Advertisement
உறவுகள் இனிக்கும்; வாழ்வும் சிறக்கும்!
உறவுகளை தக்க வைத்து கொள்ள, உன்னத வழிமுறைகளை கூறும், மனநல ஆலோசகர், ஜெயமேரி: 'நம் குடும்பம், மற்ற குடும்பங்களை விட சிறப்பானது' என்ற, 'பாசிட்டிவ்' எண்ணத்தை, முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், மற்றவருடன் மனம் விட்டு பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும்; மற்றவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இன்றைய வாழ்க்கை முறையில் பணிச்சுமையும், 'டிவி'யும், நம் பொன்னான நேரத்தை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், சிறிது குறைத்து கொள்ளலாம். விடுமுறை நாட்களில் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது, வெளியே செல்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.பொருளாதார தேடலுக்காக பிரிந்திருந்தாலும், அவ்வப்போது உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து, உறவுகளை வளர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்கக் கூடிய எந்த விஷயத்தையும், பெரிதாக்க கூடாது. அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்றில்லாமல், ஒருவர் தவறிழைக்கும் போது, மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். உறவுகளில் ஒவ்வொருவரும், அவர்களுக்கான கடமை களையும், பொறுப்புக்களையும் உணர வேண்டும்; தங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், மற்றவர்களின் மீது அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக, மற்றவர்களிடம் நம் குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் விட்டுக் கொடுக்க கூடாது. நம் குடும்பத்தை பற்றி, மற்றவர்களிடம் விவாதிக்கவும் வேண்டாம். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் அதேநேரம், அவர்கள் மீது கண்காணிப்பும் அவசியம். மற்றவர்களுடன் எந்த வகையிலும், அவர்களை ஒப்பீடு செய்யக் கூடாது. குழந்தைகளின் சிறு வெற்றிகளையும் கொண்டாடி, உற்சாகம் கொடுக்க வேண்டும்.மற்றவர்களுடன் ஒப்பிட்டு, 'அவர்களை போல் நமக்கு வசதிகள் இல்லை' என, எண்ணக் கூடாது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். எது சாத்தியமோ, அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும்; பேராசை கூடாது. நம்மிடம் உள்ளவற்றை வைத்து, நாம் நலமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால், நம் குடும்பத்தில் உறவுகள் இனிக்கும்; வாழ்வும் சிறக்கும்.
No comments:
Post a Comment