Saturday, September 29, 2018

செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’ thanks vikatan.com

செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’

மஞ்சள் பால்… கலர் பால்… மருந்துப் பால்… மசாலாப் பால், கலவைப் பால் எனப் பல பெயர்கள் இதற்கு இருந்தாலும், இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பெயர் `தங்கப்பால்’தான்.

செரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்!’
ங்கப்பால்... பசும்பால் தெரியும் ஆட்டுப்பால் தெரியும் ஒட்டகப்பால் தெரியும்… அதென்ன தங்கப்பால். விலை உயர்ந்த தங்கத்தைப் பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பாலா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தங்கத்தின் விலை பற்றியெல்லாம் கணக்கிட்டு கற்பனையை ஓடவிட வேண்டாம். சளி, இருமல், ஜலதோஷம் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பரிந்துரைக்கும் உன்னதமான மருந்துதான் இந்த `தங்கப்பால்’. 
தங்கப்பால்
நெடுங்காலம் முதலே பாலுடன் மஞ்சள் மற்றும் சில மணமூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருத்துவக்குணமிக்க மஞ்சள் பாலைத்தான், இப்போது `தங்கப்பால்’ என்கிறார்கள் மேலை நாட்டினர். உண்மைதான்… விலை உயர்ந்த தங்கத்தைவிட, மூலிகைப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் மஞ்சள்பால் கொடுக்கும் பலன்கள் அதிகமானவை. பாலோடு மஞ்சள் சேர்க்கும்போது கிடைக்கும் நிறம், தங்கம் போல ஜொலிக்கும் தானே!... தாராளமாக இதைத் தங்கப்பால் என அழைக்கலாம். 
சமைத்து முடித்த உணவுகளுக்கு நிறத்தைக் கொடுக்கவும் அழகூட்டவும் மட்டுமே இவ்வளவு நாள்களாக மேலைநாடுகளில் மஞ்சளைப் பயன்படுத்தப்படுத்தி வந்தனர். மஞ்சளுக்குள் விரவிக் கிடக்கும் மருத்துவக் கூறுகளை அலசி ஆராயத் தொடங்கியதன் விளைவாக, இப்போது மஞ்சளை விசாலமாகப் பயன்படுத்தும் சிந்தனை அவர்களுக்குத் துளிர்விட்டிருக்கிறது. நம்மிடம் உள்ள இந்த அற்புதமான மருந்தை, நாம்தான் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லையோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. நம் நாட்டின் மருத்துவப் பெருமை இப்போது `கோல்டன் மில்க்’ (Golden milk) என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே!

