Monday, March 28, 2016

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 2

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்
ரிஸ்க் எடுத்தால்தான் வெற்றி!
பிசினஸ் உலகில் காலடி எடுத்துவைக்க நினைக்கும் ஒருவரது மனத்திடம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட மனப்பக்குவம் கொண்டவர்களுக்கு பிசினஸ் என்பது பொருந்திவரும்? எந்த மாதிரியான மனநிலை கொண்டவர்களுக்கு பிசினஸ் என்பது பொருந்தாது என்பதை முதலில் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிசினஸ் செய்வதற்கு நாம் ஏற்றவர்தானா, நம்மால் பிசினஸை நன்றாகச் செய்ய முடியுமா என்பதை முடிவு செய்ய முடியும். எப்படி இதைக் கண்டுபிடிப்பது?
நித்தியானந்தன், பரமானந்தன் என இரண்டு நண்பர்கள். இருவருமே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
நித்தியானந்தனுக்குக் குடும்பப் பாசம் அதிகம். பெற்றோர்களையோ, உடன் பிறந்தவர்களையோ அவனால் நீண்ட நாட்கள் பார்க்காமல் இருக்க முடியாது. வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பான்.
எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவான் என்றாலும், யாராவது அவன் மனதை நோகடிக்கிற மாதிரி ஏதாவது சொல்லிவிட்டால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. தன் கெளரவத்தை விட்டு யார் முன்பும் போய் நிற்பது அவனுக்குப் பிடிக்காது. வாழ்க்கையில் தனது நிலை தாழ்ந்துபோவதை அவனால் கனவிலும் நினைக்க முடியாது.
பரமானந்தனுக்கும் குடும்பப் பாசம் அதிகம்தான். அதற்காக எப்போதும் அவர்களுடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கமாட்டான். வீட்டில் நடக்கும் விசேஷங்களில் அவன் கலந்துகொள்ள விரும்பினால், அது தவிர்க்க முடியாத விசேஷமா என்று பார்ப்பான்.
யாராவது அவன் மனதை நோகடிக்கிற மாதிரி பேசிவிட்டால், தன் காரியம் முடிகிற வரை அதைப் பொருட்படுத்த மாட்டான். தன் கெளரவம் என்பதைவிட, தான் செய்ய நினைக்கும் வேலை முடிவதே முக்கியம் என்று நினைப்பான். வாழ்க்கை என்பதே ஏற்றத்தாழ்வு களைக் கொண்டதுதான் என்று அடிக்கடி சொல்வான்.
இப்போது நீங்களே சொல்லுங்கள், இந்த இருவரில் பிசினஸ் என்பது யாருக்கு அதிகம் பொருந்தும் என்று. நிச்சயமாக, பரமானந்தனுக்குத் தான்.
மனிதர்களுடைய மனநிலையை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகையினர், ரிஸ்க் எடுப்பதற்கு மிகவும் தயங்குபவர்கள். இன்னொரு வகையினர், ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்கள். யாரோ ஒருவரிடம் தனது நேரத்தை, திறமையை, உழைப்பை விற்பதன் மூலம் வருமானத்தைப் பெற நினைப்பவர்கள் முதல் வகையினர். தனது நேரத்தை, திறமையை, உழைப்பை தான் நினைக்கிறபடி செலவழித்து, அதன்மூலம் கிடைக்கும் லாபத்தை அல்லது நஷ்டத்தைப்  பெற நினைப்பவர்கள் இரண்டாவது வகையினர்.
வாழ்க்கையில் சிக்கல் என்பதே இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் முதல் வகை யினர். காலையில் 10 மணிக்கு ஆபீஸுக்குப் போனால், மாலை 6 மணிக்கு ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.
