கோடையும் குளுமையாகும்!
கோடை கால நோய்களை தவிர்க்க, 'டிப்ஸ்' தரும், ஆயுர்வேத மருத்துவர், சாந்தி விஜய்பால்: கோடை காலத்தில் பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை, 'புட் பாய்சனிங்!' சுகாதாரமற்ற, ஐஸ் கட்டி கலந்த பழச்சாறு, மைதா, அசைவ உணவுகள், புட் பாய்சனிங்குக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. சீரகத்தை வறுத்துப் பொடி செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு டீஸ்பூன் பொடியை, மோரில் கலந்து குடிக்க, வயிற்றுப் போக்கு, புட் பாய்சன் சரியாகும்.குளிர்ந்த நீர் குடித்தால் தான், தாகம் தணியும் என்று நினைப்போர், மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கலாம். அதற்கு முன், நீரைச் செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்து, அதன் பின் பானையில் ஊற்றிக் குடிக்கும்போது, சுத்தமான மற்றும் குளிர்ச்சியான தண்ணீர் கிடைக்கும். அதோடு உஷ்ணம் குறைந்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை வராது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவரவர் உடல் எடையைப் பொறுத்து, தண்ணீர் குடிப்பது நல்லது. பெண்கள் பணிக்குச் செல்வோராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, தண்ணீர் குடிப்பது அவசியம்.ஜூஸ் குடித்தாலும், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை என, பொட்டாஷியம் அதிகம் உள்ள பழச்சாறாக அருந்துங்கள். குறைந்த அளவு இஞ்சி கலந்து கரும்புச்சாறு அருந்தினால், சிறுநீர் பிரச்னைகள் வராது; இளநீரும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் பனங்கற்கண்டு கலந்த பாலை அருந்தினால், உடல் சூடு தணியும். அதேபோல், கொத்துமல்லித் தழையை அரைத்து, மோரில் கலந்து குடித்து வர நன்மை அளிக்கும்.நீர்க் காய்கறிகளை அதிகம் சமைத்துச் சாப்பிட்டால், சூட்டினால் வரும் வேனல் கட்டிகள் ஏற்படாது. உடலில் சூடு அல்லது அழுக்கு சேர்வதால் கூட, வேனல் கட்டி உருவாகும். கூடுமான வரை காட்டன் துணிகளை உடுத்துங்கள். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பதால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதற்கு, கொய்யாப் பழம் நல்ல மருந்து. இரவு உணவை சீக்கிரமே முடித்து, பனங்கற்கண்டு பால் அருந்த கொடுக்கலாம் அல்லது கிஸ்மிஸ், திராட்சை, 20 சாப்பிடக் கொடுக்கலாம்.வெயிலில் அதிக நேரம் வெளியில் செல்வோர், தலையில் எண்ணெய் வைக்க வேண்டாம். ஏனெனில், வெயிலின் சூட்டை எளிதாக எண்ணெய் தலை இழுத்துக் கொள்ளும். இரவில் உறங்கும்போது தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளலாம். நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெயை, கால் பாதங்களில், நகங்களில், வயிற்றில் தேய்த்தால் சூடு இறங்கும்.கோடை காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள்; இயற்கையோடு இணைந்து வாழுங்கள். உணவில் கவனம் செலுத்தினால், கோடை காலமும் நமக்கு, குளிர் காலம் தான்.
No comments:
Post a Comment