மூட்டுவலி
பாலில் மஞ்சள், மிளகு, ஏலம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் `தங்கப்பால்’ பல்வேறு நோய்களை நீக்கும் குணமுடையது. அதுவும் இப்போது தொடங்கியிருக்கும் மழைக்காலத்துக்கு மிகவும் அவசியமான மருத்துவப் பானம் இது. மூக்கிலிருந்து நீர்வடியும் போது… தொண்டையில் கரகரப்பு மேலோங்கும் போது… தலை பாரமாக உணரும் போது… அடுக்கடுக்காக இருமல் துன்பப்படுத்தும் போது… உடனடியாக மாத்திரைகளைப் பயன்படுத்த பரபரக்க வேண்டாம். பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்துக் குடித்துப் பாருங்கள். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல் விரைவில் பலன் கிடைக்கும். 
மஞ்சளில் இருக்கும் `குர்குமின்’ (Curcumin) எனும் வேதிப்பொருள், மஞ்சள் பாலின் வீரியத்தை அதிகரிக்கிறது. குர்குமினின் நோய் போக்கும் திறனை, உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. மனதை உற்சாகப்படுத்தி, மனச்சோர்வை (Depression) குறைக்கும் வன்மையும் குர்குமினுக்கு இருப்பதாக ஆய்வு நிரூபிக்கிறது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் தங்கப்பாலைப் பயன்படுத்தலாம். 
பாலுடன் மஞ்சள், சுக்கு, மிளகுத் தூள், அமுக்கிராங்கிழங்கு பொடி, பாதாம் பருப்பு என இயற்கைப் பொருள்களை சேர்த்துத் தங்கப்பாலின் மதிப்பை மேலும் கூட்டலாம். இவை உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். பொதுவாகப் பாலில் மஞ்சள், மிளகு, இஞ்சி, ஏலம் போன்ற பொருள்களைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சளுடன் மிளகு சேர்க்கும்போது, இரண்டின் மருத்துவக் குணங்களும் அதிகரிக்கும். மஞ்சளின் `குர்குமின்', மிளகின் `பைப்பரின்’ ஆகியவை வினைபுரிந்து, வீரியமிக்க மருந்தாக மாறும். கிருமிநாசினி செய்கையுடைய இவை, தொற்றுக்கிருமிகளின் ஆதிக்கத்தை அழித்து நோய்களிலிருந்து நீக்கி துரித நிவாரணம் அளிக்கும்.  
மஞ்சள்
பொதுவாகவே மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உண்டு. மஞ்சளுடன் பாலில் சேர்க்கப்படும் இதர நறுமணமூட்டிகளிலும் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கின்றன. இவை வளர்சிதை மாற்றத்தால் உடலில் உருவான கழிவுகளை (Free radicals) வெளியேற்றி செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் புற்றுநோய் செல்கள் தூண்டப்படாமல் பார்த்துக்கொள்ளவும் இந்தக் கலவைப் பாலில் உள்ள வேதிப்பொருள்கள் உதவுகின்றன. இஞ்சியில் உள்ள `ஜிஞ்ஜெரால்’ எனும் வேதிப்பொருள், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.
மஞ்சள், ஏலம், மிளகு… என அனைத்துக்கும் உடலில் உண்டாகும் வீக்கத்தைக் கரைக்கும் தன்மை இருக்கிறது. மூட்டுகளில் உண்டாகும் வலியைக் குறைப்பதற்கும், ரத்தக் குழாய்களில் ஏற்படும் சிறு மாறுதல்களை முறைப்படுத்துவதற்கும் இவை உதவும். மூளையின் செல்கள் புத்துணர்ச்சி அடைவதற்கும் மறதியைத் தடுக்கவும் நறுமணமூட்டிகள் கலந்த பாலை பருகலாம். முதிர்ந்த வயதில் உண்டாகும் `அல்சைமர்’ நோய்க்கு மூளையில் படியும் அமைலாய்டு திட்டுகள் (Amyloid plaques) முக்கியக் காரணம். இந்தத் திட்டுகள் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் உதவும் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம். ஒவ்வாமை சார்ந்து தோலில் உண்டாகும் குறிகுணங்களைக் குறைக்கவும் மஞ்சள் பால் பயன்படும்.
கறந்த பாலை அப்படியே எடுத்துவந்து, மென்மையான புன்னகையுடன் அளந்து ஊற்றி, வீட்டில் உள்ள சிறு குழந்தைக்காகக் கொஞ்சம் கொசுறு பால் ஊற்றி, சுவரில் சின்னக் கோடு கிழித்துவிட்டுச் செல்லும் பால்கார அண்ணன்களை இந்தத் தலைமுறை அறியுமா எனத் தெரியவில்லை. கறந்த பாலில் இருக்கும் கதகதப்புடன் மஞ்சள் மற்றும் கறுப்புத் தங்கமான மிளகைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, மழைக்காலத்தில் உண்டாகும் கபநோய்களுக்கான மருந்தைத் தயாரித்துக் கொடுக்கும் சூழல் ஒவ்வொரு வீட்டிலும் அதிகரிப்பது முக்கியம். 
இஞ்சி
சுண்ணாம்புச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கும் இந்தப் பானம் ஒரு வரப்பிரசாதம். எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். கலப்படமில்லாத மஞ்சளை மருந்தாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். செயற்கைச் சாயங்கள் நிறைந்த மஞ்சள் தூளைக் கொண்டு தயாரிக்கப்படும் மஞ்சள் பால், விபரீதங்களையே உண்டாக்கும். சிறுவியாபாரிகளிடமிருந்து மஞ்சள் கிழங்கை நேரடியாக வாங்கி, உலர்த்திப் பயன்படுத்துவது சிறந்தது. வாய்ப்பிருந்தால் பாலையும் நேரடியாக வாங்க முயலலாம். பால் பவுடர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம், மருத்துவப் பானமாக இருக்காது. 
மேலை நாடுகளில் அதிகளவில் காணப்படும் செரிமானப் பாதை சார்ந்த நோய்களுக்கு நம்முடைய பாரம்பர்யமிக்க `தங்கப்பால்’ நிச்சயம் பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலைநாட்டு உணவுக் கலாசாரத்துக்குப் பழகிவரும் நமக்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தங்கப்பாலைப் பருகலாம். இதை தினசரி பானமாகப் பயன்படுத்தாமல், குறிகுணங்களுக்கேற்ப மருந்தாகப் பயன்படுத்துவது சிறந்தது. பாலின் சர்க்கரையை செரிக்க முடியாத `லாக்டோஸ் இண்டாலரன்ஸ்’ நோய் நிலையில், பாலைப் பயன்படுத்த முடியாது. பருமனான உடலமைப்பு உடையவர்கள், நீண்ட நாள்கள் தொடர்ந்து பாலைப் பருக வேண்டாம். ஒரு டம்ளர் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளும், மற்ற நறுமணமூட்டிகள் கால் டீஸ்பூனும் சேர்த்துக் கொதிக்க வைத்து தங்கப்பாலைத் தயாரிக்கலாம். 
மஞ்சள் பால்… கலர் பால்… மருந்துப் பால்… மசாலாப் பால், கலவைப் பால் எனப் பல பெயர்கள் இதற்கு இருந்தாலும், இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பெயர் `தங்கப்பால்’தான். இவ்வளவு பெருமைகள் நிறைந்த நமது பாரம்பர்ய பால், உண்மையில் `தங்கப்பால்’ தானே! 

Tuesday, September 25, 2018

தேவையும், பேராசையும் thanks to tamil and vedas


தேவையும், பேராசையும்! (Post No.5462)

by Tamil and Vedas
Written by S NAGARAJAN
Date: 24 SEPTEMBER 2018

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

Post No. 5462

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


ச.நாகராஜன்

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.


முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.


மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.


புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.
கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.


அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.
தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:


மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.


இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.
அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.


கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.
இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.
2
இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

He who knows his need
And yet without greed
Whatever be his creed
He is a saint indeed.

இது தான் அந்தக் கவிதை!

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ
தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ
அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே
உண்மையில் அவனே ஒரு மகான்!

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.
இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.
***

Friday, August 31, 2018

thanks to tamil and vedas.com


30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 30 August 2018

Time uploaded in London – 13-02 (British Summer Time)

Post No. 5378

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;
5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20
முகூர்த்த நாட்கள்- 6, 12

செப்டம்பர் 1 சனிக்கிழமை

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

கல்விக்கழகு கசடற மொழிதல்

செப்டம்பர் 3 திங்கட்கிழமை
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை
வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

செப்டம்பர் 5 புதன்கிழமை
மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

செப்டம்பர் 6 வியாழக்கிழமை
வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை
உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்


செப்டம்பர் 8 சனிக்கிழமை
மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை
தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை


செப்டம்பர் 10 திங்கட்கிழமை
உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை
பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

செப்டம்பர் 12 புதன்கிழமை
குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

செப்டம்பர் 13 வியாழக்கிழமை
அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை
வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

செப்டம்பர் 15 சனிக்கிழமை
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும்மே
நறுந்தொகை (வெற்றி வேற்கை)

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

செப்டம்பர் 17 திங்கட்கிழமை
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

செப்டம்பர் 19 புதன்கிழமை
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்


செப்டம்பர் 20 வியாழக்கிழமை
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை
அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

செப்டம்பர் 22 சனிக்கிழமை

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

செப்டம்பர் 26 புதன்கிழமை
அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே


செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே


செப்டம்பர் 29 சனிக்கிழமை

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே


செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோராயின் பொறுப்பது கடனே

Tuesday, August 28, 2018

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை! thanks to vikatan.com

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன?’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க, இன்றைய குழந்தைகளைச் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஆண் பிள்ளைகளிடம் தன் சமூகத்தில் நடக்கும் நல்லவைக்குத் தானும் பங்களிக்க வேண்டியதையும், அல்லவைக்கு எதிராகச் செயல்பட வேண்டியதையும் சொல்லி வளர்க்க வேண்டும்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அருள்செல்வி. 
‘`பெண் குழந்தைக்கு உடுத்தும் உடையிலிருந்தே பெற்றோரின் அக்கறை தொடங்கிவிடுகிறது. ஆனால், ஆண் குழந்தையின் நிர்வாணம் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘நாம் ஆம்பள... எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் எழத்தொடங்குவது இதிலிருந்துதான். ‘நீ ஓர் ஆண். உனக்கான கண்ணியத்தைக் கட்டமைத்துக்கொள்’ என்று அவர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும். ‘அவமானம், வெட்கம், குற்ற உணர்ச்சி போன்ற எந்த உணர்விலிருந்தும் ஆண் என்பதற்காக உனக்கு விலக்கு இல்லை. அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படு; வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படு. அவற்றை மீண்டும் செய்யாதே. சக பெண்ணின் மனதைக் காயப்படுத்தினால் குற்ற உணர்ச்சிகொள்’ என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

