Sunday, January 14, 2018

டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி? thanks to dinamalar.com


Advertisement
டீன்-ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?
குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில், பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? என்னால் என் குழந்தையிடம் எல்லாவற்றையும் பேச முடியவில்லையே! எனக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறதே! இப்படியே போனால், நான் என் பிள்ளையை இழந்துவிடுவேனோ எனத் தவியாய் தவிக்கும் பெற்றோருக்கு சத்குரு வழங்கும் 5 குறிப்புகள் உங்கள் அணுகுமுறையையே மாற்றியமைக்க வல்லவை. பரிசோதித்துப் பாருங்கள். 

சத்குரு: நண்பனாய் இருங்கள்!
பதின்ம வயதுக்காரரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் அதனை பார்க்கவும் முடிகிறது. பொதுவாக, பெற்றோரைவிட அவர்களுடைய தாத்தா-பாட்டியால் சூழ்நிலையிலிருந்து சற்றே விலகியிருந்து அவர்களிடம் நேசத்துடன் இருக்க முடிகிறது. பதின்-பருவ வயதுகளில் அவர்களது ஹார்மோன் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வயோதிகத்தில் ஹார்மோன்களில் இருந்து விடுவிக்கப்படுகிறீர்கள், அதனால் மூத்த தலைமுறையால் புரிந்துகொள்ள முடிகிறது. நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. பதின்ம வயதில் பல அம்சங்கள் உள்ளன. அறிவினை ஹார்மோன்கள் சூழ்ந்து கொண்டதால் உலகமே வித்தியாசமாக தோன்றுகிறது. மனிதர்களாக இருந்தவர்கள் ஆணாகவும் பெண்ணாகவும் மாறுகிறார்கள். மனிதர்களில் சரிபாதியினரிடம் மட்டும் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இது மிகப்பெரிய மாற்றம். இதைப் புரிந்து கொண்டு, அந்த மாற்றத்துடன் ஒத்து வாழும் சூழ்நிலைக்கு குழந்தைகள் உந்தித் தள்ளப்படுகிறார்கள். நீங்கள் உற்ற நண்பராய் இருந்தால், அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது உங்களிடம் பேசுவார்கள். பெரும்பாலான பெற்றோர், சாதகமான நண்பனாய் இருப்பதில்லை. பெற்றோர் தன் குழந்தைகளுடன் கொண்டுள்ள சகவாசம் வேறுவிதமாக இருப்பதாலும் அவர்கள் தன் நண்பர்களிடம் பெறும் அறிவுரைகள் சுவையில்லாமல் இருப்பதாலும் குழந்தைகள் தனித்துவிடப் படுகின்றனர். உங்கள் குழந்தை தன் பிரச்சனையை உங்களிடம் சொல்வது சிறந்தது. நீங்கள் அதிகாரி என்பதுபோல் அவர்கள் உணர்ந்தால் உங்களிடம் அவர்கள் வரப் போவதில்லை. அவர்கள் வாழ்க்கை மேல் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது எனும் உணர்வு ஏற்படும்போது மட்டுமே வருவார்கள். நீங்கள் “அந்த கொடூர தந்தையாக, தாயாக” இருந்தால் வரமாட்டார்கள். நீங்கள் சிறந்த நண்பராய் இருந்தால் வருவார்கள். அதனால், சிறு வயதிலிருந்தே அவர்களை நல்ல நண்பர்களாக்கிக் கொள்ளப் பாருங்கள். 18, 20 வயது வரை அப்படி இருப்பது அவசியம். அதனை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் அவர்களைப் பெற்று போட்டுவிட்டதால் இது நிகழ்ந்துவிடாது. அவர்களைப் பெற்றதால் தாய், தகப்பன் ஸ்தானம் கிடைக்குமே தவிர, நண்பன் எனும் ஸ்தானம் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். 

அவர்களைப் பொறுப்பாக்குங்கள்!
பதின்ம வயதினரின் மேல் நடவடிக்கை எடுக்கப் பார்ப்பதை விட்டுவிட்டு, அவர்கள் அணுகும் விதத்தில் நீங்கள் இருக்க, அதற்குண்டான வழிவகைகளை செய்யுங்கள். செய்யும் எல்லாவற்றிற்கும் அவர்களைப் பொறுப்பாக்குங்கள். உங்கள் ஒரு மாத ஊதியத்தை அவர்களிடம் அளிக்கும் துணிவினை வளர்த்துக் கொண்டு, வீட்டினைப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். எல்லாம் மிக அற்புதமாக மாறுவதை காண்பீர்கள். குழந்தைகளிடம் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் வளர நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் விரும்புவதும் இதைத்தான். அவர்களது உடல் மட்டும் வளரவில்லை, மனிதர்களாக அவர்களும் வளர்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர்கள் வளர அனுமதியுங்கள். அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால், பிரச்சனைதான் ஏற்படும். ஆண் பிள்ளைகள் இருந்தால் ஒருவித பிரச்சனை, பெண் பிள்ளைகள் இருந்தால் மற்றொருவிதமான பிரச்சனை ஏற்படும். ஒருவருடைய உயிரோட்டத்தை கட்டுப்படுத்துவது சிறப்பான விஷயமல்ல. பொறுப்பு அவர்களை வழிக்கு கொண்டுவரும். லீவுக்கு செல்கிறீர்கள், பணத்தை அவர்களைக் கையாளச் சொல்லுங்கள். அவர்கள் பணத்தை தெரியாமல் செலவழித்து விடுவார்கள் என பயந்தால், அவ்விடத்தில் ஏற்படும் விளைவினை அவர்களும் உங்களுடன் சேர்ந்து அனுபவிப்பார்கள். தெருவில் ஏதோ ஒரு இடத்தில் கற்றுக் கொள்வதற்குப்பதில் பாதுகாக்கப்பட்ட, அக்கறையுள்ள சூழலில் அவர்கள் கற்பது சிறந்ததல்லவா? 

பழித்துப் பேசுவதை நிறுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் வளர்ந்து பதின்பருவ வயதடைகின்றனர். அது ஒரு சந்தோஷமான அனுபவமாக இருக்கட்டும். ஆனால், உங்களுக்கோ அவர்கள் வளர்வது குறித்து வருத்தம். அவர்கள் சிறியவர்களாக இருந்தபோது ஒன்றும் தெரியாமல் அத்தனை செயல்களுக்கும் உங்களையே எதிர்பார்த்து இருந்தனர். அவர்கள் உதவியற்றவர்களாய் இருந்ததால் அவர்கள் அற்புதமானவர்கள் என நீங்கள் நினைத்தீர்கள். ஒருவேளை உங்கள் மீது ஏறி விளையாடும் குழந்தை திடீரென உங்களை வசைப்பாட துவங்கினால், அந்தக் குழந்தையை உங்களுக்கு பிடிக்காது. என்ன செய்ய, இந்தக் கேள்வியைக் கேட்க குழந்தைகளுக்கு 14, 15 வருடங்கள் ஆகிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு பதின்பருவ வயதுடைய குழந்தைக்கு உங்களிடம் குதர்க்கமாக மட்டுமே கேள்வி கேட்க முடிகிறது. உங்கள் குழந்தையுடைய குழந்தைத்தன்மையை தேவையில்லாமல் துதிபாடிக் கொண்டிருந்தால், அவரது இயலாமையை பெருமையடித்துக் கொண்டிருந்தால் நீங்களும் நிரந்தரமாய் உதவியற்றுப் போவீர்கள். பொதுவாக, குழந்தைகள் உதவியற்றவர்களாய், பிறரை நாடிச் செல்பவராய் மாற்றப்படுவதால்தான் பதின்பருவத்தில் அவர்கள் தன் சொந்தக் காலில் நிற்கும்போது பலருக்கும் பிடிப்பதில்லை. புதிதாய் தோன்றிய அந்த உயிருக்கு முக்கியமான ஒருவராக நீங்கள் இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வகுத்துக் கொள்ளுங்கள். குழந்தை தவழ்ந்தபோது நீங்களும் அதனுடன் தவழ்ந்தீர்கள். இப்போது பதின்பருவத்தினர் ஊஞ்சலாட நினைக்கும்போது நீங்களும் ஊஞ்சலாடுவதுதான் பொருத்தமானது. அவனுடன் தவழ்ந்து விளையாட நீங்கள் ஆசைப்பட்டால் உங்கள் மீது அவனுக்கு ஈடுபாடு ஏற்படப் போவதில்லை. துடிப்பான, துடுக்கான வளர்இளம் பருவத்தினருக்கு தவழ்ந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டும் பெற்றோரைப் பார்க்க ஏளனமாக இருக்கும். 

