Friday, March 16, 2018

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கக் கூடாது’ - குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை! - #SoftDrinksSideEffefcts thanks to vikatan.com

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கக் கூடாது’ - குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை! - #SoftDrinksSideEffefcts


டந்த வாரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு நிகழ்வு… கருமையான  குளிர்பானத்துக்குள்ளிருக்கும் உட்பொருள்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக குளிர்பானம் ஒன்றை வாங்கினேன். 250 மி.லி கொள்ளளவு கொண்ட அதன் விலை இருபத்தைந்து ரூபாய். அதே கடையில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன், அதே குளிர்பானத்தின் பெயரை உரிமையுடன் சொல்லி, தனது தந்தையிடம் கேட்டான். தந்தையும் எந்தவித மறுப்புமின்றி வாங்கிக் கொடுத்தார். சிறுவன், தான் விரும்பிய பொருள் கிடைத்த மகிழ்ச்சியுடன் சில்லென்ற குளிர்பானத்தைப் பருகினான். சிறுவன் நடந்துகொண்டே குளிர்பானத்தைப் பருகப் பருக, நான் அந்தப் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தேன்.
குளிர்பானம்
சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் உட்பொருள்கள்...
`குளிர்பானத்தின் பெயர் (கூடுதல் சக்தியுடன் என்ற அடைமொழியுடன்)… அதிகளவு கஃபைன் (Caffeine) கொண்டது… குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் குடிக்கக் கூடாது… கஃபைன் அலர்ஜி உள்ளவர்கள் குடிக்கக் கூடாது… ஒரு நாளைக்கு 500 மிலி-க்கு அதிகமாகப் பருகக் கூடாது’ என்றெல்லாம் லென்ஸ் வைத்துப் பார்க்கும் அளவுக்கு, மிகச் சிறிய எழுத்துகள் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தன. ஒரு நுகர்வுப் பொருளில் இருக்கும் உட்பொருள்களைப் படித்துப் பார்த்து வாங்கும் விழிப்புஉணர்வு, மக்களிடம் இல்லை. அப்படியிருக்கும்போது, இவ்வளவு எச்சரிக்கைக் குறிப்புகள் கொண்ட ஒரு குளிர்பானத்தை, விதவிதமான மனிதர்கள் வந்துபோகும் ரயில் நிலையத்தில் விற்கும் நியாயமற்ற சமுதாயத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதே குளிர்பானம் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மளிகைக்கடைகள்... என அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை!
கஃபைன் மட்டுமா?
கர்ப்பிணிகள்… பாலூட்டும் தாய்மார்கள்… குழந்தைகள் குடிக்கக் கூடாத அளவுக்கு அதிலுள்ள பொருள் கஃபைன் மட்டும்தானா... அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. செயற்கைக் குளிர்பான நிறுவனத்துக்கே வெளிச்சம். வயது வித்தியாசமின்றி, அந்த நிறுவனமே அறிவுறுத்தும் எச்சரிக்கையை மீறி, அவர்களின் குளிர்பானம் அனைவராலும் குடிக்கப்படுவதுதான் நிதர்சனம். நான் பார்த்தது ஒரு சிறுவன். இன்னும் எத்தனையோ சிறுவர்களின் பிஞ்சு உறுப்புகள், அந்தக் குளிர்பானத்தை, அதிலுள்ள சாப்பிடக் கூடாத உட்பொருள்களை கிரகித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
கஃபைன்
பாதிக்கப்படுவது யார்?
விஷயம் என்ன தெரியுமா? குளிர்பானங்களை வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்குமேகூட அதிலிருக்கும் பாதகங்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவ்வளவு சிறிய எழுத்துகளில் எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்தால், அறம் சார்ந்த விற்பன்னர்கள் உறுதியாக விற்பனை செய்ய மாட்டார்கள். `குழந்தைகள் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அச்சிடப்பட்டிருக்கும் குளிர்பானத்தின் தீவிரம் புரியாமல் பருகும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்றாலும் வழக்கு நிற்காது. தாங்கள் சிறியதாக அச்சிட்ட எழுத்துகளை, பெரியதாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பார் அந்தப் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்துக்காக வாதாடும் வழக்கறிஞர். கடைசியில் பாதிக்கப்படுவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்தாம்.
இளைஞர்களின் உற்சாக பானம்!
கஃபைன் கலந்த குளிர்பானம் குறித்த எனது அனுபவங்களை சென்னையிலிருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். குளிர்பானத்தில் நிறைய ’கஃபைன்’ இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுவதால், இரவுநேரப் பணியில் நீண்ட நேரம் கண்விழித்து வேலை செய்யவேண்டிய இளைஞர்களின் உற்சாக பானமாக அது உருவெடுத்திருக்கிறதாம். `ஒரு நாளைக்கு 500 மி.லி-க்கு மேல் குடிக்கக் கூடாது’ என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறைந்தது ஒரு லிட்டர் வரை ஒரே இரவில் பல இளைஞர்கள் பருகுகிறார்களாம். இப்படியே தினமும் தொடர்ந்தால், கஃபைனின் அளவு அதிகரித்து, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.
குழந்தைகள் பாதிப்பு
கஃபைன் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
உறங்காமல் இருப்பதற்காக அளவுக்கு மீறி காபி குடிப்பதே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், தனியாக கஃபைன் சேர்க்கப்பட்ட பானத்தை அருந்தினால், விரைவில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும். அந்தக் குளிர்பானத்தில் இருக்கும் கஃபைனின் அளவு, ஏறக்குறைய 40 மி.கி / 250 மி.லி. அதிக அளவிளான கஃபைன் (High caffeine) என்றும் அதில் அச்சிடப்பட்டிருக்கிறது. நான் குறிப்பிட்டிருப்பது அதிகளவில் கஃபைன் கலக்கப்பட்ட ஒரு பன்னாட்டுக் குளிர்பானத்தைப் பற்றி. அது மட்டுமில்லாமல், கஃபைன் கலக்கப்பட்ட எத்தனையோ பன்னாட்டு குளிர்பானங்கள் பொதுமக்களைக் கவரும் வகையில் வெவ்வேறு ரூபங்களில் வலம்வருகின்றன.
அளவுக்கு அதிகமாக கஃபைன் நமது ரத்தத்தில் கலக்கும்போது, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம்... எனப் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். `கஃபைனால் தூண்டப்பட்ட மனப்பதற்றம்’ (Caffeine induced anxiety disorder) என்ற நோய்ப் பிரிவு, மனநோய்கள் சார்ந்த வகைப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அதிகளவு கஃபைன் கலந்த குளிர்பானத்தை ஒருவர் குடித்து, அதனால் பாதிப்புகள் ஏற்படுமானால் அதற்கென்ன மருத்துவம் தெரியுமா? விஷத்தை குடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மருத்துவம்தான் அவர்களுக்கும்!
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் கஃபைனால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, அளவுக்கு மீறிய செயற்கைச் சர்க்கரைகளால் உடல் பருமன், சர்க்கரைநோய் என பாதிப்புகள் மறுபுறம் உருவெடுக்கும். `புகைப்பிடித்தால் புற்றுநோய் உண்டாகும்’ என்று சிகரெட் அட்டையில் எழுதப்பட்டிருப்பதைப்போல, `செயற்கை பானங்களை அருந்தினால் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அவரவர் மனங்களில் எழுதிவைத்துக்கொண்டு அவற்றை தவிர்த்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது.
கோலா
ஒரு நாளைக்கு ஒருவர் ¼ லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றால், அவரது இரைப்பை ¼ லிட்டர் அளவு விரிவடையும். அதுவே வாயு நிரப்பப்பட்ட ¼ லிட்டர் குளிர்பானத்தைப் பருகினால், இரைப்பையானது ½ லிட்டர் வரை விரிவடையும். இதன் காரணமாக உணவுக்குழாயை நோக்கி, இரைப்பையின் அமிலம் கலந்த கூழ்மங்கள் எதுக்களிக்கும். தொடர்ந்து இப்படி நிகழும்போது, உணவுக்குழாயின் திசுக்கள் பாதிப்படைந்து, தாங்க முடியாத நெஞ்செரிச்சல், வலி ஏற்படும். இப்படி உணவுக்குழாயின் திசுக்கள் பாதிப்படைவதை ‘பாரட்ஸ் ஈஸோபேகஸ்’ (Barrett’s oesophagus) என மருத்துவ உலகம் அழைக்கிறது. அடுத்தகட்டமாக உணவுக்குழாயில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அதிகமாக விற்பனையாகும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உணவுக்குழாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள்...
வேனிற்காலத்தை மனதில் வைத்து, செயற்கைக் குளிர்பானங்கள் சார்ந்த விளம்பரங்கள் அதிகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டன... உங்கள் அபிமான நட்சத்திரங்களின் வாய்மொழியுடன்! செயற்கைக் குளிர்பானங்கள் மட்டுமல்லாமல், `பழச்சாறுகள் மட்டுமே’ என்று விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானங்களும் வேண்டாம். நேரடியாக மாம்பழத்தின் சுவையை அனுபவிப்பதற்கும், அட்டையில் அடைக்கப்பட்ட மாம்பழச் சாற்றைச் சுவைப்பதற்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு முழு மாம்பழத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் இயற்கைச் சர்க்கரைக்கும், 200 மி.லி பதப்படுத்தபட்ட பழச்சாறு கொடுக்கும் சர்க்கரையின் அளவிலும் தரத்திலும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. 2014-ம் ஆண்டு, செயற்கைக் குளிர்பானங்களில் குறிப்பிட்ட அளவு பழச்சாறுகளைக் கலந்து சந்தையில்விடலாமா என்ற பேச்சு அடிபட்டது. அப்போது பல்வேறு உணவியல் ஆர்வலர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம்… `செயற்கைக் குளிர்பானங்கள் என்றாலும் சரி, பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் என்றாலும் சரி, இரண்டிலுமே சர்க்கரையின் அளவு அதிகம்’ என்பதுதான். அது தவிர்த்து அவை கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் பதப்படுத்திகள் சார்ந்தும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தார்கள்.
இயற்கை பானங்கள்
`பன்னாட்டுக் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்படுகின்றன… பயன்படுத்தாதீர்கள்’ என்ற செய்தி அவ்வப்போது வெளிவருவதுண்டு. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெற்பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படையாமலிருக்க, ஒரு பன்னாட்டுக் குளிர்பானத்தை சமஅளவு பூச்சிமருந்துடன் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பாக பல வழக்குகளும் ஆய்வுகளும் நடைபெற்றது வேறு கதை.
கஃபைன் சார்ந்தோ, சர்க்கரை சார்ந்தோ அல்லது அதில் சேர்க்கப்படும்வாயுக்கள் காரணமாகவோ பிரச்னைகள் ஏற்படலாம். விபரீதங்களைத் தவிர்க்க சிறந்த வழி, செயற்கைக் குளிர்பானங்களை வெறுத்து ஒதுக்குவது மட்டும்தான். பானங்களுக்கா நம்மிடம் பஞ்சம்? ஒவ்வோரு பருவ காலத்துக்கும் வகை வகையாக இயற்கை பானங்களைப் பயன்படுத்தியவர்கள் நாம். மீண்டும் அவற்றை மீட்டெடுப்பது, நம் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment