Monday, July 11, 2016

எச்சரிக்கை... நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள். from vikatan.com

ண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள்,  கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். 

இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள். 

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல; இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. 'ஒளி மாசு'  என்ற வார்த்தை,  உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.  

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில  வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில்,  பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற  அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.

கண்கெட்டபிறகு மருத்துவர் நமஸ்காரம் வேண்டாம் மக்களே!!!

Saturday, July 9, 2016

solution for all problems

வாழ்க்கையின் எந்த ஒரு 
பிரச்னைக்கும் தீர்வு உண்டு...
முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பவன் 
வெற்றி பெறுகிறான்
முயற்சியின்றி சோம்பலாய் இருப்பவன்
தொடர் தோல்வி நிலையில் இருக்கிறான். 
- பல அறிஞர்கள்
தீர்வே இல்லாத பிரச்னையென்று ஒன்று, இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரச்னை என்பது ஒரு பக்கம் என்றால், அதற்கான தீர்வு அடுத்த பக்கத்தில் கண்டிப்பாய் இருக்கும். நாம் அந்த பக்கத்தை திருப்பி பார்க்க முயற்சி செய்தால் சுபம். இல்லையென்றால், அதே பிரச்னையோடு, அந்த பக்கத்திலேயே 
தொடர் தோல்வி நிலையிலேயே இருக்க வேண்டியதாய் இருக்கும். இது நம் கையில் தான் இருக்கிறது. தோல்வியை துரத்தி முயற்சியை கைப்பிடிப்பவன் 
பாக்கியவான் ஆவான்.

முதுமையும் உணவும்

:
Advertisement

பதிவு செய்த நாள்

01ஏப்
2016 
00:00
முதுமை இயற்கையானது. 60 வயதிற்கு மேற்பட்டோர் முதியோர். மூத்த குடிமக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். வாழ்நாளில் எல்லாப் பருவத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். மறதியும் சிலருக்குச் சேர்ந்து கொள்கிறது. முதுமையில் மன ரீதியான பாதிப்பே முதன்மையானது. இறப்பு என்பதே முதுமையின் முடிவு.
வாழ்நாள் கூடிக் கொண்டே போவதால் (வாழ்நாள் 1951ல் 32 - 45 வயது: 2011-ல் ஆண் 65 பெண் 68 வயது) முதியோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது. முதியோர் எண்ணிக்கை: 1951ல் 5.3 சதவிகிதம், 2011ல் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பொருளாதார வசதி உயரும்போது வாழ்நாள் உயரும். எண்ணிக்கையில் முதலிடமாக 11.8 சதவிகிதமாக உள்ளது. தமிழ்நாட்டில் 10.3 சதவிகிதம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும்.
முதியோரில் 80 சதவிகிதம் கிராமப்புறத்தில் உள்ளனர். இவர்களில் 30 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழ்ந்து வருகின்றனர். 10 சதவிகிதம் பேர் படுத்த படுக்கையாக உள்ளனர். கிராமப்புற முதியோருக்குச் சுகாதார சேவைகள் என்பது எட்டாக்கனி. 1995 - 96ல் மத்திய அரசே மேற்கொண்ட கள ஆய்வுகளின் அறிக்கையிலும் உறதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி ஆண்களில் 51 சதவிகிதத்தினரும் பெண்களில் 12 சதவிகிதத்தினரும் யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து வாழ்வதாகவும் இதற்கு இந்தியாவில் கூட்டுக் குடும்ப முறை சிதைந்ததே காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பல்கலைக்கழகமும், கீப் ஏஜ் இன்டர்நேஷனல் ஆகிய இரண்டும் இணைந்து குளோபல் ஏஜ் வாட்ச் இன்டெக்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (டைம்ஸ் ஆப் இண்டியா, 11.9.2015), 96 நாடுகளில் முதியோருக்கு அளிக்கும் சுகாதாரச் சேவைகள் குறித்து மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கையின்படி இந்தியா மிக மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. 96 நாடுகளில் இந்தியா 71வது இடத்தைப் பெற்றுள்ளது. சேவைகள் அளிப்பதில் மதலிடம் பெறுவது சுவிட்சர்லாந்து; இந்தியாவின் நிலை தெற்காசிய நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கை (6), சைனா (52) பங்களாதேஷ் (67), இந்தியா (71) என்ற இடத்தில் உள்ளது.
முதியோருக்கான தேசியக் கொள்கைகளை அமல்படுத்துவதில் அதிலும் முக்கிய அங்கமான சுகாதாரச் சேவைகள், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பதில் கேரளா, தமிழ்நாடு போன்ற ஓரிரு மாநிலங்கள் மட்டுமே ஓரளவு திருப்திகரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிட வேண்டியுள்ளது.
நலமான முதுமை என்றால் முதியோர் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டு உணவில் சத்தான உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைக் காத்து உணர்ச்சிவசப்படாமல் குடும்பத்துடனும், சமுதாயத்துடனும் இணைந்து வாழ்க்கை பயணத்தை மேற்கொள்வதேயாகும். உணர்ச்சி வசப்படுதலே முதுமை கால எதிரி. உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்திக் கொண்டாலே வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும். தனிமை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்றைய காலச் சூழ்நிலையில் மன அழுத்தமே பல தொற்றா தன்மையுள்ள வியாதிகளுக்கு பாதை அமைப்பதாக மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கி்ன்றனர்.
இன்று முதியோருக்குச் சுகாதாரச் சேவைகள் முழுமையாக அரசால் கொடுக்க இயலாததால், அவர்களுக்குச் செலவழிக்க குடும்பத்தினர் தயங்குவதால்தான் குடும்பத்தில் அனைவருக்கும் பிரச்சினை. அதற்கு உணவு முறையில், வாழ்வியலில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டாலே பல வியாதிகளில் இருந்து தப்பலாம். குடும்பத்திலும் பிரச்சினை குறையும்.
முதியோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல்நலப் பாதிப்புகள் (வியாதிகள்) இருக்காது. முதுமையில் ஏற்படும் உடல் நலப்பாதிப்புகள் மற்றும் உடல் நலமாற்றங்கள் அவர்களின் பரம்பரைத் தன்மை, வாழும் சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வியல், உணவியல் முறைகளில் நாம் கவனம் செலுத்தி மாற்றிக் கொண்டால் பரம்பரைத் தன்மையால் ஏற்படும் வியாதிகளின் பாதிப்பைக் கூடத் தள்ளிப் போடலாம். முதுமையில் ஏற்படும் ஊனத்தையும், வியாதிகளையும் தடுத்துக் கொள்ள பிரதானமாகக் கடைப்பிடிக்க வேண்டியது - சத்தான உணவு, உடல் உழைப்பு ஆகிய இரண்டுமே. எனவே கீழ்கண்ட உணவு முறையில் கவனம் செலுத்தி அதை அமல்படுத்துவ௦தே சந்தோசமாக இருக்க வழிவகுக்கும்.
* சக்தியை மட்டுமே கொடுக்கும் இனிப்பு வகைகள் நயமாக அரைத்த மைதா போன்ற மாவுகளில் தயாரி்கப்படும் பரோட்டா, பேக்கரி பொருட்கள் உண்ணுவதைத் தவிர்க்கலாம். ஓரளவு கொழுப்புச் சத்து நீக்கிய பால், பால் பொருட்கள் தினம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகமுள்ள (கலோரியை மட்டுமே) உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடல் பயன்படுத்தியது போக மீதமுள்ளது கொழுப்பாக மாறி உடலில் படியும். தொற்றா தன்மையுள்ள வியாதிகளான சர்க்கரை நோய், இருதய சம்பந்தமான வியாதிகளுக்கும், உடல் பருமனுக்கும் பாதை அமைக்கும். முழு தானிய வகைகளில் கிடைக்கும் மாவுச்சத்து பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
* முதுமையில் பெரும்பாலானோருக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் உழைக்க போதுமான சக்தி கிடைக்காது. மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே தினசரி உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள கருநிறக்கீரை, காய்கறி வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவு பழங்கள் அனைத்திலும் தரமான வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி குடல் இரும்புச் சத்தை அதிகமாகக் கிரகித்துக் கொள்ள உதவும். காபி, டீ இரும்புச் சத்து கிரகித்துக் கொள்வதைத் தடுக்கும். எனவே உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பும், பின்பும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* முதுமையில் கால்சியம் சத்து உணவில் இருக்குமாறு திட்டமிட்டுச் சாப்பிட வேண்டும்.
எனவே கால்சியம் சத்து அதிகமுள்ள பால், பால் பொருட்கள் கால்சியம் சத்துள்ள கீரை வகைகள் காய்கறி வகைகளான, முள்ளங்கி, முட்டைகோஸ், புரூக்கோ, காளிபிளவர் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகளில் ராகியில் கால்சியம் அதிகம். மாவானது 100 கிராம். ராகியில் 34 மி.கி. கால்சியம் உள்ளது. அதே போல் கீரை வகைகளில் 100 கிராமில் 1130 மி.கி. கால்சியம் உள்ளது. முதியோருக்குத் தினசரி தேவை 1200 மி.கி. கால்சியம் சத்து. குறிப்பாகப் பெண்களுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடுவதால் நடு வயது முதலே அவர்களுக்குக் கூடுதலாகக் கால்சியம் சத்து அவசியம். மாதவிடாய் நின்ற ஐந்து ஆண்டுகளிலேயே எலும்பிலுள்ள ஐம்பது சதவிகிதம் கால்சியம் சத்து இழப்பு ஏற்படுவதாகத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* முதியோருக்கு வைட்டமின் டியும் அத்தியாவசியமானது. இது இலவசமாகவே கிடைக்கும். தினமும் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் சூரிய ஒளி நம்மேல் பட்டாலே போதும். தேவை பூர்த்தியாகிவிடும். நமது உணவில் உள்ள கால்சியத்தை நமது குடல் உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் டி அவசியம்.
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உறையும் தன்மையுள்ள எண்ணெய்களை (நெய், பாமாயில், தேங்காய் எண்ணெய்) தவிர்க்க வேண்டும். (அதில் தயாரித்த உணவுகளை) உறையாத தன்மையுள்ள சூரியகாந்தி, சோயா, ஆலிவ், கடலை எண்ணெய்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். இவைகள் இதய சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கும்.
முதியோர் நார்ச்சத்துள்ள உணவுகளைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாவிர உணவுகளில் பல பாகங்களில் வெவ்வேறு அளவில் நார்ச்சத்து உள்ளது. காய்கறிகளின் மேல் தோல், கொட்டை, தானிய வகைகளில் மேலுள்ள தோலே நார்ச்சத்து. சில பழங்களின் மேல் தோலும் சதைப்பகுதியிலும் நார் போன்று இருப்பதே நார்ச்சத்து, நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்கும். சர்க்கரை வியாதி, இதய சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும். பெருங்குடல் புற்றுநோய் வராது.
வயது கூட கூட நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கும் தன்மை குறையும். அதனால் அதிகம் சாப்பிடாமல் குறைத்து நான்கு அல்லது ஐந்து முறை சாப்பிடலாம். கண்டிப்பாகப் பட்டினி இருக்கக்கூடாது.
முதுமையில் பல்தேய்து கூனும் விழுந்து விடும். அதனால் உணவுகளான பால், பால் பொருட்கள், சமைத்த முட்டை, இளம் மாமிசம், காய்கறி, பழங்களைச் சாப்பிட்டு புரதச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அவசியம். குளிர் காலத்தில் தாகம் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பிரதான பணி செய்வது தண்ணீரே. மேலும் நமது மூட்டுகள் சீராகச் செயல்படவும் தண்ணீர் அவசியம். இது போன்று பல பயன்கள் உண்டு.
முதுமையில் மறதியும் ஒரு பிரச்சினையே மறதியை வெல்ல கீழ்கண்ட ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ள ஆப்பிள், காய்கறிகள், பழங்கள், பூண்டு, வெங்காயம், கேரட், கொட்டை வகைகள் (அளவோடு), (கடலை - பாதாம்) தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். இது மட்டுமில்லாமல் தன்னால் முடிந்த பணிகள், உடற்பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் மட்டுமே எலும்பு வலுவிழப்பு, கீழ்வாதம், பிற எலும்பு சார்ந்த வியாதிகள் மற்றும் உடல் பருமன் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வுக் காலத்தில் ஓய்வுதான் எடுக்க வேண்டும் என்று எண்ணினால் வியாதிகள் நம்மைத் தொடர்ந்து வந்து சேரும் என்பதை மறக்கக் கூடாது.

- கா. இளவரசன் 

Thursday, July 7, 2016

அன்பை வளர்ப்போம்..! ஆணவத்தை தவிர்ப்போம். by என். ரவிச்சந்திரன்


 
Advertisement
வாழ்க்கையில் எந்த ஒரு மனிதருக்கும் ஆணவம் தலை துாக்கும்போது, அவர் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார். குடும்ப வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில் சார்ந்த இடங்கள் எங்கெல்லாம் ஆணவம் தலை துாக்குகிறதோ, அங்கெல்லாம் உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக மகிழ்ச்சி தொலைகிறது. பகை வளர ஆரம்பிக்கிறது. ஆணவத்தின் காரணமாக பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. இதனால் உறவில் விரிசல்
ஏற்படுகிறது. ஆக மொத்தத்தில் மகிழ்ச்சி தொலைகிறது; வாழ்க்கை அழிகிறது.
நான் என்ற ஆணவமும், எனது என்ற ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் கடவுளிடம் நெருங்க முடியாது. கண்ணை இருள் மறைப்பது போல் அறிவை மறப்பது ஆணவமாகும். நான் என்ற எண்ணம் ஒருவரிடம் உண்டாகும்போது, அவரிடம் ஆணவம் இருக்கும். ஆணவம் வளர வளர மகிழ்ச்சி நம்மை விட்டு விலகிவிடும் என்பதை நாம் அறிவது அவசியம்.
ஆணவத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நாம் பொறுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். அதனால் தான் ''வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்'' என்றார் அன்னை தெரசா.
பாரத போரின் முடிவில் தேரோட்டியாக இருக்கும் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, ''அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே! இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு,'' என்றார்.
அதற்கு அர்ஜூனர், ''கிருஷ்ணா நீ என்னை போரில் வெற்றி பெறச்செய்தாய். வெற்றி பெற்றவரை தேரோட்டி தான் கையை பிடித்து தேரிலிருந்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மறந்து விட்டாயா! அப்படி செய்வது எனக்கு பெருமை அல்லவா! நீயோ என்னை கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்?,'' என்றார். அர்ஜூனரின் வார்த்தைகளை, கிருஷ்ணர் காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.
கிருஷ்ணர் கட்டளை ''தேரை விட்டு இறங்கு,'' என்றார் கிருஷ்ணர் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜூனன் கீழே இறங்கினார். அப்போது கிருஷ்ணர், அர்ஜூனரிடம் ''தேரின் பக்கத்தில் நிற்காதே. சற்று தள்ளி நில்,'' என்றார் அதட்டலுடன். அர்ஜூனரால், கிருஷ்ணரின் அதட்டலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒன்றும் புரியாதவராய் தேரை விட்டு தள்ளி நின்றார் அர்ஜூனர். வாடிய முகத்துடன் நின்ற அர்ஜூனரை கண்டு புன்னகைத்த கிருஷ்ணர் தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று அர்ஜூனனை இறுக கட்டி அணைத்து கொண்டார். அந்த கனமே தேர் தீப்பற்றி எரிந்தது. ''பார்த்தாயா தேர் எரிகிறது. அதனால் தான் உன்னை தேரை விட்டு இறங்கச் சொன்னேன்,'' என்றார் புன்முறுவலுடன். ஆணவம் அழிந்தது
அர்ஜூனருக்கு, தேர் ஏன் எரிகிறது என்று புரியாத காரணத்தால் கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணர், ''அர்ஜூனா போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேரின் கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அவைகளை தடுத்துக்கொண்டு இருந்தோம். அதனால் அவை வலிமையற்றுக்கிடந்தன. தேரைவிட்டு நான் குதித்ததும் தேர்க்கொடியிலிருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். கவுரவர்கள் ஏவிய அஸ்திரங்களின் சக்தி தலை துாக்கியது. தேர் பற்றி எரிய தொடங்கியது. உண்மை இப்படியிருக்க நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னை கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் நான் என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்தது போல் அர்ஜூனரிடம் இருந்து ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலாயிற்று. அதனால் தான் ''வெற்றி வந்தால் பணிவு அவசியம்,
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்,
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்,
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்,'' என சான்றோர் கூறினர்.

மன்னரின் சந்தேகம் : தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜராஜசோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.
''மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலு
மண்டபத்தில் வைத்து விடுங்கள். யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடையை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு,'' என
அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து அவர்களுக்கு தெரிந்த மகிழ்ச்சியை தரும் பொருட்களை அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்து விட்டு ஆயிரம் பொற்காசுகள்
பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தன. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக்கொண்டே வந்தார். முதலில் சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழ்
''செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது,'' என எழுதப்பட்டிருந்தது.
ஆனால் ''செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்? அதனால் இது சரியான விளக்கம் அல்ல,'' என அதை நிராகரித்தார் மன்னர்.
அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே ''இசையே மகிழ்ச்சி தரக்கூடியது,'' என எழுதப்பட்டிருந்தது. ஆனால் ''காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என நிராகரித்தார்.
அடுத்து அழகான மலர்கள் இருந்தன. ''இவை கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என்றார்.
அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தன. ''நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?,'' என்று கூறி அதனையும் மன்னர் ராஜராஜசோழர் நிராகரித்தார்.

அன்பே சிவம் : அடுத்ததாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல், அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே 'அன்பே சிவம்' என்று எழுத்தப்பட்டிருந்தது. ''இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள்,'' மன்னர் கட்டளையிட்டார். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். ''நீங்கள் தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்,'' என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.
''அரசே நான் ஒரு சிற்பி. இந்த சிலையை வடிவமைத்தது அடியேன் தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண், அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும் தான், கண் தெரியாதவர்களும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல் நலம் இல்லாதவர்களும் அன்பை தான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும், அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது அன்புதான்,'' என்றார்.
இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். ''உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்
கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோயிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்,'' என்று கூறி ஆயிரம் பொற்காசுகளை பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் மன்னர். அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள். அன்பு தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. எனவே அன்பை நாம் வளர்ப்போம். ஆணவத்தை நாம் தவிர்ப்போம். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்.

- என். ரவிச்சந்திரன்
வட்டார போக்குவரத்து

திருமுறைகள் காட்டும் சீர்திருத்தம் by முனைவர் தி.சுரேஷ்சிவன் இசைத்தமிழ் அறிஞர்


Advertisement
 
 
Advertisement
 
 


Advertisement
எவ்வுயிரையும் தம் உயிராகக் கருதும் அருள் உணர்வு எல்லாச் சமயத்தினரிடமும் உண்டு.
குறிப்பாக தேவாரத் திருமுறைகளை பாடிய அருளாளர்கள் சிவபரம்பொருளைச் சிந்தனை செய்தும் சமுதாய நிலையில் பல மாற்றங்களை வலியுறுத்திப் பாடியுள்ளனர்.
திருமூலர்,

'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின்”
என்று மனித குலத்தின் ஒருமைப்பாட்டினையும் ஓர் இறை கோட்பாட்டினையும் உணர்த்தியுள்ளார். அப்பர் பெருமான் ஜாதி பேதங்களை வன்மையாகச் சாடியவர். திருக்கன்றாப்பூர் பதிகத்தில்,

'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு
என் செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளுமாற் பேறர'
என்று அறநிலையை பாடல் மூலம் வலியுறுத்த, மாணிக்கவாசகரோ..
'சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட் கொண்டு'
என்று கசிந்து உருகுகிறார்.

சோழப் பேரரசில் தலைமை அமைச்சராய் பணியாற்றிய சேக்கிழார், பக்தி அடிப்படையில் பாகுபாடற்ற சமுதாய ஒருமைப்பாட்டினைத் காண ஆசைப்பட்டார்.

'நமிநந்தி அடிகள் புராணத்தில்,
தேவர் பெருமான் எழுச்சி திரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவர் என்னாதுடன் சேவித்து
எல்லாக்குலத்தில் உள்ளோரும்
மேல அன்பர் தாமும் உடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்'
என்று சேக்கிழார் பாடியிருத்தல் எண்ணத்தகுந்தது. கூட்டு வழிபாடு சமுதாய ஒருமைப்பாட்டிற்குப் பெரிதும் உதவியது.
போலி வழிபாடு
பொருள் புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் சடங்குகள், போலி வழிபாடு, நடிப்பு, பக்தி முதலியவற்றை திருமுறை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புனித ஆறுகளிலும் கடல் தீர்த்தங்களிலும் முழுகிவிட்டால் பாவம் கழுவப்பெறும் என்ற நம்பிக்கை அப்பர் காலத்தில்
இருந்தது. சிவஅன்பு இன்றி நீராடுவதால் ஒரு பயனும் இல்லை.
பாபநாசத் திருக்குறுந் தொகையில்,
''கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்குதண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே''
என வரும் பாடல் இதனை சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய மூடபழக்கம் யூதர்களிடமும் இருந்தது. ஜோர்டான் நதியில் குளிந்தெழுந்தால் பாபம் போய்விடும் என்று நம்பிய யூதர்களைத் திருத்தும் பாங்கில்,
''யூதர்களே! பரலோகத்தில் இருக்கிற
பரமபிதாவின் கருணை உங்களுக்குக் கிட்ட வேண்டுமென்றால் ஜோர்டான் நதியில் குளித்தெழுந்தால் போதாது,
நீங்கள் செய்த பாவங்களை எண்ணி நைந்துருகிக் கண்ணீரை ஆறாகப் பெருக்கி அதில் குளித்தெழுந்தால் பாவமன்னிப்பு கிடைக்கும்''
என்று ஏசுபிரான் கூறிய வாசகம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
பக்தி இலக்கியம்
திருவாசகம் இனியதமிழ் பக்தி இலக்கியமாகும். மாணிக்கவாசகர் அருளிச் செய்த இத்தொகுதியில் 51 தலைப்புகளில் பல்வேறு அறக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 'தேன்', 'நாய்' இரண்டு சொற்களும் அதிக பாடல்களில் இடம்பெறுகிறது. மன்னர் புகழ் பாடும் மரபை மாற்றி, விண்ணாளும் தேவனை பாடுகிற மரபை தோற்றிவித்தவர் மாணிக்கவாசகர். சிலப்பதிகாரத்தில் ஊசற்பாட்டு முதலானவை மன்னர் புகழ் பாடுவனவாக உள்ளன. திருவாசகத்திலே தான் அம்மானை, பொன்னுாசல் போன்ற பாடல்கள் இறைவன் புகழ் பாடுவனவாக உள்ளன. மகளிர் விளையாட்டுப்பாடல்களை மாணிக்கவாசகர் பல சூழல்களில் பாடியுள்ளார்.
அம்மானைப் பாடலில், மதுரையில் வெள்ளம் வரும் போது கரையடைக்கும் பணி செய்யாமல் இருந்த இறைவன் பிரம்படி பட்ட செய்தி, வேலை செய்யாமல் கூலி பெற முடியாது என்ற சிந்தனையைக் காட்டுகிறது. மேலும், மதுரை நகரில் அந்நாளில் தமிழும் இசையும் பயின்று வந்த செய்தி திருக்கோவையாரில் காட்டப்பட்டுள்ளது.'தண் பாண்டிநாடு' என மதுரையை புகழ்தலும், சிறுபாணாற்றுப்படையில் 'தமிழ்நிலை பெற்று தாங்கு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை' என்று தமிழ்த் தொடர்பினால் போற்றப்படுதலையும் காணலாம்.
திருவாசகத்தில் அறிவியல்
நமது பிறப்பு தற்பொழுது எந்த எண்ணிக்கை உடையது என்பது எவருக்கும் தெரியாது. ஏனெனில், பல பிறப்புக்களை எடுத்து மனிதப் பிறவி வாய்த்ததை மாணிக்கவாசகர்
'புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகிப்
பல்விருகமாய் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்
கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்ற இத் தாவர
சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்' என்கிறார்.
நமது உயிர் தாயின் வயிற்றில் எப்படி பயணித்து, உடலாக வருகிறது என்ற நிலையை போற்றித் திருஅகவலில்
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியில் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவில் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வரு தரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்...' என்கிறார் மாணிக்கவாசகர்.
நம் பிறப்பு நிகழ்வதை அறிவியலார் போல் சொல்லும் மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை
திருவாதவூரில். ஜூலை 7 ஆனி மகம் அவர் முக்தி பெற்ற நாளாகும்.

சுறுசுறுப்பை சொந்தமாக்கி மகுடம் சூடுங்கள்! by-- முனைவர் இளசை சுந்தரம்,


சுறுசுறுப்பை சொந்தமாக்கி மகுடம் சூடுங்கள்!
Advertisement
 
 

 
Advertisement
அறிஞர் எமர்சனை பார்த்து ஒருவர் கேட்டார்.
'உங்கள் வயது என்ன?'
'360 ஆண்டுகள்'
'என்னால் நம்ப முடியவில்லை. இது இயலாத காரியம். அறுபது வயதுக்கு அதிகமாக இருக்க
மாட்டீர்கள்'
எமர்சன் சொன்னார் ''நீங்கள் சொல்வது சரிதான். எனது உண்மையான வயது அறுபதுதான். ஆனால் உங்களைவிட 6 மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். 360 ஆண்டுகள் எப்படி வாழ முடியுமோ, அவ்விதம் இந்த 60 ஆண்டுகளை பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றார்.
நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம்
என்பதுதான் முக்கியம்.
பிறவிகளில் மகத்தானது மனித பிறவி அல்லவா? அந்த பிறவியை மகத்துவப்படுத்துவது நாம் வாழும் முறையில்தானே இருக்கிறது. வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல. சாதனைகளை தந்து போனவர்களின் தொகுப்பு. சோம்பல் கொண்ட மனம் துருப்பிடித்த இரும்பு போல. சுறுசுறுப்பு கொண்ட மனம், சாணை பிடிக்கப்பட்ட கத்தி போல. உடனுக்குடன் பணிகளை முடிப்பதே முக்கியம்.
வெற்றிக்கான வழிமுறைகள்
பிரார்த்தனை செய்ய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது ஆத்மாவின் சங்கீதம்.
படிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில்.
உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.அது செயலின் ஊற்று.
விளையாட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம்.
உதவி செய்ய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது உள்ளத்திற்கு உரம்.
ஒருநாள் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மணித்துளியையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கை அமைகிறது. உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல. உயிர்ப்போடு வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த உயிர்ப்பை தருவது சுறுசுறுப்பு. வாழ்க்கை எனும் தீபத்தில் சுறுசுறுப்பு எனும் நெய்யை பிரகாசமாக எரிய விடுங்கள். வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.''சுறுசுறுப்பான மனதுக்குதான் எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும். வாய் பிளந்த சிப்பிக்குள்தான் மழைத்துளி விழுந்து முத்தாக வளரும்'' என்பார் லுாயிபாஸ்டின்.
சுறுசுறுப்பாளர்கள் உலகப்புகழ் பெற்ற அறிவியல் மேதை சர். ஐசக் நியூட்டன் ஒருநாள் 18 மணி நேரம் உழைக்க கூடியவர். ஏறத்தாழ தன் 20 ஆண்டு கால ஆராய்ச்சியை ஒரு பெரிய நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார். ஒருநாள் இரவு தமது சோதனை சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சாய்ந்து ஆய்வு புத்தகத்தை எரித்துவிட்டது. நியூட்டன் நிலை குலையவில்லை. நண்பர்களிடம் சொன்னார். ''இப்போது ஒன்றும் கெட்டு போய்விடவில்லை. சில மாதங்களில் மீண்டும் முயன்று இழந்த குறிப்புகளை தொகுத்து விடுவேன்'' என்றார்.சோர்வில் மூழ்காத சுறுசுறுப்பாளர்களுக்கே இது இயலும்.
''உற்சாக உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றியை பெற முடியாது'' என்கிறார் வால்டேர். ஆளுமைதிறனில் 'பளிச்'சென்று இருப்பது ஒரு பண்பு என்று சொல்வார்கள். அது உடையில் மட்டுமல்ல. உள்ளத்திலும் தான். உங்களுடைய புத்திசாலித்தனம், காரியபங்கு, சுறுசுறுப்பு, அந்த 'பளிச்'சென்ற தன்மையை உங்களுக்கு கொடுத்துவிடும். விறுவிறு நடை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.புத்திகூர்மை உடையவர்தான் சுறுசுறுப்பாக காரியம் பண்ணுகிறார். அவர் சூழ்நிலைகளுடன் மின்னல் வேகத்தில் பொருந்திவிடுகிறார். அவருடைய துரிதம் மற்றவர்கள் மத்தியில் அவரை 'பளிச்'சிட வைக்கிறது. ஒத்திவைப்பை ஓரங்கட்டுங்கள் சுறுசுறுப்பின் முதல் எதிரி சோம்பல். மனதுக்கு பிடிக்காத வேலையை வேறுவழியின்றி செய்பவரிடம் 'என்ன வேலை செய்கிறீர்கள்' என்று கேட்டால், 'இந்த சனியன் பிடிச்ச வேலையில்தான் 20 வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கிறேன்' என்பார்.இங்கே ஒரு வேடிக்கை சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எனது அமெரிக்க பயணத்தில், நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கியபோது வரவேற்க வந்தவர்களில் ஒருவர், 'தமிழ்நாட்டில் எங்கே வேலை செய்கிறீர்கள்?' என்று கேட்டார்.
நான் அவரை உற்றுபார்த்தேன். 'தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்றார்.
'நீங்கள் சரியாகதான் கேட்டிருக்கீங்க. தமிழ்நாட்டில் நாங்க விசாரிக்கும்போது, 'எங்கே வேலை செய்றீங்கனு கேட்பதில்லை. எங்கே வேலை பார்க்கிறீங்க?' என்றுதான் கேட்போம்' என்றேன்.
ஏனென்றால் பல பேர் வேலையை பார்க்கிறார்கள். செய்வதில்லை. அரசு அலுவலகங்களில் இந்த கொடுமை அதிகம் என்று நான் சொன்னதும், அந்த நையாண்டியை எல்லோரும் ரசித்தனர்.
எந்த வேலையை செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். பொய்யான மனப்பாங்கு
சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்களை விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் எப்படி? செயல்படுத்த வேண்டாமா? சிகரெட் பிடிக்கிற வழக்கத்தை விடமுடியாதென்று யார் சொன்னது? இதுவரை நான் 30 முறை விட்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும். துாக்கம் வருகிறது அல்லது உடம்பு களைப்பாக இருக்கிறது என்று உடம்பெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி இருக்குது என்பது நீங்கள் அடிக்கடி கேட்ட வசனமாக இருக்கலாம். அல்லது நீங்களே உச்சரிக்கும் வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால் இது உண்மையா? திடீரென்று நமது வீடு தீப்பிடித்துக் கொண்டதென்றால் துாக்கம் வருமா? நேரமே இல்லை என வேலைகளை ஒத்திப்போடுதல் ஒரு பொய்யான மனப்பாங்கு.
சுறுசுறுப்பானவர்களுக்கு நேரம் இருந்து கொண்டே இருக்கும். சோம்பல் உள்ளவர்களுக்கு சோம்பல் முறிக்கவே நேரம் இருக்காது. ஒரு காரியத்தை எப்படி தொடங்குவது என்பதில் தயக்கம், பலரை ஆட்டிப்படைக்கிறது. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடமையில் இருந்து நழுவுகிறவர்கள் வெற்றி மகுடத்தை சூட முடியாது. பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு, அதை முடிக்க முடியவில்லையே மனதால் அலட்டிக்கொள்ளாமல், உரிய காலத்தில் பணிகளை முடித்து மனதுக்கு பூரண ஓய்வு கொடுங்கள். அப்போது அடுத்த வேலைக்கு தயாராகலாம். சுறுசுறுப்பு மந்திரமே இதற்கு துணை செய்யும்.

உழைப்பில் விதையுங்கள் : ஒவ்வொரு நாளின் பணிகளையும் முந்தைய நாளின் இரவிலேயே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். செய்வதற்கு வேலைகள் இருந்தால் மனம் எப்போதும் சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் இருக்கும். உண்மையான பரவசம் என்பது ஒரு வேலையை துரிதமாக, சரியாக செய்து முடிப்பதுதான். எதையும் ஈடுபாட்டோடு செய்தால் உற்சாகம் பொங்கும்.
படைப்பாளி, ஆராய்ச்சியாளர், தொழில் விற்பனையாளர்களுக்கு கை கொடுக்கும் மருந்து இதுதான்.ஒவ்வொரு தினமும் உங்களுக்கு வெற்றி திருநாளாக அமைய வேண்டுமானால், ஒவ்வொரு நொடியையும் உழைப்பில் விதையுங்கள். அதிக நேரம் துாங்குவது தேவையினால் அல்ல. பழக்கத்தினால்தான். துாங்கும் நேரத்தை வரையறை செய்யுங்கள்.
எழ வேண்டிய நேரத்தை தீர்மானித்துக்கொண்டால், உடனே எழுந்துகொள்ளுங்கள். தோள்களை பத்து முறை மேலும், கீழுமாக குலுக்குங்கள். துாக்கம் பறந்தோடிவிடும்.
மேஜைகளில் தேவையில்லாத அடைசல் வேண்டாம். முக்கிய ஆவணங்கள் எங்கே உள்ளன என்பதை பற்றி கோப்பு இருக்கட்டும். எந்தெந்த பொருட்களை எங்கெங்கே வைக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கட்டும். தேவையில்லாத தேடல்கள் வேண்டாம். வந்த கடிதங்களுக்கு, இமெயில், எஸ்.எம்.எஸ்.,க்கு உடனுக்குடன் பதில் தர முயற்சி செய்யுங்கள்.
முக்கிய தினங்கள், கூட்டங்கள், சந்திப்புகள் பற்றிய குறிப்பேடு இருக்கட்டும். வேலைகளை முடிக்க காலவரையறை நிர்ணயுங்கள். உற்சாகம் தரும் தன்னம்பிக்கை நுால்களை படியுங்கள்.
எப்போதும் கலகலப்பாக இருங்கள். கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அப்புறம் என்ன... நீங்களும் மகுடம் சூடலாம்

Monday, July 4, 2016

திருமந்திரம்




சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட... தினம் ஒரு திருமந்திரம்!

தினெட்டு சித்தர்களில் திருமூலரும் ஒருவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.

ஆகமங்கள் 28. அவற்றில் காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம், வியாமளம் என்னும் 9 வடமொழி ஆகமங்களை தமிழாக்கி எளிதாக்கித் தந்தார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக ‘தமிழ் மூவாயிரம்’ ஆக திருமந்திரம் பாடினார். அவருடைய வரலாறு அதி அற்புதமானது.

முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற் றவர் நந்திபெருமான். இவரிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தில் திருக்கேதாரம், நேபாளம், காசி, சைலம், திருக்காளத்தி, திரு ஆலங்காடு, திருவதிகை, காஞ்சிபுரம் ஆகிய தலங்களைத் தரிசித்து சிதம்பரத்துக்கு வந்தார். அங்கே அம்பலவாணரின் அருள்பெற்றார். இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.
பயணம் தொடர்ந்தது. வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனூரில் பசுமாடுகள் மேய்க்கும் ‘திருமூலன்’ என்பவன் இறந்து கிடந்தான். அதனால் கலங்கி நின்ற பசுக்களின் கண்ணீரைத் தாங்காத சுந்தரநாதர், ‘தன் உடலை மறைத்து, மூலன் உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார். பசுக்கள் மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டன. மூலனின் மனைவி வீட்டுக்கு அழைத்தாள். ஆனால் திருவாவடுதுறை கோயிலில் போதிமர மாகிய அரசமரத்தின் கீழ், ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தவராஜயோகி’ ஆகி மவுனம் காத்தார். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 தமிழ்ச் சாத்திரம் பாடி கடவுளுடன் கலந்தார்.

‘திருமந்திரம்’ சுருக்கம்

சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அதில் முக்கியமான 9 ஆகமங்களைத் திருமூலர் ‘தன் தவ ஆற்றலால் உணர்ந்து தமிழில் 3000 பாடல்களாகப் பாடினார். பத்தாம் திருமுறையாக இது போற்றப்படுகிறது. 3000 ஆண்டுக்கு முன் இது எழுதப்பட்டாலும், கி.பி. 600-ல் தமிழில் எழுந்த முதல் சைவத் தமிழ் நூலாகப் போற்றப்படுகிறது.
‘சக்கரவர்த்தி தவராச யோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ?” என்று தாயுமானவர் போற்றியுள்ளார்.
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - 
இது ஔவையார் பாடல்.

திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளார்.
திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்களைப் பாடியுள்ளார் திருமூலர்.

முதல் தந்திரம்: காரண ஆகமம்; ஞானம் பெற அறவழி காட்டுகிறது.

2-ம் தந்திரம்: காமிக ஆகமம்; புராணம், சிவபராக்கிரமம் அட்ட வீரட்டம்

3-ம் தந்திரம்: வீர ஆகமம்: அட்டமா சித்தி, அட்டாங்கயோகம், தியானம், ஆசனம்

4-ம் தந்திரம்: சிந்திஆகமம்: மந்திர, தந்திர, யந்திர சக்தி வழிபாடு

5-ம் தந்திரம்: வாதுள ஆகமம்: சைவம், சரியை, கிரியை, யோகம், ஞானம்

6-ம் தந்திரம்: வியாமள ஆகமம்: சிவமே குரு, தவம், திருநீறு துறவு

7-ம் தந்திரம்: காலோத்ர ஆகமம்; சிவபூசை, குருபூசை, சீவன் உபதேசம்.

8-ம் தந்திரம்: சுப்பிரபேத ஆகமம்: ஞானிசெயல், ஆறு அந்தம் தத்துவமசி.

9-ம் தந்திரம்: மகுட ஆகமம்: சூக்கும பஞ்சாட்சரம், ஊழ், ஒளி, தோத்திரம், சமாதி ஆக 30 உபதேசங்கள், 300 மந்திரங்கள், 3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம், தமிழ்ச் சாத்திரம் ஆகும்.


அதுமட்டுமா, வழிபாட்டு துதிகளாக மட்டுமின்றி, வாழ்வை வெல்ல வழிகாட்டும் துதிகளாகவும் திகழ்கின்றன, திருமந்திரத்தின் பாடல்கள். அவற்றில் சில பாடல்கள் இந்த இணைப்பில் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. அனுதினமும் அவற்றைப் பாடி வழிபடுவதுடன், அந்தப் பாடல்கள் சொல்லும் நெறிப்படி நடக்கவும் சித்தம் கொள்ளுங்கள். சிவனருளால் சிந்தை மகிழத்தக்க பெரும் வாழ்வை பெறுங்கள்.

காக்கும் மந்திரம்!

வாயும், மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே

- திருமந்திரம் 1178


பொருள்: சீவர்களின் பிராணவாயு, மனம் இரண்டாலும் அறிய முடியாதவள். தவத்தாலும், தியானத்தாலும் மனோன் மணியை எளிதில் அறிய முடியாதவள். பேயையும், பூதகணங்களையும் தமக்கு ஏவலர்களாகப் பெற்றவள். பெண் தெய்வமாகவே விளங்குபவள். ஆராய்ச்சி யாலும், அறிவாலும் அறிய இயலாத சக்தி இவள். சிவனுக்குத் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் இருந்து காத்து வருகிறாள்.

திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் வரும் பாடல் இது.  நான்காம் தந்திரம், சிந்தி ஆகமத்தின் தமிழாக்கம் ஆகும். இது சக்தியின் சிறப்பையும், சாக்த தத்துவத்தையும் விளக்குகிறது. திருமூலர் எழுதிய ஒன்பது தந்திரங்களில் நான்காம் தந்திரமாகிய இதில்தான் மிக அதிகமாக 535 பாடல்கள் உள்ளன.

இவ்வுலகையும், பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் இதே சக்தி. பிரம்மாவின் படைப்புக்கு, சரஸ்வதி நாவில் நின்று அறிவு தருகிறாள். திருமாலின் காக்கும் திறனுக்கு, திருமகள் மார்பில் அமர்ந்து செல்வம் தருகிறாள். சிவனின் அழிப்புக்கு, உடலில் பராசக்தி பாதியாக நின்று வலிமை தருகிறாள். அவளே, சிவபெருமானுக்குத் தாயும், மனைவியும், மகளுமாக இருந்து காக்கின்றாள் என்கிறார் திருமூலர். அவரது வாக்கை அபிராமிப் பட்டரும் பின்பற்றி பாடியுள்ளார்

‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் 
    ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை 
    இறைவியும் ஆம் 

(அபிராமி அந்தாதி 44)


இங்ஙனம் பரமனுக்கே காப்பாகத் திகழும் ஆதிசக்தி, நமக்கும் காப்பாகத் திகழ்வாள். உடல் நோய்கள் தீரவும், வலிமை கூடவும் துர்கை வழிபாடு பலன் தரும். சிக்கல் தீரவும், வறுமை போகவும் மகாலட்சுமி விரதம் கைகொடுக்கும், தேர்வில் வெல்லவும், வேலைவாய்ப்பு கூடவும் கலைமகள் வழிபாடு வழிகாட்டும். இந்த முப்பெருந் தேவியரையும் நவராத்திரி காலத்தில் மட்டுமல்ல, அனுதினமும் பெண்கள் வழிபட வேண்டும். அப்படி வழிபடும்போது மேற்கண்ட பாடலைப்பாடி வழிபட, சக்தியின் பேரருள் நிச்சயம் வாய்க்கும்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே 

- திருமந்திரம் 81

இன்பம் நிலைக்கும்!

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே, வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

        - திருமந்திரம் 1818


பொருள்: ஞான விளக்கினை ஏற்றி, எல்லையின்றி நிற்கும் பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். பரம்பொருள் பிரகாசத்தின் முன்னர், மாயா, மல இருள் ஆகிய வேதனைகள் மாறிவிடும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள், சிவ ஒளியும் ஆத்ம ஒளியும் கலந்து விளங்குவார்கள்.

விளக்குத் தொண்டு ஆலயத்துள் ஒளி சேர்க்கும். விளக்கு ஏற்றுபவரது வீடும், வாழ்வும் இருள் நீங்கி ஒளி பெறும்.  திருமறைக்காடு வேதாரண்யத்தின் ஆலயத்தில் விளக்கு ஒளியின் திரியைத் தூண்டிய எலி, அந்தப் புண்ணிய பயனால் மகாபலி மன்னனாகப் பிறந்தது. விளக்கு ஏற்றும் தொண்டினைச் செய்த கலிய நாயனாரும், கணம்புல்ல நாயனாரும், நமிநந்தி அடிகளும் சிவன் அருள் பெற்ற வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. ராமலிங்க அடிகளார் தண்ணீரால் விளக்கு எரித்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார். 'இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது' என்று துவங்கி திருநாவுக்கரசரும் விளக்குத் தொண்டினைப் போற்றியுள்ளார்.

இருள் என்பது தீவினை கலந்த அறியாமை. ஒளி வந்தால் தானே இருள் விலகி ஓடுவது போல், ஆலயத்தில் விளக்கு ஏற்றி வந்தால் நமது குடும்பச் சண்டை, கலகம், மனச் சலனங்கள் விலகி விடும். அதேபோல்,  ‘‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்...' எனப் பாடிய திருமூலர், ‘‘கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே” (திருமந்திரம் 1823) என்றும் சொல்கிறார். உடம்பே குத்து விளக்கு. இதில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் ஐந்து திரியால் எரியும் தீபங்கள் என்று பாடுபவர், ‘‘வஞ்சனை மிகுந்த ஐம்புலன்களும்'' என்கிறார். இவற்றை ஒரு நிலையாக நிறுத்தி அதில் ஒளி ஏற்றினால் ஆத்ம ஜோதிப் பிரகாசத்தை நாமே காணலாம்.

இந்த தாத்பரியத்தை போதிப்பது குத்துவிளக்கு. அதில் பீடம் பிரம்மா, தண்டு திருமால், விளக்கு சிவன் என்று குத்து விளக்கில் மூன்று தெய்வங்களும் நின்று அருளுகின்றனர். அனுதினமும் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, விளக்கு குறித்து திருமூலர் தந்த பாடலைப் பாடி வழிபடுவதால், நம் வீட்டில் இன்பம் எனும் பேரொளி என்றென்றும் நிலைத்திருக்கும்.

என்னை அறிந்திலேன் 

இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும்  
  
 அறிந்திலேன்    - திருமந்திரம் 2366

மழலை வரம் கிட்டும்!
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்ததுசூளை விளைந்தது தானே. 

- திருமந்திரம் 468


கருத்து: தாயும் தந்தையும் மனம் ஒன்றி, உடல் ஒன்றி, இசைவுடன், இருவரும் இன்புற்று புதிய உயிரை உருவாக்குகின்றனர். இன்பத்தில் உருவான, துன்ப மண்குடத்தில் ஆன்மா உருவாகிறது. கரு வளர்ந்து ஒன்பது ஓட்டைகளுடன் மனிதனாக உருவாகிறது. பச்சைமண் சூளையில் வைத்து செங்கல் ஆக தீமூட்டுவர். அது போல் தாயின் வயிற்றுச் சூளையின் சூட்டில் 300 நாள் இருந்து மனிதனாகப் பிறக்கிறது.

திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களும், இன்றைய மகப்பேறு மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. அதிலிருந்து சில தகவல்களைக் காண்போம்.

சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங் களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும்.

சிவன் அருளால் சீவன் உதிக்கிறது. எனவே தெய்வ அருள் இருந்தால்தான் மக்கட் செல்வம் வாய்க்கும்.

ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை 
        உள் இருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே - திருமந்திரம் 3451


சிவன் அருள் கூடினால் மகப்பேறு வாய்க்கும். திருச்சி அருள்மிகு தாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் தலபுராணத்தில், சிவபெருமானே தாயாக வந்து பிரசவம் பார்த்துச் சென்ற கருணை வரலாறு உண்டு. இன்றும்  சுகப்பிரசவம் நடக்க, அங்கு வாழைத்தார் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

ஆகவே, பிள்ளைப் பேறு வாய்க்காமல் வருந்தும் தம்பதிகள், அனுதினமும் ‘கரு உற்பத்தி’ திருமந்திரப் பாடல்களைப் பாடி தென்னாடுடைய சிவபெருமானை மனதார வணங்கி வழிபட்டு வாருங்கள்.

 சிவனருள், உங்கள் அகமகிழ
கருவைத் தந்து அருளும்!
தப்பிலா மன்றில் 

தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் ஏழுகோடி யுகம்  
  
இருந்தேனே - திருமந்திரம் 74

பிணிகள் நீங்கும்!

இருமலும், சோகையும், ஈளையும், வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலது ஆகும்
உருமிடி, நாகம், உரோணி, கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே

- திருமந்திரம் 263


கருத்து: தருமம் செய்து புண்ணியம் சேர்த்து வைக்காதவர் பாவிகள். பாவம் செய்தவருக்கு பலவித நோய்கள் இப்பிறப்பில் தொடரும். இருமல், ரத்தசோகை, கோழை, காய்ச்சல் ஆகிய நோய்களை இப்பிறப்பில் பெற்றவர், தருமம் செய்யாதவர்கள் ஆவர். தருமம் செய்பவரை இடி- மின்னல், பாம்புக் கடி, தொண்டை நோய், வயிற்றுக் கட்டி ஆகியன நெருங்காது.

‘அறம் செய்யாதவன் திறம்’ என்று முதல் மந்திரத் தலைப்பில் 10 பாடல்களில், தருமம் செய்யாதவரின் துன்பங்களைக் கூறுகிறார் திருமூலர். ‘அறம் செய்வான் திறம்’ ‘தானச் சிறப்பு’ என்றும் தலைப்புகளின் 10 பாடல்களில் தருமம் செய்வதால் வரும் இம்மை, மறுமைப் பயன்களைப் பாடியுள்ளார். ‘அறத்தால் வருவதே இன்பம்’ என்று வள்ளுவரும் பாடியிருக் கிறார். ‘போன பிறவியில் தருமம் செய்து புண்ணியத்தைக் கொடுத்து வைத்தவர், இந்தப் பிறவியில் வட்டியும் முதலுமாக சேர்த்து செல்வமாகவும், ஆரோக்கியமாகவும் வாங்கிக்கொள்கிறார்.

ஆமாம்! 16 வகைச் செல்வமும் புண்ணியத்தால் வந்து சேரும். ஆகவே, இனியேனும் தருமம் செய்து புண்ணியத்தைக் கொடுத்து வைப்போம்.

சரி, தர்மம் செய்வது எப்படி?

பிச்சைக்காரருக்கு தேடிப்பிடித்து ஒற்றை ரூபாய் போடுவது மட்டுமல்ல தர்மம். இதோ புண்ணியம் தரும் தர்மங்களை திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.

பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, ஒரு சொம்பு தண்ணீர் மரத்துக்கு ஊற்றுவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறது திருமந்திரம்.

தர்மத்தின் சிறப்பைச் சொல்லும் திருமூலர், பிச்சைக்காரருக்கு அளவாவது ஈதலைச் செய்யாதவரும், சொம்பினால் சோலைக்கு நீர் ஊற்றாதவனும் நரகத்துக்குச் செல்லும் பாவத்தையும் பாடியிருக்கிறார்!
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272

கல்வி தரும் மந்திரம்! 

ஏடுஅங்கை நங்கை 
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் 
தோத்திரம் சொல்லுமே

- திருமந்திரம் 1067


கருத்து: வாக்தேவியாக இருப்பவள் சரஸ்வதி. கையில் ஓலைச்சுவடிகள் வைத்து படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் மூன்று கண்களை உடையவள். படிகம் போன்ற தூய வெள்ளை நிறத்தவள். வெண் தாமரை யில் வீற்றிருப்பாள். நாத இசை வடிவாய் திகழ்பவள். திருமுறை பாடுபவள். அந்த தேவியின் திருப்பாதங்களை தலையில் சூடி தோத்திரம் சொல்லி வணங்குவோம்.

படித்து பட்டம் பெற்று, சம்பாதித்து திருமணம் செய்து குடும்பம் ஆகி விட்டால் ஊதியம் தொடரும், படிப்பு நின்று விடும். ஆனால் சமுதாயத்தில் சாதனை செய்த சிந்தனையாளர் பலரும் தனது இறுதிக் காலம் வரை தினமும் படித்துக் கொண்டே இருந்த வரலாற்றை படித்துள்ளோம். கலைஞர்கள் இசைக் கருவிகளில் தினமும் சாதகப் பயிற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அறிஞர்கள் தினமும் படித்தும், எழுதிக் கொண்டும் இருப்பார்கள். இதற்கு ஓய்வே இல்லை, இதயத்துடிப்பு போல படிப்பு எப்போதும் நடக்கும்.

ஆம்! ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு என்று உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்’ என்கிறார் ஔவையார். படித்தது ஓர் துளி; படிக்காதது பரந்த கடல் என்று கூறி கலைமகள் படிக்க ஆரம்பித்தாள். நாமும் அன்றாடம் படிக்க வேண்டும். செய்தித் தாள்களை மட்டும் அல்ல, சிந்தனை வளர்க்கும் நல்ல நூல்களை யும் அனுதினமும் படிக்க வேண்டும்.

அறியாமையின் நிறம் கருமை. பலவித ஆசைகளின் நிறம் ஏழு வண்ணங்கள். எல்லாம் கடந்த ஞானத்தின் நிறம் வெண்மை என்பார்கள். எனவேதான் ஞானம் பெற்ற கலைமகள் வெள்ளைச் சேலை உடுத்தாள்; வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். அத்தகைய தேவியின் பொற்பாதங்களை தினமும் பணியச் சொல்கிறார் திருமூலர்.

நாம் வழிபடுவதுடன், குழந்தைகளுக்கும் அந்த வாக்தேவியை வழிபடச் சொல்லித்தரவேண்டும். ஏடுநங்கை எனும் இப்பாடலைப் பாடி குழந்தைகள் வழிபட்டு வந்தால், கல்வியிலும், கலைகளிலும் நல்ல தேர்ச்சியும், கேள்வி ஞானமும் உண்டாகும். கலைமகள் அருளால் உலகை வெல்லும் வாழ்வை பெறுவர்.
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்                  

 - திருமந்திரம் 534

அன்னம் செழிக்கும்!

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது 
        ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே

- திருமந்திரம் 252


பொருள்: தினமும் உண்பதற்கு முன்னே இறைவனுக்கு ஒரு பச்சிலை சமர்ப்பித்து பூசித்தல் யாவருக்கும் நல்லது. பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் நல்லது. நாம் உண்பதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு பிறருக்கு வழங்குதல் யாவருக்கும் நல்லதாகும். பிறர் மனம் நோகாதவாறு இன்சொல் பேசுதல் யாவருக்கும் நல்லதாகும்.

ஏழைகளுக்கு உணவு அளிப்பது உயர்ந்த அறம். நோயுற்றவர், மாற்றுத் திறனாளியர், சிறைக்கைதியர், ஏழையர் யாவருக்கும் அமுத சுரபி மூலம் மணிமேகலை ‘அன்னதானம்’ செய்ததை மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்கிறது மணிமேகலை.

