Saturday, November 26, 2016

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation vikatan

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation


  தன்னம்பிக்கை, சுய முயற்சி, முறையான பயிற்சி,  பணியில் ஒழுக்கம் இந்த நான்கும் இருந்தால் நிச்சயம் எந்தவொரு விஷயமும் சாத்தியமானதே. நம் வாழ்க்கைக்கான ரோல் மாடல்களை இணையத்தில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் ஊரில், நம் அருகில் எவ்வளவோ  பேர் உதாரண புருஷனாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் தான் சின்ன சின்ன தோல்விகளை கூட சந்திக்க திராணியில்லாமல் முடங்கிப்போய்  விடுகிறோம்.  சோர்வை விட்டொழித்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து,  நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய ஐந்து  மந்திரங்களை மனதில்  பதிய வையுங்கள். 


1. இடர்பாடுகள் தான் வாய்ப்புகள்  : -
எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும் என கண்டுபிடிப்பதை விட, எதைச் செய்தால் வெற்றி கிடைக்காது என அறிவது புத்திசாலித்தனம். மின்சாரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எடிசன் கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை தோல்விகளை சந்தித்தாராம். அவரது நண்பர் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். ஏனப்பா ? இவ்வளவு முயற்சி எதற்கு? எல்லாமே வீண் தானே, அதற்கு உருப்படியாக வேறு எதாவது செய்யலாமே என அட்வைஸ் செய்ய, " என்ன செய்தால் மின்சாரம் வரும் என்பதை மட்டும் தான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்த பத்தாயிரம் மாதிரிகளில் நிச்சயம் மின்சாரம் வராது என கண்டுபிடித்திருக்கிறேன். ஆக நான் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறேன்" என்றாராம் எடிசன். அது தான் ஆட்டிடியூட். தோல்வி என்பதன் அர்த்தத்தை  வெற்றிக்கு தவறான வழியை கண்டறிந்துள்ளோம் என புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

2.  என் இலக்கை நானே தீர்மானிப்பேன் :- 
உங்கள்  வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை  எட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. சாக்கு போக்கு சொல்வதை விட்டுவிட்டு உங்கள் இலக்கை தீர்மானித்து அதற்கான கதை, திரைக்கதை எல்லாம் பக்காவாக தயார் செய்து உங்களை நேர்மையாக  இயக்குங்கள்; உங்கள் வாழ்க்கை  நிச்சயம் வெற்றி அடையும். 

3.  நல்ல எண்ணங்களே நனவாகும் ; -
எண்ணம் போல்தான் வாழ்வு என்பதை முன்னோர்களை பல விதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அது நிஜம்.  பாசிட்டிவ் மைண்ட்செட்  தான்  'ஸ்பீடு'  ஊக்க மருந்து. பல  சமயங்களில் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் எக்கச்சக்க சாதனைகளை பலர் புரிந்திருக்கிறார்கள். எனவே உங்களை தயவு செய்து நம்புங்கள். நீங்கள் வெற்றி தேவதையின் கைகளில் தவழத் தகுதியானவர் என்பதை நினைவில் வையுங்கள். 

4.  நேரமே வரம் : -
'நன்றே செய் அதை இன்றே செய்' இதையும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றது தான்.  நல்ல விஷயங்களை செய்ய எப்போதும் நேரம், காலம் பார்க்காதீர்கள். எந்தவொரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுங்கள். ஒரு விஷயத்தை புதிதாக முயற்சித்து தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை, முயற்சிக்காமல் வெறுமனே தரையை  தேய்க்க வேண்டாம். இந்த உலகத்தில் எதையும் யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியம், ஆனால் நேரம் மட்டும் தான் சாதி, மதம், பணக்காரன், ஏழை என பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது.நேரத்தை சரியாக பயன்படுத்துபவனே வெற்றியாளன் ஆகிறான்.

5. எதையும் கவனமாக தேர்ந்தெடுங்கள் :- 
எந்தவொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. நம்மால் தான் எதுவும் சாத்தியமே என நடுக்கடலில் குதிப்பதோ, பத்தாவது பெயிலாகி விட்டு மருத்துவ கல்லூரி வாசலில் நிற்பது போன்ற அபத்தங்களை செய்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக விரும்பினாலும், அதன் பின் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய வேண்டும்.  வெற்றிக்கான வழியை பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்ய  வேண்டும். அதன் பின் தான்  களத்தில் இறங்க வேண்டும்.  இப்போது, இந்த ஐந்து  விஷயங்களை ஒன்ஸ்மோர் படியுங்கள். 
மகிழ்ச்சி. 

No comments:

Post a Comment