Monday, August 15, 2016

உங்கள் செல்போனுக்குள் ஒரு வில்லன் ! - நன்றி: ஆனந்த விகடன் - 27 Jan, 2010

நன்றி: ஆனந்த விகடன் - 27 Jan, 2010

உங்கள் செல்போனுக்குள் ஒரு வில்லன் !
                                                        -         வினோத்குமார்,ப்ரீத்தி செய்யது இபுராகிம்



http://img.vikatan.com/av/images/white_spacer.jpg

முன் குறிப்புஇந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையே. சம்பந்தப்பட்டவரின் நலன் கருதி பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு இருக்கின்றன!
வரதராஜன், வயது 55, சென்னை: "என் மகனுக்கு தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ரோட்ல பொம்பளைப் பிள்ளை களைக்கூட நிமிர்ந்து பார்க்க மாட்டான். ஜெம் ஆஃப் தி ஜெம். ஆனா, திடீர்னு என்ன பிரச் னைன்னு தெரியலை... இந்த செமஸ்டர்ல நாலு அரியர்ஸ். என்ன கேட்டாலும் பதில் சொல்லாம ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்குறான்!"
சியாமளா, வயது 43, கோவை: "எங்க காம்பவுண்டுக்கே ராஜாத்தி என் மகதான். ரொம்ப விவரமான பொண்ணு. லவ் லெட்டர் நீட்டுற பையன்கிட்டகூடப் 10 நிமிஷம் அட்வைஸ் பண்ணி, தன்னோட ஃப்ரெண்ட் ஆக்கிக்குவா. ஆனா, கொஞ்ச நாளா யார்கிட்டயும் மனசு விட்டுப் பேச மாட்டேங்குறா. எதைக் கேட்டாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறா!"
பழனியப்பன், வயது 64, சிறுகுடி: "வயல் வேலைக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்துட்டு இருந்தான். ஒத்தைப் பய நமக்குப் பிறவு தோட்டந் துரவைப் பாத்துக்கிடுவான்னு நம்பிட்டு இருந்தேன். இப்பம் கொஞ்ச நாளா கண்ணுல தட்டுப்பட மாட்டேங்குறான். ராத்திரி முச்சூடும் அறைக்குள்ளாற மினுக் மினுக்னு வெளக்கு எரியுது. பக்கத்துல போய்ப் பார்த்தா அவன் அசந்து தூங்கிட்டு இருக்கான். என்னமோ நடக்குது!"
இது ஏதோ ஒரு சில பெற்றோர்களின் கவலை அல்ல. பல லட்சம் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் விடை தெரியாத கேள்வி. அந்த 'என்னமோ நடக்குது' என்பது என்ன? சிகரெட், ஆல்கஹால் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகாத உங்கள் மகனோ, மகளோ செல்போனுக்கு அடிமையாகி இருக்கலாம் என்று நீங்கள் கற்பனையாவது செய்திருப்பீர்களா?
'செல்போன்!' ஆம், உள்ளங்கைக்குள் உலகத்தை அடக்கும் அந்த வஸ்துவுக்குத்தான் தெரிந்தோ தெரியாமலோ... அறிந்தோ அறியாமலோ உங்கள் டீன்-ஏஜ் குழந்தைகள் 'அடிக்ட்' ஆகியிருக்கும் அபாயம் இருக்கிறது. ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் உங்கள் பிள்ளைகள் செல்போனில் செலவழிக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்! விடிய விடிய மெசேஜ், நள்ளிரவு ரகசிய கிசுகிசு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மெசேஜோ அழைப்போ வராவிட்டால் பரிதவிப்பு, தனது செல்போனை வேறு எவரேனும் எடுத்துவிட்டால் பதறி ஓடி வந்து கைப்பற்றத் துடிக்கும் பரபரப்பு! தகவல் தொடர்புச் சாதனம் என்பதைத் தாண்டி, செல்போன் ஒரு மாணவனின் வாழ்வை எந்தளவு ஆக்கிரமித்திருக்கிறது? வாழ்வின் எந்த நிகழ்வையும் செல்போனுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாழ்க்கை முறை. அப்பா, அம்மா வாரக் கணக்கில் ஊருக்குப் போனால்கூட அலட்டிக்கொள்ளாத பலர், ஒரு மணி நேரம் செல்போன் கையில் இல்லாவிட்டால் உயிரைப் பறிகொடுத்தது போலாகிவிடுகிறார்கள். சில உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு, மேலும் தொடர்வோம்...
மெசேஜ் 1:
விடாமல் 'ஆட் ஆன் கார்ட்'தோழியுடன் பேசிக்கொண்டு இருந்ததில் மொபைல் சார்ஜ் அவுட். ஆனாலும், விடாமல் சார்ஜரில் மாட்டியபடி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்திருக்கிறான் விவேக். கால் மணி நேரம் போலக் கடந்திருக்கும். திடீரென்று 'டப்' என்று சின்ன வெடிச் சத்தம். தொடர்ந்து விவேக்கின் 'அம்மாரரர' என்ற அலறல். வகுப்பின் டாப் 3 மாணவர்களுள் ஒருவனான விவேக்குக்கு இன்று இரண்டு காதுகளும் கேட்காது. சமீபத்தில்தான் நாலரை லட்ச ரூபாய் வருட சம்பளத்தில் விவேக்கை ஒரு எம்.என்.சி நிறுவனம் வேலைக்கு அமர்த்தியிருந்தது. ஆனால், அந்நிறுவனத்தின் மருத்துவத் தேர்வில் விவேக் தேறாததால், இன்று அவன் அன் எம்ப்ளாய்ட். இப்போதும் காதில் இயர் போனுடன்தான் வளைய வருகிறான் விவேக். ஆனால், அது ஹியரிங் எய்டுக் கான இயர் போன்!
மெசேஜ் 2:
கோவையின் பெண்கள் கலைக் கல்லூரி ஹாஸ்டல் அறை அது. நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சுசீலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. சுசீலாவை அரை நிர்வாணப்படுத்தி, அவள் உடல் முழுவதும் கேக் தடவுகிறார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் சுசீலாவின் தோழிகளும் 'பிறந்த நாள்' உடை 'அணிந்து' ஆட்டம் போட்டிருக்கிறார்கள். மலரும் நினைவுகளுக்காக மறக்காமல் செல்போன் ¨ட்டிங்கும் நடந்திருக்கிறது.
சில மாதங்களுக்குப் பிறகு தோழிகளுக்குள் ஏதோ மனஸ்தாபம் எழ, அந்த வீடியோ கல்லூரிக்குள் 'நீலப்பல்' காட்டிச் சிரித்திருக்கிறது. இப்போது இணையம் வரை அந்தப் பிறந்த நாள் கொண்டாட்டம் உலா வந்துகொண்டு இருக்கிறது. கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கும் இந்த விஷயம் போக, கல்லூரி வளாகத்தில் செல்போனைத் தடை செய்திருக்கிறார்கள். ஆனாலும், வளாகத்தில் சத்தமில்லாமல் வைப்ரேட் மோடில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன செல்போன்கள்!
மெசேஜ் 3:
கிளாஸ் டாப்பர் இல்லையென்றாலும் பி.., படிக்கும் ரகு, நல்ல ஆவரேஜ் வைத்திருக்கும் மாணவன். இரண்டு வருட காலேஜ் வாழ்க்கையில் அரியரே வைத்திருக்காதவன். திடீரென்று அந்த செமஸ்டரின் அத்தனை பேப்பரிலும் அரியர். 'என்னடா பிரச்னை?' என்று விசாரித்தால், அவன் செல்போன் இன்பாக்ஸைக் காட்டுகிறான். exam tomorrowma... padika pogattumaa? தன் காதலியிடம் ரகு கேட்க, அதற்கான ரிப்ளை இது, Ennai vida exam mukkiyama pocha... sari poo en feelings nee purinjukalaila... ithellaam naan yaarkita share pannika Mudiyum? அதற்குப் பிறகான மெசேஜ்கள் எல்லாம் 'R' ரகம். 'செக்ஸ்டிங்' எனப்படும் அப்பா -அம்மா மெசேஜ் விடு தூது அது. பகலில் சாதுப் பூனையாக வளைய வரும் ரகுவின் காதலிக்கு இரவுகளில் இந்த விளையாட்டுகளில்தான் ஆர்வம். வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே பொதுஇடங்களில் காதலியைப் பார்க்கும் ரகுவுக்கு அந்த இரவு போதை தேவையாக இருந்திருக்கிறது. விளைவு... ரகு இப்போது அரியர்ஸ் இன்ஜினீயர்!
