Sunday, November 20, 2016

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

நன்றி: ஆனந்த விகடன் - 25 ஜனவரி 2016

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்..
அதே கதிரவன் காலையில் உதிக்கும் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள். நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நீங்கள்தான் ரசனை அற்றவராக இருக்கிறீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..

2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

 3.அக்கறையை  வளர்த்துக்கொள்ளுங்கள்!

 நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

4. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!


 “வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

 5. தடை..அதை உடை.!


 எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.

 6.நினைத்தை முடிக்கவும்!

 நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.

 7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!


 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.

8.அடிக்கடி சிரியுங்கள்!



அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..

 9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!



கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !

10.நன்றி சொல்வது, நன்று!


 உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.

 12.கொள்கையில் உறுதி வேண்டும்!



நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.

13.தியானம் நல்லது!

 ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

 14.செ
ய்வதை திருந்தச்செய் !
நீங்கள் எந்த வேலை  வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

 15. நம்பிக்கை..அதானே எல்லாம்!

வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை.  இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !

 16. ஆதலால் அதிகம் காதல் செய்!


 நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !

 17.முயற்சியை கைவிடாதீர்கள்!

 உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.

18.உங்களது சிறப்பைக்கொடுங்கள்!


 ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


 19.நமக்கு நாமே நல்லது!


 உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.



 20. நன்மையே செய்வோம்!


 எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் !

ஹார்வர்டு பல்கலைக்கழகம் மகிழ்ச்சியாக இருக்க, சொல்லிக்கொடுக்கும் வழிகள்தான் இவை. இதை இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல. எல்லா ஆண்டும் பின்பற்றுவதன் மூலம், மகிழ்ச்சி அதிகரிக்கும்தானே?

ஞா.சுதாகர்.

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்! taken from vikatan.com

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!



செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல்.

இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல…பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது? விரிசலை ஏற்படுத்த காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எப்படி சுற்றி வளைத்துப் பார்த்தாலும் எல்லா காரணங்களும் பெரும்பாலும், இந்த பத்துக்குள் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியான பத்து காரணங்களை பார்க்கலாம்.

1. ஈகோ (Ego)

குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ! அந்த வார்த்தைக்குள்ளேயே ‘கோ’ என்பது இருப்பதால், யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால், நிம்மதியை விரட்டிவிடும். நீ பெரியவனா… நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல, வாழ்க்கை. கணவனுக்கு தெரியாதது மனைவிக்கு தெரிந்திருக்கலாம்; மனைவிக்கு தெரியாதது கணவனுக்கு தெரிந்திருக்கலாம்; எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்னொரு பக்கம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இந்த ஈகோ அடிக்கடி வந்து போகும். அதனால் ஈகோவை தவிர்த்துவிடுவோம்.



2. தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex)

இது எந்த நேரத்தில் மனிதனுக்குள் எட்டிப்பார்க்கும் என்பது தெரியாது. ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய், அதற்காக வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமாக கிண்டல் செய்தால் கூட, அது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அது நாளடைவில் அதிகமாகி தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்வார்கள். அந்த வட்டமே விரிசலாக மாறும். சமையல் தொடங்கி படிப்பு வரை இந்த தாழ்வுமனப்பான்மை எதற்காக வேண்டுமானாலும் வரலாம்.

 3. தவறான புரிதல் (Misunderstanding)

வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி… அப்பா பிள்ளை, அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது அவசியம். புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும். அதுமட்டும் இல்லாமல் போய்விட்டால், தொட்டதற்கெல்லாம் பிரச்னை எழ ஆரம்பித்துவிடும். ‘நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க…’ என்று எல்லோரிடமும் எரிந்து விழ ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவர்கள் எப்படி உங்களை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோல வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

 4. பொஸசிவ்னஸ் (Possessiveness)

‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்று என்ற பொஸசிவ்னஸ் நமக்கு இந்நாளில் பழக்கமாகிவிட்டது. அளவு கடந்த அன்புதான் இந்த பொஸசிவ்னஸ். கணவன் வேறு ஒரு பெண்ணிடமோ, மனைவி வேறு ஓர் ஆணிடமோ சாதாரணமாக பேசினால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த இடத்தில் அப்படியான ஒன்று நிகழ்ந்தால், ‘ஹேய் லூசு… அவளும் நீயும் ஒண்ணா…’ என அதே இடத்தில் சொல்லி உங்கள் துணையின் முக்கியத்துவத்தை புரியவைத்துவிட வேண்டும். அப்படியே அதை வளரவிட்டால், ஆபத்துதான். இது கல்யாணம் ஆனதும் வரலாம். 40 வயதிலும் வரலாம். எந்த நேரத்திலும் இது என்ட்ரி ஆகலாம்.



5. சந்தேகம் (Suspicion)

பொஸசிவ்னஸுக்கும் இதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் இது. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய், வீட்டையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் துணையுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.

6. மனம் விட்டுப் பேசாதது (Not being open about their feelings)

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும். ஆனால், அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது. அதேபோல  குழந்தைகளாக இருந்தாலும் சரி… பெற்றோராக இருந்தாலும் சரி… அவரவர்களுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்கள் அதில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆளுக்கொரு விஷயத்தை மனசுக்குள் மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது. அது விரிசலில் மட்டுமே முடியும்.

7.  மூன்றாம் நபரின் தலையீடு (The intervention of a third person)

குறிப்பாக இது கணவன- மனைவி கவனிக்க வேண்டிய விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது. அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்கு மனைவியைவிடவும், மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது; நல்லது செய்யவும் முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.



8. துன்புறுத்தல் (Harassment)

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பாசம், குழந்தைகளின் வரவுக்குப்பின் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். அதுவும் 40 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகள் மீது அன்பையும் அக்கறையையும் காட்டிக் கொண்டு, கணவனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். கணவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போவார்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் துணைக்கு அரவணைப்பு முக்கியம். அடிப்பது, சண்டை போடுவது மட்டுமல்ல, விட்டு விலகிப்போவதும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அப்படியான ஒன்று நிகழும்போது இருவருக்கும் இடையில் விரிசல் தொடங்கியிருக்கும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணித்தால், அவர்களைப் பொருத்தவரையில் அதுவும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அந்தத் திணிப்பு நாளடைவில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும்.

9. விட்டுக்கொடுக்காதது (Being Selfish)

குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப்போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்;  மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார். ‘அடச்சே… இதுக்கா சண்டை போட்டோம்!’ என மறுநாள் உங்களுக்கே தோன்றலாம். அதேபோல குழந்தைகளிடமும் சில விஷயங்களில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். ’அவன் என்ன சின்ன குழந்தைதானே… நான் சொன்னால் கேட்க மாட்டானா?’ என்ற எண்ணம் வரவே கூடாது. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போக மாட்டான் என பெரியவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.



10.  சோசியல் மீடியா (Social Media)

இன்று பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது சோஷியல் மீடியாக்கள். பெரும்பாலானோர் அதிக நேரத்தை இங்கேதான் செலவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதை விட சோஷியல் மீடியாவுக்குள் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, அலுவலகம் செல்வதற்கு என எல்லாவற்றும் தனித்தனியாக நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நேரம் காலமில்லாமல் சோஷியல் மீடியா நம்மை ஆக்ரமித்துவிடுகிறது.

இதைக் கேட்டால் பிரச்னை தொடங்கிவிடுகிறது. அதேபோல் போன். உங்கள் கட்டுப்பாட்டில் போன் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது - முக்கியமாக படுக்கையறையில் - எந்தக் காரணத்துக்காகவும் போனை நோண்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் துணையை எரிச்சல்படுத்தும்.

இந்த பத்து காரணங்களை திரும்ப ஒருமுறை படியுங்கள். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதை சரி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!

Saturday, November 12, 2016

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்!

நன்றி: தினமலர் - கல்வி மலர் - நவம்பர் 12, 2016

தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுகிற தன்மை, திருப்தியின்மை, பிறரை தம்மோடு ஒப்பிட்டு பார்த்தல்’ ஆகிய காரணங்களினால் தாழ்வு மனப்பான்மை எழுகிறது.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய சில முக்கிய வழிகள்:

*நேர்மறை ஊக்குவிப்பு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். உயரிய எண்ணங்களையும், செயல்களையும் அதன் போக்கில் செல்ல விடுங்கள்.

*எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களது நடையின் வேகத்தை கூட்டுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். எந்த சூழ்நிலையிலும் அச்சம் கொள்ளாதீர்கள்.

*எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுக்கு தேவையான விவரங்களை தயங்காமல் கேளுங்கள். பிறரிடம் பேசும்போது, கண்களை பார்த்து பேசுங்கள்.

*நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை உணருங்கள்.

*எப்போதும் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். நல்ல விசயங்களை பேசுங்கள். மற்றவர்களின் திறமைகளை நற்பண்புகளை பாராட்டுங்கள்.

*வெளிப்படையாக எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள். எந்த காரியம் செய்தாலும் முழு முனைப்போடும், அர்ப்பணிப்போடும் செய்யுங்கள்.

*‘தோல்வி பெறாதவர்களே இல்லை’ என்பதையும், தோல்வி என்பது பொதுவான ஒன்று என்பதையும் நம்புங்கள். தோல்வி அடுத்து வரவிருக்கும் வெற்றிக்கு வழி வகுக்கிறது என்ற உண்மையையும் உணருங்கள்.

*அடுத்தவர்களின், குறிப்பாக, எதிராளிகளின் வார்த்தைகள் நமது செயல்பாட்டை, எதிர்வினையாக பாதிக்காத வகையில் சாமர்த்தியமாக தவிர்க்க பழகுங்கள்.

*‘வாழ்க்கையில், எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்கும் அமையவில்லை’ என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்.

*முடிவாக, மாற்றங்களை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்.

’உங்கள் கடந்த காலம் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்’ என்ற ஜானி விம்ப்ரேவின் பொன்மொழியை நினைவில் நிறுத்துங்கள், தகர்த்தெறிங்கள் தாழ்வு மனப்பான்மையை...

மு.தென்னவன், மதுரை.

Sunday, November 6, 2016

ஒழுக்கம் - நூல்

ப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்: “கண்ணா! நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?” 

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான்: “நூல்தாம்ப்பாபட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அவர், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வெச்சிக்கிட்டிருக்கு” என்றார். பையன் சிரித்தான். உடனே, ஒரு கத்திரியால் நூலை வெட்டினார் அப்பா.முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

இப்போது அப்பா சொன்னார்: “ஒழுக்கமும் இப்படியானதுதான் மகனே! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால், அந்த சுதந்திரம் ரொம்ப தற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்துவிடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்கவைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

- என்.கணேசன்

Tuesday, September 27, 2016

அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில் from dinamalar

அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்
Advertisement
கோயில்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை பூமியில் சேகரிக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. கிரகங்களின் மின்காந்த அதிர்வலைகள் பூமியை வந்தடையும் போது, மனித உயிரினங்களின் மீது பாய்கிறது. இது 24 மணி நேரமும் நடக்கிறது. இந்நிகழ்வின் போது, நமது முன்னோர்கள் மின்காந்த அலைகளை சேமிக்கும் அறிவியல் தளமாக கோயிலை உருவாக்கினர். கருங்கல்லால் கோயில்களில் சிலைகள் உருவாக்கப்பட்டது. கருங்கல் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி சேமித்து வைத்து கொள்ளும். உள்வாங்கப்படும் ஒலி அலைகள் கோயில் முழுவதும் மின்காந்த அலைகளாக பரவி நிற்கும். அபிேஷகம் செய்யப்படுகின்ற பால், எண்ணெய், நெய் போன்ற பொருட்கள் ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொள்கிறது. சிலையை சுற்றி அலங்கரிக்கப்படுகின்ற மலர்களானது, நல்ல மின் காந்த அலைகளை அப்பகுதியில் பரவி நிற்க உதவுகின்றது. மூலவரை நாம் தரிசிக்கும் போது, அங்கு பரவியுள்ள மின்காந்த அலைகள் நமது கண்களின் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. தீபம் பார்த்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். தீபத்தை தொட்டு வணங்கும்போது, மூலவரின் அருகில் உள்ள மின்காந்த அலைகள், நம் கைகளின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றது. அதே போல்தான் திருநீறு, குங்குமம் மூலம் கோயிலில் உறைந்திருக்கின்ற பிரபஞ்ச ஆற்றலான கிரக சக்திகள் நம் உடலில் இணைகிறது.

மனதின் நிலைப்பாடு : முழுமையான நல்ல மின்காந்த அலைகள் உடலில் சேர்வதன் மூலம் பல்வேறு நலன்களை அடையலாம். அதே நேரத்தில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்ற அனைவரும் துன்பம் இல்லாமல் வாழ்கின்றனரா? என்ற ஐயப்பாடு எழக்கூடும்.
ஒரு மாணவன், தன்னுடைய பாடத்திட்டம் 100 சதவீதம் இருந்தாலும், 25 சதவீத மனதை நிலைப்படுத்தி படித்தால், 25 மதிப்பெண்ணும். 50 சதவீதம் நிலைப்படுத்தி படித்தால் 50 சதவீத மதிப்பெண்ணும், 100 சதவீதம் மனதை நிலைப்படுத்தி படித்தால் நுாறு மதிப்பெண்களும் பெறுகிறான்.அதே போல் தான் கோயிலுக்கு செல்கின்ற மக்கள், கோயிலில் தன் சிந்தனைகளை வேறு இடத்தில் வைத்தால் ஆலயம் சென்றும் பலன் இல்லை. ஒருவர் புதிய காலணியை வாங்கி கோயில் வாசலில் போட்டுவிட்டு, உள்ளே சென்று இறைவனை வணங்கும்போது, ஆழ்மனதானது இறைவன் மீது இல்லாமல், தான் வாங்கிய காலணி மீது இருந்தால், மின்காந்த அதிர்வலைகள் உடலில் இணையாது. இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஆழ்மனதை ஒரு நிலை படுத்தாவிட்டால், பிரபஞ்ச பேராற்றலான கிரக சக்திகள் அந்த மனித உயிருக்கு கிடைக்காது.

கோயில் கோபுரம் : கோயிலின் உள்ளே நுழையும்போது, கோபுரம் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுக்கிறது. கோபுர கலசத்தில் வரகு என்ற தானியம் கொட்டப்படுகிறது. அந்த தானியத்தின் மின்காந்த ஆற்றல், மின்னலால் ஏற்படும் மின் சக்தி, கோயிலை தாக்காமல் பாதுகாக்கிறது. கோயிலின் ஈசான்ய பகுதி, பிரபஞ்ச ஆற்றல் நுழையும் பகுதியாக இருக்கின்றது. ஈசான்ய பகுதியில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒன்பது நவகிரகத்தின் சக்திகளும், கோயில் முழுவதும் பரவுகிறது. பிரபஞ்சத்திற்கும் மூலவருக்கும் இணைப்பு பாலமாக கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கிறது. வான் மண்டல மின்காந்த சக்தி, கோயிலின் கொடிமரம் மூலமே மூலவருக்கு அனுப்பப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள், கொடிமரம் அருகே சென்று நம் கோரிக்கைகளை சொன்னால், அவை வான் மண்டலத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மூலம் இணைவு ஏற்பட்டு, அக்கோரிக்கை நிறைவேறும் என்றனர்.
அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வ சக்தியின் மீது உறைகின்றது. பிரபஞ்சத்தில் கலந்து வருகிற ஒன்பது சக்திகள் உறையக்கூடிய இடமாக கோயில்களை முன்னோர்கள் அமைத்தனர்.

ராகங்கள் : பக்தி, ஞானம், கலை, இலக்கியம், வேதம் போன்ற பல்வேறு தன்மைகளை ஒரே இடத்தில் கொண்டுவரக்கூடிய ஒரே இடமாக கோயில் திகழ்கிறது. இலக்கியமும், பண்பாடும் ஆலயத்தின் துாண்களாக உள்ளது. நமது முன்னோர்கள் கர்நாடக இசை ராகங்களை மனம் குளிர கேட்டால் மனதளவில் பல நல்ல மின்காந்த அதிர்வுகள் இணைந்து, ஆயுளை நீட்டிக்க முடியும், என்பதை கண்டறிந்து இசை கச்சேரிகளை நடத்தும் இடமாக கோயில்களை தேர்வு செய்தனர்.அமிர்தவர்ஷினி என்ற ராகம் மழைபொழியவும், 'ஹம்சானந்தி' மனஅழுத்தம் தீரவும், 'கேதாரம்' ஆஸ்துமா, தலைவலி, இருமல் போன்ற நோய்களை நீக்கவும், 'விஜயஸ்ரீ' வெற்றி கிடைக்கவும், 'அகிர் பைரவி'உயர் ரத்த அழுத்தம் தீரவும், 'ராமகளி' ராகம் அல்சர் தீரவும், 'கோலா ஹலம்' என்ற ராகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் பாடினர். இவ்வாறு அறிவியல் உண்மைகள் அடங்கிய இசை, கோயில்களில் இசைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் 70-க்கும் மேற்பட்ட ராகங்களை பயன்பாட்டில் குறிப்பிடலாம். கணவன், மனைவி உறவின் அறிவியல் உண்மைகளை தெரிந்து கொள்ள கூடிய சிற்பங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அறிவியல் சிறப்பம்சம் பொதிந்து கிடக்கும் ஓர் ஆராய்ச்சி கூடம் கோயில்.

- டி.ஐங்கரன்
விஞ்ஞான ஜோதிடர்

Thursday, September 15, 2016

நலமாய் வாழ மூன்று மந்திரங்கள் thankyou dinamalar

நலமாய் வாழ மூன்று மந்திரங்கள்
Advertisement
''நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம். தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்'' என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்''
''சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்''என ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல பொன் மொழிகள் இருந்தாலும், இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இவை வெறும் பொன் மொழிகளாக மட்டுமே இருப்பது வேதனைக்குரியது.

நோய்களுக்கு குறைவில்லை 

குழந்தைகள் முதல் முதியவர் வரை பலவித குறைபாடுகள், நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், காச நோய், சிறுநீரக பாதிப்பு என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்தல், பெண்கள் மாதவிடாய் கோளாறு, குழந்தை பேறின்மை, எலும்பு பலவீனமடைதல் என அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

மனிதனும், மாத்திரையும் பிரிக்க முடியாத இணைப்பாகி விட்டது. அதிலும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட ஞாபகத்திறனுக்கும், உடல் வளர்ச்சிக்கும் மாத்திரைகளை கொடுத்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.

'பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்' என தமாஷாக சொல்வது போலத்தான் பலரும் நடமாடிக் கொண்டிருக்கிறோம். அடித்தளத்தை செப்பனிடாமல், மேலே விழும் கீறலுக்கு மட்டும் மருத்துவம் செய்து வந்தால், என்றாவது ஒரு நாள் பெரிய பூகம்பத்தில் நம்மை நிறுத்தி விடும் என்பதே உண்மை.

வாழ்க்கைமுறை 

''நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''

நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதை தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படைப்புக்குள்ளும் அவற்றை பராமரிக்கும் ஆற்றலும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. காட்டில் வாழும் விலங்குகள், நோய் வாய்ப்படுவதில்லை.பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பலவித நோய்கள், குறைபாடுகளுக்கு காரணம் 'வாழ்க்கை முறை மாற்றம்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நலமாக வாழ, மூன்று மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.
1. தேவையான உடற்பயிற்சி, 
2. ஆரோக்கியமான உணவு, 
3. மனநலம்.

தேவையான உடற்பயிற்சி 


'தேவையான' என்ற வார்த்தையை அழுத்தமாக பிரயோகிக்க வேண்டும். ஏனென்றால், சமீபத்தில் என்னிடம் முதுகு வலி சிகிச்சைக்கு வந்த ஒருவரை, பரிசோதனை செய்தபோது, அவருடைய தினசரி வேலைகளை கேட்டறிந்தபொழுது, அவர் தினமும் நடை பயிற்சியுடன், பலவித ஆசனங்களையும் செய்து வருவதாக கூறினார். 

அதில் சில ஆசன வகைகள், அவருடைய முதுகு வலிக்கு ஏற்றதல்ல என்பதைக் கூறி, வேறு சில பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாக கூறினார். இங்கு இதை வலியுறுத்த காரணம், அனைத்து பயிற்சிகளும் அனைவருக்கும் பொதுவானது அல்ல. மூட்டுவலி, குதிகால் வலி உள்ளவர்கள் அந்த வலியை குறைத்த பின்னரே நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சிலவகை பயிற்சிகளை செய்யக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு, பெண்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு என தனித்தனி பயிற்சி உள்ளன. அதனால் யார், என்ன பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதை, தகுந்த இயன்முறை மருத்துவரிடம் (பிசியோதெரபிஸ்ட்) கேட்டு தெளிவு பெற்ற பின்னர் செய்வது நல்லது.

'யோகா' கற்றுக்கொள்ளும் போதும், உடல் அமைப்பியல் (அனட்டாமி), உடல் இயக்கவியல் தேர்ச்சி பெற்று யோகா கற்று கொண்டவர்களிடம் கற்பது நல்லது.

அளவான உணவு 

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'

அதாவது உடலுக்கு மாறுபாடில்லாத உணவை தேவையறிந்து அளவோடு உண்டால், உடம்பில் உயிர் வாழ்வதற்கு இடையூறான துன்ப நோய் இல்லை. நம் நாட்டின் கால நிலைக்கும், நம் 
உடலுக்கும் ஒவ்வாத உணவை உட்கொண்டு பலவித நோய்களை இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம். 

ஒவ்வொருவரின் வயது, உடல்நிலை, செய்யும் வேலையின் தன்மையை பொறுத்து தேவைப்படும் கலோரிகள் மாறுபடும். அதற்கேற்றார்போல் நாம் நம் உணவு பட்டியலை தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சரிவிகித உணவாக இருப்பது அவசியம்.

உணவில் கார்போ ைஹட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் என அனைத்தும் குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால், நம் உடலில் நோய் பறந்து விடும் என்பது உண்மை. 

மன நலம் 
மன நலம் மிகவும் இன்றியமையாதது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம். மனதை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால்,
1. நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
2. மனிதர்களை, நல்ல உறவுகளை சம்பாதிக்க பழகுங்கள்.
3. தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்.
4. வாழ்க்கையை ரசிக்க பழகுங்கள்.
5. அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். முடிந்தவரை உதவி செய்யுங்கள்.
6. உற்சாகத்துடன் பேசுங்கள். இல்லையென்றால் உற்சாகத்துடன் பேசுபவர்கள் மத்தியில் இருங்கள். (தேவையற்ற அரட்டை அடிப்பவர்களை பற்றி கூறவில்லை.)
7. முடியும் என்பதை முடியும் என்றும், 'கண்டிப்பாக முடியாது' என்பதை 
முடியாது என்றும் சொல்லி பழகுங்கள்.
8. தினமும் கற்று கொள்ளும் ஆர்வம்.
9. நேர்மறை செயலுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.
10. பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண பழகுங்கள்.

உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய, தினமும் அரைமணி நேரத்தை ஒதுக்குங்கள். மேற்கூறிய மந்திரங்களை பின்பற்றினால் நாம் 'மார்க்கண்டேயனாக' வாழ்வது உறுதி.

Sunday, September 11, 2016

Posted Date : 20:09 (09/09/2016) நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்! Thanks vikatan.com

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!

                                    
இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம், வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும்  எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.

                                        
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது.  நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மெள்ள மெள்ள தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். 
வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.
வாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.
 பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.
பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம்  உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம். 
உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றுவது, நம் முன்னோர்களின் வாழ்வியலை பின்பற்றுவதுதானே