களை அல்ல... உயிர்காக்கும் மூலிகை! நலம் நல்லது-65 #DailyHealthDose
‘களை எடுத்தல்’, ‘களை பறித்தல்’, `களை பிடுங்குதல்’... என வெவ்வேறுவிதமாகச் சொன்னாலும், விவசாயத்தில் நாம் `களை’ என ஒதுக்கித் தள்ளுவது எத்தனையோ அரிய மூலிகைகளை! அது மட்டும் இல்லாமல், சில மூலிகைத் தாவரங்களின் அருமையை அறியாமலேயே, குப்பை மேட்டிலும், கண்ட இடங்களிலும் வளர்வதால் ஒதுக்கித் தள்ளுகிறோம். பிடுங்கி எறிகிறோம். அப்படி களையென ஒதுக்கப்படும் சில தாவரங்களின் மருத்துவக் குணங்களையும் அவை தரும் நன்மைகளையும் அறிந்துகொள்வோமா?
பல்லுயிர் நலனில் அக்கறைகாட்டி வாழ்ந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கோ காடுகளில் தீயைப் பற்ற வைப்பது தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கும் நியூட்ரினோ துகள்வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கும் பல்லுயிரியம் சொல்லி மாளாதது. `எனக்கு உதவாத ஒன்று இந்த உலகத்தில் எதற்கு?’ என்ற இறுமாப்பு, மனிதனைத் தவிர வேறு எந்த இனத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி விவசாயத்தில் களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை.
விளைவிக்கப்படும் தாவரத்தின் வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு என்ற கேள்விதான் ஆந்த்ரோபோசென்ட்ரிசம் (Anthropocentrism) என்ற, மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்! இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான். அப்படிப்பட்ட சில களைகளின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்வோம்.
இவை களைகள் அல்ல... மூலிகைகள்!
நீர்முள்ளிச் செடி
நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடனும் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமான தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால் இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக் குறைவிலும், கால் பாதத்தில் வரும் நீர் தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
கரிசலாங்கண்ணி
‘தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணிக் கீரை அற்புதமான காயகல்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளில் கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
கரிசாலை
கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. `கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திடும்’ என்று அதீதமாக விளம்பரத்தப்படும் பெருவாரியான கூந்தல் தைலங்கள் கரிசாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இரண்டு லிட்டர் கரிசாலைச் சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகும் அளவுக்குக் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார் கூந்தலை வளர்க்கும்.
விஷ்ணுகிரந்தி
வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை இது. காய்ச்சல், இருமல் முதல் பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட.
நெருஞ்சில்
நாம் வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் `நெருஞ்சில்’ எனும் மூலிகை, ஒரு காதல் காப்பான்! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் (Sertoli Cells) அழிவு ஒரு முக்கியமான காரணம். அந்தச் செல்களை மீட்டெடுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஓர் ஆராய்ச்சி.
இன்னும் களை என அடையாளபப்டுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கற்றாழை, நிலக்கடம்பு என வயலில் நெற் செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வளரும் பல தாவரங்களின் பயன்கள் மகத்தானவை. களை என ஒதுக்கப்படுபவற்றை பாதுகாக்கவேண்டிய அவசியம் இன்றைக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் உரிய முறையில் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உரிய விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகித்தால் பல நன்மைகள் விளையும். குறிப்பாக அதுகூட ஒரு விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.
No comments:
Post a Comment