Saturday, February 15, 2020

நாம மகிமை! thanks to dinamalar

நாம மகிமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16பிப்
2020
00:00
மகா பண்டிதர்; சிறந்த பக்தர்; நாம மகிமையை விளக்கும், 'ஸ்ரீ பகவான் நாம விலாசம்' எனும் நுாலை எழுதியவர்-, தாமோதரன் நம்பூதிரி. குருவாயூரப்பனை தியானித்து, நாம ஜபம் செய்து கொண்டிருப்பதே வாழ்வு என, இருந்தவர்.
இவருடைய நண்பர், நீலகண்ட நம்பூதிரி என்பவர், வேதம், காவியம், சாஸ்திரம் என, அனைத்திலும் கரை கண்டவர். நாம மகிமையை விரிவுரை செய்வதும், நாம உபதேசம் செய்வதுமே வாழ்வு என, கொண்டவர்.
நல்லவர்களுக்குத் தானே, துயரம் அதிகமாக வருகிறது.
தாமோதரனுக்கு, 'பிரமேகம்' எனும் கொடிய நோய் வந்தது. மருத்துவர்கள் பலரும் கூடி மருத்துவம் பார்த்தும், பலனில்லை. முதுகுத் தண்டின் நடுவிலிருந்த ஒரு பரு உடைந்து, ரத்தமும், சீழும் வெளியேறத் துவங்கியது.
நாளாக நாளாக, ஒரு கை உள்ளே போகும் அளவிற்கு பெரும் துவாரம் உண்டாகி விட்டது. குருநாதருக்கு பணிவிடை செய்து, காயத்தை அவ்வப்போது துாய்மை செய்தனர், சீடர்கள். நண்பரான நீலகண்டரின் தலைமையில், சிகிச்சை முழுவதும் நடந்து வந்தது.
ஆனால், தாமோதரனோ, குருவாயூரப்பன் திருவடிகளைத் தியானித்து, நாராயண நாமம் சொல்வதிலேயே கருத்தாய் இருந்து, உடல் வலியை உதறித் தள்ளினார்.
ஒருநாள், தன் நண்பரிடம், 'நோயின் பாதிப்பு கடுமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், இந்த உடம்பு, என்றாவது ஒருநாள் போகப் போவது உறுதி. இறப்பதைப் பற்றி வருத்தமும் இல்லை...
'ஆனால், இந்த உடம்பு இல்லாவிட்டால், பகவான் நாமத்தை ஜபித்து, ஆனந்தப்பட முடியாது; குருவாயூரப்பனின் ஒளி மயமான திருவடிகளை தரிசிக்கவும் முடியாது என்பதை நினைக்கும்போது தான், வருத்தமாக இருக்கிறது. இத்துயர் தீர ஒரே மருந்து, குருவாயூரப்பனின் நாம ஜபம் தான்; வேறு வழியே இல்லை...' என்றார், தாமோதரன்.
அதை அப்படியே ஏற்ற, நீலகண்டர், அங்கிருந்து நேரே, மதியவேளையில், குருவாயூரப்பனுக்கு நடைபெறும் வழிபாட்டிற்கு சென்றார்.
'குருவாயூரப்பா... தாங்கள் தான், தாமோதர நம்பூதிரியின் நோயைத் தீர்க்க வேண்டும்; அதன் மூலம், தங்கள் நாம மகிமை, உலகிற்கு அனுபவமாகும்படி அருள் செய்ய வேண்டும்...' என, உள்ளம் உருகி, பிரார்த்தித்தார்.
பிரார்த்தனை முடிந்து நீலகண்டர், பக்தர்களுடன் நண்பரின் இருப்பிடத்திற்கு சென்றார். நாம ஜபத்தைத் துவங்கினார். தினமும், குருவாயூரப்பன் சன்னிதியில் மதிய வழிபாடு முடிந்து, பக்தர்கள் பலரும், நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டனர்.
பிறகென்ன, குருவாயூரப்பன் அருளால், தாமோதரனின் நோய் படிப்படியாக குறையத் துவங்கியது; ஆறு மாதத்திற்குள் முழுமையாக நீங்கியது. 75- ஆண்டுகளுக்கு முன், குருவாயூரில் நடந்த நிகழ்வு இது.
காலையும் - மாலையும், 10 முறையாவது, பகவானின் நாமங்களை சொல்வோம்; பாடாய்ப் படுத்தும் நோய்களிலிருந்து விடுபடுவோம்!

பி. என். பரசுராமன்

மனைவியும் மனுஷிதானே... thanks to dinamalar

16பிப்
2020
00:00
மனைவியும் மனுஷிதானே...




அண்மையில், மார்க்கெட் சென்று வரும் வழியில், ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தாள், என் தோழி.
'என் கணவர் வெளியூர் போயிருக்கார். அதனால, ஓட்டல்ல சாப்பிட வந்தேன்...' என்றவளை, விசித்திரமாக பார்த்தேன்.
அதை புரிந்து கொண்டவள், 'விதவிதமாய் சமைத்து போட, ருசித்து சாப்பிடும் கணவர் மற்றும் பிள்ளைகள், 'நீ சாப்பிட்டியா...' என்று, ஒருநாள் கூட கேட்டதில்லை. 'நீயும் உட்கார்ந்து சாப்பிடு, நாங்கள் பரிமாறுகிறோம்...' என, கூறுவரா என்று, மனம் ஏங்கித் தவிக்கிறது.
'அதை வாய்விட்டு கேட்டும், அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த ஏக்கமே, மன அழுத்தத்தை தர ஆரம்பித்தது. அதை தணித்து கொள்ளவே, ஓட்டலில் சாப்பிட வந்தேன். எனக்கு பிடித்த உணவை கேட்டு, பிறர் கையால் பரிமாற செய்து, சாப்பிடுவது, தனி ஆனந்தமாக உள்ளது.
'அதனால், கணவர், ஊரில் இல்லாத நாட்களில், ஒரு வேளை மட்டும் ஓட்டலுக்கு சாப்பிட வந்து விடுவேன்...' என்று கூறி, கண்கலங்கினாள்.
ஆண்டு முழுதும் அடுப்படியில் வெந்து, உணவை தயார் செய்யும் மனைவிக்கு, மாதத்தில் ஒருநாளாவது ஓய்வு கொடுத்து, அவளுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறினால், மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பதை கணவன்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியும் மனுஷி தானே!
ஜி. சுந்தரவல்லி, சென்னை.

அன்புடன் அந்தரங்கம்! thanks to dinamalar.com

அன்புடன் அந்தரங்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16பிப்
2020
00:00
அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 50. மனைவி வயது: 47. எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படித்துள்ளேன். வெளிநாட்டு தனியார் நிறுவனத்தில், கணினி உற்பத்தி மற்றும் தர நிர்ணய உதவி மேலாளராக பணிபுரிந்தபோது, 33 வயதில் திருமணம் ஆனது. முதல் குழந்தை கருவுற்றிருந்தபோதே, தனிகுடித்தனம் என்ற கோரிக்கை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள், மனைவி.
நான்கு ஆண்டுகளாக பிரிந்து இருந்தோம். இந்த கவலையில், என் தாய் இறந்து விட்டார். எனினும், அவ்வப்போது, என் அக்காவின் ஆதரவில், தவறான வழியில் மனைவி சென்றுவிட கூடாது என்பதற்காக, தந்தை சம்மதத்துடன், அவளை சந்தித்தேன்.
நிறுவனத்தில், ஓரளவு ஊதிய உயர்வு கிடைக்கவே, அவளின் அம்மா வீட்டிற்கு அருகில் வசித்தோம். இரண்டாவது குழந்தை பிறந்தது. மனைவி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அவளுக்கும் ஓர் ஆளுமை உரிமை வழங்கும் உயர்ந்த எண்ணத்தில், எனக்கு என்று எதையும் சேமித்து கொள்ளாமல், சம்பளம் முழுவதையும் அவளிடமே கொடுத்தேன்.
அவளின் அப்பா உயிரோடு இருந்தபோது, 'எங்கள் வீட்டிலேயே ஒரு பகுதியில் இருங்கள்...' என, அழைத்தார். நான் சம்மதிக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின், திருமணமாகாத மைத்துனரின் வேண்டுகோளின்படி, அவர்கள் வீட்டின் கீழ் பகுதியில், 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்தே வசித்தேன்.
வீட்டின் மூத்த மாப்பிள்ளை என்பதால், பாரபட்சம் பார்க்காமல், மாமியார், மைத்துனர் மற்றும் மனைவியின் உறவினர்களுக்கும் வேண்டியவற்றை, என் ஊதியத்திலேயே செலவு செய்து வந்தேன்.
தற்போது, மைத்துனருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆள் குறைப்பு மற்றும் புதிய ஆள் சேர்க்கை காரணமாக, என்னுடன் சேர்த்து, 10 பேரை, 'செட்டில்மென்ட்' செய்து, வெளியேற்றி விட்டது, நிறுவனம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், எனக்கு, முதுகுதண்டில் நடந்த அறுவை சிகிச்சையில், 'ராட்' வைத்துள்ளனர். ஓர் ஆண்டாக, பல இடங்களிலும் வேலை தேடி, ஏறி இறங்கி விட்டேன். வயது முதிர்வு காரணமாக, வேலை கிடைக்கவில்லை. வந்த மொத்த தொகையையும் மனைவியும், மைத்துனரும் செலவு செய்து விட்டனர்.
சாதாரணமாக கணக்கை கேட்க, 'தாம்பத்தியத்திற்காக தான், நீ என்னுடன் குடித்தனம் நடத்த வந்தாய்; நீ ஒரு பைத்தியம். இது, என் வீடு. வேலை வெட்டி இல்லாத உனக்கு, இங்கு இடமில்லை வெளியேறு. இனி, இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது...' என, மைத்துனருடன் சேர்ந்து, மனைவியும், என் வயதுக்கு கூட மரியாதை தராமல், இழிவுபடுத்தி அனுப்பி விட்டனர். மேலும், எனக்கு சொந்தமான எந்த பொருளையும் எடுக்க விடவில்லை.
தன்மானம் கருதி, ஏதும் பேசாமல், அடைக்கலம் தேடி, அக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். தற்போது எனக்கு என இருப்பது, தந்தை கொடுத்த ஒரு வீடும், காலி மனையும் தான்.
'நீ எந்த தப்பும் செய்யவில்லை. பாவம், உனக்கு அமைந்த வாழ்க்கை சரியில்லை. போனால் போகட்டும் விடுடா...' என, அக்கா ஆறுதல் கூறினாலும், பட்ட மன துயர், அவமானம், பலருக்கும் நான் பாரமாக இருக்கிறோமோ என்ற உணர்வு கொல்கிறது.
இன்று நிம்மதி தொலைந்து, கண்ணீருடனும், மன அழுத்தத்துடனும் இருக்கிறேன். ஆறுதல் தாருங்கள் அம்மா.
 இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —
உனக்கு, 33 வயதில் திருமணமாகியுள்ளது. தாமதமாய் திருமணம் செய்து கொள்ளும், சில ஆண்களுக்கு, தங்களது ஆண்மை மீது சந்தேகம் வரும். திருமண பந்தம் மீறிய உறவில், மனைவி ஈடுபட்டு விடுவாளோ என்கிற பதைபதைப்பும் ஏற்படும். அதனால் தான், உன் கடிதத்தில், 'மனைவி தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காக, பிரிந்திருக்கும் அவளை சந்தித்தேன்...' என, கூறியிருக்கிறாய்.
மனைவியை பிரிந்திருக்கும் கணவன்மார்கள், தவறான வழியில் சென்றுவிட மாட்டார்களா... உணர்ச்சி என்பது, ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுதானே, மகனே. மனைவியை நீ பிரிந்தது, ஆணாதிக்க மனோபாவத்தால் தான் என, யூகிக்கிறேன்.
கணவன், தான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுத்து செலவு செய்ய சொல்வது, அவளுக்கு ஆளுமை உரிமை வழங்கும் எண்ணத்தால் அல்ல; தான் கொடுக்கும் பணத்திற்குள், குடும்பத்தை சிறப்பாக மனைவி நிர்வகிப்பாள் என்கிற, சுயநலம் தான்.
மாமனார் வீட்டுக்கு, 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்து குடியிருந்திருக்கிறாய். அதை தவறு என சொல்ல மாட்டேன். ஆனால், மாமியார், மைத்துனர் மற்றும் மனைவியின் உறவினர்களுக்கு, உன்னை யார் செலவு செய்ய சொன்னது?
தனியார் நிறுவனங்களில், 45 வயதுக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். மாதா மாதம் ஊதியத்தில் ஒரு தொகையை ஒதுக்கி, நீ சேமித்திருக்க வேண்டும். ஊதாரித்தனத்தாலும், வீண் பெருமையாலும் இன்று அவதிப்படுகிறாய்.
திருமணமான புதிதில், ஒரு கணவன், என்ன குணத்தில் இருக்கிறானோ அதை வைத்து தான், ஆயுளுக்கும் அவனை மதிப்பாள், மனைவி.
மனைவியிடமும், மைத்துனரிடமும், 'செட்டில்மென்ட்' தொகையை ஏன் கொடுத்தாய்... வங்கியில் வைப்பு தொகையாக போட்டிருந்தால், மாதா மாதம் வட்டி வருமே... 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்ற முதுமொழி, உன்னை பொறுத்தவரைக்கும், அக்மார்க் உண்மை. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாய், மகனே.
உனக்கு, இரு குழந்தைகள் என எழுதியிருக்கிறாய். மூத்தது, பெண் குழந்தை என்றால், 16 வயதும், இரண்டாவது, ஆண் குழந்தை என்றால், 14 வயது இருக்கும். வீட்டை விட்டு தனியாக வெளியேறி, அக்கா வீட்டில் அடைக்கலம் ஆகியிருக்கிறாய் என்றால், இரு குழந்தைகளும் உன்னுடன் வரவில்லை. அவர்கள் இருவரும், அம்மா கட்சி என்பது அப்பட்டமாகிறது.
உன் பக்கம் நியாயம் இருந்தால், அவர்கள் உன்னுடன் வந்திருக்க வேண்டும். தந்தை மீது தவறா, தாயின் மீது தவறா என்று தீர்ப்பு கூற, சிறந்த நீதிபதிகள், உன் குழந்தைகளே.
அக்கா வீட்டில் உட்கார்ந்து எவ்வளவு நாள் ஓசி சோறு தின்பது. உடனடியாக, அக்கா வீட்டிலிருந்து வெளியேறி, தந்தை வீட்டிற்கு குடி போ. சமையல் செய்யக் கற்றுக்கொள். காலி மனையை வந்த விலைக்கு விற்று விடு.
வீட்டின் முன் பகுதியை இடித்து, கடையாக்கு. 'மினி டிபார்ட்மென்டல் ஸ்டோர்' வைத்து, தினசரி வரவு - செலவு கணக்கை எழுது. ஊதாரித்தனத்தையும், வீண் பெருமையையும் குப்பையில் துாக்கிப் போடு. 'ஈகோ'வை துறந்து, மனைவியுடன் பேசு. அதற்காக, கடை வருமானத்தை துாக்கி கொடுத்து விடாதே. வாரா வாரம் குழந்தைகளை அழைத்து, அளவளாவு; பரிதாபம் கொள்ளாதே.
ஒரு கட்டத்தில், மனைவி உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவாள்.
'ஆடம்பர செலவு செய்ய அனுமதிக்க மாட்டேன். மைத்துனர் குடும்பம் வரக்கூடாது. குடும்ப செலவை நானே பார்த்துக் கொள்வேன்...' என்ற நிபந்தனைகளுடன் மனைவியை சேர்த்துக் கொள். உன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தால், மனைவியோ, மைத்துனனோ வாலாட்ட மாட்டார்கள். குழந்தைகளிடம், நல்ல தந்தை என, பெயர் வாங்கு.
உலகத்தில் மிக சிரமமான காரியம், நல்ல கணவன் என, பெயர் எடுப்பது. மிகச்சிறந்த கணவனுக்கு கூட, அந்த விருதை கொடுக்க மனைவியர் முன் வருவதில்லை. முதல் இன்னிங்சில், 'ஹிட் விக்கெட்' முறையில், ரன் அடிக்காமல், 'அவுட்' ஆகி விட்டாய்; இரண்டாவது இன்னிங்சில், சிறப்பாக ஆடி, 'செஞ்சுரி' அடி. போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு... யுத்த முறைகளை மாற்றி, வெற்றிபெறு மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான் ”
According to spiritual upanishads(books, preachings).
A person who eats one time a day is yogi, who eats 2 times is bhogi( man in family life), who eats 3 times is roghi( will become a diseased person), who eats 4 times is gone( will die soon).
(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

இணையதளத்தில் மகாபாரதத்தை இலவசமாக படிக்கலாம் thanks to dinamalar.com


இணையதளத்தில் மகாபாரதத்தை இலவசமாக படிக்கலாம்!
மகாபாரதத்தை ஆங்கி லத்திலிருந்து, அழகிய தமிழில் மொழிபெயர்த்து, அனைவரும் கட்டணம் இன்றி, இலவசமாக படிக்கும் வகையில், ௧௫ ஆயிரம் பக்கங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ள, சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த அருட்செல்வபேரரசன்: என் பெற்றோர், தமிழாசிரியர்கள். அப்பா, பகுத்தறிவாளர்; அம்மா, தெய்வ நம்பிக்கை உடையவர். மகாபாரத கதைகளைத் தான் அம்மா, அனைத்திற்கும் உதாரணமாக கூறுவார். அப்போது, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விவாதம் நடக்கும். இவர்கள் இடையே தான் நான் வளர்ந்தேன். எனக்கு, மகாபாரத ஆவல், பெற்றோரால் ஊட்டப்பட்டது தான். அதன் பின், ராஜாஜி, 'துக்ளக்' ஆசிரியர் சோ போன்றோரின் நுால்கள், என் அறிவு ஜன்னல்களை ஒவ்வொன்றாக திறக்கத் துவங்கின. 100 ஆண்டுகளுக்கு முந்தைய, கிசாரி மோகன் கங்குலி என்ற நுாலாசிரியர், மகாபாரத கதையை விரிவாக எழுதியுள்ளார். காப்புரிமை சிக்கல் இல்லாத அந்த கதையை, 2013ல் மொழிபெயர்க்கத் துவங்கினேன்; 2020ல் முடித்தேன். 86 ஆயிரம் சுலோகங்களுடன், எளிய தமிழில் மொழிபெயர்த்து, https://mahabharatham.arasan.info என்ற என் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். யார் வேண்டுமானாலும் படித்து இன்புறலாம். இந்த பணிக்கு, ஏழு ஆண்டுகள் ஆனது. இணையதள வடிவமைப்பாளராக உள்ளேன். அலுவலகம் சென்று, வீடு திரும்பியதும், இரவு, 11:00 மணி துவங்கி, அதிகாலை, 2:30 மணி வரை, மகாபாரத பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நான் செய்தது, வெறும் மொழிபெயர்ப்பு பணியல்ல; நம் தேசத்துடன் தொடர்புடையது. நம் பாரம்பரியம், தத்துவம், பண்பாடு, வாழ்வு, போதனை இவற்றோடு பின்னிப் பிணைந்தது. இந்த பழம்பெரும் இதிகாசத்தை, ஏராளமானோர், பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் சிலர், அவரவர் இஷ்டத்திற்கு மகாபாரதத்தை கூறி வருகின்றனர். அது தவறு என, உணர்ந்தேன். நாம் ஏன், சரியான மகாபாரதத்தை அனைவருக்கும் வழங்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், இந்த பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி, நிறைவு செய்துள்ளேன். இதற்கு, எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர், அதற்கு இட்ட பெயர், 'ஜெயம்!' அந்த வகையில், எழுத்தாளர் ஜெயமோகன், என் நண்பர் ஜெயவேலன் போன்றோர், இந்த ஜெயம் உருவாக, உதவிகரமாக இருந்துள்ளனர். இணையத்தில் மகாபாரதம் வெளியாகியுள்ளதை அறிந்து, பிரபல எழுத்தாளர்களும், ஆன்மிக பெரியவர்களும் பாராட்டுகின்றனர். இதில், என் பங்கு எதுவும் இல்லை. இவ்வாறு செய்ய, இறைவன் என்னை பயன்படுத்தினார்; அவ்வளவு தான்! தொடர்புக்கு: arulselvaperarasan@gmail.com

க்ரஹப்ரவேசம் - எதற்காக ? - நன்றி: தினமலர் ஆகஸ்ட் 22, 2014

சத்குரு:

இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.


திருமணம் இன்றும் அன்றும்: இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.


எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.


கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.


அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.


சிறிய பிரதிஷ்டை: நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.


அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.


எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.


மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.


வெற்றி இன்றும் அன்றும்: தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.


அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.


ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.


கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!


கடமையாகி விட்ட சடங்குகள்: ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.


இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.


. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.


Monday, February 10, 2020

திருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் thanks to tamil and vedas


திருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் பட்டியல்! (Post No.7556)

by Tamil and Vedas
 Yoga in Sarasvati- Indus Valley Civilization 
Written by S Nagarajan
Post No.7556
Date uploaded in London – 10 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
திருமூலர் தரும் ரகசியம் : ஆசனங்கள் 134 : அவை யாவை? இதோ பட்டியல்! (Post No.7556)
ச.நாகராஜன்
ஹிந்து தர்மம் உள்ளத்தையும் உடலையும் பண்படுத்தத் தரும் அருமையான ஒரு வழி ஆசனம்.
ஆசனம், தியானம் என்பதெல்லாம் உலகில் இன்று ஏராளமான நாடுகளில் சகஜமாகி விட்டன.
ஆசனம் என்றால் என்ன? (இதை ஆதனம் என்றும் சொல்வதுண்டு)
ஆசனேன ரஜோ ஹந்தி என்று யோக சூடாமணி  விளக்கம் தருகிறது. ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.
வியாதி,
யோகத்தில் வன்மை இன்மை,
இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு
அலட்சியம்
வைராக்கியம் இல்லாமை
திரிபுணர்ச்சி
சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல்
கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பாதஞ்சல யோக சூத்திரம் கூறுகிறது.
ஆசனங்கள் எண்ணற்றவை. அனைத்தும் பயன் தருபவை.
அவற்றில் தலையாய ஆசனங்கள் எட்டு. அதைத் தொடர்ந்து சிறப்பாகக் கூறப்படும் ஆசனங்கள் மொத்தம் 126.
 A B C D ....................... X Y Z IN YOGA ASANAS
ஆக மொத்தம் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 134.
இவற்றில் தலையாய ஆசனங்களாவன:
சுவத்திகம்
பத்திரம்
கோமுகம்
பங்கயம்
கேசரி
சொத்திரம் (சோத்திரம், சோத்திகம் என்றும் சொல்லப்படுவதுண்டு)
வீரம்
சுகாசனம் ஆக முக்கியமான ஆசனங்கள் மொத்தம் 8
திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் நான்காம் அத்தியாயமான ஆதனம் என்னும் அத்தியாயத்தில் ஆசனம் பற்றிய அற்புதமான ரகசிய விளக்கங்களைக் கூறி அருளுகிறார்.
3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரால் அருளப்பட்ட அதி ரகசிய நூல்.
இதில் பாடல் 563 இது:
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே
மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.
அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம்.
இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.
எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. மொத்த ஆசனங்கள் 126.
இந்த 126 ஆசனங்கள் யாவை? இதோ இருக்கிறது பட்டியல்:
  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  11. சவாசனம்
  12. மச்சேந்திர சித்தாசனம்
  13. சித்தாசனம்
  14. வச்சிராசனம்
  15. பதுமாசனம்
  16. மச்சேந்திர பதுமாசனம்
  17. முக்த பதுமாசனம்
  18. சிம்மாசனம்
  19. பத்திராசனம்
  20. வல்லரியாசனம்
  21. விருச்சிகாசனம்
  22. குப்சிகாசனம்
  23. பாரிசுவோபாதாசனம்
  24. யோகாசனம்
  25. கபாலாசனம்
  26. டிட்டிபாசனம்
  27. பூர்வதானாசனம்
  28. அர்ப்பககாசனம்
  29. காமதகனாசனம்
  30. கேசரியாசனம்
  31. சோபகிரியாசனம்
  32. பரியங்காசனம்
  33. பத்தாசனம்
  34. லௌல்யாசனம்
  35. பத்தயோனியாசனம்
  36. பேகனாசனம்
  37. மகாபேகனாசனம்
  38. பிராணாசனம்
  39. அபானாசனம்
  40. சமானாசனம்
  41. பைரவாசனம்
  42. மண்டூகாசனம்
  43. மர்க்கடாசனம்
  44. ஏகபாதவாசனம்
  45. பணீ ந்திராசனம்
  46. யோகநித்திராசனம்
  47. சுகாசனம்
  48. தண்டாசனம்
  49. சக்கிராசனம்
  50. வர்த்துலாசனம்
  51. அர்த்தாசனம்
  52. பர்வதாசனம்
  53. யோனீமுத்திராசனம்
  54. திருடாசனம்
  55. பவனமுக்தாசனம்
  56. வாமபாத பவனமுக்தாசனம்
  57. தட்சிணபாத முக்தாசனம்
  58. தீராசனம்
  59. சுவாசகமனாசனம்
  60. வாதாயனாயனாசனம்
  61. அர்த்தபாதாசனம்
  62. ஊர்த்துவபத்மாசனம்
  63. பூர்ணாபாதாசனம்
  64. தட்சிணாசனம்
  65. அத்துவாசனம்
  66. வாமதட்சிண பாதாசனம்
  67. திவிபாதசிராசனம்
  68. விருட்சாசனம்
  69. வாமபாதசிரசாசனம்
  70. தட்சிணபாதசிரசாசனம்
  71. தாடாசனம்
  72. ஊர்த்துவதனுராசனம்
  73. வாமசித்தாசனம்
  74. விவேகாசனம்
  75. தர்க்காசனம்
  76. நிசுவாசாசனம்
  77. அர்த்தகூர்மாசனம்
  78. கருடாசனம்
  79. திரிகோணாசனம்
  80. பிரார்த்தனாசனம்
  81. பாதத்திரிகோணாசனம்
  82. புஜாசனம்
  83. அஸ்தபயங்கராசனம்
  84. அங்குஷ்டாசனம்
  85. உத்தகடாசனம்
  86. அர்த்தபாதாசனம்
  87. அஸ்தபுஜாசனம்
  88. வாமவக்கிராசனம்
  89. ஜாந்வாசனம்
  90. சாகாசனம்
  91. திரிஸ்தம்பாசனம்
  92. பாத அபான கமனாசனம்
  93. அசதசதுஷ்கோணாசனம்
  94. கூர்மாசனம்
  95. கர்ப்பாசனம்
  96. ஏகபாதவிருட்சாசனம்
  97. முத்த அஸ்த விருட்சாசனம்
  98. துவிபாதபாரிசுவாசனம்
  99. கந்தபீடாசனம்
  100. பிரௌடபாதாசனம்
  101. உபாதானாசனம்
  102. ஊர்த்துவ சம்யுக்த பாதாசனம்
  103. அர்த்தசவாசனம்
  104. வேறு அபானாசனம்
  105. யோனியாசனம்
  106. வேறு பர்வதாசனம்
  107. பர்வதாசனம்
  108. சலபாசனம்
  109. கோகிலாசனம்
  110. லோலாசனம்
  111. உத்தமாங்காசனம்
  112. உட்டிராசனம்
  113. அம்சாசனம்
  114. வேறு பிராணாசனம்
  115. கார்முகாசனம்
  116. ஆனந்தமந்திராசனம்
  117. கம்புநாசனம்
  118. கிரந்திபேதனாசனம்
  119. சமாசனம்
  120. புஜங்காசனம்
  121. பவனாசனம்
  122. மச்சாசனம்
  123. மகராசனம்
  124. விருஷாசனம்
  125. சங்கடாசனம்
  126. சர்வாங்காசனம்  
ஆசனங்களின் பெயர்களை மட்டும் இங்கு பார்த்தோம். இவை பற்றிய விளக்கங்களை யோக நூலில் காணலாம்.
ஒவ்வொரு ஆசனமும் உள்ளத்தையும் உடலையும் பல்வேறு விதத்தில் பண்படுத்துபவை.
அனைத்து வியாதிகளையும் இந்த ஆசனங்களின் மூலமாகத் தீர்க்க முடியும்.
பண்டைய காலத்தில் இந்த ஆசனங்களைக் கற்றுத் தரும் குருமார்கள் ஆங்காங்கே இருந்தனர்.
அவர்கள் சிஷ்யர்களை வழி நடத்தி ஆசனங்களை உரிய முறையில் செய்கிறார்களா என்று சோதனை செய்து உயர்த்துவர்.
இன்றோ இப்படி ஆசனங்கள் பல உள்ளன என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டதோடு அவரவர் புதுப்புது யோகாவை ‘சிருஷ்டித்து பணம் சம்பாதிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுவிட்டது.
யோக சாஸ்திரத்தில் வல்லார் இந்த நிலையை மாற்றி பாரதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்!
நன்றி : திருமந்திரம் புகழ் பரப்பும் திருவாவடுதுறை ஆதீனத்தைப் பாராட்டி நன்றி கூறாமல் இருக்க முடியாது. தமிழகம் செய்த தவப்பயனாக திருவாவடுதுறை ஆதீனம் தொடர்ந்து திருமந்திர மாநாடுகளை அவ்வப்பொழுது நடத்துவது வழக்கம்.
இதில் என் தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் அவர்களும் கலந்து உரையாற்றுவதுண்டு.
அவர் கூடவே செல்லும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டதால் மாநாட்டு நடவடிக்கைகளையும் பேரறிஞர்கள் ஆற்றும் உரைகளையும் வியப்புடன் கவனிப்பேன்.
திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரம் சம்பந்தமாக ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது; மூன்றாம் தந்திரம் விளக்கத்தை பஞ்சாக்ஷரதீபம் என்னும் உரையுடன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள 126 ஆசனங்களின் பட்டியலே மேலே தரப்படுள்ளது.
திருமந்திரம் வளர்க்கும், திருமந்திர ரகசியம் விளக்கும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போற்றி வணங்கி எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
Tags யோகம் ஆசனம்திருமூலர், திருவாவடுதுறை ஆதீனம்,
ஆசனங்கள் பட்டியல்