Saturday, October 7, 2017

திருப்பதி பெருமாளின் வாயிற்படிக்கு `குலசேகரப்படி’ எனப் பெயர் வந்தது எப்படி? thanks vikatan.com

திருப்பதி பெருமாளின் வாயிற்படிக்கு `குலசேகரப்படி’ எனப் பெயர் வந்தது எப்படி?

திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை. இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது. யார் இந்தக் குலசேகரன்? 
சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர். கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.  சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.
திருப்பதி
ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர், ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார்.
குலசேகர ஆழ்வார்
முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட  பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார். தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார். 
'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.'
என்றெல்லாம் பாடினார். 
இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே  அழைக்கப்படுகிறது. இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை. 
திருப்பதி
தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது. பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறுபெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது. 
குலசேகரப்படி
ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார், இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார்,  வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.

Friday, September 15, 2017

இயந்திரத்தனம் மறைந்தாலேஉடல்நிலை சீராகும்!

இயந்திரத்தனம் மறைந்தாலேஉடல்நிலை சீராகும்!

பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, நிலைய மருத்துவ அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஜெயந்தி: சர்க்கரை நோய் வர முக்கிய காரணம், உடல் பருமன் தான். வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும், அலுவலக பணிக்குத் தான் செல்கின்றனர். அவர்களுக்கு உடல் உழைப்பு என்பதே கிடையாது.
அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யாவிட்டால், அதுவே உடல் எடையை அதிகமாக்கி விடும்.அரிசி உணவு, அசைவ உணவான சிக்கன் போன்றவற்றில், பூச்சிக் கொல்லி கள் ஏராளம் கலந்துள்ளன. இவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் உதவுகின்றன. இந்த இயந்திரத்தனம் மறைந்தாலே, பலரின் உடல்நிலை சீராகும். அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் போன்றவை எங்கே போயின என்றே தெரியவில்லை.
இளம் வயதிலே சிலருக்கு சர்க்கரை வியாதி வர, பரம்பரையும் முக்கிய காரணம். அம்மா, அப்பாவுக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் தாத்தா, பாட்டிக்கு இருந்தாலே வந்துவிட வாய்ப்பு உண்டு.சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவில்லை என்றால், கண் பார்வைக் குறைபாடு, இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, தோல் வியாதிகள் ஏற்படும். சர்க்கரை அளவைச் சரியான முறையில் பராமரித்தால், மேற்கண்ட பாதிப்பை தவிர்க்கலாம்.
சர்க்கரையை கட்டுப்படுத்த நடைபயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம். குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.ஆனால், ஆரம்பத்தில், 10 நிமிடம் நடப்பதே கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்து வர, 45 நிமிட நடைப்பயிற்சி சாத்தியமாகும். சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆவாரம்பூவை பாசிப்பயறுடன் சேர்த்து, கூட்டு வைத்து சாப்பிடலாம். வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.வெந்தயப் பவுடரை வெந்நீரில் கலந்து, காலை வெறும் வயிற்றிலும், மாலையிலும் சாப்பிட்டு வரலாம். திரிபலா சூரணம், காலை, இரவு வேளையில் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.நாவல் பழம் மற்றும் அதன் கொட்டையை பவுடராக்கி சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும். முளை கட்டிய பயறு, மோர் சேர்த்துக் கொள்வது நல்லது.அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைகளில், காலை, 7:30 மணி முதல், 12:00 மணி வரை, சர்க்கரை நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, இங்கு தயாரிக்கப்படும் மதுமேக சூரணம் வழங்கப்படுகிறது. இதுவும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
பெண்களுக்கு பெரும்பாலும் மாதவிலக்கு நின்ற பின்னரே சர்க்கரை நோய் வரும். இது, ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகிறது.

Sunday, September 10, 2017

bharathiyar songs

Image result for avvaiyar poems in tamil

avvaiyar poems

வரப்புயர, நீர் உயரும்...
நீர் உயர, நெல் உயரும்...
நெல் உயர, குடி உயரும்...
குடி உயர, கோல் உயரும்...
கோல் உயர, கோன் உயர்வான்...
 - ஔவையார்

கர்ப்ப காலத்திலேனும் இயற்கையின் பக்கம் திரும்புங்கள் சகோதரிகளே... - ஒரு மருத்துவரின் ஆதங்கக் கோரிக்கை! thanks to vikatan.com

கர்ப்ப காலத்திலேனும் இயற்கையின் பக்கம் திரும்புங்கள் சகோதரிகளே... - ஒரு மருத்துவரின் ஆதங்கக் கோரிக்கை!


திருமணம் முடிந்து சில மாதங்களில், முதல் முறை மாதவிடாய் தள்ளிப் போனதும், வெட்கத்தோடு ‘நீங்க அப்பா ஆகப் போறீங்க’, என்று மனைவி தன் கணவனிடம் செய்தியை வெளிப்படுத்திய காலம் மாறிவிட்டது. கர்ப்ப காலத்தில் தோன்றும் இயற்கையான குறிகுணங்களுக்குப் பயந்து, அந்த மகிழ்ச்சியை பலர் அனுபவிப்பதே இல்லை என்கிறது ஓர் ஆய்வு. கர்ப்பகால குறிகுணங்களை நோயாக எண்ணி அதற்கான மருந்துகளைத் தேடி ஓடும் அவலம்தான் இன்று அதிகம்.
இயற்கையை ரசிக்கும் கர்ப்பிணி
மாத்திரைக் காலம்:
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் உண்டாகும் வாந்தி, தலைசுற்றல், செரியாமை போன்ற குறிகுணங்களுக்கு சீரகத்தையும், ஓமத்தையும், பழங்களையும் நம்பி வாழ்ந்தபோது பிரச்னையில்லை. இவற்றையெல்லாம் உதாசினப்படுத்தியதுதான் மாத்திரைகளுக்கு அடிமையானதற்கு முக்கிய காரணம். எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை எதிர்பார்த்து வாழும் காலத்தில், கர்ப்பகாலம் மட்டும் தப்பித்துவிடுமா என்ன? 
நோயல்ல வரம்:
கர்ப்பிணிகளுக்குத் தோன்றும் குறிகுணங்களுக்குத் தகுந்த இயற்கை மருந்துகள் தாராளமாக இருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கர்ப்பகாலத்தில் செயற்கை மருந்துகளின் துணையோடு வாழும் கட்டாயமும் இருந்ததில்லை. மகப்பேறு காலம் என்பது ஒரு நோய்நிலை அல்ல. நவீன சமுதாயம் என்று கர்ப்ப காலத்தை நோயாகப் பார்க்கத் தொடங்கியதோ அன்றிலிருந்துதான் பிரச்னையே. செயற்கை மருந்துகளின் துணை இல்லாமலேயே, இயற்கையின் துணையோடு, கர்ப்ப காலத்தை எளிமையாகக் கடக்கலாம்.
வாந்தி எடுப்பதைக் கொண்டாடும் மக்கள்:
“எம்புள்ள வாந்தி எடுதுட்டா, நான் பாட்டி ஆகப்போறேன்!” என்று புதுப்பெண் வாந்தி எடுத்ததை ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அம்மாக்களும் மாமியார்களும் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதுவே மறுபுறம், ‘வாந்தி வருது டாக்டர், ஸ்டாப் பண்ண எதாவது மருந்து இருந்தா என் பொண்ணுக்குச் சொல்லுங்க’ என்று மருத்துவரை நாடும் மாடர்ன் அம்மாக்களும் இருக்கின்றனர். கர்ப்பம் தரித்தவுடன் உண்டாகும் ஹார்மோன் மாறுதல்களால் வாந்தி வருவது ஆரோக்கியமான அறிகுறி. அடிக்கடி அதிகளவில் வாந்தி வெளியாகி (Hyperemesis gravidarum), உடல் நிலை பாதிக்கப்படுவதாய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம். இல்லையெனில் இயற்கையான மருந்துகளே போதுமானது. சிலர் அதிகப்பிரசங்கித்தனமாக, தாமாகச் சென்று மருந்தகங்களில்        ”ஓய்ஃபுக்கு வாந்தி அதிகமா இருக்கு… எதாவது மருந்து இருந்தா கொடுங்க” என்று வாங்கிச் செல்லும் போக்கும் இருக்கிறது. திடீர் மருத்துவர்களாக உருவெடுத்து, மருந்துகளைக் கொடுத்தால் வளரும் கரு பாதிக்கப்படும். அதிகளவில் வாந்தி வெளியாகும் நிலையில், மாதுளை மணப்பாகு, ஏலாதி மாத்திரை போன்ற இயற்கையான சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். வாந்தியை நிறுத்துவதோடு கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஆற்றலையும் மாதுளை மணப்பாகு கொடுக்கும். செரியாமை, உணவு எதிர்த்தெடுத்தல் தொந்தரவுகளுக்கு ஏலாதி மாத்திரை உதவும்.
மருந்து
காய்ச்சலில் மருந்து தேவையா:
கர்ப்ப காலத்தில் சுரம் இருப்பின், ஏற்கெனவே வீடுகளில் ‘ஸ்டாக்கில்’ இருக்கும் காய்ச்சல் மாத்திரைகளையும், ஆண்டிபயாடிக் மருந்துகளையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் எடுத்து சாப்பிடக் கூடாது. பழக்க தோஷத்தில் காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் மாத்திரைகளை மனம் தேடுவது தவறு. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகள் சுரம் வராமல் பார்த்துக்கொள்வதே நல்லது. மாத்திரைகளைச் சுயமாக எடுப்பதை அனைத்து நிலைகளிலும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான சிந்தடிக் மருந்துகளில், ‘கர்ப்பிணிகளுக்கு உகந்ததல்ல’ (Contraindicated in Pregnancy) என்று அட்டையில் பொரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி நடப்பது அவசியம். சில சமயங்களில் மருந்துகள் தேவைப்படாமலே கூடப் போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுரம் வந்தால் ஒரு குறிப்பிட்ட காய்ச்சல் மாத்திரையை உடனடியாக விழுங்க வேண்டும் என்ற தவறான செய்தி, கடந்த இருபது ஆண்டுகளில் நம்மிடையே புகுத்தப்பட்டிருக்கிறது. 
பழங்கள்:
புரதச் சத்து நிறைந்த உணவுகள், மாவுச் சத்து, தேவையான அளவிற்கு கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் எனச் சமச்சீரான உணவுகளைக் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டும். சோர்வாகும்போது பழங்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள். உடலில் உண்டாகும் சோர்வைப் போக்குவதன்றி, நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் குட்டி ஜீவனுக்கு ஊட்டத்தையும் அளிக்கும். பேரிச்சை, மாதுளை, அத்தி போன்ற பழங்கள் ரத்தக்குறைவு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். வாழைப்பழம் மலக்கட்டு வராமல் பாதுகாப்பதோடு, போலிக் ஆசிட் சத்தினையும் வாரி