Written by S.NAGARAJAN
Date: 29 October 2017
Time uploaded in London- 4-51 am
Post No. 4346
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மஹாபாரதச் செல்வம்
விதுரர் கூறும் விதுர நீதி - 6
ச.நாகராஜன்
இதுவரை எண்கள் ரீதியாக நீதிகளைச் சொல்லி வந்த விதுரர் திருதராஷ்டிரனுக்கு இதர நீதிகளையும் கூறுகிறார்.
அவற்றில் சில:
சுகமாக இருப்பவன்
எவன் ஒருவன் வீட்டை விட்டுப் பயனில்லாமல் அயல் தேசம் செல்வதையும், பாவிகளுடைய சேர்க்கையையும்,பிறர் மனைவியைச் சேர்தலையும்,டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும், மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் சுகியாக இருப்பான்.
மூடனில்லாதவன் யார்?
மூடனில்லாதவன் தர்மார்த்தகாமங்களைப் படபடப்பாக ஆரம்பிக்க மாட்டான்.
அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்.
நண்பன் விஷயத்தில் விவாதத்தை விரும்பமாட்டான்.
பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கமாட்டான்.
எங்கும் புகழ்ச்சியை அடைபவன் யார்?
எவன் பொறாமைப் படுவதில்லையோ,
எவன் தயை செய்கிறானோ,
பலமில்லாமல் இருக்கும் போது விரோதத்தைச் செய்வதில்லையோ,
ஒன்றையும் அதிகமாகச் சொல்லுவதில்லையோ,
விவாதத்தைப் பொறுத்துக் கொள்கிறானோ,
அப்படிப்பட்டவன் எப்பொழுதும் புகழ்ச்சியை அடைகிறான்.
எவன் ஒருவன் அனைவருக்கும் பிரியமானவனாகிறான்?
எவன் ஒரு பொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்து கொள்ளுகிறதில்லையோ,
ஆண்தன்மையால் (பௌருஷத்தால்) பிறரிடம் தற்புகழ்ச்சி செய்துகொள்கிறதில்லையோ.
மிஞ்சினவனாகச் சிறிதும் கடுமையாக வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ,
அவனை மற்ற மனிதன் எப்பொழுதும் பிரியமானவனாகச் செய்கிறான், அல்லவா!
ஆரியர்களின் சுபாவம் என்ன?
சமாதானம் அடைந்த சண்டையை மீண்டும் கிளப்பமாட்டான்.
கர்வத்தை அடையான்.
எப்பொழுதும் பொறுமையாக இருப்பான்.
வறுமையை அடைந்து ஏழையாகி விட்ட காரணத்தால் செய்யத் தகாததைச் செய்யமாட்டான்.
தனக்கு சுகம் ஏற்பட்டாலும் அதிகமாக மகிழ்ச்சி அடைய மாட்டான்.
பிறருக்கு துக்கம் ஏற்பட்டபொழுதும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.
கொடுத்து விட்டுப் பின்பு வருத்தப்பட மாட்டான்.
இவனே நல்ல மனிதன். இவனே புகழத் தக்க ஒழுக்கமுடையவன்.
இதுவே ஆரியர்களின் சுபாவம்.
முன்னுக்கு வருபவன் யார்?
தேசாசாரங்களையும், அங்குள்ள கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிந்தவனும்,
ஏற்றத்தாழ்வை அறிந்தவனுமாக இருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும் சென்ற இடத்தில் உள்ள மக்களால் ஏற்கப்பட்டவனாகி அந்த மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாகிறான்.
சிறந்தவன் யார்?
டம்பத்தையும், மோகத்தையும், பொறாமையையும், பாவச் செயலையும், ராஜ த்வேஷத்தையும், கோள் சொல்லுவதையும், மக்கள் கூட்டத்தோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்கள், பித்தர்கள், தீயமக்கள் ஆகியோருடன் பேச்சையும் தள்ளுகிறானோ அந்தப் பேரறிவாளனே சிறந்தவன்.
தேவதைகள் யாருக்கு அனுக்ரஹம் செய்கிறார்கள்?
எவன் அடக்கம், சுத்தி, தெய்வ கர்மம். மங்கள காரியங்கள், பிராயச்சித்தங்கள், பலவிதமான உலக வியவகாரங்கள் ஆகிய இவற்றைத் தினமும் செய்கிறானோ அவனுக்குத் தேவதைகள் மென்மேலும் வளத்தை (விருத்தியை) தருகிறார்கள்.
வித்வானுடைய நீதி எப்போது நன்றாகச் செய்யப்பட்டதாகிறது?
சமமானவர்களுடன் விவாஹம் செய்கிறவன்
இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவன்
சமமாக உள்ளவர்களுடன் நட்பு கொண்டு, உணவு, உரையாடல் ஆகியவற்றைச் செய்கிறவன்,
குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவன்
ஆகிய இந்த வித்வானுடைய நீதிகள் நன்றாகச் செய்யப்பட்டதாகிறது.
அனர்த்தங்கள் யாரை விட்டு விலகுகின்றன?
தன்னை அண்டி வருவோர்க்கு பகுத்துக் கொடுத்து விட்டு மிதமாக உண்ணுபவனும்,
அளவற்ற காரியத்தைச் செய்து விட்டு மிதமாக உறங்குபவனும்,
யாசிக்கப்படாமல் பகைவர்களுக்குத் தானம் செய்பவனும்,
நல்ல மனம் உடையவனாயிருப்பவனை விட்டு
அனர்த்தங்கள் விலகுகின்றன.
தேஜஸில் சூரியன் போல விளங்குபவன் யார்?
எவனுடைய செய்ய விருப்பப்பட்ட காரியத்தையும்,
மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும் இதர மக்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரகசியமாகவும் நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாகவும் இருந்தால் அவனுக்கு ஒரு காரியமும் நழுவுவதில்லை.
எல்லாப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் செல்பவனும், உண்மையுள்ளவனும், மிருதுவான சுபாவம் உள்ளவனும், தக்கவர்களை நன்கு மதிப்பவனும் சுத்தமான் எண்ணமும் உடையவனுமாயிருக்கிறவனும் ஆன இவன்
ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியில் உண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம் போல அதிகமாக அறியப்படுகிறான்.
எந்த மனிதன் தானாகவே செய்யக் கூடாத காரியங்களில் லஜ்ஜை (வெட்கம்) அடைகிறானோ அவன் எல்லா உலகத்திற்கும் குருவாக ஆகிறான்.
தவிரவும் அளவற்ற தேஜஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலை பெற்றவனுமாகிறான்.
அவன் தேஜஸினால் சூரியன் போல விளங்குகிறான்.
இப்படி விரிவாக நீதி தர்மத்தை விளக்கிய விதுரர் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை வழங்கி விடுமாறு அறிவுரை கூறுகிறார்.
இத்துடன் உத்யோக பர்வத்தில் உப பர்வமாக விளங்கும் ப்ரஜாகர பர்வத்தில் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முடிகிறது.
இதைத் தொடர்ந்து விதுரர் தனது உரையாடலில் மேற்கொண்டு பல நீதிகளையும் விளக்குகிறார்.
அவற்றை மஹாபாரதத்தில் படித்து மகிழலாம்; கடைப்பிடித்து வாழலாம்; மேன்மையுற்றுச் சிறக்கலாம்; தேவதைகளின் அனுக்ரஹத்தையும் பெறலாம்.
இந்தத் தொடர் இத்துடன் முற்றும்
No comments:
Post a Comment