Saturday, July 2, 2016

மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா? - நன்றி: தினமலர் - 03 ஜுலை 2016

மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா?

லேனா தமிழ்வாணன்

உரிமையாளர்களிடமும் சரி, ஊழியர்களிடமும் சரி, 'மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா?' என்று தனிமையில் பேட்டி எடுத்துப் பாருங்களேன். உதட்டை பிதுக்கவே செய்வர்.

உரிமையாளர்களை கேட்டால், வியாபார மந்தம், மூலப்பொருள் கிடைப்பதில் பிரச்னை, கொள்முதல் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவின் பெருக்கம், வசூலாகாமை, ஏமாந்த கதைகள், ஊதிய உயர்வு, உண்மையாக உழைக்கும் நம்பிக்கையான ஊழியர்கள் இல்லாமை, வரித் தொல்லை, லஞ்ச பிரச்னை மற்றும் லாபம் குறைந்து விட்டமை என்று அடுக்கிக் கொண்டே போய், 'மனுஷன் செய்வானா இந்த தொழிலை...' என்பர்.


ஊழியர்களை வினவினால், 'வாய்க்கும், வயிறுக்கும் சரியாக இருக்கிறது; சேமிக்க முடியல...' என்று ஆரம்பித்து, இவர்கள் தங்கள் பங்கிற்கு உரிமையாளர்களை விட, நீளமான பட்டியலை வாசிப்பர்.


வருமானத்திற்குள் வாழ கற்றுக் கொள்வது, வருமானம் பெருக வழி வகை செய்வது, இந்த இரண்டு மட்டுமே சம்பளக்காரர்களுக்கு உள்ள தீர்வே தவிர, வேறு வழிவகைகள் ஏதும் பெரிதாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை.


இருப்பதைக் கொண்டு, சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி... என, ஒரு திரைப்படப் பாடல் உண்டு. இந்த இலக்கணம், ஏனோ பலருக்கு பழக்கப்படவே இல்லை.


பணியின் மீதான சலிப்பு, மிக மோசமானது; அதன் மீது உள்ள ஈடுபாட்டை குறைக்க வல்லது. பணியின் மீது வெறுப்பு வந்து விட்டாலோ, அது வேலைக்கே உலை வைத்து விடும்.


பணிபுரியும் போது நமக்கு ஏற்படும் இடைஞ்சல்களை பெரிதுபடுத்திப் பேசுவதும், சிந்திப்பதும், பிறர் நமக்கு தரும் துன்பம் போல விளக்கிக் கொண்டிருக்கிறோம் அல்லவா... இதில் உண்மை இல்லை. நம் புண்ணை, நாமே கத்தி கொண்டு குடையும் செயற்கை வலிக்கு இது சமம். மாற்று வழியில் அணுகினால், ரணம் ஆற, வழி உள்ளது.


மகிழ்வோடும், ஈடுபாட்டுடனும் பணி புரிவது, வேலை திறனை அதிகரிக்கிறது. மேலதிகாரிகளிடத்தில், 

உரிமையாளர்களிடத்தில் நெஞ்சிற்குள், புது கோப்பு ஒன்றை உருவாக்குகிறது. 'இவர் இருக்க வேண்டிய இடம் இது அல்ல; இவரை இன்னும் உயரத்தில் அமர்த்த வேண்டும்...' என்கிற எண்ணத்தை, முதலாளி மற்றும் உயரதிகாரிகளிடத்தில் ஏற்படுத்துகிறது.


சம்பள உயர்வு, விடுமுறை மற்றும் முன் பணம் என்றோ போய் நின்று தலையை சொரிந்தால், உரியவர்களின் மனம் கசிகிறது. 'உங்களுக்கு இல்லாததா...' என்று, அவர்களிடமிருந்து பதில் வருகிறது.


புலம்பி தள்ளுவோரும், கடனே என பணிபுரிவோரும் அருமையான சாக்கு போக்குகள், மேலே இருப்பவர்களால் சொல்லப்பட்டு விடுகின்றன; விதிகள் வேறு பேசப்படுகின்றன. மற்றவர்களோடு இவர் ஒப்பீடு செய்யப்பட்டு, மறுக்கப்படுகின்றனர்.


ஒப்பீடு செய்ய முடியாதபடி, ஒருவர் பணியில் ஈடுபாடு காண்பிக்கும் போது, அவர், பணிபுரியும் நிறுவனத்தினுடைய செல்லப்பிள்ளையாக ஆகிறார். அழுதபடி பணிபுரிந்தால், அடி கிடைக்கிறது; மலர்ந்த முகத்துடன் பணி புரிந்தால், அன்பளிப்பு கிடைக்கிறது.


சரி... பணியில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி? 'தலைவலி புடிச்ச வேலை சார்... ஒரு டீ சாப்பிடக் கூட இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது...' என்று சலித்துக் கொண்ட அரசு ஊழியரிடம், 'எத்தனையோ ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி நலன் பெறுகிற அருமையான பணி உங்களுக்கு; அவர்களது வாழ்வு முன்னேற்றத்திற்கு, நானும் அணிலாய் இருக்கிறேன் என்கிற கோணத்தில் பாருங்கள். அவர்களது முகத்தில், வெளிப்படும் நிறைவை எண்ணிப் பாருங்கள்; பணி இனிக்கும்...' என்றேன்.


நம்மால் பலன் பெறுகிற பிரிவினரின் மகிழ்வை, புன்னகையை கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தினால், எத்தகைய பணியிலும், சுவாரசியம் வந்து விடும்.


வேலையின்றி துன்பப்பட்டு அஞ்சுக்கும், பத்துக்கும், ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் கஷ்டப்படும் மக்களை பார்க்கும் போது, 'நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு; இழுத்துக் கொள், பறித்துக் கொள் என்று மாத கடைசி வறுமை துரத்தினாலும், இதற்காவது பணம் இருக்கிறதே...' என ஆறுதல் கொள்வது, பணி இருக்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ள உதவக்கூடிய நல்ல பிடிப்பு சிந்தனையாக அமையும்.


சமூக அந்தஸ்து, சம்பாதிக்கிறோம் என்கிற மகிழ்வு, வாழ்க்கை தேவைகளை ஒவ்வொன்றாக அடைந்து கொண்டிருக்கிறோம் என்கிற நல்லுணர்வு, குடும்பத்தை தாங்கிப் பிடிக்கிறோம் என்கிற மனநிறைவு, பயனீட்டாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்குகிறோம் என்கிற திருப்தி, 'தண்டச்சோறு' என்கிற பட்டத்தை, தூக்கி எறிந்த தீரம் என்று, பணியில், பல பெருமிதங்கள் உண்டு!


இவற்றையெல்லாம் சேர்த்தும், கோர்த்தும் மாலையாக்கி, மானசீகமாக அணிந்து கொண்டால், பணியில் மகிழ்ச்சி என்பது தானாக வந்துவிடும்.

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment