Saturday, January 16, 2016

விடுமுறை பொதுவிளக்கம்!
Advertisement
 
 
Advertisement
 

 
 
Advertisement

பதிவு செய்த நாள்

17ஜன
2016 
00:00
படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி!
இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார். 
'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.
'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.
'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.
அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.
நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.
ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.
விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.
ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!
ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.
ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!
ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!

லேனா தமிழ்வானன்

No comments:

Post a Comment