மெசேஜ் 4:
கீதாவுக்கு ஒரு பழக்கம். வீட்டிலிருந்து கல்லூரிக்கு அரை மணி நேரப் பேருந்துப் பயணம். பஸ்ஸில் ஏறி அமர்ந்த உடனேயே செல்போனில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்துவிடுவாள். ஒரு முறை தன்னை மறந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டு வர, டிக்கெட் எடுக்கவே மறந்து விட்டாள். கல்லூரி நிறுத்தத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர் டிக்கெட் கேட்க, அவள் பேந்தப் பேந்த விழிக்க, கண்டக்டரின் நாராச வசவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மொத்தக் கல்லூரி மாணவர்கள் முன் அவமானம். இதற்குப் பின் அவளை கல்லூரியில் 'வித் அவுட்' என்றே அனைவரும் அழைக்க, டி.சி. வாங்கிக் கொண்டு கல்லூரியைவிட்டே சென்றுவிட்டாள் கீதா. இப்போது பேருந்திலும் செல்வதில்லை. செல்போனில் கேம்ஸும் விளையாடு வதில்லை.
மெசேஜ் 5:
சில மொபைல்களில் ஆண், பெண், கிளி, கார்ட்டூன் என்று விருப்பப்பட்ட மாதிரி நம் குரலை மாற்றிப் பேசும் வசதி இருக்கிறது. அந்த வசதியைப் பயன்படுத்தி, தனது நெருங்கிய நண்பன் முகுந்திடம் பெண்ணின் குரலில் பேசியிருக்கிறான் ராம். 'இன்னிக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்கே', 'நான் யார்னு தெரிஞ்சா பெப் இருக்காது', 'இன்னிக்கு கேன்டீனுக்கு பச்சை கலர் சுடிதார்ல வருவேன். பார்த்தாலும் சிரிக்காதே. நானும் உன்னைக் கண்டுக்க மாட்டேன்!' என்றெல்லாம் தினமும் ஒரு பிட்டாகப் போட்டிருக்கிறான் ராம். தன்னிடம் பேசுவது பெண் தான் என்று நினைத்து, உள்ளம் மகிழ்ந்து புளகாங்கிதம் அடைந் திருக்கிறான் முகுந்த். ஒரு கட்டத்தில் முகுந்த சின்சியராகவே அந்த கற்பனைக் காதலியைக் காதலிக்கிறான், அவளோடு மனதள வில் ஒரு வாழ்க்கை வாழ்கிறான் என்று விபரீதம் உறைத்திருக்கிறது ராமுக்கு. அதற்கு மேலும், அந்தக் காதல் கதையை நீட்டிக்க விரும்பாமல், முகுந்திடம் உண்மையைச் சொல்லியிருக்கிறான் ராம். ஆனால், 'ராம் பொறாமையில் பொய் சொல்கிறான், தன் காதலியை அபகரிக்கத் திட்டமிடுகிறான்' என்றெல்லாம் கற்பனை களை ஓடவிட்டு, மனச் சிதைவுக்கு ஆளாகிவிட்டான் முகுந்த். இன்று எங்கோ ஒரு மருத்துவமனையின் அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் சங்கிலி பிணைக்கப்பட்டு, உள்ளங்கையில் அழுத்தி அழுத்தித் தன் 'காதலி'க்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருக் கிறான் முகுந்த்!
இவையெல்லாம் மிகச் சில சாம்பிள் சம்பவங்கள்தான். இன்னமும் நாம் எதிர்பார்க்கவே முடியாத விபரீத எல்லைகளுக்கு இளைஞர்களை இழுத்துச் செல்கிறது செல்போன் எனும் விஞ்ஞான அதிசயம்.
