Saturday, February 27, 2016

kavingkar abdual rehman kavithi about giving

Archive for the ‘அப்துல் ரகுமான்’ Category

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
– அப்துல் ரகுமான் (தொகுப்பு – சுட்டுவிரல்)
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம். 
அப்துல் ரகுமான்
தொகுப்பு – சுட்டுவிரல்
செல்லப்பெயர்களில் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்ட பெயர் ‘லூசு’. அநேகமாக நாம் அனைவரும் ஒருமுறையேனும் இப்பெயரால் அழைக்கப்பட்டிருப்போம். இதுவரை யாராவது இப்படி அழைக்கப்படாவிட்டால் இனியேனும் தங்களின் நெருங்கியவர்கள் தங்களை இப்படி அழைக்க என் வாழ்த்துக்கள் :). லூசுப்பெண்ணே பாடலை முதல் முறை கேட்கும் பொழுது இது என்ன லூசுத்தனமான பாடல் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து கேட்ட பிறகு அதுவும் பிடித்து போயிற்று. தற்பொழுது டாப் 10 பாடல்களில் முதலிடம் வகிக்கிறது இப்பாடல். ஒரு தொலைகாட்சி பேட்டியில் சிம்புவிடம் இப்பாடல் எப்படி உருவானது என்று கேட்க, அவர் தன் காதலியை செல்லமாக எப்படி அழைப்பார் என யோசித்து பார்க்க, ‘லூசுப்பெண்ணே’ என்ற வார்த்தைதான் முதலில் அவருக்கு தோன்றியதாம். அதையே பாடலின் முதல் வரியாக வைத்துவிட்டதாக கூறுகிறார்.
‘லூசு’ என்ற பெயர் இப்போது பிரபலமாக இருந்தாலும் இதற்கு நிகரான சொல்லான ‘பித்தன்’ கவிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான சொல். ‘பித்தன்’ என்ற தலைப்பில் அணைத்து சிறந்த கவிஞர்களுமே ஒரு கவிதையேனும் எழுதியிருக்கிறார்கள் என ஒரு பதிவில் வாசித்திருக்கிறேன். இப்படி இருக்க கவிகோ அப்துல் ரகுமான் ‘பித்தன்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பையே 1998ல் வெளியிட்டுள்ளார். அவருடைய மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று எனக்கூறலாம். இத்தொகுப்பில் இருக்கும் 28 கவிதைகளுமே ஒன்றுக்கொன்று சலைத்ததல்ல. அத்தனையும் முத்தான கவிதைகள். எல்லா கவிதைகளுமே எனக்கு பிடித்திருந்தாலும் ‘அறிக்கை’ & ‘பாரம்’ இத்தலைப்பில் இருக்கும் கவிதைகள் மகுடம் எனச்சொல்லுவேன். ‘பித்தன்’ கவிதைகளை பற்றி அப்துல் ரகுமானின் முன்னுரையே அழகாக விளக்கிவிடுகிறது.
– நதியலை
*************************
அப்துல் ரகுமானின் முன்னுரையும் அதை தொடர்ந்து நான் ரசித்த கவிதை வரிகளில் சிலவும்…
அறிமுகம்
என் ‘ஆலபனை’யின் பாடகன்
‘நேர்’களின் ரசிகன்.
பித்தன்
‘எதிர்’களின் உபாசகன்.
எந்த நதியானாலும்
எதிர் நீச்சலே போடுபவன்.
காரணம், அவன்
உண்மையின்
பின் பக்கத்தைப்
பார்த்திவிட்டவன்.
அதனால்
அறிவுச் சிறையிலிருந்து
விடுதலை அடைந்தவன்.
அவன்
இருளால்
ஒளி பெற்றவன்
மர்மங்களின் ரசிகன்.
அதனால்
‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற
முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’
என்று முழங்குபவன்.
உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.
அவன்
புறப்படுகிறவன் அல்ல;
திரும்புகிறவன்.
அவன்
‘இல்லை’யின் தூதுவன்.
‘இல்லை’ அவனது
மகா வாக்கியம்;
ஒற்றைச் சொல் வேதம்.
சீழ் நிரம்பிய
கொப்பளங்களை
முலை என்று சப்பும்
குழந்தைகளைப்
பரிகசிப்பவன்.
தீபங்களை
ஏற்ற அல்ல
அணைக்க வந்தவன்.
எழுப்ப அல்ல
உறங்கவைக்க
வந்தவன்.
அவன் தேனீ;
அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன்.
எந்தக் கூண்டிலும்
அடைபடாதவன்.
உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்.
அத்தனை முகங்களுக்கும்
முத்தம் தருபவன்.
முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
அவன்
போதிக்க வரவில்லை;
போதனைகளால்
நிராகரிக்கப்பட்ட
அனாதைக் குழந்தைகளை
எடுத்துக் கொஞ்ச
வந்திருக்கிறான்.
உங்கள் கல்லடிக்கு
அவன் காத்திருக்கிறான்.
ஏனெனில்
அதுதான் அவனுக்கு
அங்கீகாரம்.
பித்தனுக்கான கரு எண்பதுகளில் தோன்றியது. ‘குங்குமம்’ பித்தனைத் தொடராக வெளியிட்டது. பிறகு சில கவிதைகளை எழுதிச் சேர்த்தேன். வழக்கம் போலவே என்னுடைய இந்தக் தொகுதியும் தாமதமாகவே வெளிவருகிறது.
– அப்துல் ரகுமான்.”
***********
ரசித்த கவிவரிகள்…..
உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல்
என்கிறீர்கள்.
எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன்.
********
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே என்பதை
அறிவீர்களா?
********
கூண்டுப் பறவை
கூண்டின் கூரையையே
வானம் என்று
வாதாடும்
ஓர் உரையை மட்டும்
ஏற்பவன்
உண்மையின்
பல பரிமாணங்களைக்
காணாமல் போய்விடுவான்
*********
எது பூவானதோ
அதுவே முள்ளானது
பூவைப் போலவே
முள்ளுக்கும்
இருத்தல் நியாயம்
உண்டு.
உங்களைக்
குத்துவதற்காக
முளைத்ததல்ல முள்.
நீங்கள்தான்
குத்திக்கொள்கிறீர்கள்.
*********
வெளியே புறப்படுதல் அல்ல
வெளியிலிருந்து
புறப்படுதல்தான்
பயணம்.
*********
மேலே என்பது
மேலே இருக்கிறது
என்பதுதான்
உங்கள்
பெரிய மூடநம்பிக்கை
*********
பசியை நீங்கள்
விலங்கு என்கிறீர்கள்
நானோ
பசியைச்
சிறகு என்கிறேன்.
அந்தச் சிறகு
இல்லையென்றால்
நீங்கள் இந்த
உயரங்களை
அடைந்திருக்க மாட்டீர்கள்
*********
ஒரு கூட்டலின்
மொத்தம் நீ.
உன் மதிப்பு
உன்னுடையதல்ல.
உன் சிந்தனைகள்
உன் சம்பாத்தியம் அல்ல;
அவை உன்னில் தூவப்பட்ட
விதைகளின் விளைச்சல்.
உன் கண்ணீர்
உன்னுடையதல்ல;
அது ஒரு
மகா சமுத்திரத்திலிருந்து
உன் வழியாகக்
கசியும் நீர்.
*********
கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும்
– அப்துல் ரகுமான் (சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment