Sunday, October 22, 2017

ஒழுக்கமான இல்லறமே நல்லறமாகும்! thanks to dinamalar.com






uratha sindhanai, உரத்த சிந்தனை, ஒழுக்கம், இல்லறம், நல்லறம், எஸ். ரமா

ஒரு தலைமுறை காலமாகவே, பல குடும்பங்களில், நிம்மதி பறிபோக காரணமாக இருப்பது, குடும்பத் தலைவன் அல்லது தலைவி, மண வாழ்க்கை தாண்டி, வேறொரு உறவை நாடிப் போவது தான்!
இது, நம் பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும் ஏற்புடையதல்ல என்றாலும், மிகவும் கசப்பான உண்மையே.
கணவன் அல்லது மனைவி மீது, பரிபூரண நம்பிக்கை வைத்து, தமக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை பெரிது படுத்தாமல், மகிழ்ச்சியோடு இல்லறம் நடத்தும் போது மட்டுமே, குடும்ப வாழ்க்கை சொர்க்கமாகும்.
கணவனோ அல்லது மனைவியோ, தம் வாழ்க்கைத் துணையிடம், தான் எதிர்பார்க்கும் ஒருசில குணங்கள் அல்லது அம்சங்கள் இல்லையெனில், அப்படி இருக்கும் நபரை சந்திக்கும் போது, ஒருவித மன ஈர்ப்பு உண்டாவது இயல்பே.
ஆனால், அதை கட்டுப்படுத்தி, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சியை சீர்துாக்கி பார்த்து, மன எழுச்சியை கட்டுக்குள்
கொண்டு வந்து வாழ்வோரே, மிகச் சிறந்த குடும்பத் தலைவன் அல்லது தலைவியாக பரிணமிக்க முடியும்.

'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு' என்றாலும், 'அடுத்தவர்பொருளுக்கு ஆசைப்படக் கூடாது' எனும், நன்னெறியை கடைப்பிடித்தால் தான், பிரச்னைகளில் இருந்து தப்பலாம்; வாரிசுகளுக்கு சிறந்த முன்னு
தாரணமாகவும் முடியும்.உயர்ந்த குணநலன்கள் கொண்டோரின் வாரிசுகள், 'பெற்றோர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல், ஒழுக்கமாக வாழ வேண்டும்' என்ற நற்சிந்தனையை, குடும்பத்தில் இருந்தே பெறுகின்றனர்.
ஒருவேளை, பெற்றோரின் சிறந்த குணநலன்களுக்கு மாறாக, பிள்ளைகள் நடந்தாலும், உற்றார், உறவினர், 'இவ்வளவு சிறந்த பெற்றோருக்கு இப்படிப்பட்ட பிள்ளையா... பெண்ணா பிறக்க வேண்டும்...' என, பெற்றோரின் சீரிய குணத்தையேமுதன்மைப்படுத்தி பேசுவர்.

மேலும், 'இப்படிப்பட்ட பிள்ளைகள் பிறக்க, அப்பெற்றோர் என்ன பாவம் செய்தனரோ...' என, நற்குணம் நிறைந்த பெற்றோரை, யாரும் துாற்றிப் பேச மாட்டார்கள்.அது போல, குடித்து, ஊர் சுற்றி, குடும்பத்தை கவனிக்காத குடும்பத் தலைவனின் நடத்தையால், பல துயரங்களை அடைந்த குழந்தைகள், சில சமயங்களில், நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, சிறந்த பழக்க வழக்கங்களோடு வாழும்.அப்போது, 'இம்மாதிரி குழந்தைகள் பிறக்க, அந்த தாயின் தவப்பயன்கள் தான் காரணம்' அல்லது, 'பூர்வ ஜென்மத்தில், அவன் என்ன புண்ணியம் செய்தானோ...' என, பலரும் பேசுவர்.தனி மனித சந்தோஷம்மட்டுமே, பிரதானம் என வாழ்ந்தால், நிச்சயம் நல்ல குடும்பத்தை உருவாக்க முடியாது. நல்ல குடும்பங்களால் மட்டுமே, நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
விட்டுக் கொடுத்தல், அனுசரித்து போதல், பொறுமை காத்தல், மன்னித்தல், நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல் மற்றும் பரந்த மனப்பான்மை போன்ற உயரிய பண்புகளால் மட்டுமே, ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவோ அல்லது தலைவியாகவோ முடியும்.
சுயநலம், பொறாமை, பழி வாங்குதல், கோபம், அவசரத் தீர்வு, வன்மம் போன்ற தீய குணங்கள் நிறைந்த பெற்றோரால், சிறந்த வாழ்க்கையைபிள்ளைகளுக்குத் தர முடியாது.தனிக்குடித்தன முறையில், கணவன் - மனைவிக்கு இடையே, அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படும் சூழல், மிக அதிகமாக காணப்படுகிறது.என்ன தான் கல்வியறிவு, வேலைவாய்ப்பு போன்ற வளர்ச்சி - வாய்ப்புகள், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினாலும், குடும்பம் என வரும் போது, ஆணாதிக்க மனப்பான்மையே மேலோங்கி உள்ளது.பெற்றோருடன் சேர்ந்து இருந்தால், நண்பர்களுடன் அரட்டை, மது பானம், சிகரெட் என, 'ஜாலி'யாக பொழுதை கழிப்பது சிரமம் என்றே பல ஆண்கள், 'மனைவி அனுசரித்து போகவில்லை' என, சாக்கு சொல்லி, தனிக்குடித்தனம் செல்கின்றனர்.
அத்தகைய நேரத்தில், கணவனைசரிகட்ட முடியாமலும், மாமியார் - மாமனாரோடு இணைந்து போக இயலாமலும், மன உளைச்சலுடன், மனைவிவாழ்கிறாள்.இதனால், பல குடும்பங்களில் தினமும் கூச்சல், குழப்பம் தான். 'வீடு என்பதுசொர்க்கம்' என்ற ஒன்றே, சிலருக்கு தெரியவில்லை. விளைவு...திக்கற்ற மனப்பான்மையில் குழந்தைகள் வளர, வடிகால் தேடி அலையும் நிலையில் பெற்றோர் குடும்பம் நடத்த, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களால், மிகச் சுலபமாக, இல்லறம் தாண்டிய உறவுகள்,ஆண் - பெண் வாழ்க்கையில் நுழைகின்றன.இன்று, பல குடும்பங்கள் சிதைய, கட்டுப்பாடற்ற முறையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துதல், அதற்கு அடிமையாதல் போன்றவற்றால், தன்னை நம்பியுள்ள குடும்பம், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் என, அனைத்தையும் துச்சமென துறந்து, வீட்டை பிரிந்து செல்கின்றனர்.எனக்கு தெரிந்த குடும்பத்தில், அதிர்ந்து பேசத் தெரியாத அப்பாவி கணவனுக்கு, 'திறமை'சாலியான மனைவி. மகனுக்கு, 13; மகளுக்கு, 10 வயது.அந்த குடும்பம் இருந்த தெருவில் வசிக்க வந்த இளைஞன், மாசு, மருவற்ற அழகுடன் இருந்த, அந்த இரு குழந்தைகளின் தாய் மீது, மையல் கொண்டான். பல நாட்கள் நன்கு பழகி,அந்த பெண்ணின் மனதில்இடம் பிடித்து விட்டான்.விளைவு, மூன்றே மாதத்தில், அந்த பெண், வீட்டை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல், அந்த இளைஞனோடு ஓடிவிட்டாள்.தாயை இழந்த குழந்தைகள், மனைவியை பறிகொடுத்த கணவன், குடும்ப மானம் பறிபோனதால், தலை குனிந்த படியே, இன்னமும் வெளியே சென்று வருகின்றனர்.அது போல, வேறொரு பெண்ணுடன் ஓடி விட்ட கணவனை நினைத்து அழுது, புலம்பாமல், 'குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்' என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வரும் பெண்களும், இந்நாட்டில் அதிகம் இருக்கத் தான் செய்கின்றனர்.எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், கணவனால் அபலையான பெண்ணுக்கு, அவளின் பிறந்த வீட்டு சொந்தங்களும், கணவர் உடன் பிறந்தோரும்
ஆறுதலாக இப்போதும்இருக்கின்றனர்.ஆண்டுகள் பலவாகிலும், ஆறாத ரணத்தை முகத்தில் காட்டாமல், தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ஒழுக்கமாக வாழ்ந்து காட்டுகிறாள், அந்த பெண். அவள் அல்லவோ பெண்!
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என உரைக்கும், நக்கீரன்கள் இன்னமும் நம் மண்ணின் மானத்தை, மணத்தை பாதுகாக்கவே
செய்கின்றனர்.

கணவரின் இரண்டாம் திருமணம் பற்றி அறிந்ததில் இருந்து, அவனின் முகம் பார்த்து பேசாமல், 'இனிமேல் இந்த வீட்டு வாசல் படி ஏறக்கூடாது' என, உறுதியாகக்
கூறி விட்டார், ஒரு பெண்.தன் கணவர் சம்பாத்தியத்தில் தனக்கோ, தன் மகளுக்கோ, எந்த உரிமையும் தேவையில்லை என, எழுதி கொடுத்த, சுயமரியாதை நிறைந்த பெண்களால் தான், நம் நாடு பெருமை கொள்கிறது.திருமண பந்தம் என்பது, வெறும், உடல் சம்பந்தப்பட்டது அல்ல. பரஸ்பர அன்பு, மரியாதை, பெருந்தன்மை போன்ற நற்குணங்களால், பேணிக்காக்கப்பட வேண்டியது.நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். நல்ல குடும்பம் இல்லையெனில், நல்ல சமுதாயம் இல்லை; நல்ல சமுதாயம் இல்லையெனில், நல்ல நாடு இல்லை.கல்வியில் மறுமலர்ச்சி, மேலை நாட்டு நாகரிக மோகம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி என, மனித வாழ்வில், பல மாறுதல்கள் ஏற்பட்டதால், இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப, சில விஷயங்களில் விட்டு கொடுத்தால், நிச்சயம், நல்ல குடும்பம் உருவாகும்.
காலையில் கூட்டை விட்டு வெளியேறும் பறவை, மாலையில் கூட்டை வந்தடைவது போல, ஏதாவது ஒருகாரணம் அல்லது ஈர்ப்பால், குடும்பத்தை விட்டு வெளியேறும் கணவன் அல்லது மனைவி, தவறை உணர்ந்து, திருந்தி, குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ வழிவகுத்தால், பல குடும்பங்கள் வாழும்.ஒரு பெண்ணுக்கு, தன் தந்தையிடம் கிடைத்த, கிடைக்காத நற்குணங்கள், ஒரு ஆணுக்கு, தன் தாயிடம் பெற்ற, பெறாத நற்குணங்கள் ஒரு ஆண் - பெண் சந்திக்க நேரும் போது, குறிப்பாக, தன் வாழ்க்கைத் துணையிடம் இக்குணங்களை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், மனம் சபலப்படவே செய்யும்.அதை வென்று, மனதை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல்களால், இதமாக வீசும் தென்றலை போல, மனதை தொட வைத்தால், நல்ல மன மாற்றம் மிக இயல்பே!இதை புரிந்து கொள்ளாமல், ஆத்திரம், வெறுப்பு என, கோபாவேசமாக முடிவெடுத்து, தவறு இழைத்த கணவன் அல்லது மனைவி, தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என, முற்படும் போது தான், குடும்பம் என்ற அழகான கூடு சிதைந்து போகும்.
தவறு செய்யாதோர் இந்த உலகில் இல்லை. தவறை திருத்தி வாழ, வழி செய்தால் தான், இல்லறம் நல்லறமாகும்!வீட்டு வேலைக்காரியுடன், கணவன் வைத்திருந்த வெறுக்கத் தக்க உறவைக் கண்டு, அடியோடு அவனிடம் பேசாமல், சேர்ந்து உறங்காமல், ஆனால், குழந்தைகளுக்கு கூட இவை தெரியாமல், கண்ணியம் காத்த பல பெண்கள் உண்டு.
அது போல, தந்தை, தமையன் உறவு முறை கொண்டவர்களுடன், தன் மனைவி தவறான உறவு வைத்திருந்ததை அறிந்தும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, துறவி போல வாழ்ந்து, குடும்பத்தின் மேன்மை காத்த ஆண்களும் உண்டு.
நம் மண்ணின் மேன்மை, இப்படிப்பட்ட ம னித தெய்வங்களால் தான் பாதுகாக்கப்படுகிறது.எஸ். ரமா -மனநல ஆலோசகர்இ-மெயில்: ramas_s@rediffmail.com

No comments:

Post a Comment