செல்போன் என்பது மற்றவர்கள் நம்மைத் தொடர்புகொள்ள உதவும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான். கீ பேட் தேய, கட்டை விரல் நோக, நிமிடத்துக்கு நூறு மெசேஜ்கள் பறக்க விடுவது, போர்வைக்குள் மொபைல் ஒளித்து இரவு முழுக்க மெசேஜ் அனுப்பி பார்வைத் திறனைக் குறைத்துக்கொள்வது, மணிக்கணக்கில் பேசிப் பேசி மாய்ந்து, செவித் திறனைப் பாதிக்கச் செய்வது என பிறருடனான நமது தகவல் தொடர்பு அங்கங்களை நாமே ஊனமாக்கிக் கொள்கிறோம்.
பன்னிரண்டு வயதுச் சிறுவன் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் மெசேஜ்கள் அனுப்பும் பூஸ்டர் பேக் கார்டின் நிரந்தர வாடிக்கையாளன். சராசரியாக இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினால்தான் அந்த 20 ஆயிரம் கோட்டாவைக் காலி செய்ய முடியும். ஆனால், மாதத்தின் இருபதாவது நாளிலேயே அந்த கோட்டாவை முடித்துவிட்டு, அடுத்த பூஸ்டருக்கு அலைபாய் கிறான் அவன். நாள் முழுக்க மெசேஜுக்காகத் தேய்த்துவிட்டால், பிறகு அவன் விளையாடுவது எப்போது, பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவது எப்போது, தம்பி தங்கைகளுடன் பேசிச் சிரித்து உறவு வளர்ப்பது எப்போது?
ஜி.பி-க்களில் நினைவுத் திறன்கொண்ட செல்போன்கள் மூளையின் சிந்தனை, நினைவுத் திறனையே மழுங்கடித்துவிடுகின்றன. எத்தனை பேருக்கு நமது வீட்டின் லேண்ட்லைன் நம்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண்கள் நினைவில் இருக்கின்றன? பலருக்குத் தங்களது சொந்த மொபைல் நம்பரே நினைவில் இருப்பதில்லை. எங்கேனும் வெளியே சென்றிருக்கும் சமயம் மொபைலில் சார்ஜ் இறங்கி சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டால், போச்சு! வெளி உலகத் துடனான நமது தொடர்புகளும் அவ்வளவுதான். யாரை அழைக்க வேண்டுமென்றாலும், அவர்களின் நம்பர் மொபைலுக்குள்! சாதாரண கூட்டல் பெருக்கல் மனக் கணக்குகளைக்கூட செல்போன் கால்குலேட்டர்களுக்குத் தாரை வார்த்துவிட்டார் களே இன்றைய இளைய தலைமுறையினர்!
இறுதி மெசேஜ்:
தினமும் செய்தித்தாள்களைப் புரட்டினால் பதிவாகியிருக்கும் பெரும்பாலான குற்றச் சம்பவங் களுக்குத் துணை நிற்பவை செல்போன்கள்தான். உங்களின் அத்தனை அந்தரங்கச் சேட்டைகளுக்கும் எலெக்ட்ரானிக் சாட்சியாக இருக்கிறது செல்போன். நீங்கள் அதன் சேட்டிலைட் கண் காணிப்பில் இருந்து எந்த நொடியும் தப்பிக்க முடியாது என்பதை உணருங்கள்.
ஒரு நாளின் எத்தனை மணி நேரத்தை செல் போனுக்கு ஒதுக்கலாம் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டுச் செலவழியுங்கள். விழிப்புடன் இருக்கும் சமயங்களில் ஒரு நாளின் சில மணி நேரங்களையாவது 'நோ சொல்போன் அவர்' ஆக கழிக்கப் பழகுங்கள்.
செல்போன் என்பது நமது மனம் மயக்கும் ஒரு ஜீபூம்பா பூதம். அதனிடம் வரம் கேட்பதும், சாபம் வாங்குவதும் நமது கையில் இருக்கிறது. உங்க ளுக்குத் தேவையான message delivered. அதனை உங்களுக்குள் எந்தளவுக்கு ஃபார்வர்ட் செய்கிறீர்கள் என்பதில் அமைந்திருக்கிறது உங்கள் சக்சஸ் சதவிகிதம்!
செய்யவே கூடாதவை!
1) எத்தனை நெருக்கமான நண்பராக இருந்தாலும் உங்கள் அடையாளச் சான்றிதழைப் பயன்படுத்தி அவருக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுக்காதீர்கள்!
2) காதலி அல்லது நெருக்கமானவரின் மிக அந்தரங்கமான மெசேஜ்களைப் பொக்கிஷம்போலப் பாதுகாத்து வைக்காதீர்கள்!