மாதம் முழுக்கக் கடினமாக உழைக்கும் இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு, மாத கடைசியில் கிடைக்கப் போகும் சம்பளம்தான். சம்பளம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றால், இவர்கள் வாழ்க்கையிலும் எந்தச் சிக்கலும் இருக்காது. சுருக்கமாக,  மணி அடித்தால் சோறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். ஆனால், இரண்டாவது வகை மனிதர்கள், வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்ததுதான் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். எனவே, ரிஸ்க் எடுக்காமல் எந்தப் பெரிய பலனையும் அடைய முடியாது என்பதைத் தீர்க்கமாக நம்புகிறவர்கள்.
குறுகிய காலத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைவிட நீண்ட காலத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க நினைப்பார் கள். தினம் தினம் சிக்கல் வந்தாலும், அதைத் தீர்ப்பதில் சளைக்கவே மாட்டார்கள். தோல்விகள் வரும்போதெல்லாம் சிறிது மனம் தளர்ந்தாலும், மீண்டும் நம்பிக்கையோடு எழுவார்கள். எதிர்காலத்தில் தனது நிலை தலைகீழாக மாறி னாலும் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அஞ்சமாட்டார்கள்.
உங்கள் மனநிலை முதல் வகை மனிதர்களைப்போல இருக்கிறதா? அப்படியானால் பிசினஸ் என்பது உங்களுக்குச் சரிப்பட்டு வராது. உங்களால் பிசினஸில் இறங்கி வெற்றி பெற முடியாது. எனவே, நீங்கள் பிசினஸில் நுழைவதற்குப் பதில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதே சரி.
உங்கள் மனநிலை இரண்டா வது வகை மனிதர்களைப்போல இருக்கிறதா? நீங்கள் தாராளமாக பிசினஸில் நுழையலாம். ரிஸ்க் எடுக்கிற துணிவு உங்களிடம் இருப்பதால், உங்களால் பிசினஸில் நிச்சயம் வெற்றி பெற்று, மிகப் பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும்.
பிசினஸில் கடுமையான பல சிக்கல்களை தினம்தினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் சிக்கல்களை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டுவருகிற மனத் தைரியம் ஒருவருக்குக் கட்டாயமாக இருக்க வேண்டும். தேன் எடுக்கப் போனால், தேனீ கொட்டத்தான் செய்யும். தேனீ கொட்டுமே என்று பயந்தால், தேனை எடுக்க முடியாது. தேனீயிடம் கொட்டு படாமல், தேனை எடுத்து வருவதுதான் புத்திசாலித்தனம்.
பிசினஸ் ஆரம்பித்துவிட்டால், வாழ்க்கை இன்றைக்கு இருக்கிற மாதிரியே நிம்மதியாக இருக்குமா? திடீரென நாளைக்கு பிசினஸில் நஷ்டம் வந்துவிட் டால், நானும் என் குடும்பத் தினரும் கஷ்டப்பட வேண்டி யிருக்குமே! இதுமாதிரியான கஷ்டங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியாதே என்று நினைப்பவர்களுக்கு, பிசினஸ் என்பது சரியான தேர்வாக இருக்காது.
மாதச் சம்பளம் பெறும் ஒரு வேலையில் இருக்கிற நிச்சயத்தன்மை பிசினஸில் இல்லை. இதனால்தான் சிலர் இன்றைக்கும்கூட பிசினஸை சூது என்கிறார்கள். நேற்று இருந்தமாதிரி இன்று இல்லையே! நாம் ஒன்று நினைக்க, நடப்பது வேறாக இருக்கிறதே என சிலர் பக்குவமில்லாமல் சொல்வதைக் கேட்டுத்தான் பிசினஸை சூது என்று சொல்கிறார்கள்.
ஆனால், பிசினஸ் என்பது  சூது அல்ல.  சரியாகச் செய்வதன் மூலம் இன்றைக்கு அது அறிவியலாக மாறியிருக்கிறது. பிசினஸில் நாம் எடுக்கிற முடிவு கள், என்ன விளைவுகளை ஏற்ப டுத்தும் என்பதை முன்கூட்டியே  தெரிந்துகொள்ளப் பல வழிகள் இருக்க, பிசினஸில்  தோற்றுவிடுமோ என்கிற பயம் தேவையற்றது.
பிசினஸை சரியாகச் செய்வது எப்படி என்பதைச் சொல்லும் முன், அதுபற்றிய  தவறான கருத்துக்களைச் சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

பிசினஸ் சீக்ரெட்ஸ் - 3

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்
தவறான அபிப்ராயங்களை ஒழிப்போம்!
ன்றைக்கு மிகப் பெரிய நிறுவனங்களை நடத்திவரும் பிசினஸ்மேன்கள் ஏறக்குறைய ‘சூப்பர்மேன்’களாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறார்கள். டாடா, அம்பானி, பிர்லா, திலிப் சிங்வி, பிரேம்ஜி, முன்ஜால் என எத்தனையோ தொழிலதிபர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கானக் கோடிகளை இவர்களால் எப்படிச் சம்பாதிக்க முடிந்தது? அந்தத் திறமையும் புத்திசாலித்தனமும் நமக்குச் சுட்டுப்போட்டாலும் வராதே என்று நினைத்து பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
பிசினஸில் வெற்றி பெற்ற எப்பேர்ப்பட்ட தொழிலதிபராக இருந்தாலும் சரி, அவர்களும் உங்களைப்போலச் சாதாரண மனிதர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைவிடக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, வித்தியாசமாக யோசித்து, வாய்ப்புகளைக் கண்டறிந்து, சிறிது ரிஸ்க் எடுத்து, கடினமாக உழைத்ததன் விளைவுதான் இன்றைக்கு அவர்கள் பலரும் கண்டுவியக்கும் மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.
இத்தகைய வியக்கத்தக்க மனிதராக நீங்கள் மாற முடியும். அதற்கு பிசினஸ் பற்றி உங்கள் மனதில் இருக்கும் தவறான அபிப்ராயங்களை முதலில் களைவது அவசியம். காரணம், பிசினஸ் பற்றிய தவறான அபிப்ராயங்கள்தான் ஒருவரை பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. எனவே, நமக்குள் குவிந்துகிடக்கும் தவறான அபிப்ராயங்களை முதலில் ஒழித்துக்கட்டி விடுவோம். பிசினஸ் பற்றி நமக்குள் இருக்கும் தவறான அபிப்ராயங்கள் என்னென்ன?
பணமிருக்கிறவர்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!
நிறையப் பணமிருந்தால்தான் பிசினஸ் செய்ய முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். இது உண்மையானால், இன்றைக்கு உலகம் முழுக்க இருக்கும் பணக்காரர்கள் பலரும் மேலும் மேலும் பல பிசினஸ்களைச் செய்து பணம் சேர்த்திருப் பார்கள். ஆனால், நிறையப் பணமிருந்தும் பிசினஸை சரியாகச் செய்ய முடியாமல் போன பலரை எனக்குத் தெரியும்.
கையில் காசு இல்லாமல், வித்தியாசமான ஐடியாவை வைத்துக்கொண்டு, தொழில் செய்யப் புகுந்து, இன்றைக்கு பில்லியன் கணக்கில் டாலர்களைச் சேர்த்தவர்கள் பலர். இந்திய அளவில் ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், உலக அளவில் அலிபாபாவின் ஜாக் மா எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இவர்கள் பணத்தை நம்பி தொழிலைத் தொடங்கவில்லை. தங்களது வித்தியாசமான சிந்தனையை அடிப்படையாக வைத்துதான் தொழிலைத் தொடங்கி ஜெயித்தார்கள்.
பிசினஸ் செய்வதற்குப் பணம் முக்கியம்தான். ஆனால், அதுவே எல்லாமாகிவிடாது. வித்தியா சமான ஐடியா 50%, கடுமையான உழைப்பு 25%, மீதமுள்ள 25% மட்டும்தான் பணம். பணத்தைத் திரட்டத் தெரிந்து, திறமையான ஆட்களை வைத்து சரியாக நிர்வாகம் செய்தால், பிசினஸில் வெற்றியே!
படித்தவர்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!
பிசினஸ் செய்வதற்கும் படிப்புக்கும் பெரிய சம்பந்தம் எதுவுமில்லை. நீங்கள் ஏதாவது ஒருகல்லூரிப் படிப்புப் படித்திருந்தால் நல்லது. பிசினஸ் பற்றிப் படித்திருந்தால் இன்னும் நல்லது. ஆனால், படிக்கவே இல்லை என்பது பிசினஸ் செய்வதற்குத் தடையாக இருக்காது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியும், சரவண பவன் அண்ணாச்சியும் என்ன படித்துவிட்டு, பிசினஸில் இத்தனை பெரிய வெற்றி கண்டார்கள்?
பிசினஸ் செய்வதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு கணக்குகள்தான். இவற்றுடன் பணியாளர்களை நன்கு நடத்திச் செல்லும் விதம் உங்களுக்குத் தெரிந்தால் போதும், பிசினஸில் நீங்கள் கொடிகட்டிப் பறந்துவிடலாம். நீங்கள் நன்றாகப் படித்திருந்தால், பிசினஸை இன்னும் அறிவுப்பூர்வமாகச் செய்ய முடியும்.
இளைஞர்களுக்குத்தான்  பிசினஸ் லாயக்கு!
இத்தனை நாளும் ஏதோவொரு நிறுவனத்தில் கஷ்டப்பட்டு உழைத்து, இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். இனி, நான் எங்கே பிசினஸ் செய்வது என்று நினைக்கிறார்கள் சிலர்.
