Tuesday, November 13, 2018

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை! thanks to vikatan.com

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன?’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க, இன்றைய குழந்தைகளைச் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஆண் பிள்ளைகளிடம் தன் சமூகத்தில் நடக்கும் நல்லவைக்குத் தானும் பங்களிக்க வேண்டியதையும், அல்லவைக்கு எதிராகச் செயல்பட வேண்டியதையும் சொல்லி வளர்க்க வேண்டும்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அருள்செல்வி. 
‘`பெண் குழந்தைக்கு உடுத்தும் உடையிலிருந்தே பெற்றோரின் அக்கறை தொடங்கிவிடுகிறது. ஆனால், ஆண் குழந்தையின் நிர்வாணம் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘நாம் ஆம்பள... எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் எழத்தொடங்குவது இதிலிருந்துதான். ‘நீ ஓர் ஆண். உனக்கான கண்ணியத்தைக் கட்டமைத்துக்கொள்’ என்று அவர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும். ‘அவமானம், வெட்கம், குற்ற உணர்ச்சி போன்ற எந்த உணர்விலிருந்தும் ஆண் என்பதற்காக உனக்கு விலக்கு இல்லை. அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படு; வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படு. அவற்றை மீண்டும் செய்யாதே. சக பெண்ணின் மனதைக் காயப்படுத்தினால் குற்ற உணர்ச்சிகொள்’ என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

‘அவன் அப்படித்தான்’ என்று தங்கள் ஆண்பிள்ளைகளை ரஃப் அண்டு டஃபாக வளர்த்தெடுப்பதே இங்கு பல அம்மாக்களுக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, பெற்ற உதவிக்கு நன்றி சொல்வது, முகம் பார்த்தவுடன் புன்னகைப்பது, நல்ல வார்த்தைகள் பேசுவது என எல்லோராலும் விரும்பப்படுபவனாக அவன் வளர்ந்து நிற்குமாறு வார்த்தெடுக்க வேண்டும். ‘யார் சொன்னாலும் கேட்க மாட்டான்’ என்று பிள்ளையை வளர்ப்பது அல்ல குட் பேரன்ட்டிங். ‘யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்குவான்’ என்று அவனை ஃப்ளெக்ஸிபிளாக வளர்ப்பதே சரியான வளர்ப்பு முறை.

குழந்தைகளின் சமூக நடத்தை மேம் பாட்டில் குடும்பம், பள்ளி மற்றும் சமூகம் என இந்த மூன்று தரப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீடுகளில் செல்போனை விளையாடக் கொடுக்காமல், நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் மாரல் வகுப்புகள் நிச்சயம் வேண்டும். குறிப்பிட்ட வேலையை முடித்தல், ரூல்ஸ் அண்டு ரெஸ்பான்ஸிபிலிட்டி போன்ற பழக்கங்களைப் பள்ளி நடைமுறை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகத்தில் உள்ள ஆக்கபூர்வமான விஷயங் களை ஆண் குழந்தைகளுக்கு வீடு, பள்ளி இரண்டு தரப்பும் அறிமுகப்படுத்த வேண்டும். உலகத்துடன் அவர்கள் தயக்கமின்றிப் பழக அனுமதிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். ‘இவரை மாதிரி இருக்கணும்’ அல்லது ‘இவங்க செய்யற மாதிரி செய்துடக் கூடாது’ என சக மனிதர்களிடமிருந்தே சமூகத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள குழந்தை கற்றுக்கொள்கிறது. 

ஆண் குழந்தைகள் இன்றைய சூழலில் படிப்பை மையமாக வைத்தே வளர்க்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைன் குழந்தைகளாக வளரும் இவர் களுக்கு சக மனிதர்களை எதிர்கொள்வதும், மனித மதிப்பைப் புரிந்துகொள்வதும் பெரும் சிக்கலாக உள்ளது. ஆண் குழந்தைகள் சக வயதினருடன் கலந்து பழகும் வாய்ப்பை விளையாட்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது. உடலைப் பேண வேண்டும், உடல் தோற்றத்தில் கவனம் வேண்டும் என்ற விழிப்பு உணர்வையும் விளையாட்டின் வழியாக ஓர் ஆண் குழந்தை பெறுகிறது. குழு விளையாட்டுகளில் தோல்வி பழகுதல், விட்டுக்கொடுத்தல், குழுவாகக் கொண்டாடுதல், இணக்கமான நட்புறவை வளர்த்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக்கொள்கிறது. எனவே, வீட்டில் அடைத்து வைக்காமல் ‘ஓடு’ என்று அவர்களை மைதானத்துக்கு விரட்டிவிடுங்கள்.

படிப்பையும் தாண்டி ஆண் குழந்தைக்குள் இருக்கும் தனித்திறனைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். இது அந்தக் குழந்தைக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தையின் தனித்திறமையால் சமூகத்தில் அதற்குப் புதிய அடையாளம் கிடைக்கும்; அது மற்றவர்கள் முன் குழந்தையின் மதிப்பை உயர்த்தும். ஆண் குழந்தை சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கான பாசிட்டிவ் சூழலை இது உருவாக்கும். தாழ்வுமனப்பான்மை அல்லது சுயவெறுப்புகொள்ளும் குழந்தைகள், உலகத்தையும் ஒருவித நெகட்டிவிட்டியுடனேதான் பார்ப்பார்கள். அதுவே, தன் திறமையில் நம்பிக்கையும் சந்தோஷமும்கொள்ளும் குழந்தைகள், உலகத்தை மகிழ்வுடன் அணுகுவார்கள். எனவே, ‘மேத்ஸ்ல என்ன மார்க் வாங்கியிருக்க நீ?’ என்ற வார்த்தைகளைவிட, ‘டாய் காரை எவ்ளோ சூப்பரா அசெம்பிள் செய்ற நீ!’ என்பதுபோன்ற தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளே அவசியம்.

சமூக அமைப்புகளில் கலந்துகொள்ளவும் அதன்வழியாக மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தையும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சுற்றுச்சூழல் குழு, என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைந்து செயல்படட்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த தனித்திறன் வகுப்புகளில் குழந்தைகளைப் பிடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது அவர்கள் பழகும் தனித்திறன்களும் மதிப்பெண் வாங்க எந்த அளவுக்கு உதவும் என்றே யோசிக்கின்றனர். சேவை தொடர்பான குழுக்களில் சேர்வது வாழ்க்கைக்குப் பயன்படாது என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கின்றனர். இது தவறான அணுகுமுறை. சமூகம் மற்றும் சக மனிதர் மீதான அக்கறையை இதுபோன்ற அமைப்புகளே ஏற்படுத்துகின்றன. ஆண் குழந்தை வகுப்பறை தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்றதோர் ஈடுபாடு தேவை.

ஆண் குழந்தைகள் வளரும் சூழலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளும், முடிக்க அறிவுறுத்தப்படும் கடமைகளும் அவர்களைச் சமூகப் பொறுப்புமிக்க மனிதர்களாக வளர்க்கும். அன்புக் கூடுவிட்டுப் பறக்க அனுமதிப்பதும் அவர்கள் வலிமையானவர்களாக வளர அவசியமானது.’

நீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்! thanks to aval vikatan.com

நீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
`ஆண் என்பதாலேயே ஒரு குழந்தைக்குத் தரப்படும் சலுகைகள், அவன் சுயமேம்பாட்டுக்கு எதிராக வினையாற்றும்; அவன் ஒழுக்கக் குணங்களில் தேக்கத்தை ஏற்படுத்தும்; அவன் பண்புகளில் கரும்புள்ளிகள் வைக்கும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நிவேதனா, ஆண் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கான அறிவுரைகள் வழங்குகிறார். 
சலுகை... வளர்ச்சிக்குத் தடையே!

பொதுவாக, பெண் குழந்தை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தூங்கினால் பதறும் அம்மாக்கள், பையன்களை அதேபோல எழுப்ப நினைப்பதில்லை. இப்படி நினைத்த நேரத்துக்கு எழுவதால் ஏற்படும் நேரப்பற்றாக்குறை, காலைக்கடனைக் கழிப்பதற்குப் போதுமான நேரமின்மை, ஆடையை அயர்ன் செய்துகூட உடுத்த இயலாத அவசரம், பிரேக்ஃபாஸ்ட்டைக் கடமைக்குப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டுவிட்டுப் பறக்கும் வழக்கம் என அவர்களின் அத்தனை செயல்களிலும் எதிரொலிக்கும். சென்றுசேர வேண்டிய இடத்திலும் அவர்கள் தங்கள் பங்சுவாலிட்டியை மிஸ் செய்து நிற்பார்கள். அனைத்துக்கும் காரணம், ‘ஆம்பளப்புள்ள சீக்கிரமா எழுந்திரிக்கலைன்னா என்ன?’ என்ற பெற்றோரின் எண்ணமே. எனவே, இப்படி சலுகை, சுதந்திரம் என்று நினைத்து நீங்கள் ஆண் குழந்தைகளுக்குச் செய்வது அனைத்துமே, எந்த வகையிலும் அவர்களுக்கு நன்மை விளைவிக்காது. மாறாக அவர்களை ஒழுக்கக்குறைபாடுடையவர்களாகவே வளர்த்தெடுக்கும். இது, அவர்களின் வளர்ச்சிக்கு நிச்சயம் தடையாகவே அமையும். 

உணவில் புரதம் அவசியம்!

ஆண் குழந்தைகளுக்கு அசைவ உணவு அதிகம் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, அவர்கள் உணவில் புரதம் அதிகம் இடம்பெற வேண்டும். பருவ வயதில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருநாள் உணவில் கொள்ளுப் பயறு சேர்த்துக் கொடுக்கலாம். இது, அவர்களின் உடல்வலிமையைக் கூட்டும். ராகி களி, உளுந்தங்களி, வரகு, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் அவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இவைபோல, எடையைக் கூட்டாமல், வலிமையை அதிகரிக்கும் உணவுகளை அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.

பர்சனல் ஹைஜீன்... மஸ்ட்!

வியர்வை உப்பு காய்ந்த உடலுடன் இருப்பது, இரண்டு நாள்களாகக் குளிக்காமல் ஒரே உடையுடன் திரிவது, ஒரு ஜீன்ஸை ஒரு வாரத்துக்கு உடுத்துவது... பதின்பருவத்தில் நுழையும்போது பல ஆண் குழந்தைகள் இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். குறிப்பாக, இந்தக் கோடை விடுமுறை நாள்களில் இப்படியான ‘அழுக்கு பாய்'ஸை நாம் அதிகம் பார்க்கலாம். ஆண் குழந்தைகளுக்கு பர்சனல் ஹைஜீனை வலியுறுத்த வேண்டியதும், பழக்கப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமை. சில வீடுகளில், ‘ஆம்பளைப் புள்ளைக்கு எதுக்கு உள் பனியன் எல்லாம்?’ என்று, அதைக்கூட ஓர் ஆணாதிக்க மனநிலையுடன் தவிர்ப்பதைப் பார்க்க முடியும். இவை அனைத்தும், பெற்றோர் தங்கள் வளர்ப்பில் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள். 
ஆண் பிள்ளைகளைத் தினமும் இரண்டு வேளைகள் குளிக்கவும் பல் துலக்கவும் பழக்கப்படுத்த வேண்டும். தினமும் துவைத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகளையே பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும். 
பத்து வயதை அடைந்துவிட்டால், சாக்ஸைத் தாங்களாகவே துவைத்துக்கொள்ள அவர்களைப் பழக்குவது மிகவும் நல்லது. மூன்றரை வயதில் பள்ளி செல்ல ஆரம்பிக்கும்போது, ஜட்டி, பனியன் என்று உள்ளாடை அணியப் பழக்கப்படுத்த வேண்டும். சீப்பு முதல் கழிவறை வரை தான் பயன்படுத்துபவற்றைச் சுத்தத்துடன் பேண வேண்டும். அழுக்கு உடைகளை லாண்டரி பேஸ்கட்டில் சேர்ப்பது முதல் ஈர டவலை பெட்டில் வீசிவிட்டுச் செல்லாமல், உலரவைக்கக் கொடியில் போடுவது வரை எல்லாமே ஆண் குழந்தைகள் பழக வேண்டிய வழக்கங்கள். உடல் சூட்டைக் குறைப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியலும் அவசியம்.  

தாயுடனான பிணைப்பு! 

ஆண் குழந்தைகளுக்குப் பதின்பருவத்தில் அம்மாவின் அன்பு சற்று அதிகமாகவே தரப்பட வேண்டும். அது அவர்களின் தேவையாகவும் இருக்கும். இந்த வயதில் தாயின் அரவணைப்பும் கண்காணிப்பும் கிடைக்காதபோது புகை, மது போன்ற போதைப் பழக்கங்களுக்கு அவர்கள் ஆளாகும் அளவுக்கு ஆபத்துள்ளது. செய்திகளில், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பதின்வயதுப் பையன்கள் பற்றிப் பார்த்திருப்போம். இதைப் பாலியல் குற்றமாக மட்டும் அணுகக்கூடாது; நியாயமில்லாத தன் இச்சையை வன்முறையின் வழியாகத் தேடியடையவும் துணிந்த ஆணாக அவன் வளர்ந்து நிற்பதைக் கவனிக்க வேண்டும். இதுவே தாய், சகோதரிகள், தோழிகள் என்று பெண்கள் சூழ, அவர்களின் சுக துக்கங்களை உணர்ந்து, அவர்களின் அன்பை வாங்கி வளர்ந்த ஓர் ஆணின் மூளையும், மனதும், நிச்சயமாக மற்றொரு பெண்ணை இச்சைப் பண்டமாக மட்டுமே பார்க்கவும், அவளைப் பாலியல் தொல்லை, வன்முறை செய்யவும் சிந்திக்காது. மேலும், தோழி, சக ஊழியர் எனத் தன்னுடன் பயணிக்கும் பெண்களை மதிப்புடன் நடத்தும் பண்பாளனாகவும் அவன் இருப்பான். இவற்றுக்கெல்லாம் அடித்தளம், ஒரு தாய் தன் மகனுக்குப் பெண்களின் உலகைத் தன்மூலம் கொண்டு செலுத்தும் பாங்கிலேயே இருக்கிறது.

ஹீரோயிஸம் என்பது இதுதான்!

சாலை அதிரும் பைக் ஹார்ன், கன்னாபின்னா ஹேர்ஸ்டைல், யாரையும் மதிக்காத திமிர்...  இவையெல்லாம் ஹீரோயிஸம் என்று நம்பும் மூடர்களாகவும் முரடர்களாகவும் ஆண் குழந்தைகளை வளர்க்கக் கூடாது. பேராண்மை என்பது பைக், ஜீன்ஸ், பர்ஸ், மொபைல் என ஆணின் பிராப்பர்ட்டிகளில் இல்லை. ஹீரோயிஸம் என்பது ஆணின் நடத்தையில் தான் உள்ளது. பெரியவர்களுக்கு மதிப்புக்கொடுப்பது, முன்பின் அறியாத பெண்களின் பாதுகாப்பைக்கூட உறுதிபடுத்துவது, பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பழகுவது, பிரச்னைகளைக் கையாளும்போது பாதிக்கப் பட்டவர்களின் நிலையில் இருந்து யோசிப்பது, தனக்கு உண்மையாக இருப்பது என எல்லாத் தளங்களிலும் நிறைவான ஆளுமையாக வளரும் ஆணே ஹீரோ. ஹீரோக்கள் உருவாவதில் அவர்களின் வீட்டுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. உங்கள் ஆண் பிள்ளையை, அனைவருக்கும் பிடிக்கும்படியான வசீகரனாக வளர்த்தெடுங்கள். 

ஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்! thanks to aval vikatan

ஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
தின்பருவக் குழந்தைகள் காதல் கொள்வது இயல்பு. ஆனால், பெற்றோரால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆண் குழந்தைகளின் பதின்பருவக் காதலை இயற்கையின் இயல்போடு பெற்றோர் புரிந்துகொள்ள விளக்கம் அளிக்கிறார், மனநல மருத்துவர் ஷாலினி.

டெஸ்டோஸ்டிரோன் சயின்ஸ்

``ஓர் ஆணுக்குப் பதின்பருவம் என்பது பல மாற்றங்களை உள்ளடக்கியது. மிகவும் முக்கியமான மாற்றம் என்னவென்றால், அதுவரை குழந்தைமையாக  இருந்த அவன் மனமும் மூளையும் உடலும் அதன்பின் ஆண்மைப்படுத்தப்படும். ஓர் ஆண் மகவு கருவில் வளரும்போது, அதன் விந்துப்பைகள் வயிற்றுக்குள் சிறுநீரகத்துக்குப் பக்கத்தில் இருக்கும். பிறக்கும்போது, விந்துப்பைகள் வெளியில் வர வேண்டும் என்பதற்காக அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் அந்த உடலில் சுரக்கும். அடுத்தபடியாக, ஆண் குழந்தை வயதுக்கு வரும்போது டெஸ்டோஸ்டிரோன்  அதிகமாகச் சுரக்கும். ஓர் ஆணின் வாழ்நாளிலேயே அதிகமான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அவன் வயதுக்கு வரும்போதுதான் நடக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகச் சுரப்பதால்தான் பதின்பருவத்தில் ஆணின் உடல் ஆண்மைப்படுத்தப்படுகிறது. உயரம் கூடுவது, எலும்புகள் தடிமனாவது, தசைகள் வலிமை அடைவது, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாவது  என ஒவ்வொரு செல்லிலும் ஏராளமான மாற்றங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியினால் ஏற்படுகின்றன. இதே டெஸ்டோஸ்டிரோன் ஆணின் மூளையிலும் முக்கியமான ஐந்து மாற்றங்களை உண்டாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், எதிர்ப்பாலின ஈர்ப்பை அதிகப்படுத்துவது. இதனால்தான் பதின்பருவத்தில் ஆண் குழந்தைக்குக் காதலிக்கும் எண்ணம் அதிகமாகிறது.

செக்‌ஸுவல் அட்ராக்‌ஷன்

பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும். வேட்கை, வெறி என்றுகூட சொல்லலாம். சில குழந்தைகளுக்கு  தன் பாலின ஈர்ப்புகூட இருக்கலாம். அதுவும் இயல்பானதுதான். இந்த ஈர்ப்பெல்லாம், இயற்கையின் வலிமையான உந்துதல். அந்த உந்துதலை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து நாம் நம் குழந்தையிடம் பேசுவதே கிடையாது. அவனாக எதையாவது கற்றுக்கொண்டு, சொதப்பி மாட்டிக்கொண்ட பிறகுதான் நாம் குழம்பித் தவிப்போம். ஆனால், நாம் செய்ய வேண்டியது வேறு. ‘இந்த மாதிரியான மாற்றங்கள் உனக்குள் வரப்போகிறது, செக்ஸுவல் ஃபீலிங்க்ஸ் வரும்; ஆணுறுப்பு எழுச்சி அதிகமாக இருக்கும்; ஒரு சில நாள்களில் விந்து வெளியேறலாம்; இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; இதற்காகப் பயப்படவும் வேண்டாம்’ என்று தோழமையுடன் சொல்ல வேண்டும்.

பெண்ணிடம் எந்த லிமிட்டுடன் பழக வேண்டும்?

பெண்களின் உடல்மீது பதின்பருவ பையனுக்கு ஆசை வரும். குறிப்பாக, மார்பு, இடுப்பு உள்பட பெண்களின் உடல்பகுதிகள் மேல் மிகப்பெரிய கவர்ச்சி ஏற்படும். இயற்கை அப்படித்தான் ஆணின் மூளையை வடிவமைத்துள்ளது. அப்போதுதான் ஆண், பெண்ணை நோக்கிப் போவான். அப்படித்தான் மனித இனப்பெருக்கம் நீடிக்கும்.

ஆண், பெண்ணை அணுகுவது, பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பது, பெண்மீது காதல்கொள்வது எல்லாமே இயல்பானதுதான். இவை வயதுக்கு வந்த ஆண்களுக்கு இயல்பாக நடப்பதுதான். இதை அவர்களால் தவிர்க்க முடியாது. சில பெண்களைப் பார்த்தால் சில காரணங்களுக்காக ஆசை, கவர்ச்சி, சபலம், காதல் என்று எதுவும் தோன்றலாம். அதற்கு அடுத்த கட்டம்தான் முக்கியமானது.

‘இந்தப் பெண்ணின் மீது எனக்குக் கவர்ச்சி உண்டாகிறது. அந்த உணர்ச்சியை நான் எப்படிக் கையாள்வது?', `அதை வெளிப்படுத்த வேண்டுமா, வெளிப்படுத்தக் கூடாதா?’, `அவளைத் தொடலாமா, தொடக்கூடாதா?’ - இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஆணுக்கு ஏற்படுகிறது. சரி... ஓர் ஆண் தன் காதலைப் பெண்ணிடம் எப்போது வெளிப்படுத்தலாம்? அந்தப் பெண்ணுக்கும் அவன் மீது விருப்பம் இருக்கிறது, அவளும் அவனிடம் பேசுவதை, பழகுவதை விரும்புகிறாள் என்று உறுதிப்படுத்திய பிறகுதான். அடுத்ததாக, லேசாகத் தொட அவள் அனுமதிக்கிறாள் என்றால், மேற்கொண்டு தொடலாம் என்று நினைக்கக் கூடாது. லேசான தீண்டல்களையே அவள் அனுமதிப்பாள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்களைப் புரிந்துகொள்வது எப்படி?

பதின்பருவ ஆண்களின் அளவுக்கு, பதின்பருவப் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் இருக்காது. அவர்களின் மூளை  அமைப்பு வித்தியாசமானது. தனக்கான ஆணை பெண்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? இவன் நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா, இவன் நம்மைப் பத்திரமாகக் காப்பாற்றுவானா என்றே முதலில் யோசிப்பார்கள். எனவே, ‘நான் நம்பிக்கைக்குரிய பையன்; உன் மேல் எனக்கு ஆசை அதிகம் இருந்தாலும், அதைவிட அக்கறை அதிகமாக இருக்கிறது; உனக்காகக் காத்திருப்பேன்’ - இதுதான் ஆண்கள் பெண்களிடம் தங்களை வெளிப்படுத்த வேண்டிய முறை. இந்த அணுகுமுறைக்காகத்தான் பெண்கள்  காத்திருப்பார்கள்.

ஆண்களுக்கு அவசியமான நான்கு பண்புகள்!

பெண்களுக்குண்டான நான்கு குணங்கள் என்றால் உடனே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என மனப்பாடமாகச் சொல்வார்கள் பலர். இதுபோல, ஆண்களுக்குண்டான நான்கு குணங்கள் பற்றித் தெரியுமா? தன்மை, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. அதாவது, கண்ணியமாக இருப்பது, ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெறுவது, தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவது, பின் விளைவுகளை யோசித்துச் சரியாக முடிவெடுப்பது... இவை நான்கும் ஆண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது... அதனால் அவளைத் தொட்டேன்’ என்பது ஆண்மை கிடையாது. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவனே நல்ல ஆண்மகன் என்று, ஆண் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். குறிப்பாக, ‘இந்த வயதில் உனக்கு செக்‌ஸுவல் உணர்வு வரும். அது மிக வலிமையாக இருக்கும் என்றாலும், அதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அவசரமாக யூரின் வந்தால் க்ளாஸ் ரூமில் போக மாட்டோம் இல்லையா? பசிக்கிறது என்பதற்காக  யாரோ ஒருவரின் தட்டில் இருந்து அள்ளிச் சாப்பிட மாட்டோம் இல்லையா? ஒவ்வொன்றுக்கும் ஒரு சமூக அறம் (எத்திக்ஸ்) இருக்கு... அதை நாம் பின்பற்றணும். அதேபோல, பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் மேனர்ஸ் உண்டு’ என்று  ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்; பேசித்தான் ஆக வேண்டும். வரும் தலைமுறை ஆண்-பெண் உறவில் சுயநலம் ஓங்காமல் இருக்கவும், வன்முறை தலைதூக்காமல் இருக்கவும் இவையெல்லாம் காலத்தின் அவசியம்

உங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்! thanks to aval vikatan

உங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?- யாழ் ஸ்ரீதேவி, படங்கள் - மதன் சுந்தர்
ன் மகன் சமூகத்தில் எல்லோராலும் விரும்பப்பட வேண்டும் என்பதே பெற்றோரின்  விருப்பம். அவன் சாதாரண நிலையில் இருந்து ஜென்டில்மேன் என்கிற நிலையை எட்ட ஆண் குழந்தை வளர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டிய தங்க விதிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த்.

 ஆண் குழந்தைகள் பெண்களோடு எப்படிப் பழகுகின்றனர், அவர்களை எப்படி நடத்துகின்றனர் என்பது முக்கியம். இந்த இடத்தில் பெண்களைப் பற்றிய முதல் பிம்பத்தை உருவாக்குபவள் அம்மாதான். அந்தப் பெண் தன்னை ஒரு ரோல் மாடலாக மாற்றிக்கொள்ள வேண்டும். சவாலான நேரங்களைத் தன்னம்பிக்கையுடன் கடக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்ற உறவுகள் முன்னிலையில் மதிக்கப்படும் பெண்ணாகத் தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களை அம்மா கடைப்பிடிப்பதும் தாய்க்கும் மகனுக்குமான நட்பைப் பலப்படுத்தும். பெண்களை அணுகும் பார்வையும் மாறும்.
 
பெண்ணை ஆண் குழந்தை சமமாக உணரச்செய்யும் வாய்ப்புகள் தேவை. பெண்ணின் சாதாரணமான இயல்புகள், சிரமங்களை வைத்து அவர்களைப் பலவீனமானவர்கள் என்று நினைத்திட வாய்ப்புள்ளது. பெண் எந்தளவுக்கு வலிமையானவள்; ஆணுக்கு இணையாகப் பல துறைகளிலும் ஜெயிக்கக்கூடியவள் என்று ஆண் உணரச் செய்ய வேண்டும். இதுபோன்ற பெண்களின் அனுபவங்களை அம்மாவின் வார்த்தைகளாகக் கேட்கும் போதுதான் ஆண் குழந்தைகளுக்குப் பெண்ணின் பலம் புரியும். `பெண்கள் உனக்கு இணையானவர்களே' என்ற சமநிலையை உணரச் செய்வதும் அவசியம்.

பெண் என்பவள் உரிமை கொண்டாடும் பொருள் கிடையாது. அவளுக்கான விருப்பங்கள் மற்றும் அவள் வெறுக்கும் விஷயங்கள் இருக்கக்கூடும். அவற்றை மதிக்க வேண்டும். அவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பிடிக்காத விஷயங்களுக்கு மறுப்புச் சொல்ல அவளுக்கு உரிமை உள்ளது என்பதை அம்மா வாழ்ந்துகாட்ட வேண்டியுள்ளது. இந்த சுதந்திரம் ஆண் குழந்தையுடன் வளரும் பெண் குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். பெண்ணைப் பொருளாக எண்ணும் ஆணுக்கு அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை. இதனால் தான் அவளும் சக மனுஷி என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. 

பெண்ணைத் துன்புறுத்துவதை ஹீரோயிசமாகக் காண்பிக்கும் திரைப்படங்கள் பதின்பருவ ஆண் குழந்தைகள் மனதில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உண்மையான ஹீரோயிசம் என்பது மற்றவர் மனதைக் காயப்படுத்துவதில் இல்லை என்பதை ஆண் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். மதிப்பதும், உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், பொறுப்பு உணர்வுடன் நடந்து கொள்வதும்தாம் ஹீரோயிசம் என்பதை ஆண் குழந்தைகள் புரிந்துகொள்ளப் பழக்கப்படுத்தலாம். 

சின்னச் சின்ன  விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்... 

சமூகத்தில் தன் வாழ்வையே வரலாறாக மாற்றியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

கண்கள் பார்த்துப் பேசக் கற்றுக் கொடுக்கலாம். பழகிய முகங்களைப் பார்த்த உடன் ஒரு புன்முறுவல், அன்புடன் கைகுலுக்கும்போதே கண்களைப் பார்த்து நட்பை வெளிப்படுத்தலாம். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதுடன் மற்றவர்கள் மத்தியில் ஜென்டில்மேன் அடையாளத்தை உருவாக்கும். 

தேவையான இடங்களில் மட்டும் பேசுவது, அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் மெளனம் காப்பதும் அவசியம். பணிவோடு கேட்பது, நன்றி சொல்வது, தவற்றைப் பொறுத்துக்கொள்ள மன்னிப்புக் கேட்பது, தேவைப்படும் மனிதர்களுக்கு வலிந்து உதவுவது, கடுமையான வார்த்தைகளைத் தவிர்ப்பதும் உங்கள் மகனைப் பற்றிய நல்ல எண்ணங்களை மற்றவர் மனதில் ஏற்படுத்தும். 

பொது இடங்களில் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் நீங்களே உதாரணமாக இருங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது நின்று பயணிக்க முடியாதவர்கள் வந்தால் எழுந்து உதவுவது, சிறு உதவியானாலும் தயக்கமின்றிச் செய்வதையும் பழக்கப்படுத்துங்கள். அப்படி உங்கள் ஆண் குழந்தை நடந்துகொண்டால், `உன்னை நினைத்து எவ்வளவு பெருமைப்படுகிறேன் தெரியுமா?' என்று உங்களது உள்ள உணர்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஆண் குழந்தைகளுக்கான பாடி லாங்வேஜில் கவனம் செலுத்துங்கள் நான் ஆண் என்ற கர்வம், அலட்சியம் இரண்டையும் தங்களது உடல்மொழியில் வெளிப்படுத்தக் கூடாது. சேரில் அமர்வது, சாப்பிடும் முறை என ஒவ்வொன்றிலும் அழகிய ஒழுங்குகளைக் கற்றுக் கொடுங்கள். சிறு வயதில் இதுபோன்ற விஷயங்களைக் கடைப்பிடிப்பதால் வளர்ந்து ஆளாகும்போது இதெல்லாம் அவர்களது பழக்கமாக மாறியிருக்கும். 

பணம் சம்பாதிப்பதற்கான வலியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எந்த வேலையைச் செய்யும்போதும் எத்திக்ஸ் அவசியம் என்பதைப் பதிய வையுங்கள். தனது சட்டையை மடிப்பதாயினும், ஹோம்வொர்க் முடிப்பதாக இருந்தாலும் தனக்குத் திருப்தி ஏற்படும் வரை அதை சரியாகச்செய்வது, தன் செயலுக்கு உண்மையாக இருப்பதும் எப்போதும் அவனை ஜென்டில்மேனாகவே வைத்திருக்கும். இப்படி நடந்து கொள்ளும் குழந்தையைத் தோள்தட்டிப் பாராட்டுவதுடன் அதற்குப் பரிசளித்தும் ஊக்கப்படுத்தலாம். 

ஆண் குழந்தைகள் தவறு செய்யும் போது அதைப் பற்றியே பேசுவதைத் தவிர்க்கலாம். தான் செய்தது சரியா என்பதை யோசிக்க இடம் கொடுப்பது அவசியம். இதற்குப் பதிலாக வேறு என்ன செய்திருந்தால் சரியாக இருக்கும் எனக் கேட்கலாம். எதை ஆண் குழந்தைக்குச் சொல்ல நினைக்கிறோமோ அதைப் பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகளை ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.
ஆண் குழந்தைகளுக்குக் கோபத்தைக் கட்டுக்குள் வைக்கப் பழக்குவது அவசியம். அவர்கள் கோபம் கொள்ளும்போது ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால்தான் ஆண்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிரடியாக எதையேனும் செய்துவிடுகின்றனர். எதெல்லாம் அவனைக் கோபப்படுத்துகிறது என்று பட்டியலிடச் சொல்லுங்கள். அதுபோன்ற சூழலை முன்கூட்டியே கணித்துத் தவிர்த்துவிடலாம். கோபம் ஏற்படும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, உடற்பயிற்சி செய்வது, தனக்குப் பிடித்த டான்ஸ், டிராயிங், கவிதை எனத் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும் போது கோபம் அடங்கும்.  
 உறவுச் சிக்கல்களைக் கையாளவும் ஆண் குழந்தைகளுக்கும் பயிற்சி அவசியம். உறவுகளில் பகை ஏற்படும்போது அதைப் பற்றியே யோசிப்பதும் பிரச்னையை அதிகரிக்கச் செய்யும். பகை ஏற்படும்போது அதைப் புறக்கணிக்க வேண்டும். அதனை மனதில் ஏற்றிக்கொண்டு அது பற்றியே சிந்திக்கக் கூடாது. 

உங்கள் ஆண் குழந்தையின் மனம் கருணையால் நிரம்பி, தனக்கான பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றும் போது அவன் ஜென்டில்மேன் அந்தஸ்தை அடைவான்!''

 பதிவு செய்த நாள் : மே 24, 2018 


  சொல்கிறார்கள்

தொண்டை பிரச்னைக்கு 'குட்பை!'பனங்கற்கண்டின் சிறப்பு குறித்து கூறும், இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்: பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரை, பதமாக காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.மேலும், 100 கிராம் பனங்கற்கண்டில், 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி., கிராம் கால்ஷியம், 5.40 மி.லி., கிராம் பாஸ்பரஸ் உள்ளது.பூண்டுப்பாலுடன், பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப் பற்களை, 50 மி.லி., பால், 50 மி.லி., தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும், இரண்டு சிட்டிகை மஞ்சள் துாள், இரண்டு சிட்டிகை மிளகுத்துாள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, கடைய வேண்டும். இதை, இரவில் துாங்கப் போவதற்கு முன் குடித்தால், நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும்; வாயுத் தொல்லையும் நீங்கும்.பாலுடன், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால், சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும்; தாகமும் தணியும்.முருங்கைப் பூவை, பாலில் வேகவைத்து, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்குவதற்கு முன் குடித்தால், உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு, இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம்.அதிமதுரத்துடன், வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும்.சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி, அதோடு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் என, குரலை பயன்படுத்தி பணியாற்றுபவர்களுக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.கர்ப்பிணிகள், சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவர்; வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால், சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.

முருங்கை கீரை இட்லி பொடி!இன்று

Advertisement

பதிவு செய்த நாள்

02நவ
2018 
00:00

தேவையான பொருட்கள்:
நிழலில் உலர்த்திய முருங்கைக் கீரை - 2 கப்
உளுந்து - 1 கப்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 20
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.

செய்முறை:
வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், உளுந்து, பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க வறுக்கவும். இந்த கலவையுடன், முருங்கை கீரையை நன்றாக கலக்கவும்.
இந்த கலவை ஆறிய பின், தேவையான உப்பு போட்டு பொடியாக அரைக்கவும். முருங்கை கீரை இட்லி பொடி தயார்.
இந்த பொடியில், நல்லெண்ணெய் ஊற்றி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இரும்புச்சத்து கிடைக்கும். உளுந்து கலந்துள்ளதால், இடுப்பு வலியை தீர்க்கும் மருந்து ஆகும்.
- மு.அமுதா, மதுரை.