ஆள வேண்டாம், சேர்த்துக் கொள்ளுங்கள்!
குழந்தை உங்களுக்குச் சொந்தம் எனும் கருத்தை மனதிலிருந்து நீக்கிவிடுங்கள். குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் என நீங்கள் நினைத்தால், “நான் உங்களைச் சேர்ந்தவனல்ல” எனும் எதிர்வினை செயல்தான் அவர்களது மனதில் நிலைக்கும். உங்களால் அப்படியொரு நிலையினை சகித்துக்கொள்ள முடியுமா என்ன? இன்னொரு உயிர் உங்களுடையதல்ல. இன்னொரு உயிர் உங்களுடன் வாழ தேர்ந்தெடுத்து வந்துள்ளது. அதனைப் போற்றி பாதுகாக்க பாருங்கள். உங்கள் வாழ்க்கைத்துணையோ, குழந்தையோ அந்த உயிர் உங்களுடன் வாழ தேர்வு செய்ததற்கு மதிப்பளியுங்கள். அவர்கள் எவ்விதத்திலும் உங்களுக்கு சொந்தமல்ல. இதனை நீங்கள் உணராதபோது, ஒன்று நீங்கள் இறக்கும்போதோ, அல்லது அவர்கள் இறக்கும்போதோ உணர்வீர்கள். அவர்களை நீங்கள் சொந்தம் கொண்டாடாமல், உங்களுடைய வாழ்வின் அங்கமாய் ஆக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள் மாறலாமே!
நம் குழந்தையை சிறப்பாக வளர்க்க விரும்பினால் உங்களை முதலில் சீர்படுத்திக் கொள்ளப் பாருங்கள். பெற்றோர் ஆக விரும்பும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு சிறு சோதனைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். ஓரிடத்தில் அமர்ந்து, என்னைப் பற்றி எது சரியில்லை, என் வாழ்வில் சரியில்லாமல் என்ன நிகழ்கிறது எனப் பாருங்கள். நான் உங்களைச் சுற்றி நிகழும் உலகத்துடன் உங்களுக்கு நிலவும் உறவுகளைப் பற்றி பேசவில்லை. உங்களுக்குள் என்ன நிகழ்கிறது, அதில் என்ன பிழைகள் நேர்கின்றன என உண்மையாக பாருங்கள். நீங்கள் பார்த்த விஷயங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் எப்படி சரிசெய்வது எனப் பாருங்கள். உங்கள் செய்கை, நடத்தை, பேச்சு, பழக்கவழக்கங்கள் - இவற்றில் எதையாவது ஒன்றினை மாற்ற வேண்டுமா எனப் பாருங்கள். அப்படி பார்க்கும் பட்சத்தில் உங்கள் மகனையும் மகளையும் விவேகத்துடன் கையாள்வீர்கள். இல்லாது போனால், பிறருடைய அறிவுரைகளின் படியே செயல்படுவீர்கள். யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட குழந்தையை கூர்மையாக நோக்குவதன் மூலமே அந்தக் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சொல்ல முடியும். இது தனிப்பட்ட மனிதர் சார்ந்தது. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே விஷயத்தையே செய்ய முடியாது, ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட ஓர் உயிர் என்பதை நாம் உணர வேண்டும்

No comments:

Post a Comment