பெற்றோர்களின் சண்டை குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்? #GoodParenting
திருமண வாழ்க்கை, முன்போல இப்போது இல்லை. 'என்ன ஆனாலும் இதுதான் நம்ம குடும்பம்' என்ற பிடிப்பும் சகிப்புத்தன்மையும் இன்றைய தம்பதியரிடம் இல்லை. இதில் சம்பந்தப்பட்ட தம்பதியைவிட அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம்தான் விளிம்பில் நிற்கிறது.
சுமார் 20 வருடங்களுக்கு முந்தைய காலத்துப் பெண்களிடம், விட்டுக்கொடுத்துப் போவது என்பது பெண்மையின் கடமையாகவே வலியுறுத்தப்பட்டது. இதனால் குடும்பச் சிக்கல்களை சகித்துக்கொண்டு, அனுசரித்துக்கொண்டு, கணவன் மீது தவறே இருந்தாலும் விட்டுக்கொடுத்துச் சென்றனர் பெண்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்திலும், தற்போதும், பெண்களுக்கு இதுவரை தங்கள் பாட்டிகள், அம்மாக்கள் எல்லாம் அனுபவித்து வந்த அடிமைச் சங்கிலிகளில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்பது நன்மாற்றம். இன்று ஆண், பெண் இருவரும் இணையர்கள். இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். அதனால் கணவன்-மனைவி என்ற ஒருகூட்டுக்குள் இருக்கும் உறவினை தேவைக்கேற்ப தனித்தனியே பிரித்து வைத்துக்கொள்கின்றனர். இன்னொரு பக்கம், அதுவே அவர்களுக்குள் விவாதங்களும், விரிசல்களும், கருத்து மோதல்களும் எழக் காரணமாக அமைகிறது.
இந்த மோதல்களினால் அதிருப்தி, ஈகோ, சுயநலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், வெறுமை, விரக்தி, சண்டை... இப்படி அடுக்கடுக்காக நீள்கிறது சிக்கல்களின் பட்டியல். இதனால் கணவன் மனைவிக்குள் அந்யோன்யம் குறைகிறது. பலரது வீடுகளிலும் சண்டைகள் தினமும் தலை தூக்குகின்றன.
கால மாற்றத்தால் கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பங்கள் உருவாகத் துவங்கின. அந்த நியூக்ளியர் குடும்பங்களில் நாமிருவர் நமக்கிருவர் என்றிருந்த நிலைமாறி, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற மைக்ரோ குடும்பங்கள் உருவாகின. இத்தோடு முடிந்ததா? நாம் இருவர், நமக்கெதற்கு மற்றொருவர் என நிலையும் மெல்லவே வந்துகொண்டிருக்கிறது.
இப்படிச் சுருங்கிப்போன வாழ்க்கைச் சூழலில், வேலை நிமித்தமாக நகரங்களில் தனிக்குடித்தனம் வசிக்கும் தம்பதிகளுக்கு, அவ்வப்போது அவர்களுக்குள் எழும் பிரச்னைகளை தீர்த்து வைக்கவும், அறிவுரை கூறவும் பெற்றோர்கள் அருகில் இல்லாத நிலை. இன்றைய நவீன உலகில் இந்நிலை தவிர்க்க முடியாததுதான். ஆனால், தம்பதிகள் தங்களுக்குள் ஏதாவது சிக்கல் ஏற்படால், ஆரம்ப கட்டத்திலேயே வீட்டின் பெரியவர்களுக்கு அதைப்பற்றிச் சொல்வது அவசியம். கணவன், மனைவி தங்களுக்குள்ளேயே தினமும் வாக்குவாதம், சண்டை என்று இருந்தால், தீர்வு எட்டாக் கனிதான்.
விரிசல் ஏற்படக் காரணங்கள் என்னென்ன?!
கருத்து முரண்பாடு, ஒன்றாக அமர்ந்து பரஸ்பரம் பேசுவதில் நாட்டமின்மை, பொறுப்பைச் சுமக்க பயம், உடல்நலக் கோளாறுகள், குடும்பத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான பிரச்னைகள், கணவனோ மனைவியோ அதிகாரமாக நடந்துகொள்வது, தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க கண்டிப்புடன் இருப்பது, குழந்தைகளை கவனிப்பது, அவர்களுக்கு கல்வி புகட்டுவது, வீட்டு வேலைகள் ஆகியவற்றை யார் பொறுப்பெடுத்துச் செய்வது என்பதில் மோதல்... இவையெல்லாம் தம்பதிக்கு இடையில் பிரிவை அதிகப்படுத்தும் காரணங்கள். முடிவில் 'இனி நாம் இருவரும் இணைந்து வாழ்வது சரியாக இருக்காது. நாம் பரஸ்பரம் பிரிந்துவிடுவோம்' என முடிவெடுத்து குடும்பநல நீதிமன்றங்களில் காத்துநின்று விவாகரத்தும் பெற்றுவிடுகின்றனர்.
குழந்தைகளின் இளமனம் இடிதாங்கியா?
கணவன் - மனைவி சண்டையிட்டு, கோபதாபக் கணைகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்ளும்போது, அவர்களைவிடவும் அதிகம் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். 'அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க? தினமும் நம்மள கவனிக்கிறாங்களோ இல்லையோ, ஒருத்தரை ஒருத்தர் நல்லா திட்டிக்கிறாங்க. இல்லாட்டினா பேசிக்காமலே இருக்காங்க' என புலம்பித் தவிக்கும் குழந்தைகளின் மனம், அந்தச் சின்ன வயதிலேயே இப்படிப் பல இடிகளைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்குத் தருவது நியாயமா?
வீட்டில் வெடிக்கும் அப்பா, அம்மா சண்டையால் சரியாகச் சாப்பிட முடியாமல், படிக்க முடியாமல், சக நண்பர்களுடன் விளையாட முடியாமல், ஒருவித சுமையை சுமந்துகொண்டே இருக்கும் குழந்தைகள் அதிகம். பெற்றோரின் சண்டையை தினமும் பார்க்கும் அவர்கள் மனதில், வளர்ந்து பெரியவர்களாக ஆன பின்னும் அந்த நினைவுகள் நிரந்தரமாகத் தங்கிவிடும். அது அவர்களுக்குள் பல எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தலாம். அவர்களின் திருமண வாழ்வில்கூட அது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
கணவன் - மனைவி விவாகரத்து பெற்ற பின், அக்குழந்தை தாய் அல்லது தந்தையுடன் செல்லலாம் என சட்டப்பூர்வமாகச் சொல்லப்படும். அப்படி வளர நேரும்போது, சுற்றுப்புற நபர்களால் ஏதோ ஒரு வகையில் அக்குழந்தை பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். 'ஏன் நமக்கு மட்டும் இதெல்லாம்? நம்ம பெற்றோர் மட்டும் ஏன் இப்படி பிரிஞ்சு இருக்காங்க?' என நினைக்கத் தூண்டும். இந்த கேள்விகள் மற்றும் அது தரும் அழுத்தத்தால், தன் வாழ்வினை எதிர்கொள்வதே அக்குழந்தைக்கு மிகச் சிரமமாகலாம்.
குழந்தைகளுக்காக இவற்றைச் செய்யுங்கள்!
பிரிவு என்ற முடிவெடுக்கும் தம்பதிகள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள். அதுவே முக்கியம் என்று உணர்ந்து, இனி எக்காரணம்கொண்டும் குழந்தை முன் சண்டையிடக் கூடாது என்ற உறுதியேற்று, உங்களை சரிசெய்துகொள்ள முன்வாருங்கள்.
இணையிடம் காணப்படும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளை முதல் கட்டத்திலேயே ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்கலாம். சற்றே தீர்க்க முடியாத சிக்கலாகத் தோன்றினால், பெற்றோர் அல்லது வயதுமிக்க நலன் விரும்பிகளை அழைத்து ஆலோசனை கூறச் செய்யலாம். தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். தம்பதியில் யாரேனும் ஒருவர், மற்றவர் செய்த தவறுகளை மன்னித்து மறந்துவிடலாம். படிப்படியாக ஒருவரது தவறை இன்னொருவர் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம்.
இணையின் பிரச்னையை அக்கறையுடன் காதுகொடுத்துக் கேளுங்கள். கவனிப்பு முக்கியம். தற்போது பெண்கள் பலரும் வேலைக்குச் செல்கிறார்கள். அதனால் வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும், வீட்டு வேலைகளைச் செய்வதும் கஷ்டமானதாக இருக்கும். எனவே கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் வீட்டு வேலைகளைப் பிரித்துக் கொள்ளுங்கள். அன்போடு செய்யுங்கள். திருமணநாள், பிறந்தநாளில் மட்டுமல்லாமல் அவ்வப்போது சின்னச் சின்னப் பரிசுகள் அளியுங்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிப் பேசுங்கள்.
அலுவலக வேலைகளை விடுமுறை நாட்களிலும் வைத்துக்கொள்ள வேண்டாம். எல்லோருக்கும் அவுட்லெட் தேவை. வாரம் ஒருமுறை குடும்பத்தோடு அவுட்டிங், கோயில், சினிமா, பீச், ஷாப்பிங் மால் அல்லது பிடித்த இடங்களுக்குச் சென்று எனர்ஜியையும் அன்பையும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணவன்/மனைவி, குழந்தைகளுக்கான நேரத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கவோ, தவிர்க்கவோ வேண்டாம்.
உங்கள் சண்டையைப் பார்த்து குழந்தைகளும் மூட் அவுட் ஆகும் நிலை வேண்டாம். மாறாக, உங்கள் மகிழ்ச்சியைப் பார்த்து, குழந்தைகளும் மகிழ்ச்சியடைய வேண்டும். குழந்தைகளின் மனதில் ஒரு விஷயம் எளிதில் பதியும், அவ்வளவு எளிதில் மறையாது. எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல் மாடல்... அவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள்தான்.
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதர்ச தம்பதி என்ற எண்ணம் உங்களுக்குள் எப்போதும் இருக்கவேண்டியது கட்டாயம். அப்படியானால், நிச்சயமாக நீங்கள் சிறப்பான பெற்றோர்தான்.'என் பிள்ளைக்கு நல்ல பெற்றோரா இருக்கணும்' என்ற எண்ணத்தை மனதில் வையுங்கள். அதற்கான செயல்பாடுகளே உங்களை நல்ல தம்பதியாக்கும். குடும்பங்களின் கோட்பாடே இதுதான்!
No comments:
Post a Comment