Tuesday, March 28, 2017


குழந்தைகளை Day Care -ல் சேர்க்குமுன் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்!

குழந்தைகளை
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் இல்லாத நிலையில் குழந்தைகளை டே கேர்- ல் விட்டுச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருக்கின்றன. பிள்ளைகள் Day Care ல் பத்திரமாக இருக்க பெற்றோர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இதற்காக பல இடங்களில் முளைத்திருக்கும் டே கேரில் பிள்ளைகளைச் சேர்க்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த யூரோ கிட்ஸ் டே கேர் (euro kids) பள்ளியின் இயக்குநரான ஐஸ்வர்யா.

1. உங்கள் பிள்ளையை டே கேரில் சேர்க்கும்போது, குழந்தை அதிகம் விரும்பும் மற்றும் பிடிக்காத விஷயங்களை, அங்கிருக்கும் காப்பாளரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் இதர விஷயங்களை வற்புறுத்திக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், டே கேர் குழந்தையை பயமுறுத்தாமல் பாதுகாப்புக்கான இடம் என்கிற எண்ணமும் அந்தக் குழந்தைக்கு வருவதற்கு இது உதவும்.

2. எந்த நேரத்தில் குழந்தையை டே கேரில் விடமுடியும், எந்த நேரத்தில் அழைத்து வர முடியும் என்பதை சரியாக முடிவெடுத்தப் பின்னர், அதற்கு ஏற்ற டே கேரில் சேர்ப்பது நல்லது. இதன் மூலம் குழந்தையை காக்க வைக்காமல் அழைத்துச் செல்லவும், இதர பிரச்னைகளில் இருந்தும் தவிர்க்கலாம்.

3. பிள்ளைகளுக்கு, பொதுவாக வீட்டில் கொடுக்கப்படும் உணவு வகைகளையே டே கேருக்கு கொடுத்தனுப்புங்கள். குழந்தை பழகட்டும் என்பதற்காக புதிய வகை உணவுகளைக் கொடுத்து, அதனால் குழந்தைக்கு அலர்ஜி போன்ற ஏதேனும் உபாதைகள் வந்தால் அதற்கு டே கேர் காரணமா, கொடுத்தனுப்பிய உணவா என்று கலங்கி, குழப்பமடைவதைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் Day Care

4. டே கேரில் விடும்போது, அன்றைய தினத்தில் உங்கள் வேலையின் நேரம் முன், பின் ஆகும் என்றால் அதை, காப்பாளரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவதே சரியானது.

5. டே கேரில் குழந்தையைச் சேர்க்க செல்லும்போதே, மாதக் கட்டணமா அல்லது வருடக் கட்டணமா என்பதையும் நன்கு விசாரித்துவிட்டுச் சேர்ப்பது நல்லது. உங்களுடைய நண்பர்கள் மற்றும் ஏற்கெனவே டே கேரில் குழந்தையை சேர்த்தப் பெற்றோர்கள் போன்றவர்களை விசாரிப்பது நல்லது. 

6. டே கேரில் சேர்க்கும் முன்னர் குழந்தை உறங்கும் ரூம் முதல் கழிவறை வரை அனைத்து இடங்களின் சுகாதராம் குறித்து கேட்டறிந்தும், நேரில் ஆய்வு செய்தும் தெரிந்துகொள்வது, உங்கள் குழந்தையின் உடல் நலத்தைக் காக்க உதவும். மேலும், உடல் நலக் கோளாறுகளில் இருந்தும் தவிர்க்க முடியும்.
குழந்தைகள் டே கேர்

7. டே கேரில் குழந்தைகளை விடும்போது அவர்கள் தூங்குவதற்கான பெட்ஷீட் முதல் பால் பாட்டில் வரை நீங்களே கொடுத்து தினமும் வாங்கி துவைத்து, கழுவி கொடுத்து அனுப்புவது நல்லது. சில டே கேரில் பெட்ஷீட், உணவு எல்லாம் பொதுவாக வழங்கப்படும். சிறு வயதில் இது போன்ற நுண்ணிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. இது மிக மிக முக்கியம் ஆகும்.

