உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழியும் சூழலில் உள்ளன என்றும், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் தாய்மொழி அல்லாத மொழிகளில்தாம் கல்வி கற்கின்றனர் என்றும் யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மனித இனப் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியக் காரணியே மொழிகள்தாம். மொழிகள் கருத்துகளைப் பரிமாறுவதற்கு மட்டுமல்லாது, அவர்களின் அடையாளமாகவும் ஆனது. மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம். பெரும்பாலான மனிதர்கள் தம் தாய்மொழியைப் பேணிக்காத்து, தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர். உலகத்தில் உள்ள மொழிகளைக் காப்பதற்கும், மொழிகளின் சிறப்பைப் பறைசாற்றுவதற்கும் யுனெஸ்கோ கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடிவருகிறது.
தாய்மொழி தினம் அவசியமா..?
2008-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 89 வயதான மரியே ஸ்மித் ஜோனெஸ் இறந்தபோது, அவரின் இறப்புக்கு உலகின் பெரும்பாலானோர் வருத்தமடைந்தனர். அதற்கு முக்கியக் காரணம், அலாஸ்கா இனப் பழங்குடி மொழியான, `ஏயக்' மொழியைப் பேசத்தெரிந்த உலகின் கடைசி நபர் அவர்தான். அவருடன் சேர்ந்து ஒரு மொழியும் முற்றிலும் அழிந்துபோனது. அது தவிர, அந்த இனத்தின் பண்பாடு, கலாசாரம் என அனைத்துமே அழிந்துபோயின.
இது, அந்த ஒரு மொழியின் நிலைமை மட்டுமல்ல... இன்றையச் சூழலில் உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழியும் சூழலில்தாம் உள்ளன என்றும், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் தாய்மொழி அல்லாத மொழிகளில்தாம் கல்வி கற்கின்றனர் என்றும் யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த மொழிகளைப் பாதுகாக்கத் தாய்மொழிகள் தினம் மிகவும் அவசியமே.
முதன்மை மொழியாகச் சீன மொழிதான், உலகளவில் 130 கோடி மக்களால் 38 நாடுகளில் பேசப்பட்டு உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஸ்பானிஷ் மொழியை 44.2 கோடி மக்கள் 31 நாடுகளில் பேசுகின்றனர். 37.8 கோடி மக்களால் ஆங்கிலம் பேசப்படுகிறது. அதிகம் பேசப்படும் முதல் இருபது மொழிகளில் ஆறு இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தி மொழி 26 கோடி நபர்களால் 4 நாடுகளில் பேசப்படுகிறது. பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகள் இந்தப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறுகின்றன. 6.67 கோடி மக்களால் 7 நாடுகளில் முதன்மை மொழியாகத் தமிழ் பேசப்படுவதன்மூலம் இந்தப் பட்டியலில் தமிழ் 20-வது இடத்தைப் பெறுகின்றது.
இந்தியாவில் உள்ள மொழிகள்:
இனம், மதம், மொழி எனப் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடு; பல்வேறு கலாசாரங்ககளையும், மொழிகளையும் கொண்டுள்ள நாடு நம் இந்தியா. PLSI அமைப்பின் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் 780 மொழிகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220-க்கும் அதிகமான மொழிகள் அழிந்துள்ளன. அடுத்து வரும் அரைநூற்றாண்டுக்குள் இன்னும் பலநூறு மொழிகள் அழிவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர். மேலும், யுனெஸ்கோவின் ஆய்வறிக்கையின்படி அழிய உள்ள மொழிகளில் 10 சதவிகித மொழிகள் இந்திய மொழிகள்தாம்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10,000-க்கும் அதிகமான மக்கள் பேசும் 121 மொழிகள் உள்ளன. அந்த 121 மொழிகளில் 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், 99 அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளும் உள்ளன.
இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 19,569. இதில், அடையாளம் காணப்பட்ட மொழிகள் 270. இந்த 270 மொழிகளில் 123 மொழிகள் அட்டவணையிடப்பட்ட மொழிகளின் பிரிவிலும், 147 மொழிகள் அட்டவணையிடப்படாத மொழிகளின் பிரிவிலும் வருகின்றன. அட்டவணையிடப்பட்ட மொழிகளின் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 96.71 சதவிகிதமும், மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 3.29 சதவிகிதமும் உள்ளனர்.
ஒரு மொழி அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின், அந்த மொழியை 10,000-க்கும் அதிகமான மக்கள் பேசவும் எழுதவும் வேண்டும். அப்போதுதான் ஒரு மொழி அழியாமல் நிலைத்து நிற்கும். அப்படி 10,000-க்கும் குறைவாக மக்கள் பேசும் தாய்மொழிகள் இந்தியாவில் மிக அதிகம். அந்த மொழிகள் அனைத்துமே காலப்போக்கில் காணாமல் போக அதிகம் வாய்ப்புள்ளது.
ஒரு மொழி அழிவதென்பது, அந்த ஒட்டுமொத்த இனத்தின் பாரம்பர்யம், பண்பாடு, கலாசாரம் என்ன அனைத்தின் அழிவாகும். ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமாயின் கற்றுக்கொள்ளலாம், ஆனால், அவர் தன் தாய்மொழியைக் காப்பது என்பது அவருடைய தலையாய கடமை.
No comments:
Post a Comment