‘அவன் அப்படித்தான்’ என்று தங்கள் ஆண்பிள்ளைகளை ரஃப் அண்டு டஃபாக வளர்த்தெடுப்பதே இங்கு பல அம்மாக்களுக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, பெற்ற உதவிக்கு நன்றி சொல்வது, முகம் பார்த்தவுடன் புன்னகைப்பது, நல்ல வார்த்தைகள் பேசுவது என எல்லோராலும் விரும்பப்படுபவனாக அவன் வளர்ந்து நிற்குமாறு வார்த்தெடுக்க வேண்டும். ‘யார் சொன்னாலும் கேட்க மாட்டான்’ என்று பிள்ளையை வளர்ப்பது அல்ல குட் பேரன்ட்டிங். ‘யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்குவான்’ என்று அவனை ஃப்ளெக்ஸிபிளாக வளர்ப்பதே சரியான வளர்ப்பு முறை.

குழந்தைகளின் சமூக நடத்தை மேம் பாட்டில் குடும்பம், பள்ளி மற்றும் சமூகம் என இந்த மூன்று தரப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீடுகளில் செல்போனை விளையாடக் கொடுக்காமல், நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் மாரல் வகுப்புகள் நிச்சயம் வேண்டும். குறிப்பிட்ட வேலையை முடித்தல், ரூல்ஸ் அண்டு ரெஸ்பான்ஸிபிலிட்டி போன்ற பழக்கங்களைப் பள்ளி நடைமுறை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகத்தில் உள்ள ஆக்கபூர்வமான விஷயங் களை ஆண் குழந்தைகளுக்கு வீடு, பள்ளி இரண்டு தரப்பும் அறிமுகப்படுத்த வேண்டும். உலகத்துடன் அவர்கள் தயக்கமின்றிப் பழக அனுமதிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். ‘இவரை மாதிரி இருக்கணும்’ அல்லது ‘இவங்க செய்யற மாதிரி செய்துடக் கூடாது’ என சக மனிதர்களிடமிருந்தே சமூகத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள குழந்தை கற்றுக்கொள்கிறது. 

ஆண் குழந்தைகள் இன்றைய சூழலில் படிப்பை மையமாக வைத்தே வளர்க்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைன் குழந்தைகளாக வளரும் இவர் களுக்கு சக மனிதர்களை எதிர்கொள்வதும், மனித மதிப்பைப் புரிந்துகொள்வதும் பெரும் சிக்கலாக உள்ளது. ஆண் குழந்தைகள் சக வயதினருடன் கலந்து பழகும் வாய்ப்பை விளையாட்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது. உடலைப் பேண வேண்டும், உடல் தோற்றத்தில் கவனம் வேண்டும் என்ற விழிப்பு உணர்வையும் விளையாட்டின் வழியாக ஓர் ஆண் குழந்தை பெறுகிறது. குழு விளையாட்டுகளில் தோல்வி பழகுதல், விட்டுக்கொடுத்தல், குழுவாகக் கொண்டாடுதல், இணக்கமான நட்புறவை வளர்த்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக்கொள்கிறது. எனவே, வீட்டில் அடைத்து வைக்காமல் ‘ஓடு’ என்று அவர்களை மைதானத்துக்கு விரட்டிவிடுங்கள்.

படிப்பையும் தாண்டி ஆண் குழந்தைக்குள் இருக்கும் தனித்திறனைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். இது அந்தக் குழந்தைக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தையின் தனித்திறமையால் சமூகத்தில் அதற்குப் புதிய அடையாளம் கிடைக்கும்; அது மற்றவர்கள் முன் குழந்தையின் மதிப்பை உயர்த்தும். ஆண் குழந்தை சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கான பாசிட்டிவ் சூழலை இது உருவாக்கும். தாழ்வுமனப்பான்மை அல்லது சுயவெறுப்புகொள்ளும் குழந்தைகள், உலகத்தையும் ஒருவித நெகட்டிவிட்டியுடனேதான் பார்ப்பார்கள். அதுவே, தன் திறமையில் நம்பிக்கையும் சந்தோஷமும்கொள்ளும் குழந்தைகள், உலகத்தை மகிழ்வுடன் அணுகுவார்கள். எனவே, ‘மேத்ஸ்ல என்ன மார்க் வாங்கியிருக்க நீ?’ என்ற வார்த்தைகளைவிட, ‘டாய் காரை எவ்ளோ சூப்பரா அசெம்பிள் செய்ற நீ!’ என்பதுபோன்ற தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளே அவசியம்.

