தேவையும், பேராசையும்! (Post No.5462)by Tamil and Vedas |
Written by S NAGARAJAN
Date: 24 SEPTEMBER 2018
Time uploaded in London – 5-50 AM (British Summer Time)
Post No. 5462
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.
முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.
மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.
கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.
அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.
தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில் ஒரு சம்பவம் இது:
மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.
இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.
அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.
கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.
இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.
2
இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.
அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.
அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.
தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.
உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “
He who knows his need
And yet without greed
Whatever be his creed
He is a saint indeed.
இது தான் அந்தக் கவிதை!
எவனுக்குத் தன் தேவை தெரியுமோ
தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ
அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே
உண்மையில் அவனே ஒரு மகான்!
இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.
இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).
திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று முடித்தார்.
***
No comments:
Post a Comment