வயதுக்கும் பிசினஸ் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இளைஞர்கள் ஓடியாடி உழைக்கும் தெம்புடன் இருப்பார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஏறக்குறைய 30 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங் களில் வேலை பார்த்த அனுபவம் இருப்பது ரிட்டையர்டு ஆனவர் களுக்கு பாசிட்டிவ்வான அம்சம் அல்லவா?
இளைஞர்கள் அனுபவ மின்மையாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற துடிப்பினாலும் சில தவறுகளைச் செய்துவிட வாய்ப்புண்டு. ஆனால், அனுபவ சாலிகளான பெரியவர்கள் அப்படி எந்தத் தவறும் செய்ய வாய்ப்புகள் குறைவு. 
ரிட்டையர்டு ஆனவர்கள் தாங்கள் சேர்த்த பணம் முழு வதையும் பணயமாக வைத்துப் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதில்லை. அதில் 10 சதவிகித பணத்தைப்போட்டு சிறிய அளவில் ஏதாவது ஒரு தொழிலை செய்வதற்கு வயது  என்பது நிச்சயம் தடையல்ல. 
 ஆண்களுக்குத்தான் பிசினஸ் லாயக்கு!
பெண்களுக்கு பிசினஸ் சரிப்பட்டு வராது எனப் பல பெண்கள் நினைக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் அல்ல; காலம் காலமாகக் குடும்பப் பொறுப்பை அவர்கள் தலையில் சுமத்தி, வீட்டிலேயே அவர்களை அடைத்துவைத்து விட்ட ஆண்கள்தான். பல தலைமுறைகளாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால், தங்களால் பிசினஸில் ஜெயிக்க முடியுமா என்கிற சந்தேகம் அவர்களுக்குள் லேசில் உடைக்க முடியாத பனி போலக் குவிந்துவிட்டது.
ஆனால், பிசினஸை ஆண்கள் அளவுக்குப் பெண்களாலும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம், பயோகான் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியான கிரண் மஜும்தார் ஷா. எல்லா துறைகளையும் போலவே, தற்போது பிசினஸிலும் பெண்கள் அதிக அளவில் நுழையத் தொடங்கியிருப்பது ஆரோக்கி யமான மாற்றமே!
தோற்றுவிடுவோமோ என்கிற பயம்!
இந்தப் பயம்தான் பலரையும் பிசினஸை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடி செய்துவிடு கிறது. ஒரு விஷயத்தைச் செய்வ தற்கு முன்பே அதில் நாம் தோற்றுப்போய்விடுவோமோ என்று நினைப்பது அறியாமை. எந்த பிசினஸும் கட்டாயம் ஜெயிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத மாதிரி, கட்டாயமாகத் தோற்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.
எந்த பிசினஸாக இருந்தாலும் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி செய்யாமல், அதை முறைப்படி தெரிந்துகொண்டு, அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்தறிந்து செய்வோம் எனில், அதில் தோல்வி என்கிற பேச்சுக்கே இடமில்லை. மிகப் பெரிய பொருளாதாரப் பலம் கொண்ட நிறுவனங்கள்கூட, புதிதாக ஆரம்பித்த சில தொழில்களில் தோற்கக் காரணம், அதைச் சரியாக ஆராய்ந்தறியா மல் செய்வதுதான்.
எனவே, வெற்றி, தோல்வி குறித்த சிந்தனை இல்லாமல், பிசினஸை சரியாகத்தான் செய்கிறோமா என்கிற சிந்தனை யுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால், நிச்சயம் வெற்றிதான்!
நஷ்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம்!
பிசினஸ் ஆரம்பித்தபின், அதில் தோல்வி ஏற்பட்டு, கஷ்டப் பட்டுச் சேர்த்த பணம் அத்தனை யையும் இழந்து விடுவோமோ என்கிற பயம் எல்லோருக்குமே உண்டு. அப்படியொரு நிலைமை வந்தால், மீண்டும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவேன் என்கிற மனத்திடம் உங்களிடம் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் நாங்கள் கூட்டாகத் தொழில் தொடங்கினோம். பிசினஸ் நன்றாக நடந்ததால், சகோதரர்கள் ஒவ்வொருவருக் கும் ஒரு கார் வாங்கினோம். ஆனால், எனக்குத் தனியாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்று ஆசை. அதனால், எங்கள் வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு வீடு எடுத்து, அங்கு பிசினஸ் செய்யத் தொடங்கினேன். அப்போது காரை விட்டுவிட்டு, சைக்கிளிலில்தான் சென்றேன். உனக்கு இதெல்லாம் தேவையா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை. காரணம், பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறிதான் என்னிடம் இருந்தது. நஷ்டம் வந்துவிடுமோ என்று நினைத்துப் பயப்படவே இல்லை. இப்படி நீங்களும் நினைத்தால் பிசினஸில் ஜெயிப்பது உறுதி.
பிசினஸ் பற்றி உங்கள் மனதில் உள்ள தவறான அபிப்ராயங்களை இப்போது ஒழித்துக்கட்டி யிருப்பீர்கள். இனி, பிசினஸ் செய்வதற்கான தொழிலை எப்படித் தேர்வு செய்வது என்பது பற்றிச் சொல்கிறேன்.


பிசினஸ் சீக்ரெட்ஸ் - 4

தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்
உங்களுக்கான தொழிலைக் கண்டுபிடியுங்கள்!
டந்த மூன்று வாரங்களாக நான் எழுதிவரும் இந்தக் கட்டுரைத் தொடரை தொடர்ந்து படித்துவரும் நீங்கள், பிசினஸ் தொடங்க முடிவு செய்திருப்பீர்கள்.
 
பிசினஸில் இறங்குவதற்குமுன், எந்தத் தொழிலைச் செய்வது? நம்மைச் சுற்றி பல ஆயிரக்கணக் கானத் தொழில்கள் இருக்கின்றனவே, இதில் நமக்கான தொழிலை எப்படித் தேர்வு செய்வது என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்.
முதலில் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் கண்டாக வேண்டும். காரணம், முதன்முதலாக நீங்கள் செய்யப்போகும் தொழில் சரியாக அமைந்தால்தான், பிசினஸில் உங்களால் வெற்றிக் கொடியை நாட்ட முடியும்.
 
‘சார், எனக்கு பிசினஸ் செய்ய ஆசை. ஆனால், எந்த பிசினஸ் செய்வது என்று தெரியவில்லை! எனக்கு ஒரு நல்ல பிசினஸை சொல்லுங்களேன்!’ என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். நீங்கள் என்ன பிசினஸ் செய்ய வேண்டும் என்று நான் சொல்வதைவிட, உங்களுக்கான தொழிலை தேர்வு செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைச் சொன்னால் சரியாக இருக்கும்.
பிசினஸ் செய்ய முடிவு செய்துவிட்டால், அதைப்பற்றி வெறுமனே பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந் தால், உங்களுக்கான தொழிலை உங்களால் கண்டுபிடித்துவிட முடியாது. துளியும் யோசிக்காமல், களத்தில் இறங்க வேண்டும்.
 