வழங்கும். கீரைகளை உணவுகளாகப் பயன்படுத்துவதன் மூலம், தாதுப்பொருள்களும் போதுமான அளவிற்கு கிடைத்துவிடும். நெல்லிக்காய் லேகியம், கறிவேப்பிலைப் பொடி போன்ற சித்த மருந்துகள், கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதன்றி, இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் மலக்கட்டு ஏற்படாமல் தடுப்பதில் கீரைகளும் பழங்களும் முக்கியப் பங்காற்றும். 
காலநிலைக்கு ஏற்ப உணவியல்:
பத்து மாத காலம் கருவை சுமக்கும்போது, ஏறக்குறைய வருடத்தின் காலநிலைகள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெயில் காலம், மழை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்ப கர்ப்பிணிகள் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் உணவு முறைகளில் கொஞ்சம் மாற்றங்களைச் செய்ய வேண்டியதும் முக்கியம். வேனிற் காலங்களில் நீரிழப்பை தடுக்க இயற்கையான பழச்சாறுகளை எடுக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் விஷங்கள் கலந்த செயற்கை குளிர்பானங்களை கர்ப்பிணிகள் குடிக்கவே கூடாது. குளிர்காலங்களில் காய்கள் நிறைந்த சூப் வகைகள் நல்ல தேர்வாக இருக்கும். மழைக்காலங்களில் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது நல்லது.
கர்ப்பிணி
வலிகளுக்கு வெளிப்பிரயோகம்:
கர்ப்ப காலத்தில் தோன்றும் கை, கால் வலி, இடுப்பு வலி போன்ற குறிகுணங்களுக்கு மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. உளுந்து தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் போன்ற சித்த மருத்துவ எண்ணெய்களை மிதமாக சூடேற்றி வலியுள்ள பகுதிகளில் தடவலாம். அடிவயிற்றுப் பகுதியில் எண்ணெயை தடவுவதன் மூலம், தசைகளுக்கு சிறிது இளகல் தன்மையும் கிடைக்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சித்த மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் இலவசமாகக் கிடைக்கும். 
கர்ப்ப காலம் உறுதியானவுடன்… மகிழ்ச்சியாய் அனுபவியுங்கள். மருத்துவ மாஃபியாக்கள் சுட்டிக்காட்டுவதைப் போல கர்ப்ப காலம் நோயல்ல… உடல் இயங்கியலில் உண்டாகும் மாறுதல்கள், கர்ப்ப காலத்தில் குறிகுணங்களாக வெளிப்படுகின்றன, அவ்வளவே. இதைப் புரிந்துகொண்டு கர்ப்ப காலத்தை உறவுகளின் துணையோடும் இயற்கை மருந்துகளின் ஆதரவோடும் எதிர்கொண்டால் ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும் காலமாக கர்ப்ப காலம் அமையும்.
 கருப்பைக்குள் மெள்ள மெள்ள உருவாகும் குழந்தையின் வளர்ச்சி, கருப்பைக்குள் நிகழும் குழந்தையின் அசைவுகள், தாயின் வயிற்றுத் தசையில் எதிரொலிக்கும் அதிசயம்… விலைமதிப்பில்லா தாய்மை… தந்தையாகப் போகும் பரவசம்… இவை அனைத்தையும் வருங்கால தந்தையும் தாயும் வேறு சிந்தனையில்லாமல் ரசிப்பதே கர்ப்ப காலம்! ரசிப்போம்!...

Wednesday, August 23, 2017

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன் thanks vikatan.com

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்

ஆணி வேரானவள்!த.கதிரவன், படம்: தி.குமரகுருபரன்
‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா?’ என்ற கேள்விக்கு விடைதேடி நாம் எல்லோரும் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே ரஜினிகாந்த், ‘தன் வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் ‘அவர்’ தன்னோடு இருக்க வேண்டும்’ என்று `குறிப்பிட்ட’ ஒருவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே...?

பொங்கல், தீபாவளி மற்றும் வீட்டு விசேஷங்களில் ஆரம்பித்து சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வுவரை, `என் வாழ்க்கையின் வழிகாட்டி, உடன்பிறவாச் சகோதரர்’ என்றெல்லாம் ரஜினி நெகிழ்ந்து உருகும் அன்புக்குச் சொந்தக்காரரான ‘அவர்’, இயக்குநர் எஸ்பி.முத்துராமன். 

ரஜினியை வைத்து 25 வெற்றிப் படங்கள், கமல்ஹாசனோடு 10 படங்கள் எனத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவரையும் ஒருசேர இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். பரபரப்பான அந்த நாள்களில் தன்னுடைய ஓட்டத்துக்கு உறுதுணையாக விளங்கிய தன் மனைவி கமலா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புகள் குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
``1973-ல் ஆரம்பித்து 1993 வரையிலான 20 வருட காலமும் திரைத்துறையில் ஓய்வே இல்லாமல் உற்சாகமாக உழைத்துக்கொண்டிருந்தேன். காரணம், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கிருந்த வெறிபிடித்த ஆசை. ‘பத்து நாள்கள் கமல் பட ஷூட்டிங், பத்து நாள்கள் ரஜினி பட ஷூட்டிங்’ என்று இரவு பகலாக உழைத்தும் எனக்கு எதுவுமே போரடிக்கவில்லை.

சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் குடும்பத்தைத் திறம்பட வழிநடத்திச் சென்றவள் என் மனைவி கமலா. என்னுடைய சுமைகளை அவள் தலையில் தூக்கிவைத்திருந்தேன். 

நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ‘கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிக்கிட்டே இருக்கீங்களே… குடும்பம் பிள்ளைங்கன்னு இருக்கிறது ஞாபகத்துல இருக்கா, இல்லையா? ஒரு பத்து நிமிஷம் உக்காந்து பேசக்கூட நேரமில்லாம அப்படி என்ன வேலை… கொஞ்சநேரம் என்கிட்டே உக்காந்து பேசிட்டுத்தான் போங்களேன்...’ என்று அழாத குறையாகக் கெஞ்சுவாள். ஆனாலும், அவள் பேசுவது எதுவுமே என் கவனத்துக்குள் வராது. ‘நேற்று எடுத்த சீன் சரியாக வந்ததா? இன்றைய சீனை எப்படி எடுக்கலாம்…’ என்பது மாதிரியான சினிமா சிந்தனைகளே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஷூட்டிங் முடிந்து வீடுவந்த பிறகும்கூட திடீரென்று நள்ளிரவில் போன் வரும். ‘சார் இன்னிக்கு நான் நடிச்ச சீன் நல்லா வந்திருக்கா சார்… நாளைக்கு எனக்கு என்ன சீன் சார்…’’ என்று ரஜினி கேட்பார். அவரிடம் காட்சி பற்றி பேசி முடித்துவிட்டு தூங்கினால், மறுபடியும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவேன். இப்படி சினிமாவையே மூச்சாக நினைத்த காரணத்தினால், என் குடும்பத்தை முழுமை யாகக் கவனிக்க முடியவில்லை. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், வீட்டில் என்ன செலவு, என்ன பிரச்னை என்று எதுவும் தெரியாது எனக்கு.
ரஜினி நடித்த ‘பாண்டியன்’ திரைப்பட ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு போன்கால், அவசரமாக வீட்டுக்கு வரச்சொல்லி வந்தது. என்னமோ ஏதோ என்ற பயமும் பதற்றமுமாக வீடுவந்து சேர்ந்தேன். தெரு முழுக்க கனத்துக்கிடந்த அமைதி என் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. தெரு முனையிலேயே எங்கள் வீட்டைச் சுற்றி நின்றிருந்த கூட்டம் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தது. கார் நிற்கும் முன்னரே அவசரமாக இறங்கி வீட்டுக்குள் ஓடினேன்.  

அங்கே... என் மனைவி கமலாவின் உடல் மாலைகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோயிருந்தாள். உடலைப் பார்த்துக் கத்தினேன்... கதறினேன். போன உயிர் திரும்ப வருமா? 
‘கமலா இறக்கவில்லை... அளவுக்கு அதிகமான வேலைபளுவைக் கொடுத்து நானே அவளைக் கொன்றுவிட்டேன்' என்ற குற்ற உணர்வு இன்னமும் என்னுள் முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இப்பவும் அவளிடம் மனம் விட்டுப் பேசணும் போல இருக்கு.
எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்... குடும்பம் என்ற அச்சாணியில்தான் நீங்கள் வெளியுலகைச் சுற்றிவருகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். உங்கள் லட்சியம், வெற்றி, பணம், புகழுக்காக வெறி கொண்டு செயல்படுங்கள்… தவறில்லை. ஆனால், உங்களின் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருக்கிற குடும்பத்துக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். மனைவியிடம் அன்போடு பேசுங்கள். மாதம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு வெளியூர் பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தைகளோடு குழந்தையாகக் குதூகலியுங்கள். தினமும் ஒருவேளையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். மனைவிக்குக் கணவன் தேவைப்பட்டபோதெல்லாம் அவளுக்குத் துணையாக நான் இல்லை; இப்போது எனக்கு ஆறுதலும் அன்புமாக இருக்க என் மனைவி கமலா இல்லை.’’ 

அன்பின் ஏக்கம் தேங்கி நின்றது அவர் விழிகளில்!

Friday, August 18, 2017

நோய்கள் காணாமல்போக வேண்டுமா? - Courtesy: Dinamalar

Advertisement

பதிவு செய்த நாள்

19ஆக
2017 
00:00

நோய்கள் காணாமல்போக வேண்டுமா?


பி.சி.ஓ.எஸ்., - - 'பாலிசிட்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிக்கான அறிகுறி, தீர்வு குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனையின் சித்தா டாக்டர், வெண்தாமரை செல்வி: 15 - 44 வயதுள்ள பெண்களை, இன்று பயமுறுத்தும் விஷயம், நீர்க்கட்டி. இது, குழந்தையின்மை பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது.முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்வது, அடிவயிறு மற்றும் பெண் குறியில் தொடர்ந்து வலி ஏற்படுவது, உடல் பருமன் போன்றவை, நீர்க்கட்டிக்கான அறிகுறி. இளம் வயதிலேயே சிகிச்சை எடுக்காவிடில், திருமணமானதும் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், 1,000த்தில் ஒரு பெண்ணுக்கு தான் நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இப்போது, 10ல் ஐந்து பெண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை; ஆனால், சிகிச்சை அவசியம். நீர்க் கட்டி வரக் காரணம், நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான்.உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தான், நீர்க்கட்டி உருவாக முக்கிய காரணம்.
முன்பு, பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவர்; குந்தி அமர்ந்து பாத்திரம் துலக்குவர்; வீடு பெருக்குவர், துடைப்பர்; இந்தியன் ஸ்டைல் கழிப்பறைகளை தான் பயன்படுத்தினர். இவை எல்லாம் ஒரு வகை ஆசனங்கள்.எனவே, வயதுக்கு வந்த பெண்களை, அம்மாக்கள், வீட்டு வேலை செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவர். மேலும், சாப்பிடும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுந்து சாதம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துங்கள். மாதவிடாய் பிரச்னைகளுக்கு, எள் சிறந்த தீர்வு தருகிறது. எள் பொடி, எள் துவையலை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம்
உணவில் சேர்க்க வேண்டும்.இன்று பயன்படுத்தும் எண்ணெய் பெரும்பாலும், ரீபைண்ட் ஆயிலாக தான் உள்ளது. சத்துக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வெறும் சக்கையை தான் பயன்படுத்துகிறோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயை சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தலாம். விதையுள்ள பப்பாளி, அன்னாசி பழம், மாதுளை போன்றவை, நீர்க்கட்டி நோய்க்கு சிறந்த மருந்து.வெண் பூசணியை உணவில் தொடர்ந்து சேர்த்து வர, இந்த நோய் காணாமல் போய் விடும். குறிப்பாக, வெண் பூசணியை மோர்க் குழம்பாக வைத்து
சாப்பிடலாம்.கன்னித்தன்மையை காக்கும், மிகச் சிறந்த கன்னி மூலிகை கற்றாழை. கற்றாழையில் உள்ள சோற்றை, நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் பிரச்னை உள்ளோர் தினமும் சாப்பிட்டு வர, நீர்க்கட்டி காணாமல் போய் விடும்.அம்மாக்களே... முதல் வேலையாக உங்கள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் முறையாக வருகிறதா என்று, இப்போதே கவனிக்க துவங்குங்கள்.