8. குழந்தைகளை அழைத்து வருபவர் மற்றும் விசிட்டரின் பெயரை, காப்பக பதிவில் பதிவிட வைப்பது அவசியம் இது குழந்தையின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவும்'. இவ்வாறு குழந்தைகளை டே கேரில் சேர்ப்பதற்கான விஷயங்களாக ஐஸ்வர்யா குறிப்பிடுகிறார்.

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்! thanks vikatan.com

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!


இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம், வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும்  எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.

                                        
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது.  நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். 

வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.

வாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.

 பழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம்  உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம். 

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றுவது, நம் முன்னோர்களின் வாழ்வியலை பின்பற்றுவதுதானே!

குழந்தைகளின் ஆரோக்கிய குளியலுக்கு இந்தப் பொடி அவசியம்! செய்முறை விளக்கம் thanks to vikatan.com

குளியலுக்கு
காலம் காலமாக, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்ட நம் பாரம்பர்ய பொருட்களால் தயாரித்த குளியல் பொடியையே பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்தலைமுறைப் பெண்கள். இன்றைய மம்மீஸ்களுக்கு அந்தப் பொடியில் ஆர்வம் இருந்தாலும், 'ஆனா அதை எப்படி தயாரிக்கிறது?' என்ற கேள்வியும் இருக்கிறது. அதைப் பற்றி விளக்குகிறார், இல்லத்தரசி மற்றும் இயற்கை ஆர்வலரான அல்லி. குழந்தையின் குளியலுக்கு அவசியமான ஒன்றை கவனமாக படியுங்கள்.
''இன்றைய இளம் தாய்மார்கள் சிலர், 'குழந்தைக்கு குளியல் பொடி அலர்ஜி ஆயிடாதே' என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்கள் நாட்டின் சூழலுக்கு ஏற்ப தயாரிக்கும் குளியல் சோப்புகளை, அந்த தட்பவெப்பத்தில் இருந்து மாறுபட்ட நம் நாட்டில் வியாபாரத் தந்திரத்துடன் விற்கிறார்கள். சொல்லப்போனால், அவற்றை வாங்கி குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்தான், 'இது நம் குழந்தையின் சருமத்துக்கு நல்லதா?' என்ற கேள்வி வரவேண்டும். நம் நாட்டில் வாழையடி வாழையாக நம் பூட்டிகளும் பாட்டிகளும் பயன்படுத்தி வந்த குளியல்பொடி குறித்து, எந்த சந்தேகமும் தேவையில்லை.
நான் என் பாட்டியிடம் கற்றுக்கொண்ட குளியல் பொடி தயாரிப்பு மற்றும் அதன் அனுபவ பலன்களை, என் மகள், மகளின் மகள் என அனைவருக்கும் கற்றுத் தந்திருக்கிறேன். நீங்களும் கீழே நான் குறிப்பிட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்துக்கடைகளில் கேட்டு வாங்கி, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். குழந்தையின் சருமத்துக்கு 100% இயற்கையான பாதுகாப்பு கவசம் இது.
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
ரோஜா இதழ் -  25 கிராம்
சந்தனக்கட்டை - 50 கிராம்
செஞ்சந்தனம் - 50 கிராம்
பாசிப்பயறு - 200 கிராம்
ஆவாரம் பூ இதழ், எலுமிச்சை இலைக்கொழுந்து - தலா 25 கிராம்
வேப்பிலைக் கொழுந்து - 25 கிராம்
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அதை மெஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வாங்கவும். அரைத்த பொடியை வெள்ளை பருத்தி துணியில் சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.
தினமும் குழந்தையைக் குளிப்பாட்டும்போது, இந்தப் பொடியில் சிறிது எடுத்து, தண்ணீர் சேர்த்துக் குழைத்துக் கலக்கவும். குழந்தையின் கண், காது தவிர மற்ற இடங்களில் குளியல் பொடியை நன்கு தடவி குளிப்பாட்டவும். ஆண் குழந்தைகளுக்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம். அவர்களுக்கான பொடி தயாரிப்பில், கஸ்தூரி மஞ்சளின் அளவை 25 கிராமாக குறைத்துக்கொள்ளலாம்.
இந்தப் பாரம்பர்ய குளியல் பொடியை, மூன்று வயதுவரை குழந்தைகளுக்குப் பயன்படுத்தி வர, சரும தொந்தரவுகள் அண்டாது. மேனி பளபளக்கும். மூன்று வயதுக்கு மேலான பெண் குழந்தைகள், இளம் பெண்கள், இல்லத்தரசிகள் என இந்தப் பொடியை எந்த வயதுப் பெண்களும் தொடர்ந்து பயன்படுத்தி வர, சருமம் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.''
குழந்தைகளின் உணவைக் கவனித்துகொடுப்பதைப் போலவே குளியலும் அக்கறைக் காட்டுவோம்.

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்! நலம் நல்லது-60 #DailyHealthDose thanks to vikatan.com

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்! நலம் நல்லது-60 #DailyHealthDose

நலம் நல்லது
ன்றைக்கு பார்பி டால்களையும் டெடி பியர்களையும் அணைத்துத் தூங்குகின்றன ஜென் இஸட் குழந்தைகள்! ஒரு காலத்தில் செப்புச்சாமான் விளையாட்டுதான் நம் மருத்துவ உணவு மரபையும், பாட்டி வைத்தியத்தையும் காப்பாற்றி வைத்திருந்தது. அதுதான் மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் மறைந்துபோகாமல், வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த உதவியது. இன்று எட்டிப் பிடிக்கவே முடியாத உயரத்துக்குப் போய்விட்டது அந்த மரபார்ந்த விளையாட்டு! செப்புச் சாமான் சொல்லிக்கொடுத்த வாழ்வியலை, பார்பி பொம்மைகளால் நிச்சயம் கற்றுத் தரவே முடியாது. `ஒல்லி இடுப்புடன் (ஸ்லிம் உணவுப் பொருட்கள் + உடற்பயிற்சிக் கருவிகளுக்கான வணிகம்), விதவித சாயங்களுடன் (அழகு சாதனப் பொருட்களின் விற்பனை), எண்ணெயில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருப்பது (அழகு நிலைய வர்த்தகம்) பெண்ணுக்கு அழகு’ என நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை அந்த பார்பி பொம்மைகள்.
மகளிர்
பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகளை ரோல் மாடலாக்கி, மெல்லிடை உடம்புக்காக, `பசிக்கலை; பிடிக்கலை’ என்று சாக்குப் போக்குச் சொல்லவைத்ததால், வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு உண்டான நோய்கள் ஏராளம்! பாலிசிஸ்டிக் ஓவரி, அனோரெக்ஸியா நெர்வோஸா, இர்ரிடபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற வயிறு, குடல், மனம், சினைப்பை சார்ந்த நோய்கள் பெண்களிடையே பெருகுவதை, இந்தப் பொம்மையின் உளவியலோடு ஒப்பிடும் ஏராளமான ஆய்வு முடிவுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. முன்னர் மாதவிடாய் நாட்களில் `தீட்டு’ எனக் காரணம் சொல்லி ஒதுக்கிவைக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்களை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி, அத்தைமார்கள். ஆனால், இன்றோ `மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்றே பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. `அந்த நாளிலும் நான் ஆறு செட் டென்னிஸ் விளையாடுவேன்’ என்ற விளம்பரம் தன்னம்பிக்கை கொடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கினை வாங்குவதற்கான தூண்டுதலே தவிர, பெண்ணின் உடல்நலம் மீதான கரிசனம் அல்ல. இப்போதெல்லாம் உதிரப்போக்கு வேதனையைத் தாங்கும் உடல் வன்மையைப் பெண்களுக்கு அளிக்கும் உணவைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. நவீனம் சொல்லும் தொலி உளுந்து, சோயா, பப்பாளி மட்டும்தான் பெண்ணுக்கானதா? நிச்சயம் இல்லை. மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் இன்றைக்கு இல்லவே இல்லை.
பார்பி பொம்மை
 ​​​பெண்களின் உடல்நலத்துக்கு என பல ரெசிப்பிக்கள் நம் மரபிலேயே இருக்கின்றன. அவற்றில் சில...
* பெண்ணுக்குத் தேவையான பிரத்யேக புரதங்கள் நிறைந்த பருப்பு உசிலி, முக்கியமான ஒன்று. எந்தக் காய்கறியிலும் இந்த உசிலியைச் சேர்த்துத் தயாரிக்க முடியும். குறிப்பாக, கொத்தவரை - பீன்ஸ் ஜோடி ஹிட். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சம் பெருங்காயம், மிளகாய், உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்போது இந்தப் பருப்பு விழுதை வதக்கி, வேக வைத்து, அதன் பின்னர் காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிக்கவும். பருப்பு உசிலி பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு.  
கதம்ப உசிலி
* நாம் மறந்துபோன காய்களில் ஒன்று அத்திக்காய்; துவர்ப்புத் தன்மைகொண்டது. இதன் கனி, அதிக நார், இரும்புச்சத்து, அனைத்து வைட்டமின்கள் நிறைந்தது. காயாகவும் கனியாகவும் சாப்பிடக்கூடிய அத்தியின் பயன் குறித்து, நம் ஊர் சித்த மருத்துவத்திலும், பைபிளிலும், கிரேக்க இலக்கியத்திலும்கூடச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டிய கனி. மாதவிடாய்க்கு முந்தைய நாளில் திடீரென வரும் மூக்கடைப்பு, தும்மலுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்து அத்திக்காய் பச்சடி.
அத்தி
* வாழைப்பூவைச் சமைப்பது கஷ்டம் என்பதால், கிட்டத்தட்ட அதைத் தவிர்த்தேவிட்டோம். ஆனால், இளம் பெண் குழந்தைகளில் மாதவிடாய் தொடக்கக் காலத்தில் வரும் அதிக ரத்தப்போக்குக்கு வாழைப்பூவும் துவரம் பருப்பும் உணவாகும் மருந்து. பெண் குழந்தைகளுக்கு வாழைப்பூ வடகம் செய்து காயவைத்துக் கொடுக்கலாம்.
வாழைப்பூ
* 11 முதல் 45 வயது வரை மாதவிடாய்க் காலங்களில், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, புரதச்சத்து என நவீன அறிவியல் பரிந்துரைக்கும் உணவியல் கூற்றுடன் பித்தத்தைச் சீராக்கும் உணவும் பெண்ணுக்கு மிக அவசியம்.
* இன்று பெருகிவரும் `பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்க, குழந்தைப் பருவம் முதலே பெண்களுக்கு உணவுதான் மிக மிக அவசியம். பல குழந்தைகளுக்கு துவர்ப்பும் கசப்பும் பிடிக்காத சுவையாக மாறிவருகின்றன. வெறும் இனிப்பும், கூடுதல் எண்ணெயில் பொரித்தவையும் மட்டுமே குழந்தைகளுக்குப் பிடித்ததாக ஆகி வருகின்றன. இரண்டுமே, பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி பெருக அடித்தளம் அமைக்கும். அதிகபட்ச மருத்துவக் குணமுள்ள துவர்ப்பு, கசப்பு சுவையுள்ள காய் கனிகளை சாப்பிடப் பெண் குழந்தைகளைப் பழக்கினாலே போதும்... பல வியாதிகளை நம்மால் விரட்டிவிட முடியும். மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய உணவும் மரபும் நம் பாரம்பர்யம். அதை நினைவில் கொள்வோம்.
மரபுகள் தானாக மாறவில்லை, நாம்தான் தொலைக்கிறோம்... சில சமயம் திட்டமிட்டு; சில நேரம் திருடப்பட்டு!

முடி உதிர்வுக்கு முடிவு கட்ட 5 எளிய வழிமுறைகள்! #HairLossTips thanks to vikatan.com


முடி உதிர்வுக்கு முடிவு கட்ட 5 எளிய வழிமுறைகள்! #HairLossTips

ன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த பெண்களை பரவலாகக் காண முடிகிறது. முடி உதிர்வைத் தடுக்க முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது... எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள். ஒரு பக்கம் இவற்றால் கிடைக்கும் பலனைவிட செலவுதான் அதிகம். முடி உதிர்வைத் தடுக்க, நன்கு முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன. அவற்றை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அப்படிப்பட்ட ஐந்து வழிமுறைகள் இங்கே...
முடி உதிர்வு
ரிலாக்ஸ் தெரபி 
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துபவை. ஆயில் மசாஜ் செய்துகொள்வதாலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் உடலும் மனமும் தளர்வடையும் (ரிலாக்ஸ் ஆகும்). மசாஜ் தெரபி மற்றும் ரிலாக்ஸ் தெரபி ஆகிய இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதங்களில் முடி உதிர்வது நின்று, ஆரோக்கியமாக முடி வளர ஆரம்பிக்கும். பிரசவத்தாலும், தீவிர மன உளைச்சலாலும், முடி உதிர்வு பிரச்னையை எதிர்கொள்கிறவர்கள் இந்த இரு சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். 
அரோமா தெரபி 
அரொமா ஆயில்களால் தலையில் மசாஜ் செய்யும்போது, பல வகையான பலன்கள் நமக்குக் கிடைக்கும். லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில், செடார்வுட் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியக்கூடியவை. ஆனால் இவற்றை அப்படியே உபயோகிக்கக் கூடாது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள அரோமா ஆயில்களில் ஒன்றை 1 சொட்டு அளவு மட்டும் சேர்த்து, தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முடியின் நுனி முதல் அடி வரை எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இதன் மூலம் எடுத்துச் செல்லலாம். இது, முடியின் வேர்கள் பலமாகவும், சீராக வளர்வதற்கும் தூண்டும். 
பூண்டு வெங்காயம்
வெங்காயம் மற்றும் பூண்டு
சிலருக்கு பூச்சி வெட்டால், தலையில் முடியில்லாமல் ஆங்காங்கே வழுக்கை விழுந்ததுபோலத் தோன்றும். இதற்குச் சிறந்த மருந்து, வெங்காயம்தான். வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்துவர, பூச்சி வெட்டு மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கும். முடியின் வேர்கள் வலுவடையும். வெங்காயம் மட்டுமல்லாமல் பூண்டும் மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அளிக்கக்கூடியது. தினமும் இரண்டு முறை பூண்டின் சாற்றை தலையில் தேய்துவந்தால், மூன்றே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். 
மனோவசியம் 
முடி உதிர்வுக்கு மேலும் ஒரு முக்கிய காரணம், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனரீதியான பிரச்னைகளே. ‘ஹிப்னோதெரபி’ (Hypnotherapy) எனப்படும் மனோவசியப் பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு, தன் மீது இருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். அதனால் மன உளைச்சல் குறையும்; முடி உதிர்வதும் குறையும். ஹிப்னோதெரபி பயிற்சியை எடுத்துக்கொள்வதால், உதிர்ந்த இடத்திலும்கூட முடி வளர்வதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஊட்டச்சத்து அவசியம்
ஊட்டச்சத்து அவசியம்! 
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை. 
மேலே குறிப்பிட்டிருக்கும் ஐந்து வழிமுறைகளை எளிதாக வீட்டில் நாமே செய்துகொள்ளலாம்; முடி உதிர்வைத் தடுக்கலாம்; வசீகரமான தோற்றப் பொலிவோடு வலம் வரலாம்.

Monday, March 27, 2017

அளவாகச் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க!

அளவாகச் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க!

12 ஹெல்த்தி டிப்ஸ்...உணவு
ன்ன செய்தாலும் வெயிட் மட்டும் குறையவே மாட்டேங்குது. வாயை கட்டவே முடியல... சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? அளவாகச் சாப்பிடும் பழக்கத்தை எப்படிப் பின்பற்றுவது?
உங்களுக்காகவே இந்த டிப்ஸ்... 

* பசியில் ‘பொய்ப் பசி' என்பதும் இருக்கிறது. டயட்டில் இருக்கும்போது, இந்த உணவைச் சாப்பிடக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கும்போது பசி உணர்வு தோன்றும். இது பொய்ப்பசியின் வேலைதான். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும், பசி அடங்கிவிடும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறும் அருந்தலாம். 

* பசி வரும்போது, சுகர் ஃப்ரீ சூயிங்கம் மெல்லலாம். அதேநேரம், சமைக்கும்போது வயிற்றில் அமிலம் சுரந்து பசியை ஏற்படுத்தும். அப்போதும் கூடச் 'சூயிங்கம்' மென்று பசியை வெல்லலாம். 

* கிரேவிங் உணர்வு வரும்போது, சிறிது தூரம் நடக்கலாம். 

* இரண்டு உணவு இடைவெளிக்கு நடுவே பசி எடுத்தால், ஏதேனும் ஒரு பழத்தைச் சாப்பிடலாம். 

* பைட் ரூல் (Bite Rule) என்பார்கள். எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்றாக மென்று, சுவைத்துச் சாப்பிட்டால் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். வயிறு நிறையும். நடுவில் பசிக்காது. 

* காலை, இரவு என இருவேளைகளிலும் பல் தேய்க்கும் பழக்கத்தை அவசியமாக்குங்கள். எப்போதெல்லாம் உணவு உண்கிறோமோ, அதன் பிறகு நன்றாக வாய்க் கொப்பளிக்க வேண்டும். 

* நின்றுகொண்டே சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது. இது ஆரோக்கியத்துக்கும் கேடு! 

* குழந்தைகள் மிச்சம் வைக்கும் உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அவை உங்களுக்கான உணவல்ல. 

* உங்கள் வீட்டு சமையலறையை 8 மணிக்கு மேல் திறக்காதீர்கள். அதற்குள் இரவு உணவை முடித்தாக வேண்டும் என்ற சூழலை உருவாக்குவது நல்லது. 

* உணவைச் சாப்பிடும் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே, சாலட், சுண்டல், சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். இதனால், சாப்பிடும் உணவின் அளவு குறையும். 

* இன்று என்ன சாப்பிட்டோம், நாளை என்ன சாப்பிடப்போகிறோம் என டயட் லிஸ்ட்டை எழுதுங்கள். இதனால், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்கிற அளவு தெரியும். எது நல்ல உணவு, துரித உணவு என்று புரிந்துகொள்ளவும் முடியும் 

ஓல்டு இஸ் கோல்டு! - மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம் thanks to doctor vikatan

ஓல்டு இஸ் கோல்டு! - மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம்

குடும்பம்அபிராமி, இயற்கை மருத்துவர்
ரபரப்பான நவீன வாழ்க்கை, நமக்குத் தந்த நோய்கள் பல. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் முதல் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், தொப்பை, சர்க்கரைநோய், இதய நோய்கள், புற்றுநோய்... என நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கம்பஞ்சோறும், ராகிக்கூழும் உண்டுவிட்டு காட்டுக்குப் போய் மாங்குமாங்கெனப் பாடுபட்டு வந்த காலத்தில் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் இல்லாத நோய்கள் எல்லாம் இன்று நம்மை ரவுண்டுகட்டி அடிக்கின்றன. இதற்கு எல்லாம் என்ன காரணம்? மாடர்ன், ட்ரெண்ட், ஸ்டைல் என நம்பி, பழைய வாழ்க்கைமுறையில் இருந்த ஆரோக்கியமான விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு புதியதன் பின்னால் ஓடியதுதான் காரணம். இப்போது, ‘ஆர்கானிக்குக்குத் திரும்புவோம்... பழைமைக்குத் திரும்புவோம்' என்ற குரல்கள் மெள்ள வலுப்பெற்று வருவதைப் பார்க்கிறோம். இதை, `ரிவர்ஸ் லைஃப்ஸ்டைல்’ (Reverse lifestyle) என்கிறார்கள்.
உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மூன்றுமே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையானவை. இவற்றை நல்வழியில் மாற்றி அமைப்பதன் மூலம் நலம் காணலாம். முதலில் உணவைப் பற்றிப் பார்ப்போம்.

* நாம் தினசரி உண்ணும் உணவு, நம் உடலுக்கு ஆற்றல் தருவதோடு, நம் உடலின் பெளதீகக் கட்டுமானத்துக்கு அடிப்படையானதாக இருக்கிறது. அதனால், ஏதோ சாப்பிட்டோம் என்று விட்டுவிட முடியாது. இயற்கையாக விளைந்த, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்களையே இயன்றவரை பயன்படுத்த வேண்டும். தற்போது பல இடங்களில் இயற்கை வேளாண் பொருள்களுக்கான கடைகள் உள்ளன. இப்படித் தேர்ந்தெடுத்து உண்ணும்போது, உடலுக்குத் தீங்கான வேதிப்பொருள்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், உடல் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளுக்கும், துடிப்பான உடல் செயல்பாட்டுக்கும் ஆர்கானிக் உணவுகள் அச்சாரம் இடுகின்றன.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரோ,  அரை மணி நேரத்துக்குப் பின்னரோ மட்டுமே தண்ணீர் பருக வேண்டும். இடையில் மிகவும் அவசியமானால், தண்ணீர் குடிக்கலாம்.  சாப்பாட்டுக்கு இடையில் அதிகமாகத் தண்ணீர் பருகுவது அஜீரணக்கோளாறுக்குக் காரணமாகும்.

* நம் பாரம்பர்ய முறைப்படி, நமது உடலுக்கு அரிசி உணவுகளைத் தவிர, பிற தானியங்களால் செய்யப்படும் உணவுகளும் மிக முக்கியம். குறிப்பாக கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, வரகு, பனிவரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை தினசரி உணவில் ஒரு வேளையாவது சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், இந்தச் சிறுதானியங்களைக் கஞ்சியாகவோ, கூழாகவோ செய்தால் பெரியவர்கள் உண்பார்கள். ஆனால், குழந்தைகளை உண்ணவைப்பது மிகவும் கடினம். எனவே, அவர்களுக்குச் சிறுதானியங்களில் செய்யக்கூடிய பலகாரங்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றைச் செய்துகொடுக்கலாம்.

* உணவில் எந்த அளவு சிறுதானியம், அரிசி, கோதுமை இருக்கிறதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாகக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இருக்க வேண்டும். பல வண்ணக் காய்கறிகள், பழங்களில் தினசரி ஒரு வண்ணம் என உண்ணலாம். இதனால், அனைத்துப் பழங்கள், காய்கறிகளில் உள்ள பலன்களும் உடலுக்குக் கிடைக்கும்.
* பழங்களை நன்கு நீரில் கழுவியபின், அப்படியே கடித்துச் சாப்பிடுவதே நல்லது. இயன்றவரை பழச்சாறாக அருந்துவதைத் தவிர்க்கலாம். அப்படியே அருந்தினாலும், பால், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்க்காமல் ஜூஸாக்கிச் சாப்பிடுவதே சிறந்தது. செயற்கையான பழச் சாறுகளில் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. 

* பாக்கெட்களில் அடைக்கப்பட்ட எந்த ஓர் உணவையும் எடுத்துக்கொள்ளவே கூடாது. இன்ஸ்டன்ட் மிக்ஸ், மசாலா பொடிகள், டப்பாக்களில் அடைத்த உணவுப்பொருள்கள் என அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* உணவில் வெள்ளைச் சர்க்கரையைக் குறைத்துக்கொண்டு நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், தேன் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

* முடிந்த அளவு வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, எண்ணெயில் பொரித்த பண்டங்களை வெளியில் உண்ண வேண்டாம். வீட்டில் ஆரோக்கியமான உணவுகளான சுண்டல், பயறு, உளுந்து வடை, எள் உருண்டை ஆகியவற்றைச் செய்து உண்ணலாம்.

* நம்முடைய உணவின் அளவு எப்போதுமே காலையில் அதிகமாகவும், மதியம் சற்றுக் குறைவாகவும், இரவில் அதைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டும். இரவில் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை. மேலும், இரவு படுக்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

* தண்ணீரை பிளாஸ்டிக் கோப்பைகளிலும் பாட்டில்களிலும் அடைத்துவைக்காமல், செம்புப் பாத்திரம், மண் கலயம் போன்றவற்றில் வைத்துக் குடிக்கவும். இது உடலுக்கு மிகவும் நல்லது.

* குறிப்பிட்ட சீஸனில் விளையும் காய்கறிகள், பழங்களைத் தவறாமல் சாப்பிட வேண்டும். சீஸன் அற்ற காலங்களில் கிடைக்கும் பழங்கள் இயற்கையான முறையில் இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே, அவற்றை அளவாகச் சாப்பிடலாம்.
* வாரம் ஒரு முறை நோன்பு இருக்க வேண்டும். ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழங்களை மட்டுமோ காய்கறிகளை மட்டுமோ சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு நோன்பு இருக்க வேண்டும்.
ஓய்வும் உறக்கமும்

* நாம் உறக்கத்தைக் கண்டுகொள்வதே இல்லை. பலர் கடனே என்று உறங்குகிறோம். ஆனால், உறக்கம் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். நாம் உறங்கும் நேரத்தில்தான், நம் உடல் பல வேலைகளைச் செய்கிறது. உறக்கம் என்றால் எப்போது வேண்டுமானாலும் உறங்கக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை உறங்குவதுதான் சரியானமுறை. அந்த நேரத்தில்தான் உடலுக்குத் தேவையான அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன.

* காலை 4 மணி, அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னதாக எழுவது மிகச் சரியான பழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கைமுறையில் இது  மிகவும் கடினமான ஒரு விஷயம். முடிந்த அளவு இரவு சீக்கிரம் உறங்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும். தேவை இல்லாமல் டி.வி., மொபைல் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தை உறக்கத்தில் செலவிடலாம்.

* முந்தைய காலத்தில் இரவில் மிகவும் வெளிச்சமாக எதுவுமே இருக்காது. ஆனால், இன்று  நாமோ இரவில் டி.வி., மொபைல்போனைப் பார்க்கிறோம். நாம் உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்க வேண்டும். கண்களை உறுத்தாத, உறக்கத்தைப் பாதிக்காத  சிறு விளக்கு இருந்தால் மட்டும் போதுமானது.

உடற்பயிற்சி


* தினமும் காலை 4:00 - 6:00 மணி வரை நன்றாக வியர்க்கும் அளவுக்குக் கடினமான வேலையோ, உடற்பயிற்சியோ செய்ய வேண்டும். இன்றைய சூழலில் பலர் நண்பகல் 11:00 மணி அளவில் ஜிம்முக்குச் செல்கிறார்கள். இது முழுமையான பலனைத் தராது. அதிகாலையில் செய்வதுதான் சிறந்த உடற்பயிற்சி.

* மாலையில் செய்வதானால், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். கடினமாகச் செய்வதைத் தவிர்க்கவும்.

* நடைப்பயிற்சி செய்பவர்கள் பேசிக்கொண்டோ, பாடல்களைக் கேட்டுக்கொண்டோ செய்வதைத் தவிர்க்கவும். இது நடைப்பயிற்சியின் முழுமையான பலனைத் தராது.

* தினமும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். முன்பு தினமும் காலையில் மாலையில் என பூஜைகளை இதற்காகத்தான் செய்தார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பின் பூஜைகளோ, இல்லாவிடில் தியானமோ செய்யலாம்.

இவை அனைத்தையும் தாண்டி, நாம் மறந்து போன மிக முக்கியமான வாழ்க்கைமுறைகளில் ஒன்று, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. வெள்ளி செவ்வாய் பெண்களும், புதன், சனி ஆண்களும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிக் குளிப்பதன் மூலம் உடலில் ஏற்பட்டிருக்கும் சூடு குறைவதோடு, வாதம், கபம், பித்தம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.

- ந. ஆசிபா பாத்திமா பாவா


படங்கள்: செளமியா ரகுநாத்