Friday, February 10, 2017

நலம் தரும் சொல்: திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு!

Date: 9 FEBRUARY 2017

Time uploaded in London:- 20-45

Post No. 3622


Pictures are taken from different sources; thanks.


contact; swami_48@yahoo.com

நாராயணா  என்னும் நாமத்தின் சிறப்பை எப்படிக் கண்டுகொண்டார் என்பதை திருமங்கை ஆழ்வார் விளக்கும்  விதமே தனி அழகு!  அவர் சொல்லுவதை பெரிய திருமொழியில்   படித்து ரசிக்க வேண்டும்.

குலம் தரும்செல்வம் தந்திடும்அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும்நீள் விசும்பு அருளும்;
அருளொடு பெரு நிலம் அளிக்கும்;
வலம் தரும்மற்றும் தந்திடும்பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

நாராயணா என்னும் நாமத்தின் மூலம் என்ன , என்ன கிடைக்கும்?
உயர்ந்த மேன்மை (குலம்)
செல்வம்
துயர்களைத் துடைக்கும்
நிலம் தரும்
பகவானின் அருளைத் தரும்
சுவர்கம்- வீடுபேறு தரும்
பலம் தரும்
தாயினும் மிஞ்சிய அன்பும் தரும்

இவ்வளவு சிறப்புடைய சொல், நாமம் நாராயணா என்பதைக் கண்டுவிட்டேன்.
இதை கம்பன் பாடலுடனும் அபிராமி பட்டர் பாடலுடனும் ஒப்பிடலாம்:
தனம் தரும்கல்வி தரும்ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவும் தரும்- நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்நல்லனவெல்லாம் தரும் அனபர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
--அபிராமி அந்தாதி
கம்பன் இதையே இராம நாமத்தினால் கிடைக்கும் என்பான்:-
பால காண்டத்தில் கம்பன் :-

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.


நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

 

ஊமை கண்ட கனவு!
திருமங்கை ஆழ்வாரின் பத்து பாடல்களில் ஒரு பாடல்தான் “குலம் தரும்”…………….. ஏனைய பாடல்களில் அவர் கூறும் நல்ல வாசகங்கள்:

சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்

பொருள்: நனமையே பெற வேண்டும் என்று எண்ணி அதனைப் பெற நல் வினை செய்யாமல் தீவினையே செய்து பெண்களின் அழகையே நாடிக் கழித்த நாட்கள் ஊமை கண்ட கனவினைப் போல வீணாயின.

தஞ்சை கோயில், குடந்தை கோயில் ஆகியனவற்றைப் பாடிவிட்டு பத்தாவது பாடலை அவர் முடிக்கும் அழகே தனி அழகுதான்!

துஞ்சும் போது அழைமின்துயர்வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லினும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு

-திவ்வியப் பிரபந்தம், பெரிய திருமொழி, பெரிய திருமந்திரத்தின் மகிமை
--subham--

Sunday, February 5, 2017

Last updated : 12:00 (06/01/2017) வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose thanks vikatan.com


வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 
வாதம் பித்தம் கபம்
`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான் 
`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
 
- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார். 
வாதம், பித்தம், கபம் 
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும். 
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும். 
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
கீரை
தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!
* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும். 
* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும். 
மிளகு
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. 
* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். 
எலுமிச்சை
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது. 
வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும். 

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose thanks.vikatan.com

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose

விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது. 
பெருங்காயம்
பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு. 
பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்... 
* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 
* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 
பெருங்காயக்கட்டி
* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 
* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும். 
* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 
* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 
* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 
பெருங்காயத் துண்டுகள்
* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 
* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 
* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும். 
புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 
ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...

Posted Date : 21:59 (09/01/2017)Last updated : 22:01 (09/01/2017) முருங்கைக்காய் மகிமை! நலம் நல்லது- 46 #DailyHealthDose thanks vikatan.com

முருங்கைக்காய் மகிமை! நலம் நல்லது- 46 #DailyHealthDose

நலம் நல்லது
ஒருமுறை மலேஷியாவுக்குச் சென்றிருந்தபோது அது நடந்தது. கோலாலம்பூரில் பூச்சோங் பகுதியில், பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து, உலர்ந்திருந்த முருங்கைக்காய் ஒன்றை, சீனர் ஒருவர் பறித்துக் கொண்டிருந்தார்.

"காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?’’ என்று கேட்டேன்.
முருங்கைக்காய்
"உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க, முருங்கைக்காய் உள்ளே இருக்கும் உலர்ந்த விதைக்குள் இருக்கும் பருப்பை நாங்கள் சாப்பிடுகிறோம்" என்றார் அவர். இப்படி பாரம்பர்யமான உணவுகளை, கீரைகளை பல நாடுகளில் உள்ளவர்கள் மருந்தாகவே நினைக்கிறார்கள். குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளில் இருந்து, ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் வரை, தம் பாரம்பர்ய அறிவுகளையும் உணவு கலாசாரத்தையும் உற்றுப் பார்த்து, அதன் மாண்பை மீட்டிஎடுக்க முழு வீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு ஒப்புநோக்குகையில், பாரம்பர்ய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு.

`காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பர்ய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன.

'செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்
வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’
- என முருங்கை பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டாகரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர்.
முருங்கை விதை
இன்றைய உணவறிவியல், `கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது.

முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்...
* பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கைக்காய் சாம்பார் வைத்து, அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின்னர் பப்பாளிப் பழத்துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். செலவும் மிகக் குறைவு.
* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.
முருங்கைக்காய்

* சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை, ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்; சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும்.
* சித்த மருத்துவப் பரிந்துரைப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற `காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை.
முருங்கைக் கீரை சூப்

* நம் குழந்தைகளிடம் முருங்கைக்கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அவற்றை மெல்ல வைப்பதும் சிரமம்தான். ஆனால், எப்படியாவது முருங்கைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மொத்தத்தில் முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்... காக்கும்

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்! நலம் நல்லது-34 DailyHealthDose

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்! நலம் நல்லது-34 DailyHealthDose


உடல்பருமன்
டல் உழைப்புக் குறைந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது உடல்பருமன். குட்டித் தொந்தியும் தொப்பையுமாக இருந்தால்தான் குழந்தை சமத்து. `போஷாக்கா இருக்கானே குழந்தை!’ என்று கொஞ்சிய காலம் போய், `டாக்டர்! பையனோட பி.எம்.ஐ கூடியிருக்குமோ’ என விசாரிக்கும் பெற்றோர்களே அதிகமாகி உள்ளனர். தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைக்கவும் உடல்பருமன் முக்கியக் காரணம். 
அழகும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஆரோக்கியம் இல்லாத அழகு, அஸ்திவாரம் இல்லாத அரண்மனை மாதிரி. அழகு, ஆரோக்கியம் இரண்டும் சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்னை உடல்பருமன்; பல நாள்பட்ட நோய்களை அழைத்து வரும் ஒன்று. சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, நரம்புத்தளர்ச்சி எனத் தொடரும் இந்தப் பட்டியலால்தான் வீட்டுச் செலவும் பன்மடங்கு அதிகரிக்கிறது. 
உடல்பருமன் தடாலடியாகத் தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம். பெண்ணுக்கு 20 - 25 சதவிகிதமும், ஆணுக்கு 12 - 15 சதவிகிதமும் உடல் கொழுப்பு இருக்கும். பெண்களுக்கு அவர்களது மகப்பேறு பணிக்குத் துணையாக மார்பகம், கூபகம், தொடைப் பகுதியில் 12 சதவிகிதம் கூடுதலாக அத்தியாவசியக் கொழுப்பு (Essential Fat) உள்ளது. ஆண்களுக்கு இது 3 சதவிகிதம்தான். உடல் எடை அதிகரிப்பது, தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே உருவாகிறது. உடல் மற்றும் தோலுக்கு அடியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொழுப்புதான் கூடுதல் தீனி, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பாரம்பர்யம் மற்றும் ஹார்மோன் குறைவு, அதிகம் போன்ற காரணங்களால் அதிகமாகி உடல்பருமன் நோயை உருவாக்குகிறது. மருத்துவ அறிவியல், உடல் முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பருத்து இருப்பதை ஒவாய்டு (Ovoid) அமைப்பு என்றும், பருத்த தொப்பையுடன் இருப்பதை ஆப்பிள் அமைப்பு என்றும், தொடை, அடிவயிறு, பிட்டம் மட்டும் பருத்து இருப்பதை கைனாய்டு (Gynoid) அமைப்பு என்றும் வகைப்படுத்தி இருக்கிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் எந்தப் பிரிவு என்பதைப் பொறுத்து அவரவர்களுக்கான சிகிச்சையும், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மாறுபடும். 
உடல்பருமன் குறைக்க உதவும் உணவுகள்...
* உடல்பருமனை குறைக்க பட்டினி வழியல்ல. முதலில் அளவான சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கலோரியில் நிறைந்த நார்ச்சத்துகொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். 
* விருந்து, பஃபே எல்லாம் உடல்பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டியவை. வீட்டிலும் சாம்பார், ரசம், மோர் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு கொஞ்சமாக புளிக்குழம்பு ஊற்றி ஒரு வாய் சாப்பிடுவதை எல்லாம் நிறுத்த வேண்டும். 
* ஒரு கப் சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து, கீரை, காய்களுடன் பிசைந்து ஒரு பங்காகச் சாப்பிட வேண்டும். (இப்படிச் செய்வதால், அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட், மெதுவாக குளூக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் மெதுவாகச் சேரும்). அடுத்த பங்கு ரசம். கடைசிக் கவளம் மோர் எனப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இதில் மிக முக்கியமான விஷயம், ஒரு கப் என்பது 150 கிராம்தான் இருக்க வேண்டும். 
உடல் எடைக் குறைப்புக்கு உதவும் பூண்டு, வெந்தயம், லவங்கப் பட்டை, நாருள்ள கீரை, லோ கிளைசெமிக் உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
* சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். 
* அரிசிக்கு பதிலாக வாரம் நான்கு நாட்கள் கம்பு, தினை, சிறுசோளம் என சிறுதானியங்களை சேர்த்துக்கொள்ளலாம். 
* `கார்சீனியா’ எனப்படும் குடம் புளி, உடல் எடையைக் குறைக்க உதவுவதை பல அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. `கோக்கம் புளி’ எனப்படும் இந்த மலபார் புளியில் சமைக்கலாம். 
* `இளைத்தவனுக்கு எள்ளு கொடு; கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு’ என்பது பழமொழி. உடல் எடை கூடியவர்கள் கொள்ளுரசம், கொள்ளு சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம். 
* சமீபமாக பேலியோ டயட், ஜி.எம். டயட் முதலிய உணவு வழிமுறைகள் உடல் எடைக் குறைப்பில் பிரசித்துபெற்று வருகின்றன. ஆனால், அவற்றைப் பின்பற்றும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது. 
* உடல் எடை போதுமான அளவு குறைந்த பின்னர், நமது மரபு உணவுகளை, தானியங்களை, புலால்களை சரிவிகித சம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

களை அல்ல... உயிர்காக்கும் மூலிகை! நலம் நல்லது-65 #DailyHealthDose thanks vikatan.com


களை அல்ல... உயிர்காக்கும் மூலிகை! நலம் நல்லது-65 #DailyHealthDose

‘களை எடுத்தல்’, ‘களை பறித்தல்’, `களை பிடுங்குதல்’... என வெவ்வேறுவிதமாகச் சொன்னாலும், விவசாயத்தில் நாம் `களை’ என ஒதுக்கித் தள்ளுவது எத்தனையோ அரிய மூலிகைகளை! அது மட்டும் இல்லாமல், சில மூலிகைத் தாவரங்களின் அருமையை அறியாமலேயே, குப்பை மேட்டிலும், கண்ட இடங்களிலும் வளர்வதால் ஒதுக்கித் தள்ளுகிறோம். பிடுங்கி எறிகிறோம். அப்படி களையென ஒதுக்கப்படும் சில தாவரங்களின் மருத்துவக் குணங்களையும் அவை தரும் நன்மைகளையும் அறிந்துகொள்வோமா?
களை
பல்லுயிர் நலனில் அக்கறைகாட்டி வாழ்ந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கோ காடுகளில் தீயைப் பற்ற வைப்பது தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கும் நியூட்ரினோ துகள்வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கும் பல்லுயிரியம் சொல்லி மாளாதது. `எனக்கு உதவாத ஒன்று இந்த உலகத்தில் எதற்கு?’ என்ற இறுமாப்பு, மனிதனைத் தவிர வேறு எந்த இனத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி விவசாயத்தில் களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை. 
விளைவிக்கப்படும் தாவரத்தின் வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு என்ற கேள்விதான் ஆந்த்ரோபோசென்ட்ரிசம் (Anthropocentrism) என்ற, மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்! இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான். அப்படிப்பட்ட சில களைகளின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்வோம். 
இவை களைகள் அல்ல... மூலிகைகள்! 
நீர்முள்ளிச் செடி
நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடனும் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமான தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால் இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக் குறைவிலும், கால் பாதத்தில் வரும் நீர் தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 
நீர்முள்ளி
கரிசலாங்கண்ணி
‘தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணிக் கீரை அற்புதமான காயகல்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளில் கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை. 
கரிசாலை 
கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. `கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திடும்’ என்று அதீதமாக விளம்பரத்தப்படும் பெருவாரியான கூந்தல் தைலங்கள் கரிசாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இரண்டு லிட்டர் கரிசாலைச் சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகும் அளவுக்குக் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார் கூந்தலை வளர்க்கும். 
விஷ்ணுகிரந்தி 
வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை இது. காய்ச்சல், இருமல் முதல் பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட. 
விஷ்ணுகிரந்தி
நெருஞ்சில் 
நாம் வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் `நெருஞ்சில்’ எனும் மூலிகை, ஒரு காதல் காப்பான்! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் (Sertoli Cells) அழிவு ஒரு முக்கியமான காரணம். அந்தச் செல்களை மீட்டெடுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. 
களை
இன்னும் களை என அடையாளபப்டுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கற்றாழை, நிலக்கடம்பு என வயலில் நெற் செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வளரும் பல தாவரங்களின் பயன்கள் மகத்தானவை.  களை என ஒதுக்கப்படுபவற்றை பாதுகாக்கவேண்டிய அவசியம் இன்றைக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் உரிய முறையில் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உரிய விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகித்தால் பல நன்மைகள் விளையும். குறிப்பாக அதுகூட ஒரு விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக இருக்கும். 

Wednesday, February 1, 2017

செல்போன், வீடியோ கேம்ஸில் மூழ்கும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள் -- நன்றி: விகடன் - 2017/02/01


நன்றி: விகடன் - 2017/02/01
 

ஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது நடக்கும் தெரியுமா?

விளையாடும் குழந்தைகள்
ன்றைய பெற்றோர்களின் முக்கிய நோக்கமே, தன் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 'ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியார்தான் 'உடலினை உறுதி செய்' என்றார். இன்றைய மாணவர்களுக்கு ஓடி விளையாடுவதற்கான நேரமோ, களமோ இல்லை என்பதுதான் பெற்றவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிற காரணங்களாக இருக்கின்றன. ஆனால்  உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், விளையாட்டுக்களினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விவரிக்கிறார்.
விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:
*ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.
*விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.
* விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.
* உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.
* சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.
* விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.
* மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.
செல்போன், வீடியோ கேம்ஸில் மூழ்கும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்...
* சுறுசுறுப்பு இல்லாமல் போதல், சிந்திக்கும் திறனை இழத்தல். ஒரே நேர்க்கோட்டில் பயணித்தல் ஆகியன ஏற்படும்.
* ஒரே திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் நாளடைவில் கண் பார்வை பாதிப்புக்குள்ளாதல், கண்ணில் நீர் வற்றிப் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
* சக நண்பர்களிடம் எப்படி பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற மரியாதை பண்புகள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும்.
* படிப்பில் கவனக்குறைவு, வீடியோ கேம்ஸில் உள்ள வன்முறை மனதில் பதிவது, மன அழுத்தம் போன்ற ஏற்படுதல்.

பெற்றோர் கவனத்துக்கு:
*ஒரு நாளில் அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்ஸ், டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
*தினமும் அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது மற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், விளையாட்டு (கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில்காக், டென்னிஸ்) வகுப்புகளில் போட்டிக்காக இல்லாமல் மனதை சமன்படுத்த, உடல் வளர்ச்சியடைய போன்ற காரணங்களுக்காக சேர்த்து விடுங்கள்.
*புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரியுங்கள்.
-என்.மல்லிகார்ஜுனா