சமூக அமைப்புகளில் கலந்துகொள்ளவும் அதன்வழியாக மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தையும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சுற்றுச்சூழல் குழு, என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைந்து செயல்படட்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த தனித்திறன் வகுப்புகளில் குழந்தைகளைப் பிடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது அவர்கள் பழகும் தனித்திறன்களும் மதிப்பெண் வாங்க எந்த அளவுக்கு உதவும் என்றே யோசிக்கின்றனர். சேவை தொடர்பான குழுக்களில் சேர்வது வாழ்க்கைக்குப் பயன்படாது என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கின்றனர். இது தவறான அணுகுமுறை. சமூகம் மற்றும் சக மனிதர் மீதான அக்கறையை இதுபோன்ற அமைப்புகளே ஏற்படுத்துகின்றன. ஆண் குழந்தை வகுப்பறை தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்றதோர் ஈடுபாடு தேவை.

ஆண் குழந்தைகள் வளரும் சூழலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளும், முடிக்க அறிவுறுத்தப்படும் கடமைகளும் அவர்களைச் சமூகப் பொறுப்புமிக்க மனிதர்களாக வளர்க்கும். அன்புக் கூடுவிட்டுப் பறக்க அனுமதிப்பதும் அவர்கள் வலிமையானவர்களாக வளர அவசியமானது.’’

Monday, August 27, 2018

கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் - நன்றி: தினமலர்

சொல்கிறார்கள்


கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்!உடல் வெப்பநிலை சொல்லும் தகவல் குறித்து கூறும், குழந்தைகள் நல மருத்துவர், சி.திருப்பதி: அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் அவசியமானது, உடல் வெப்பநிலை மற்றும் நாடித்துடிப்பும் தான். மனித உடலில் நடக்கும் அனைத்து வேதியியல் மாற்றங்களும், வெப்பநிலை சரியாக இருந்தால் தான் நடைபெறும்.குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்பதை, உடல் வெப்பநிலையை வைத்து அறிந்து கொள்ள முடியும். மனித உடலின் சராசரி வெப்பநிலை, '98.6 டிகிரி பாரன்ஹீட்' அளவில் இருந்தால், அது இயல்பானது; அதை விட அதிகரித்தால் அல்லது குறைந்தால் இயல்பானதல்ல.உடல் வெப்பநிலை, 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாகவோ, 96 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாகவோ செல்லக் கூடாது; அது மிக ஆபத்தான நிலை.வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது, 'ஹைப்பர் தெர்மியா' எனப்படும். இதை தான் காய்ச்சல் என்கிறோம். உடல் வெப்பநிலை சரியாக இருந்தால் தான், செல்களுக்கு தேவையான வெப்பம் கிடைத்து, வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறும்.உடலின் வளர்சிதை மாற்றத்தை பொறுத்தே, ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை மாறுபடும். வளர்சிதை மாற்றம் அதிகமாக நடைபெறுபவர்களின் உடலில், அதிக வெப்பம் காணப்படும்.எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர்கள், எதையாவது நினைத்து கவலைப்படுபவர்கள், எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுபவர்களின் உடல் வெப்பநிலை, அதிகமாக இருக்கும். வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகள் காரணமாக, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.மனதை அமைதியாக வைத்துக் கொள்பவர்கள், நேர்மறையான சிந்தனை உடையவர்களின் உடல் வெப்பநிலை, சரியாக இருக்கும். சுற்றுப்புறச்சூழலில், குறைந்த வெப்பநிலையின் போது, உடல் வெப்பநிலை சராசரி அளவை விட குறைவாகவே இருக்கும்.வெப்பநிலையை சரியான அளவில் பராமரிப்பதற்காக, மூளையில் வெப்ப சீர்நிலை தரும் கருவி இருக்கிறது. அது சுற்றுச்சூழலுக்கேற்ப, நம் உடல் வெப்பநிலையை பராமரிக்கும் வேலையை செய்கிறது.பச்சிளம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் கையாளக் கூடாது. ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் மாறுபடும். அதனால், குழந்தைகளுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.வயதானவர்களுக்கு, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப, அவர்களின் உடல் வெப்பநிலையை பராமரிக்க முடியாது. அதனால் தான், குளிர்காலத்தில் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. வயதானவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.