3) எதிர்முனையில் பேசுபவர் உங்கள் உரையாடலைப் பதிவு செய்யக் கூடும் என்பதால், மூன்றாம் நபரைப்பற்றி அவதூறாகப் பேசாதீர்கள்!
4) உங்கள் .டி.எம், வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் நடைமுறைகளுக்கான பாஸ்வேர்ட்களை செல்போனில் பதிவுசெய்து வைக்காதீர்கள்!
5) மெமரி கார்டு முழுக்க ஆபாசப் படங்களைச் சேமித்து வைக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அம்மாவோ, சகோதரியோ அவற்றைக் காண நேர்ந்தால் என்னவாகும் என்று யோசியுங்கள்!
- இரா.பரணீதரன்
நீங்கள் எந்த ஸ்டேஜ்?
இளைஞர்களின் இந்த செல்போன் போதை குறித்து மனநல ஆலோசகர் ஷாலினி யிடம் கேட்டபோது, '' 'செல் போனுக்கு நான் அடிக்ட்' என்று சொல்லிக்கொள்வது இப்போது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக இருக்கிறது. 'செல்போனை ரொம்ப யூஸ் பண்ணாதேன்னு அதை ஒளிச்சுவெச்சா, எங்களையே அடிக்க வந்துடுறான்!' என்று கதறிவிட்டார் ஒரு தாய். அடிக்கடி 'லேட்டஸ்ட் மொபைல் வாங்கிக் கொடு' என்று நச்சரித்து, வீட்டில் பூகம்பத்தை உண்டாக்குகிறார்கள் பல டீனேஜர்கள். தங்கள் வேலைப் பளு காரணமாகக் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை பல பெற்றோர்களால். அந்தக் குழந்தைகள் வேறு வழியில்லாமல், செல்போனுடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்கின்றன. கொஞ்ச நாட்களில் பெற்றோர் களிடம் பேசுவதையே அக் குழந்தைகள் நிறுத்தி விடுகின்றன. அப்போதுகூட சில பெற்றோர்கள் விபரீதம் புரியாமல் இருக்கிறார்கள். என்னதான் உலகத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு இருந்தாலும், தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை களிடம் நேருக்கு நேர் பேசுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டீர்களா என்பதை இந்த நான்கு ஸ்டேஜ்களைவைத்து கணிக்கப் பாருங்கள். ஒருநாளில் ஒரு மணி நேரம் செல்போனில் செலவழிக்கத் தொடங்கி, அது குறைந்தது எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் வரை அதிகரிப்பது முதல் ஸ்டேஜ். காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாக மொபைலில் மெசேஜ் செக் செய்து, அதற்குப் பதில் அனுப்பிவிட்டுத்தான் படுக்கையிலிருந்து காலைக் கீழே வைக்கிறீர்கள் என்றால், இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு மெசேஜுக்கு ரிப்ளை செய்ய முடியாத சூழ்நிலையிலோ, ஓர் அழைப்புக்குப் பதிலளிக்க முடியாத இக்கட்டிலோ சிக்கிக்கொண்ட சமயம் உங்களுக்கு கோபம், எரிச்சல் ஏற்பட்டால் அது மூன்றாவது ஸ்டேஜ். செல்போனுடன் நாம் இருக்கும் தருணங்களை யாரேனும் தொந்தரவு செய்தால் கோபம் வெடித்துக் கிளம்புவது நான்காவது ஸ்டேஜ். தங்கள் பிள்ளைகளின் முதல் ஸ்டேஜ் நடவடிக்கைகளைக் கண்டு கொண்டு, அவர்களைப் பக்குவமாக அரவணைத்து நடத்திச் சென்றால் நிச்சயம் செல்போனுக்கு அடிமை ஆகாமல் தவிர்க்க முடியும். அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் மனம்விட்டுப் பேசிக்கொள்வது, அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என குடும்பத்தில் ஒவ்வொருவரும் நெட் வொர்க்கில் இருங்கள். செல்போன் நெட்வொர்க்கில் இருந்து உங்களை நீங்களே காத்துக்கொள்ளலாம்!"
- பா.பிரவீன்


No comments:

Post a Comment