மனோசக்தியின் வலிமை! -1by Tamil and Vedas |
Written by S.NAGARAJAN
Date : 3 September 2015
Post No. 2119
Time uploaded in London : 5-58 am
ச.நாகராஜன்
“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!....
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்….” - மகாகவி பாரதியார்
இடைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சிசெய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களேஎதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள்தந்துள்ளன.
இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.
ப்ளேசிபோ என்றால் என்ன? ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம்.ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வமாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்குசாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்லவிளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான்ப்ளேசிபோ எபெக்ட்!
பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளிஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாகநிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்துபார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையேவியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரைதன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்றுநினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!
இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள்உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையானசோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர்செய்து பார்த்தனர்.
தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம்உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்துகொண்டனர்.
வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்தபானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது.இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்கமுடியாது. ஆனால் நடந்தது என்ன?
இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாகநினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின்ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.
இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள்நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறதுஎன்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராயஆரம்பித்து விட்டன!
வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள்கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளைவிட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள்பதறுவதில் வியப்பே இல்லை!
சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர்.மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலைசெய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒருசர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்றுவேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.
ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாகஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்றுநினைத்தார்.
விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள்உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்றுஅவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!
பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்துமருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பலசோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன்அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்தசிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள்ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமானடோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன.நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போதுசரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றுநினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!
இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போதுஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகிவிட்டது.
மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச்செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.
கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர்டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத்தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒருஉதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒருநிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன.உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது.ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான்என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல்பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன்உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டியவிஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கைமாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இதுபற்றி இப்படிக் கூறினார்!
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம்ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்றபெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி.அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடுசெய்தனர். வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில்இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச்செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார்அவருடைய மருத்துவர்.
எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியைநீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள்ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.
“ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால்கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும் போதே பாதி வலி போய்விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.
ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூடமனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கானவாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது!
ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவதுமனோசக்தியின் மூலமாகத் தான்!
நன்றி : பாக்யா 28-8-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை
written by my brother S Nagarajan for Bhagya magazine.
No comments:
Post a Comment