ழ்நாடு
சத்துமாவு கஞ்சி, கீரை, காய்கறி கூட்டே உணவு!
Advertisement
கோவை:இன்றைய நவீன காலத்தில், முப்பதை தொட்டுவிட்டால் மூட்டு வலியும், நாற்பதை தொட்டால், பி.பி., சுகர் என, நோய்களின் பட்டியலுக்கு அளவில்லை. இச்சூழலில், மருத்துவமனை பக்கமே, தலை வைத்து படுக்காமல் யோகாவாலும், உணவு முறையாலும், நேற்று நுாறாவது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார், யோகா ஆசிரியரான நானம்மாள்.''என் தாத்தா மன்னார்சாமி தான், என் குரு. சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்துவிட்டு, சீரக தண்ணீர் குடித்தபின், ஆசனங்கள் செய்து விட்டு தான், அன்றாட பணிகளை துவங்குவோம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, தற்போது வரை, இதுதான் வழக்கம்,'' என்கிறார் நானம்மாள்.இவரது ஆறு குழந்தைகளுக்கும், 12 பேரக்குழந்தைகள். அனைவருக்கும், சுகப்பிரசவம் தான். இவர் காலையில், நவதானியங்கள் கொண்ட சத்துமாவு கஞ்சியும், காய்கறி கூட்டு. மதியம் கீரையுடன் சாப்பாடு; இரவில் ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால். இதுதான் இவரது அன்றாட உணவு.''இன்று, பிறந்த குழந்தைக்கே, சர்க்கரை நோய் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு தலைமுறையை உருவாக்கும் பெண்கள், ஆரோக்கியமாக இருந்தால் தான், குடும்ப வாரிசுகள் நோயின்றி வளருவர். காய்கறிகளும், கீரைகளும், மூலிகை மருந்துகளும் நம்மை சுற்றி உள்ளன. பிரச்னையின் தன்மைக்கேற்ப, அதை சாப்பிட்டாலே போதும்,'' என்று கூறும் நானம்மாள், ''சமையலறையில் தான் ஆரோக்கியம் இருக்கிறது,'' என்று அழுத்தமாக கூறுகிறார்.''குழந்தைகளுக்கு, உளுந்து களி, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தீனி வகைகளை கொடுங்கள். நோயில்லாத வாழ்வை விட பெரிய சொத்து எதுவுமில்லை. என் மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்பது மட்டுமே, இறைவனிடம் இந்த நாளில் நான் வேண்டும் பிரார்த்தனை,'' என்று ஆசீர்வதிக்கிறார் இந்த யோகா பாட்டி.மாதவிடாய், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு, கற்றாழையுடன், கருப்பட்டியும் சேர்த்து சாப்பிடலாம். சளி, இருமலுக்கு, துளசியும், குறுமிளகு பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். மலச்சிக்கல் இருந்தால், கடுக்காய் பொடியும், முழங்கால் வலிக்கு முடக்கத்தான் கீரையும் சிறந்தது.
No comments:
Post a Comment