்றுக்கொண்டு கடந்துபோவது. இதில், கடைசி நிலையில் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், அதுதான் நிதர்சனம்.
என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்களே... என் வாழ்க்கையே போச்சே... இனி நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்...’ என்று புலம்புவது; பிரிவை ஏற்றுக்கொண்டு கடந்துபோவது. இதில், கடைசி நிலையில் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், அதுதான் நிதர்சனம்.
அந்தக் காலத்தில் பிரிவுத்துயர் ஆற்ற, அவர் கொடுத்த பொருட்கள், ஒன்றாக இருந்த இடங்கள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றைக் கொண்டு ஆறுதல் அடைந்தார்கள். இன்றோ, புகைப்படம், வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ, குறுஞ்செய்திகள் என்று ஒருவர் தன் நினைவாக விட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.
பிரிவுநிலையால் ஒருவர் துன்பம் மட்டுமல்லாமல்... பயம், தாழ்வு மனப்பான்மை, அவமானம், குற்ற உணர்ச்சி போன்றவற்றையும் உண்டாக்கிக்கொள்கிறார். நண்பர் ஒருவர் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வந்தார். திடீரென ஒருநாள் அந்த நாய் இறந்துவிட்டது. அவர் மிகவும் சோகமாகி, ஒருவித தனிமையில் தன்னை திணித்துக்கொண்டார். அவரிடம், ‘இன்னொரு நாயை வளர்க்கலாமே..?’ என்றேன். ‘இல்ல... நான் சரியா கவனிக்காததாலதான் அது இறந்துடுச்சு. அது சாக நான்தான் காரணம். என் காலைக்கட்டிட்டு வாலை ஆட்டிட்டு இருந்த என் செல்லத்தை நானே கொன்னுட்டேன்’ என்று புலம்பினார். நாய் விஷயத்திலேயே இப்படி என்றால், உறவுகள் விஷயத்தில் நம்மவர்கள் உளவியல் ரீதியாக எவ்வளவு எமோஷனல் ஆவார்கள்!
`கணவரை/மனைவியை/பெற்ற பிள்ளையை/உயிர்த்தோழியை இழக்கும்போது, இயல்பா இருன்னா எப்படி முடியும்?’ என்று கோபப்படலாம். இங்கு பிரிவுத்துயருக்கும், தாக்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். பிரிவுத்துயர் இயற்கையாக மூன்று நாட்கள் இருக்கும். சிலருக்கு மூன்று மாதங்கள் வரை இருக்கும் என்கிறது உளவியல். அதற்கு மேலும் இருக்கலாம். ஆனால், அது துயரம் என்ற புள்ளியிலேயே அதீதமாக இருக்காமல், தாக்கம் என்ற புள்ளி நோக்கி நகர வேண்டும். பிரிவுத் துயரை நாசூக்காக நீக்கத்தான் நம் முன்னோர்கள் இறந்தவர் வீடுகளில், 8-ம் நாள், 16-ம் நாள், 30-ம் நாள் காரியம் போன்ற சடங்குகளை உண்டாக்கி, அன்று உறவுகளை எல்லாம் ஒன்று சேர்ந்து, ‘எதுக்கும் கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் சொல்லும்படிச் செய்தார்கள். அதன் பிறகு எச்சமிருக்கும் பிரிவுத் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது, சம்பந்தப்பட்டவரின் பொறுப்பு. பிரிவுநிலையால் வாடுபவர்கள், இது ஏதோ உலகத்திலேயே தனக்கு மட்டும் நிகழ்ந்துவிட்ட துயரம் என சுயபச்சாதாபத்தில் இருந்து வெளியே வாருங்கள். இயற்கையை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணருங்கள். எந்த உயிரும், உறவும் இங்கு நிரந்தரமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இன்னொரு பக்கம், பிரிந்தவருக்காக அழுதுகொண்டே இருப்பதைவிட, பாஸிட்டிவ் விஷயங்களைச் செய்யலாமே? ‘உயிரா வளர்த்த எங்கப்பா போனதுக்கு அப்புறமும் இந்த உலகத்துல நான் இருக்கேன்னு நினைக்கும்போதே, குற்ற உணர்ச்சியா இருக்கு’ என்ற விரக்திக்குப் பதில், அப்பா உங்கள் மேல் கொண்டிருந்த கனவை வென்று அவருக்கு சமர்ப்பிக்கலாம்.
‘அவரே போனதுக்கு அப்புறம் நான் எதுக்கு இருக்கணும்’ என்ற மனைவியின் கேள்விக்கு, கண்ணெதிரே பதிலாக இருக்கிறார்கள் பிள்ளைகள்.
‘எங்களுக்குக் குழந்தை இல்ல. அவருக்கு நான், எனக்கு அவர்னு இருந்தோம். அவர் போனதுக்கு அப்புறம் நானும் அவர்கூட போய் சேருறேன்’ என்று அரற்றும் மனைவி, வாழ்வதிலேயே சந்தோஷம் கொள்பவர் தன் கணவர் என்பதை அறியாதவரா?
இவ்வுலகம் விட்டுச் செல்லும் எந்த உறவின் ஆத்மாவும், தான் நேசித்த உறவும் உயிர்துறக்க விரும்பாது; தான் வாழாத வாழ்வையும் அவர் சேர்த்து வாழவே ஆசீர்வதிக்கும்!
- ரிலாக்ஸ்...
தொகுப்பு: சா.வடிவரசு
அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!
‘‘என் 6 வயது மகள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் மதிய உணவில் முக்கால்வாசியை வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறாள். வீட்டில் நான் போராடுவதுபோல, பள்ளியில் அவள் டீச்சரும் எவ்வளவோ அதட்டிப் பார்த்தும் பலனில்லை. உண்மையில், என் குழந்தையைச் சாப்பிட வைப்பதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவால்!’’
- மதுரையைச் சேர்ந்த இந்தத் தாயின் புலம்பலை, உலகத் தாய்களின் பொதுக் கதறல் என்றே சொல்லலாம்.
குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கும், ஜங் ஃபுட் விரும்புவதற்கும், சத்தான உணவுகள் பற்றி அறியாமல் இருப்பதற்கும், டி.வி பார்த்துக்கொண்டே, மொபைலில், `டேப்’பில் விளையாடிக்கொண்டே சாப்பிடுவதற் கும்... இப்படி குழந்தைகளின் தவறான உணவுப் பழக்கங்கள் அனைத்துக்கும் காரணம் குழந்தைகள் அல்ல; பெற்றோர்களே! அதை மறுப்பதை விட்டு, இந்தத் தவறுகளை எப்படி சரிசெய்துகொள்வது என்று பார்ப்போம்!
‘பீட்சாவில், என் பிள்ளைக்கு பார்பெக்யூ சிக்கன்தான் பிடிக் கும்’, ‘நான் அவன் ஸ்நாக்ஸுக்கு `சாக் கோ-பை' முழு பாக்ஸே வாங்கி வெச்சிருவேன்’, ‘நியூட்ரிலா இல் லாம அவன் இட்லி சாப்பிடவே மாட்டான்’ - இப்படி எல்லாம் பேசும், இதையெல்லாம் செய்யும் பெற்றோரின் மனநிலை ஒன்றுதான்... ‘நாங்கள் எங்கள் பிள்ளைக்கு விலை உயர்ந்த உணவுப் பொருட்களை வாங்கித் தருகிறோம்!’ என்ற பெருமையை வெளிப்படுத்துவது. குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கிய மல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளை கிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் ஆரோக் கியத்தைச் சிதைக்கிறீர்கள் என்பதே உண்மை.
‘மேகி’ விவகாரம், உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படும்போது நஞ்சாக மாறுவதை உரக்கச் சொல்லிவிட்டது. இன் னமும், ‘என் பிள்ளைக்கு பேக்டு ஸ்நாக்ஸ் அயிட்டம் வாங்க சூப்பர் மார்க்கெட் போறேன்!’ என்றால், 20 வயதுகளிலேயே அவர்களுக்காக டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டி வரலாம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
‘சத்தான உணவாகக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்’ என்றால், ‘சத்தான உணவு என்றால் என்ன?’ என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர். வீட்டில், சுகாதாரமான முறையில் நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி... சாம்பார், காய் பொரியல், கீரை, கூட்டு, ரசம் என சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத நம் அன்றாட சமையலே ஆரோக்கியமான உணவுதான். ஆப்பிள், ஆரஞ்சைவிட, கொய்யா, சப்போட்டா, மா, வாழை என நம் மண்ணின் தோட்டத்தில் விளையும் பழங்கள் தரவல்ல சத்துகள் நிறைய! சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், ஏற்கெனவே சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை விரும்பும் சுவையில் சமைத்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கோலா பானங்களுடன் சோம்பேறித்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, மோர், பானகம், பழ ஜுஸ் செய்து தந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது எந்தளவுக்கு பலம் சேர்க்கும் தெரியுமா?!
அடுத்ததாக, குழந்தைகளுக்கு சாப்பிடும் முறையே தெரியவில்லை. எப்படித் தெரியும்? பெற்றோர் கற்றுக்கொடுத்தால், அவர்கள் அதன்படி நடந்தால்தானே குழந்தைகளுக்கு அது பற்றித் தெரியும். அம்மாக்கள், தட்டு நிறைய சோறு போட்டுக்கொண்டு, ‘இன்னிக்கு கூட்டு நல்லாயிருக்கா’, ‘இந்த மட்டன் சூப் குடிச்சா பீமன் மாதிரி ஆயிடலாம்’ என்று உணவைப் பற்றிய சிறு அறிமுகம் கொடுத்து, பின்னர் குழந்தைகளின் கண்கள் விரிய கதை சொல்லிக்கொண்டே கைகளால் ஊட்டிவிட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. குழந்தையின் ஒரு கையில் தட்டையும், இன்னொரு கையில் ரிமோட்டையும் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போகும் ‘பரபர’ அம்மாக்களால், டி.வி பார்த்துக்கொண்டே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றே அறியாமல் சாப்பிடுகிறார்கள்... இல்லை, விழுங்குகிறார்கள் குழந்தைகள்.
தரையில் சம்மணமிட்டு அமர வைத்து, தட்டும் தண்ணீரும் வைத்து, ‘சூப், குழம்பு, ரசம், தயிர்... இந்த வரிசையில்தான் சாப்பிடணும். கடைசியில பாயசம் குடிச்சா, அந்த இனிப்பு செரிமானத்துக்கு உதவும்’ என்று கற்றுக்கொடுத்து, ‘சிங்கராஜா எப்பவும் சாப்பாட்டை நல்லா மென்றுதான் சாப்பிடுவார். அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கார். நீயும் நல்லா மென்று சாப்பிடணும்’, ‘கேரட் சாப்பிட்டா, கண்ணுக்கு அவ்வளவு நல்லது’, ‘குட்டிப் பாப்பாவுக்கு நிறைய முடி வளரணும்னா, கொஞ்சம் கீரை சாப்பிடணும்’ என்று கதைகள் பேசி... இப்படியெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு முறைக்காக மெனக்கெட்டும், அவர்கள் ‘டி.வி போட்டாதான் சாப்பிடுவேன்’ என்றால், பிறகு சொல்லுங்கள்!
தரையில் சம்மணமிட்டு அமர வைத்து, தட்டும் தண்ணீரும் வைத்து, ‘சூப், குழம்பு, ரசம், தயிர்... இந்த வரிசையில்தான் சாப்பிடணும். கடைசியில பாயசம் குடிச்சா, அந்த இனிப்பு செரிமானத்துக்கு உதவும்’ என்று கற்றுக்கொடுத்து, ‘சிங்கராஜா எப்பவும் சாப்பாட்டை நல்லா மென்றுதான் சாப்பிடுவார். அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கார். நீயும் நல்லா மென்று சாப்பிடணும்’, ‘கேரட் சாப்பிட்டா, கண்ணுக்கு அவ்வளவு நல்லது’, ‘குட்டிப் பாப்பாவுக்கு நிறைய முடி வளரணும்னா, கொஞ்சம் கீரை சாப்பிடணும்’ என்று கதைகள் பேசி... இப்படியெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு முறைக்காக மெனக்கெட்டும், அவர்கள் ‘டி.வி போட்டாதான் சாப்பிடுவேன்’ என்றால், பிறகு சொல்லுங்கள்!
‘அய்யோ... நான் எவ்வளவு போராடியும் என் பிள்ளை சாப்பிடவே மாட்டேங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே அதுக்கு உமட்டுது!’ - முக்கியப் பிரச்னை இதுதான். இதற்கு சில தீர்வுகளைப் பார்ப்போம். ஒரு விஷயத்தை குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தி திணித்தால், ஒரு கட்டத்தில் அது அவர்கள் மனதில் வெறுப்பாக மாறிவிடும். எனவே, அவர்களுக்குப் பசி எடுத்த பின்னரே உணவு கொடுங்கள். பசிக்காத வயிறுடன் இருக்கும் பிள்ளையை, ‘சாப்பிடு சாப்பிடு’ என்று அரற்றினால், வாயைத் திறக்காது. ‘அவ காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும்கூட பட்டினியா கிடப்பா’ என்றால், சரி கிடக்கட்டும்! அதற்கு மேல்..? ‘அம்மா பசிக்குது!’ என்று நிச்சயமாக வரும். அப்போது, அதற்குப் பிடித்த உணவைக் கொடுங்கள்.
சில குழந்தைகள் எந்த உணவின் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தோசையை பொம்மை வடிவில் ஊற்றிக் கொடுப்பது, ஆங்கில எழுத்துக்களின் வடிவில் ஊற்றிக் கொடுப்பது, மினி இட்லிகள் செய்து கொடுப்பது, சாதத்தில் கேரட் பொரியலை ஸ்மைலை வடிவில் பரப்பி சாப்பிடச் சொல்வது, அரைக்கீரையை மாவுடன் கலந்து ‘க்ரீன் தோசை’யாக ஊற்றிக் கொடுப்பது என, குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில், நிறத்தில் உணவு வகைகளைச் செய்து கொடுத்து, அதன் ஆர்வத்தை தூண்டி, சாப்பிட வையுங்கள். கீரை, பாகற்காய் போன்ற குழந்தைகள் அதிகம் விரும்பாத உணவுகளை, விசேஷம், விருந்து, சுற்றுலா போன்ற ஒரு சந்தோஷ தருணத்தில் அறிமுகப்படுத்துங்கள்.
உணவை வீணாக்கும், சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிளாட்ஃபார்மில் ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் பிள்ளைகளைக் காட்டுங்கள். அவர்கள் கையாலேயே அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு உணவுப் பொட்டலமோ, பழமோ கொடுக்க வைத்து, ‘இப்படியெல்லாம் குழந்தைங்க சாப் பாட்டுக்குக் கஷ்டப்படும்போது, நீ உணவை வீணாக்கலாமா?’ என்று அதன் மனதுக்கு நெருக்கமாகப் பேசுங்கள். மனித நேயத்தையும் சேர்த்தே வளர்க்கலாம்!
காய்கறி, சிக்கன், மீன் வாங்கும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். உணவுப் பொருட்கள் தேர்வு தொடங்கி, நுகர்வோர் அறிவு வரை அவர்கள் அறியப் பெறுவார்கள்.
குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கும், ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதற்கும் பெற்றோரே பொறுப்பு!
குட் டச், பேட் டச்
சொல்லித் தருவது எப்படி?
சொல்லித் தருவது எப்படி?
‘எல்லோரும் குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்’னு சொல்றாங்க. ஆனா, அதை எப்படி சொல்லித் தர்றதுன்னு தெரியல. ‘ஆல் இஸ் வெல்’ பகுதியில் அதைப் பத்தி சொன்னா, எத்தனையோ அம்மாக்களுக்கு உதவியா இருக்கும்!’
- விழுப்புரம் வாசகி ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த வாசகி கேட்ட கேள்வி எனக்கு லட்சக்கணக்கான அம்மாக்கள் கேட்ட கேள்விபோல் சத்தமாக காதில் ஒலிக்கிறது.
‘என் மூணு வயசு வாண்டு செல்போன்ல என்னவெல்லாம் பண்ணுது தெரியுமா?’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அம்மாக்களும், ஐந்து வயதுக் குழந்தைக்கு ‘டேப்’ (tab) வாங்கித் தரும் அம்மாக்களும், தங்கள் குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ சொல்லித்தருவதில் அக்கறை காட்டுவதில்லை. பெற்றோர்கள் செய்யும் இந்தத் தவற்றால், அவர்களைவிட அவர்களது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.
குழந்தைகளுக்கு எதிரான 80% பாலியல் குற்றங்கள், உறவு, நட்பு வட்டம் என்று நன்றாக அறிந்தவர்களாலேயே நிகழ்கிறது என்ற உண்மையை மூளையில் பதிய வையுங்கள். இன்றைய அவசர உலகத்தில் பணிக்குச் செல்லும் பெற்றோர்கள், ‘நான் வர்ற வரைக்கும் பக்கத்து வீட்டுல இரு’, ‘ஸ்கூல் பஸ்ல இருந்து இறங்கினதும், பிக்-அப் பண்ண அம்மா வரலைன்னா அந்த தெருமுக்குக் கடையில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திரு’ என்றெல்லாம் யார் யாரையோ நம்பி தங்கள் குழந்தைகளை விடும் சூழலில் இருக்கிறார்கள். அதை வக்கிரபுத்தி கொண்டவர்கள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இதற்குப் பெற்றோரும் காரணமாகிறார்கள்.
பாலியல் வன்முறைக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும், குட் டச், பேட் டச் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அது சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தால், தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே அறியாத அந்தச் சூழலில் இருந்து அவர்கள் தப்பித்திருக்கலாம். சமீபத்தில் என்னிடம் ஒரு ஆறு வயதுச் சிறுமியை அழைத்து வந்தார்கள். குழந்தையின் பக்கத்து வீட்டுப் பையன், அவள் அவன் வீட்டில் தனியாக விளையாடும்போது தவறான படங்களைப் போட்டுக்காட்டி, அதில் வருவது போல் செய்ய வேண்டும் என்று அவளை நிர்பந்தித்திருக்கிறான். அவளும் அதை ஏதோ விளையாட்டு என்றே நினைத்துச் செய்திருக்கிறாள். இதுவே அவளுக்கு ‘டச்’கள் பற்றி அவள் அம்மா முன்கூட்டியே சொல்லியிருந்தால், ‘இதெல்லாம் பேட் டச்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க. அப்படி டச் பண்றவங்களை எங்கம்மாகிட்ட வந்து சொல்லச் சொல்லியிருக்காங்க...’ என்று அந்தக் குழந்தை பேசியிருந்தால், ‘காப்பாத்துங்க’ என்று கத்தியிருந்தால் அவன் பயந்து விலகியிருப்பான்.
குட் டச், பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கலாம்? அது பற்றிப் பேசும்போது, குழந்தைகளைத் தனிமையில் அழைத்து, ரகசியம் சொல்வது போல பேசத் தேவையில்லை. அப்படிச் சொல்லும்போது, ‘அதுல ஏதோ இருக்கு...’ என்ற குறுகுறுப்பு அவர்கள் மனதில் முளைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, டி.வி பார்க்கும்போது, பார்க் சென்றிருக்கும்போது என்று இயல்பான ஒரு பொழுதில், ‘உனக்கு அம்மா ஒரு புது பேபி சோப் வாங்கியிருக்கேன். அப்புறம் செல்லம்... நீ குளிக்கும்போது அம்மா, அப்பாவைத் தவிர வேற யாரையும் பாத்ரூம்குள்ள விடக் கூடாது சரியா?’ என்று பேச்சின் ஊடே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
‘கன்னம், கை, உச்சந்தலைனு இங்கயெல்லாம் உன்னை யாராச்சும் செல்லமா, சாஃப்ட்டா, ஒரே ஒரு தடவை தொட்டா... அது குட் டச். அதுக்கு மேல மறுபடியும் மறுபடியும் தொட்டுட்டே இருந்தாலோ, மார்பு, இடுப்பு, பின்பக்கம், பிரைவேட் பார்ட், தொடையில் எல்லாம் யாராச்சும் உன்னைத் தொட்டாலோ... அதெல்லாம் பேட் டச். அப்படி யாராச்சும் செய்தா, சட்டுனு அவங்ககிட்ட, ‘நீங்க என்னை பேட் டச் செய்றீங்க. எங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்’னு கோபமா சொல்லிடணும். அப்படி செஞ்சவங்களை வந்து அம்மாகிட்ட உடனே சொல்லணும். உனக்கு நல்லா தெரிஞ்ச பக்கத்து வீட்டு அண்ணா, ஸ்கூல் ஆட்டோ டிரைவர், எதிர் வீட்டுத் தாத்தா, சொந்தக்கார மாமானு யாரா இருந்தாலும், எல்லாருக்கும் இதே ரூல்தான்.
உன்னோட பிரைவேட் இடத்தை யாரையும் தொடவிடக்கூடாது. யாரையும் உதட்டுல முத்தம் கொடுக்க விடாதே. உன்ன யாராவது டிரெஸ் கழட்டச் சொன்னா, அதை செய்யவே கூடாது. கஷ்டப்படுத்தி கட்டிப்புடிச்சா, ‘காப்பாத்துங்க’னு கத்தணும். யாரையும் உன்னைத் தொட்டுப் பேச அனுமதிக்கக் கூடாது. உன் கையைப் பிடிச்சு இழுத்து அவங்களை தொட வெச்சா, தொடாதே. தெரியாதவங்க யாராச்சும் உன்னைத் தொட்டுப் பேசினா, ‘என்னைத் தொடாதீங்க’னு அவங்ககிட்ட சத்தமா சொல்லணும்; ‘பாப்பா இங்க வாங்க’னு தனியா கூப்பிட்டா போகவே கூடாது.
இதெல்லாம்தான் பேட் டச். இதெல்லாம்தான் மிஸ்பிஹேவ் பண்றது. இப்படி எல்லாம் செய்றவங்ககிட்ட தைரியமா எதிர்த்து ரியாக்ட் செய்யணும். பயந்தா, ‘இந்தப் பாப்பா பயப்படுது, அப்போ நம்மை யார்கிட்டயும் சொல்லிக் கொடுக்காது’னு அவங்களுக்குத் தைரியம் வந்துடும். அதுவே நீ தைரியமா, கோபமா, சத்தமா, ‘இப்படி எல்லாம் யாராச்சும் செய்தா எங்கம்மாகிட்ட சொல்லச் சொல்லியிருக்காங்க. நீங்க செஞ்சதை நான் அம்மாகிட்ட சொல்லுவேன்’னு சொன்னா, ‘என்னைத் தொடாதீங்க’னு கத்தினா, யாராச்சும் பேட் டச் செய்யும்போது, பக்கத்து ஹாலிலோ, ரூமிலோ இருக்கிறவங்களைக் கத்திக் கூப்பிட்டா, ‘அய்யோ, இந்தப் பொண்ணு ரொம்ப தைரியசாலி!’னு அவன் பயந்துடுவான். நீ தைரியசாலியா இருப்பியா... சோட்டா பீம் மாதிரி, சூப்பர்மேன் மாதிரி! எப்பவும் யாருக்கும் பயப்படவே கூடாது. யார் என்ன சொன்னாலும், செஞ்சாலும் அப்போவே, அன்னிக்கே அம்மாகிட்ட வந்து சொல்லிடணும்!’’ இப்படி விரிவாக, சகஜமாகப் பேசுங்கள். மேலும், ‘குட்டிம்மா... அம்மா குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கா? அதுக்கு அப்புறம் அப்படி யாராச்சும் உங்கிட்ட பிஹேவ் பண்ணினாங்களா..?’ என்று அவ்வப்போது விசாரித்துக்கொள்ளுங்கள்.
‘ஏம்மா பேட் டச் செய்யக் கூடாது?’ என்று கேட்பது குழந்தைகளின் இயல்புதான்! ‘அம்முக்குட்டி... ரோட்டுல ஒரு கல் இருந்தா, அத யாரு வேணும்னாலும் எடுத்து விளையாடலாம். அதுவே ஒரு வைரக்கல்லா இருந்தா அதை யாரும் தொடாம பத்திரமா வீட்டுக்குள்ள வெச்சு பாதுகாப்போம்ல?! நீ எப்பவும் எங்களுக்கு வைரம் மாதிரி. உன்னைப் பத்திரமா பார்த்துக்குறோம். சரியா?’ என்றோ, அல்லது கதைகளாகவோ குழந்தை கன்வின்ஸ் ஆகும் பதிலைச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நாம் சொல்லும் விதம் மிகவும் முக்கியம். முடிந்தவரை, குழந்தைகளைக் குழுவாக வைத்து இதையெல்லாம் சொல்வது நல்லது. அமைதியாகக் கேட்பார்கள், மனதில் பதிவார்கள். ‘இதெல்லாம் இந்த உலகத்துல எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானதுதான். ஏதோ நமக்கான ஸ்பெஷல் ரகசியமோ, விஷயமோ இல்லை’ என்று அதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள். குழந்தையின் ‘இன்னோசன்ஸ்’ பொக்கிஷம். அதைச் சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் பெற்றோரின் கடமை.
‘குட் டச்.. பேட் டச்’ சொல்லிக் கொடுப்பதில் தாமதம் வேண்டாம். 3 - 4 வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். நாளைய சமூகம் எப்படி இளைஞர் கையில் உள்ளதோ, அதேபோல் நாளைய இளைஞர்கள் பெற்றோர்கள் கையில் இருக்கிறார்கள்.
- ரிலாக்ஸ்...
டாக்டர் அபிலாஷா
தொகுப்பு: சா.வடிவரசு
குட் டச், பேட் டச்... சில தகவல்கள்!
* குட் டச், பேட் டச் பற்றி சரிவர சொல்லிக்கொடுத்து வளர்க்கும் குழந்தைகளில் 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தவறான பாதையில் போகமாட்டார்கள். பாலியல் வன்முறையில் இருந்தும் தங்களைப் தற்காத்துக்கொள்வார்கள்.
* உங்கள் குழந்தையின் உடலிலோ, நடவடிக்கையிலோ சிறு மாற்றம் தெரிந்தாலும் தாமதிக்காமல் அதற்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.
* பள்ளிகளில் மாணவர்களை குழுவாக பிரித்தோ அல்லது மொத்தமாக உட்கார வைத்தோ ‘குட் டச் பேட் டச்’ பற்றி கற்றுக்கொடுக்கச் சொல்லி வலியுறுத்துங்கள்.
* குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தயங்காமல் நடவடிக்கை எடுங்கள். இதனால் அவர்கள் தண்டிக்கப்படுவதுடன், வேறு குழந்தைள் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும்.அவள் விகடன் - 16 Jun, 2015
யார் மீது, எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கலாம்?
மன உளைச்சலைத் தவிர்க்கும் ஃபார்முலா
மன உளைச்சலைத் தவிர்க்கும் ஃபார்முலா
நம்பிக்கை... இரண்டு வயதில் இருந்து நம்முள் வளரும் பண்பு. இந்த உலகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் நம்பிக்கைக்கு உரிய முதல் நபர், அம்மா. வளர வளர, ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு சூழலிலும் நம்பிக்கைக்கு உரிய உறவுகளையும், நட்புகளையும் தேடி, அந்தத் தேடலை மையமாக வைத்தே இந்த வாழ்க்கை நகர்கிறது.
‘நம்பிக்கை’ என்பதை ஒருவரின் நடவடிக்கைகளால் மட்டுமின்றி, தோற்றத்தாலும் சிலர் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வெளிநாட்டு ஆராய்ச்சி ஒன்றில், 1,000 நபர்களிடம் சிலரது புகைப்படங்களைக் கொடுத்து, ‘இவர்களில் யாரை எல்லாம் நம்பலாம்?’ என்று கேட்டபோது, ‘இவன் நல்லவன்’, ‘இவன் கெட்டவன்’ என்று அவர்கள் கொஞ்ச நேரத்திலேயே தங்கள் ‘கருத்துக்கணிப்பை’ முடித்தார்கள். அதில் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல’ என்று அவர்கள் தேர்ந்தெடுத்த பலருக்குமான பொதுத்தோற்றம்: ஒட்டிய கன்னம், தூக்கிய கண், புருவம். சினிமா வில்லன்கள் பெரும்பாலும் இந்தத் தோற்றத்திலேயே காட்டப்படுவதால், அதை மனதில் வைத்தே இவர்களும் அவர்களை எல்லாம் ‘நம்பிக்கையற்றவர்கள்’ என்று சுட்டினார்கள். நம் நாட்டில் இதை இன்னும் எளிதாக, ‘அழகானவர்கள் எல்லாம் நல்லவர்கள், அசிங்கமானவர்கள் எல்லாம் கெட்டவர்கள்!’ என்றுகூடச் சொல்லியிருப்பார்கள்.
நம்மில் பலரும் தோற்றத்திலேயே ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று தீர்மானித்துவிடத் துடிக்கிறோம். உண்மையில், இது மோசமான முயற்சி. `சரி, நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒருவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யலாமா?’ என்றால், அதுவும் கூட சிக்கல்தான். காரணம், நல்லவர்கள் யாரும் தங்களை ‘நல்லவன்’ லேபிளுடன் காட்டிக்கொண்டு திரியமாட்டார்கள். அதேபோல, கெட்டவர்கள் தங்களை ‘மிக நல்லவர்கள்’ போலவே எப்போதும் காட்டிக்கொள்வார்கள். ‘நல்லவன் போல் நடித்து நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவன் கைது’ செய்திகள் முதல், ‘கோட்-சூட் சீட்டு கம்பெனி நபர்கள் ஓட்டம்’ செய்திகள் வரை, அனைவரும் ‘நல்லவர்’ போர்வை போர்த்தியவர்கள் தான்!
நம்பிக்கை என்பது, ஒரு நபரையும், அவரின் செயல்களையும் உற்றுநோக்கி, பாகுபடுத்திப் பார்க்கும் திறனையும், நன்கு யோசித்து, நிதானமாக முடிவெடுக்கும் அனுபவத்தையும் கொடுக்க வேண்டும். ஒருவர் மீது நாம் வைத்த நம்பிக்கை வலுப்பெற, நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். ‘அவரைப் பத்தி நமக்கு எந்தளவுக்குத் தெரியும்? அவர் சொல்வதை எதன் அடிப்படையில் நம்புவது?’ என நம்மிடமே கேள்விகள் பல கேட்டு, அதற்கெல்லாம் சரியான விடை கண்டறிந்த பிறகே, ஒருவரின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இது காதல் விஷயத்தில் இருந்து, உறவுகளுக்குள் கொடுக்கல் வாங்கல், நட்புகளுக்கு இடையில் ரகசியம் பகிர்தல் என்று எல்லா சூழலுக்கும் பொருந்தும்.
சரியான நபர்களைக் கண்டறிந்து நம்பிக்கை வைக்க, நமக்கு பக்குவமும் காத்திருப்பும் வேண்டும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற அவசரம் கூடாது. ‘அவனை நம்பின என்னை ஏமாத்திட்டான். இன்னொரு பொண்ணுகூட அவன் சுத்துறது இப்போதான் தெரிஞ்சது’, ‘என் சகோதரி போல அவளை நம்பினேன், இப்படி சுயநலமா நடந்துக்கிட்டாளே’, ‘அலுவலகத்தில் என்னோட ஒரு குளோஸ் ஃப்ரெண்டா அவளை நினைச்சேன். நான் அவகிட்ட ஷேர் பண்ணின சொந்த விஷயங்களை இப்படி கிசுகிசு ஆக்கிட்டாளே’ என்று புலம்ப நேர்ந்தால்... ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வேதனை... தவறான நம்பிக்கை வைத்தவர்களுக்கு மட்டுமே! அவர்களுக்கு அந்தத் துயரத்தைத் தந்த, அந்த நம்பிக்கைக்குப் புறம்பானவர்கள், ஒருபோதும் அவர்களுக்காக வருந்தமாட்டார்கள்; தான் அவர்களின் ‘குட் லிஸ்ட்’டில் இல்லாமல் போனதற்காக கவலைப் படவும் மாட்டார்கள். ‘அவளை யாரு என்னை நம்பச்சொன்னா?’ என்று சிம்பிளாக அந்த உறவை முடித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
எந்தவொரு விஷயத்தையும், லாஜிக்கலா கவும், எமோஷனல் விழிப்பு உணர்வோடும் சமமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதிகமானோர் இதில் எதையாவது ஒன்றை அதிகமாகவும், மற்றதைக் குறைவாகவும் செய்கிறார்கள். சிலரோ இரண்டிலும் ‘ஹைபர்’ ஆக இருக்கிறார்கள். ‘யாரையும் நம்பாதீர்கள்’ என்றும் சொல்லவில்லை; ‘மனிதருக்கு மனிதர் நம்பிக்கை வையுங்கள்’ என்றும் சொல்லவில்லை. தகுதியானவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே சரி. அந்தத் தகுதியை, ஆராய்ந்து முடிவெடுங்கள். அதே சமயம், தாய் - மகன், கணவன் - மனைவி போன்ற நெருங்கிய பந்தங்களில், நிபந்தனையற்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையானது, தவறு செய்யும் மகன்/கணவன் மீது வைக்கும் நம்பிக்கை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்ற முயற்சியில் வைக்க வேண்டிய நம்பிக்கை!
குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குங்கள்!
குழந்தைக்கு தன் பெற்றோரின் மீது ஏற்படும் நம்பிக்கையே, அந்த உறவின் பலம். ஆனால் அது, ‘நான் என்ன கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுத்துடுவாங்க’ என்ற பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கக்கூடாது. ‘கஷ்டமான ஹோம்வொர்க், புராஜெக்ட்னு சிரமமா இருந்தாலும், அப்பா - அம்மா உதவுவாங்க’, ‘பள்ளி, டியூஷன்ல எந்தப் பிரச்னைனாலும், என் பேரன்ட்ஸ் சரிசெஞ்சிடுவாங்க’ என்ற உணர்வு சார்ந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல, குழந்தைகளை நம்பிக்கைக்கு உரியவர்களாக வளர்ப்பது, அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவதற்கு அடிப்படை. ‘முடியலைன்னா, முடியலைன்னு சொல்லலாம். முடிச்சிட்டேன்னு பொய் சொல்லக் கூடாது. அது உன் மேல எங்களுக்கு இருக்கிற நம்பிக்கையை எல்லா விஷயத்திலும் கெடுத்துடும்’, ‘உன் மிஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் உன் மேல வைக்கிற நம்பிக்கைக்கு எதிரா எப்பவும் நடக்கக் கூடாது. அப்புறம் யாரும் எப்பவும் உன்னை நம்ப மாட்டாங்க’ என்று வலியுறுத்துவதுடன், நம்பிக்கைக்கு உரிய நபராக இருப்பதன் மாரல் வேல்யூவையும் குழந்தைக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்
No comments:
Post a Comment