நீங்கள் ஒரு கடை வைத்து நடத்தப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு கடைத் தெருவுக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஒவ்வொரு கடையையும் கூர்ந்து பாருங்கள். அந்த இடத்தில் உங்களுக்கு இருக்கும் பிசினஸ் வாய்ப்பு என்ன என்று கண்டறியுங்கள்.
உதாரணமாக, ஒரு கடைத் தெருவில் முதல் கடை ஒரு ஜுவல்லரிக் கடை. அதற்கடுத்து, ஒரு ஜவுளிக் கடை. அடுத்து, ஒரு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கும் கடை. அடுத்து, ஒரு ஐஸ்க்ரீம் பார்லர். அடுத்து ஒரு பாத்திரக் கடை. அடுத்து, ஒரு பலசரக்குக் கடை. இப்படிச் சின்னதும் பெரியதுமாகப் பல கடைகள் வரிசையாக இருக் கின்றன.
இத்தனை கடைகளையும் தாண்டிச் சென்ற உங்களுக்குப் பளிச்சென ஒரு விஷயம் தெரிகிறது. இத்தனை கடைகள் இருந்தும் ஒரு ஹோட்டல் இந்தக் கடைத் தெருவில் இல்லையே என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். ஆக, அந்த இடத்தில் ஒரு ஹோட்டல் தொடங்க ஒரு வாய்ப்பு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுதான் உங்களுக்கான தொழில் அல்லது பிசினஸ் வாய்ப்பு.
‘உங்களைச் சுற்றியுள்ள மனித சமூகத்துக்கு உங்களால் எப்படி உதவ முடியும் என்பதைக் கவனி யுங்கள். உங்களுக்கான தொழிலை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் கள்’ என்கிறார் அலிபாபாவின் ஜாக் மா.   ஒரு கடைத் தெருவில் ஐம்பது கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்குப் பல ஆயிரம் பேர் தினமும் வந்து போவார்கள். இவர்கள் சாப்பிட ஒரு நல்ல ஹோட்டல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நமக்குள் எழும் சிந்தனைதான் ஒரு ஹோட்டலை ஆரம்பிக்கும் பிசினஸ் வாய்ப்பாக மாறுகிறது.
ஆக, ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு நீங்கள் தொழில் தொடங்க நினைக்கும் கடைத்தெருவுக்குச் செல்லுங்கள். அங்கு என்னென்ன வெல்லாம் விற்கிறார்கள், என் னென்னவெல்லாம் விற்கவில்லை என்பதைப் பட்டியலிடுங்கள். அதிகம் விற்கப்படாத, அதே நேரத்தில் அங்குள்ள அதிக மனிதர்களுக்கு அவசியம் தேவைப்படும் பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பொருளை விற்பதில் உங்களுக்கு உள்ள வாய்ப்புகளைப் பரிசீலியுங்கள். இப்படிப் பரிசீலித்தபின் மூன்று, நான்கு தொழில்களை எழுதுங்கள்.
இதன் அடுத்த கட்டமாக, இந்த மூன்று அல்லது நான்கு தொழில்களைப் பற்றி மட்டும் விசாரிக்க ஆரம்பியுங்கள். உதாரணமாக, 1. ஹோட்டல் நடத்துவது, 2. வீடு கட்டத்  தேவையான பொருட்களை விற்பது, 3. இருசக்கர வாகனங் களுக்கான உபகரணங்களை விற்பது என மூன்று தொழில்களை நீங்கள் ‘ஷார்ட் லிஸ்ட்’ செய் கிறீர்கள்.
 