அடியவருக்கு அன்னதானம் செய்த, இளையான் குடிமாறர், மூர்க்கர், காரைக்காலம்மையார், சிறுத்தொண்டர், அப்பூதி அடிகள் ஆகிய நாயன்மார்கள் சிவனருள் பெற்றனர். இதை பெரிய புராணம் பேசுகிறது. ராமலிங்க அடிகளார் அணையாத பெரு அடுப்பை ஏற்றி தினமும் முழு வேளையும் அன்ன தானம் செய்தது, இன்றும் வடலூரில் தொடர்கிறது. திருமூலரின் திருமந்திர வாக்கினைத் திட்டமாகத் தீட்டினார் காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு மகா ஸ்வாமிகள். ஏழைகளுக்காக பிடி அரிசித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதிலிருந்தே அன்னதானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பிறர் பசி நீக்கிய பிறகு தன் பசி போக்குபவன் எடுக்கும் எல்லாப் பிறவியிலும் பசியின்றி வாழ்வான். அவனை பசிப்பிணியே தீண்டாது என்கிறது திருக்குறள். ஆமாம்! அன்னத்தினால் பெறும் புண்ணியம் எல்லாத் தலைமுறையும் பசியின்றி நம்மைக் காக்கும். திருமந்திரமும் அன்னதானத்தைப் பேணச் சொல்கிறது.

செவ்வியன் ஆகி சிறந்து
    உண்ணும் போது ஒரு
தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்டபோதே  - திருமந்திரம் 3196

இவ்வாறு திருமந்திரப் பாடல்கள் மூலம் அன்னதானத்தின் அவசியத்தை உணர்த்தும் திருமூலரின் வழிகாட்டல்படி, நாமும் அன்னம் அளித்து ஏழைகளின் பசிப்பிணி அகற்றி, நாமும் பசிப்பிணி இல்லாதப் பெருவாழ்வைப் பெறுவோம்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் - திருமந்திரம் 270

 துன்பங்கள் நீங்கும்! 

இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்றது இதுமறந்து
துன்பத்துளே சிலர் சோறொரு கூறைஎன்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே

 - திருமந்திரம் 2089


பொருள்: பெற்றோரின் சேர்க்கை இன்பத்திலே மனிதன் பிறக்கிறான். அதனால் எப்போதும் இன்பத்தையே எண்ணி ஏங்கி வளர்கின்றான். ஆனால் நிலைத்த பேரின்பம் எது என்பதை மறந்து, சிற்றின்பத்திலேயே உழல்கிறான். துணியும், சோறுமே சுகம் என்று துன்ப வாழ்வில் சிக்கிக்கொண்டு, ஆசாபாசங்களான துக்கங்களிலேயே நின்று மயங்கிக் கிடக்கின்றனர்.

இன்பம் என்பது எது? ஐந்து புலன்களால் எழுகின்ற சிற்றின்பமே இன்பமென நினைக் கின்றனர். அது நிலையற்றது; துன்பத்தில் நம்மைத் தள்ளிவிடுவது. யோகியரும் சித்தரும் புலன் இன்பங்களை வென்று, சோறு, உடை, சுகம் என்ற எல்லைகளைத் தாண்டிய பேரின்பத்தில் கலந்தவர்கள்.

காட்டிலே உணவு, உடையின்றித் தவம் செய்யும் முனிவர்கள் பேரின்ப நிலையில் மகிழ்கின்றனர். நாட்டிலே சகல வசதிகளுடன் வாழுகின்ற நாம், சிற்றின்பச் சேற்றில் விழுந்து எப்போதும் துன்பத்துடன் இருக்கிறோம்!

‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று பாடியபடி, ஏழு நாட்கள் சுண்ணாம்பு அறையில் அப்பர் இருந்தும் துன்பத்தை அடையவில்லையே.

புத்தர் பிரான் பல மாதங்கள் தவம் செய்து கண்ட உண்மை ‘ஆசையே துன்பங்களுக்கு காரணம்’ என்பதுதான். திருமூலரும்  ஆசையை விட்டால் துன்பமும் தானே விடுபட்டு விடும் என்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே 

- திருமந்திரம் 2615


வீடும், உறவும், சோறும், துணியும் தேவைதான். நம்மால் இவற்றை முற்றும் துறந்து முனிவராகிவிட முடியாது. எனினும் பேராசையை விட்டுவிட வேண்டும். அதை வெல்லுவதற்கு இறையருள் துணைசெய்யும்.

ஆகவே, தினமும் வீட்டில் உள்ளன்போடு தீபம் ஏற்றி வைத்து, இறைவனை மலர்களால் அர்ச்சித்து, தீப- தூபம் காட்டி, அர்ச்சனை முடித்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். உங்கள் மனதில் கவ்விய துன்பங்கள் அகன்று, இன்பம் வந்து சேரும்.

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே 

- திருமந்திரம் 603

மழை வளம் பெருகும்!

ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே 

- திருமந்திரம் 1345


பொருள்: ஒளி வீசுகின்ற பராசக்தி மனத்தில் எழுந்து அருளினால்,  மனதில் மகிழும்படியான உண்மைப் பொருள் விளங்கும். தெளிவு ஏற்படும். மழையும், செல்வங்களும் வந்து சேரும். எல்லா வளங்களையும் வழங்கும் அன்னை பராசக்தியை அறிந்துகொள்வார் குறையின்றி வாழ்வார்.

மழை தருவதால் அம்பாளை மாரி என்று அழைத்து வழிபட்டார்கள். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரியிட்டு” (குறள் 211) என்று திருவள்ளுவர் ‘மாரி’யை மழை என்று குறிப்பிடுகிறார். ஆடி மாதம் மாரியம்மனுக்கு கூழ் வார்த்து பொங்கலிட்டும், அம்மனுக்கு திருவிழா நடத்தியும், கரகம் சுமந்தும் மழை தர வேண்டுவார்கள். ஆம்! அம்பாளை வழிபட மழைவளம் பெருகும்.

ஆலயங்களில் பூசைகள், திருவிழாக் கள் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்வதே காரண, காமிக ஆகமங்கள். ஆலயத்தில் பூசைகள் சரியாக நடக்கவில்லையேல் நாட்டில் மழை பெய்யாது, நாடாளும் மன்னர் வலிமை குறைவர், மக்களுக்கு நோய் வந்து சேரும், திருடர்கள் அதிகமாகி விடுவார்கள் என்று நந்தி எம்பெருமான் உபதேசித்துள்ளார். அதையே  திருமந்திரம் பாடுகிறது.

ஆற்றரு நோய்மிக்கு, 
      அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்     
      போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான் 
        திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே 

- திருமந்திரம் 517


சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.
மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்  - திருமந்திரம் 2116

மண் வளம் சிறக்கும்!

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ண அறியாமல் நழுவுகின்றாரே  

- திருமந்திரம் 1828


பொருள்: சிவ பூசையாலும், தர்மங்கள் செய்வதாலும் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட புண்ணியவான்கள் இருக்கும் இடத்தில் நீர் அதிகம் இருக்கும். அதனால் பூக்கள் அதிகம் மலரும். அதனால் செய்யும் பூசைகளைக் கண்டு சிவபெருமான் அருள் புரிவார். இதை அறியாது பாவம் செய்யும் பாவிகள், எம் சிவனை அறிய முடியாமல் ஒதுங்கிப்போய் விடுகின்றனர்.

மண்ணுக்கு ஏற்பவே மகசூல் கிடைக்கும். விருந்தினருக்கு உணவளித்து உண்பவனின் வயலில் விதை போடாமல் தானே விளையும் என்கிறார் திருவள்ளுவர். பாவிகளின் வயலுக்கு எவ்வளவுதான் உரம் போட்டு தண்ணீர் ஊற்றினாலும் பாதி கூட விளையாது. மனிதனின் புண்ணிய குணத்தால் மண் மகிழ்கிறது. இவனது பாவ குணத்தால் மண் வளம் குறைகிறது. ஆக, பயிர் செழித்து வளர மண் வளத்தை விடவும், பயிரிட்டவனின் மன வளம் தேவையாகிறது.

புண்ணியம் மிகுந்திட நாம் என்ன செய்யவேண்டும். அறம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திருமூலர். பாவம் செய்ய இன்று பல வழிகள் உள்ளன. தருமம் செய்வது ஒன்றே புண்ணியம் பெறும் வழியாகும். கொள்கையில் சிறந்தவர், நேர்மையாளர், தர்மசீலர், எப்போதுமே ஏழ்மையில் இருப்பர், தெய்வத்தை துணைக்கு அழைப்பர், உதவிகள் செய்து புண்ணியம் சேர்ப்பர்.

ஞானிகளோ தங்களின் தவத்தால் பாவம்-புண்ணியம் இரண்டையும் கடந்து சிவனின் திருவடியைச் சேர்ந்து, வீடுபேறு அடைந்து விடுவார்களாம்.

புண்ணிய பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில             ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத்து             அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே - திருமந்திரம் 1647


நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளம் சிறக்கும். அதன் விளைவாக மண் வளமும் சிறக்கும்; பயிர்கள் செழித்தோங்கும்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம் 5

அன்பே சிவம் தவம்!

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே! 

- திருமந்திரம் 270


பொருள்: அன்பு ஆகிய சக்தியும், அறிவு ஆகிய சிவமும் வேறு வேறான இரண்டு எனச் சொல்பவர்கள் அனுபவ அறிவு இல்லாதவர்கள். அன்பின் முதிர்வால் சிவமாகிய அறிவு ஒளிர்வதை எல்லோராலும் அறிய இயலாது. அப்படி, ‘அன்புதான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது’ என்று எல்லோரும் அறிந்துவிட்டால், அன்பே வடிவான சிவமாக அமர்ந்து தவம் செய்யத் துவங்குவார்கள்.

அன்பு தூய்மையானது. தனக்கென வாழும் சுயநலம் இல்லாதது. சிவமும் தூய்மையானவர். தனக்கு என வாழாது, உயிர்கள் வாழ்வதற் காகத் தன்னையே தியாகம் செய்பவர்.

பாற்கடல் கடைந்தபோது கிடைத்த எல்லா நல்லப் பொருள்களையும் தேவர்கள் பெற்றனர். ஆலகால நஞ்சு வந்தது. அது உலகத்தையே அழித்துவிடும் என்று கருதி, அதை எடுத்துப் பருகிய தியாகராஜன் சிவபெருமான்.அடியாருக் காக மண் சுமந்து, பிரம்படி பட்ட சிவனார், அடியார்க்கும் அடியார் அல்லவா?!

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதை அறிவதே சிவநிலை ஆகும். கண்ணப்பன் என்ற திருக்காளத்தி வேடன், சிவனாருக்காக தன் கண்களைப் பெயர்த்து அப்பிய அன்பினன் ஆவான். சேக்கிழார், இவன் சிவபக்தியைக் கூறும்போது ‘அவனுடைய வடிவு எல்லாம் நம்பக்கல் அன்பு’ என்கிறார். அதாவது, அவன் உடல் முழுமையும் அன்பாகும் என்கிறார்.

சிவபக்தி கொண்டவர், எல்லா உயிர்களையும் நேசித்து அன்பு கொள்வார். சிவன் எங்கும் உள்ள அன்பு நிலை ஆகும். ஈயின் அன்பை திருஈங்கோய்மலையிலும், எறும்பின் அன்பை திருவெறும்பூரிலும், சிலந்தி, யானையின் அன்பை திருவானைக் காவலிலும், கழுதையின் அன்பை கரவீரத்திலும், பாம்பின் அன்பை திருப்பாம்புரத்திலும், குரங்கு அணிலின் அன்பை குரங்கணில் முட்டத்திலும் சிவனார் ஏற்று அருளியுள்ளார்.

எல்லா உயிர்களையும் அன்புடன் நேசிப்பதே சிவநிலை ஆகும். தவநிலை என்பதும் அன்புநிலைதான். ஆகவே, அன்பால் உள்ளம் உருகி இறைவனை வணங்க வேண்டும். உள்ளம் உருகும்போது நாம் செய்த பாவங்கள் நம் கண்ணீரோடு கரைந்து மறைந்து தூய்மை பெற்று விடுவோம்.
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே - திருமந்திரம் 133

விதியை வெல்லலாம்!

வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய் உணர்வோர்க்கே

- திருமந்திரம் 1232


பொருள்: வெல்ல முடியாத விதியையும் பராசக்தியின் அருளால் வென்றிடல் இயலும். விதியைச் சார்ந்து வரும் வினைப் பெரும் பாசத்தையும் வென்றிடலாம். பராசக்தி அருளால் ஐம்புலன்களின் ஆசையையும் வென்றிடலாம். சக்தியை உண்மையாக உணர்ந்து வழிபடுவோர் கர்ம பலன்கள் யாவற்றையும் வென்றுவிடலாம்.

பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்று விதி மூவகைப்படும். முன் செய்த தீவினையும், நல்வினையும் இப்போது நம்மை விதி வடிவில் வந்து சந்திக்கும். ‘ஆகூழ்’ என்று நல்விதியையும், ‘போகூழ்’ என்று தீமை செய்யும் விதியையும் திருவள்ளுவர் ஊழ் (38) என்ற அதிகாரம் முழுதும் பாடியுள்ளார். அவரே, ஆள்வினை உடைமை எனும் அதிகாரத்தில் ‘முயற்சியால் விதியை வெல்லலாம் என்று கூறுகிறார்.

சாவித்திரி சத்தியவானின் விதியை மாற்றி உயிரை மீட்டு வந்தாள். மார்க்கண்டேயன் 16 வயதில் தன் மரணத்தை மாற்றி, சிரஞ்ஜீவித்துவம் பெற்றார்.  விடாமுயற்சியும், பக்தியும் விதியை மாற்றி விடும்.

‘விதி வழி அல்லது வேலை உலகம் விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை’ என்கிறது திருமந்திரம். ‘கால் பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்றும் திருப்புகழில் அருணகிரிநாதர், தமது விதியை முருகப்பெருமான் மாற்றிய அனுபவத்தைப் பாடுகிறார். ‘நாளும் கோளும் அடியாரை நலிவுறச் செய்யாது. அதுவும் நல்லதாகும்’ என்று கோளாறு பதிகம் பாடி மதுரைக்குச் சென்றார் திருஞான சம்பந்தர். சமணர் வைத்த தீயிலிருந்து தப்பினார்.

விதியால் இந்த உலகமும், மதியால் நமது வாழ்க்கையும் சுழல்கிறது.  தெய்வ சக்தியால் விதியின் திசை மாற்றப்படும் என்பதை திருமூலர் தெளிவுறப் பாடியுள்ளார்.

விதியின் பெருவலி வேலை                 சூழ்வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே” 

- திருமந்திரம் 2030


ஆக, நாம் தினமும் தெய்வம் தொழுது மதிவலியைப் பெறுவோம். அதன் மூலம் வலிய விதியை மாற்றி, வளமான வாழ்வைப் பெறுவோம்.
 திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும் - திருமந்திரம் 244

சிவதரிசனம் கிட்டும்!

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின், கழிந்து அறும் பாவங்கள்,
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றுஒன்று இலாத மணிவிளக்கு ஆமே  

- திருமந்திரம் 292


பொருள்: உடலில் உயிர் நிற்கின்றபோதே, நிலையாத இவ்வாழ்வை உணர்ந்து, உயிருக்கு உறுதி பயக்கும் இறைவன் திருவடியை அறிய முயற்சியுங்கள்; உங்கள் பாவங்கள் நீங்கிவிடும். குற்றம் இல்லாத சொற்களால் அமைந்த தோத்திரத்தால் இறைவனைத் தொழுங்கள். அவ்வாறு தொழுது வணங்கினால், ஒப்புமை இல்லாத சுயசோதியான சிவபெருமானின் தரிசனமும் திருவருளும் கிடைக்கும்.

இன்றைய அவசர உலகில் ஆண்டவனிடம் எல்லாமும் கேட்கிறோம். ஆனால் அவரைப் போற்றித் தோத்திரம் செய்ய பொறுமையோ, நேரமோ இல்லை. அவசர அவசரமாக தோத்திரங்களைச் சொல்லும்போது அதில் பிழைகள் வந்துவிடுகின்றன.

வடமொழி சுலோகம் சொல்லும் போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் எதுவுமே தெரியாது ஒப்பிக்கிறோம். இதில் தவறு நேர்ந்தால் பாவம் சேரும். அதனால் சுலோகத்தின் பொருளை மனதில் வாங்கிக் கொண்டு, நிதானமாகச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார் திருமூலர்.

என்றும் அழியாத நித்தியத்துவம் வேண்டும் என்று வரம் கேட்க நினைத்தான் கும்பகர்ணன். ஆனால் ஓர் எழுத்து பிழையாக மாறி ‘நித்திரைத்துவம் வேண்டும்’ என்று கேட்டு விட்டான். அதனால் 6 மாதம் தூங்கும் கும்பகர்ணன் ஆகி விட்டான். சொற் பிழையால் வரம் சாபமாகி விட்டது எனக் கூறுவர்.

மாணிக்க வாசகர், ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார், செல்வர் சிவபுரத்தில் உள்ளார்’ என்று திருவாசகத்தில், பொருள் அறிந்து பாடச் சொல்கிறார். அருணகிரிநாதரும் ‘எழுத்தும் பிழையறக் கற்கின்யிலீர்’ என்று கந்தர் அலங்காரத்தில், பிழையின்றி தோத்திரம் பாடுமாறுச் சொல்கிறார்.

தோத்திரத்தின், சுலோகத்தின் பொருளைக் கேட்டு, அறிந்து பிறகே அதை பிழையின்றிப் பாட வேண்டும். நீங்களும் அனுதினமும் தெய்வத் துதிப்பாடல்களைப் பாடும்போது, பிழைகள் இல்லாமலும், துதியின் பொருள் உணர்ந்தும் பாடி இறைவனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ வரம் பெறுங்கள்.
 அழுக்கினை ஓட்டி, அறிவை நிறையீர தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் - திருமந்திரம் 254