உதாரணமாக, ஹோட்டல் நடத்த முடிவு செய்கிறீர்கள் எனில், ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும்  சர்வரில் ஆரம்பித்து, சமையல்காரர், பொருட்களை பர்ச்சேஸ் செய்யும் மேனேஜர், அந்த ஹோட்டலின் முதலாளி என பலருடன் பேசுங்கள்.  குறைந்தது 15 ஹோட்டல்களை யாவது நீங்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி யிருக்கும்.
 
எந்த ஹோட்டல் முதலாளி யாவது தனது தொழில் ரகசியத்தை பகிர்ந்து கொள் வாரா? என்று நீங்கள் நினைக்க லாம். உங்களை ஒரு போட்டி யாளர் என்று நினைக்காத வரை  அவர் கற்றறிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்கமாட்டார். எல்லோரும் உள்ளபடி பகிர்ந்துகொள்ளா விட்டாலும் சிலராவது சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்வ திலிருந்தே நாம் பல விஷயங் களைக் கற்றுக் கொள்ளலாம். 
   
இப்படி ஒவ்வொரு தொழில் பற்றியும் உங்களுக்குச் சரியான தொரு புரிதல் வந்தபிறகு, கடைசி யாக உங்களுக்கு எல்லா வகை யிலும் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரேயொரு தொழிலைத் தேர்வு செய்து அதில் தைரியமாக இறங்கலாம்.
இப்படி நீங்கள் தேர்வு செய்யும் தொழிலில் உங்களுக்கு நேரடியாக அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்தத் தொழிலில் சில ஆண்டுகள் வேலை செய்வது அவசியம் என்பார்கள் சிலர். இந்த முன் அனுபவம் தேவைதான். ஆனால், அதைவிட முக்கியம், நம்முன் உள்ள பிசினஸ் வாய்ப்பு.
ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கிறது என்று தெரிந்தபின், அதில் உடனடியாக இறங்கிவிடு வதே சரி. அந்தத் தொழிலை நேரடியாகக் கற்றுக்கொள்கிறேன் என்கிற பெயரில் நாட்களைக் கடத்தினால், இன்னொருவர் அந்த பிசினஸ் வாய்ப்பை தட்டிச்சென்றுவிடும் ஆபத்து உண்டு. எனவே, ஒரு தொழிலை ஆரம்பித்துவிட்டு, அதில்  இருக்கும் நெளிவுசுளிவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள முயற்சிக்க லாமேயொழிய, ஒரு தொழிலை முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பின் தொடங்குவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
நமக்கான பிசினஸ் வாய்ப்பை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உண்டு. ‘திருச்சிக்குப் போயிருந்தேன். ஒரு துணிக்கடை. துணியை வாங்கியவுடனே அதைத் தைக்க அங்கேயே ஒரு டெய்லரிங் கடை. தைக்கக் குடுத்த துணி ரெடி ஆவதற்குள் சாப்பிட அருமையான சாப்பாடு. வீட்டுக்குத் தேவையான பொருட் களை அங்கேயே வாங்கிக் கொள்கிற மாதிரி ஒரு சூப்பர் மார்க்கெட் என அமர்க்களப் படுத்தி இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு கடையை நான் ஏன் சென்னை அண்ணா நகரிலோ, அடையாரிலோ தொடங்கக் கூடாது?’ என்று நீங்கள் எங்கேயோ பார்த்த ஒரு பிசினஸை உங்களூரில் தொடங்கலாம்.
இப்படிச் செய்வதற்கு ‘borrowed innovation’ என்று பெயர். இப்படிச் செய்யும்போது, ஒருவர் செய்ததை நீங்கள் அப்படியே காப்பி அடிக்கிறீர்கள் என்றாலும், உங்கள் ஏரியாவுக்கு அது புதிது. இதை வேறு ஒருவர் நடைமுறைப் படுத்தும்முன் நீங்கள் அதைச் செய்வதே புத்திசாலித்தனம்.
 
சரி, உங்களுக்கான ஒரு தொழிலைக் கண்டுபிடித்துவிட் டீர்கள். அதை இன்னும் சில காரணிகளுக்கு உட்படுத்திப் பார்த்தபின்பே அதை செய்ய லாமா, கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அந்தக் காரணிகளை அடுத்த இதழில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment