நிதி... மதி... நிம்மதி!
குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
எது முதலில்..?
‘எப்படிப் பார்த்தாலும், ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும்னு கணக்குப் போட்டோம் . ஆனா, அவ்வளவு பணம் வரலை. முப்பதுகிட்டதான் வந்தது...'
‘அட, இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க..? சமாளிச்சிக்கலாம்... விடுங்க.’
‘சமாளிக்கறதா..? எப்படி முடியும்..? எல்லாத்தையுமே குறைச்சி குறைச்சிதானே வாங்கப் போறோம்..?'
‘குறைச்சலா வாங்கினாத் தானே ஐம்பதாயிரம்..? வாங்காமலே விட்டுட்டா..?’
‘வாங்காமலே நிறுத்திட லாமா...? என்ன சொல்றே..?’
‘நாம வாங்க நினைச்சதுல, எதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமோ, அதையெல்லாம் வாங்குவோம். அவ்வளவா முக்கியம் இல்லைங்கறதை, விட்டுடுவோம்.’
‘எல்லாமே முக்கியம்தானே..?’
‘பாருங்க, ரெண்டே ரெண்டு தான் வாங்கறோம்னு வச்சிக்குங்க. அதுலகூட, எது ரொம்ப முக்கியம், எது அத்தனை முக்கியம் இல்லைன்னு சொல்லிட முடியும்.
அவசரமா, நோட்டும் பேனாவும் வாங்கப் போறீங்க. ஏதோ ஒரு காரணத்தால, ஒண்ணு தான் வாங்க முடியுதுன்னு வாங்குவீங்க. என்ன பண்ணு வீங்க..?’
‘நானா இருந்தா நோட்டுதான் வாங்குவேன். ஏன்னா, பேனாவை யார் கிட்டயாவது கடன்வாங்கிக்கூட எழுதிக்கலாம்...’
சொல்லும் போதே, அவனுக்குள் ஒரு புதுத் தெம்பு பிறந்து இருந்தது. தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். செல்லமாக, தங்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழியில் ஒப்புக் கொண்டான்.
‘இதனாலதான் சொல்றேன்... நீ ஒரு ‘இன்டலிஜென்டலி...’
இதேபோன்ற சூழ்நிலையை, நாம் ஒவ்வொருவரும் எதிர் கொண்டிருப்போம்; எதிர்கொள் ளவும் போகிறோம். இந்தப் பெண் சொன்னது, செலவு மேலாண்மையின் மிக முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று.
இரண்டு வகைச் செலவுகள் இருந்தாலும், இரண்டாயிரம் வகைகள் இருந்தாலும், அவற்றில் எது மிக முக்கியம், எது மிக அவசரம்... என்றெல்லாம் இனம் பிரிக்க முடியும்.
தன் சிறு வயது பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போகிறாள் தாய். ஒருத்திக்கு செருப்பும், மற்றவளுக்கு கண்ணாடி வளையலும் வாங்க நினைக் கிறாள். அவளது துரதிர்ஷ்டம், தன் கையில் உள்ள பணத்தை வைத்து, யாரேனும் ஒருவருக்கு வேண்டியதைத்தான் வாங்க முடியும் என்கிற நிலை.
எதை வாங்குவாள்..?
மேலே சொன்ன தாய், படிக்காதவளாக இருந்தாலும், மெத்தப் படித்த அறிஞராக இருந்தாலும், அவருடைய தேர்வு, ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இல்லையா..? என்ன தெரிகிறது..?
நம் செலவுகள் எல்லாவற்றை யும், முன்னுரிமைப்படுத்த முடியும். அது மட்டுமல்ல, சில செலவுகளில், அவற்றின் அளவு களை (‘க்வாண்டம்’) குறைத்துக் கொள்ள முடியும். இன்னும் சிலவற்றை, தள்ளிப்போட முடியும். (முடி திருத்துதல் போன்ற செலவுகள்) இன்னும் சிலவற்றையோ, கடன் வாங்கி யாவது, ‘சந்தித்தே’ ஆக வேண்டும்.(வேறென்ன...? கல்விக் கட்டணம் தான்!)
ஓர் ஏழைக் குடும்பம் தொடங்கி, சர்வ வல்லமை தாங்கிய அரசாங்கங்கள் வரை, எல்லாருக்கும் கையோடு உதவக் கூடிய செலவுக் கோட்பாடு, சற்றும் சந்தேகம் இன்றி, முன்னுரிமைப்படுத்துதல்தான். இவ்வாறு முன்னுரிமை தருவதில், ஒரு மிகப் பெரிய பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். அதுதான்.., ‘முக்கியம்’, ‘அவசரம்’ என்கிற இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பம். மருத்துவச் செலவு - முக்கியம்; பள்ளிக் கட்டணம் - அவசரம். எதைத் தேர்ந்தெடுப்பது..?
இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை (‘எக்கனாமிக் சர்வே’)யில், முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் சொல்கிறார் - “it is necessary to distinguish the important from the urgent.” அதாவது, “அவசரத்தில் இருந்து முக்கிய மானதைப் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.”
சமீபத்தில், ‘நிதி ஆயோக்’ (மாற்றியமைக்கப்பட்ட திட்டக் கமிஷன்) அமைப்பின் துணைத் தலைவர் சொன்ன ஒரு கருத்து, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்..?
“விவசாயத்தைவிடவும், தொழில் முன்னேற்றத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.” விவசாயத்தைத் தன் ஆத்மாவாகக் கொண்டு இயங்கு கிற தேசத்தில், இயல்பாகவே, அவரது கருத்து கடுமையான தாக்குதலைச் சந்தித்தது.
‘ஒன்று முக்கியம்; மற்றது அவசரம்’ என்பதுதான் ‘நிதி ஆயோக்’கின் துணைத் தலைவர் சொன்ன கருத்தின் சாராம்சம். இதைத் தவறாகப் புரிந்து கொண்டால், அதற்கு யார் காரணம்?
ஆனால், செலவு மேலாண்மை யில், ‘ஆபத்தான’ பணியே, இந்த ‘முன்னுரிமை’ விவகாரம்தான்.சேது சமுத்திர திட்டம். சிலர் இது முக்கியம் என்கின்றனர். சிலரோ அத்தனை முக்கியம் இல்லை என்கின்றனர். சிலருக்கு, இது முக்கியம்தான்; ஆனால், அவசரம் இல்லை. இன்னும் சிலருக்கோ, இது சற்றும் தேவை யற்ற திட்டம்.
தீவிரவாத ஒழிப்பு; அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி வைப்பதை, அமெரிக்கர்களி லேயே சிலர் எதிர்க்கிறார்கள். இது அத்தனை முக்கியம் இல்லை; தேவையில்லாமல் நாட்டின் நிதி, விரயம் ஆகிறது என்பது இவர் களின் கருத்து.
‘உள்நாட்டுத் தேவைகளுக்கு, இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..’ என்பது இவர் களின் வாதம். ‘இல்லை, தீவிரவாத அச்சுறுத்தல், நமது பொருளாதார வலிமையைக் குறிவைத்தே செயல்படுகிறது. ஆகவே, ஆப்கானிஸ்தானில் நமது நடவடிக்கைகள் தொடர வேண்டும்’ என்பவர்களும் உள்ளனர்.
என்ன தெரிகிறது..? நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை என்று வருகிறபோது, ஒருமித்த கருத்துக்கு வாய்ப்பே இல்லை. காரணம், ‘முன்னுரிமை’ என்றாலே, ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவோர், நிச்சயம் எதிர்க்கத்தானே செய்வர்..?
பையனுக்கு ‘கிரிக்கெட் பேட்’; அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி. இரண்டும் வாங்குகிற அளவுக்கு, தற்போது பணம் இல்லை. இந்த நிலையில், எதை வாங்குவது, எதை விடுவது..? ‘இப்போதைக்குப் ‘பேட்’; மூக்குக் கண்ணாடி பிறகு’ என்று சொன்னால், தாத்தாவுக்கு மனவருத்தம் ஏற்படும். மாற்றிச் செய்தால், ‘பேரனின் அட்டகாசம் தாங்க முடியாது’. இவ்வாறு, சிலருக்கு எதிர்ப்புகளையும் எரிச்சல்களையும் ஏற்படுத்தும் என்றாலும், முன்னுரிமைப் படுத்துகிற செயலைச் செய்து தான் ஆக வேண்டும்.
பையனுக்கு ‘கிரிக்கெட் பேட்’; அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி. இரண்டும் வாங்குகிற அளவுக்கு, தற்போது பணம் இல்லை. இந்த நிலையில், எதை வாங்குவது, எதை விடுவது..? ‘இப்போதைக்குப் ‘பேட்’; மூக்குக் கண்ணாடி பிறகு’ என்று சொன்னால், தாத்தாவுக்கு மனவருத்தம் ஏற்படும். மாற்றிச் செய்தால், ‘பேரனின் அட்டகாசம் தாங்க முடியாது’. இவ்வாறு, சிலருக்கு எதிர்ப்புகளையும் எரிச்சல்களையும் ஏற்படுத்தும் என்றாலும், முன்னுரிமைப் படுத்துகிற செயலைச் செய்து தான் ஆக வேண்டும்.
‘வேண்டாத செலவுகள்’, பெரிய அளவில் சங்கடத்தை உண்டுபண்ணாது. எளிதில் ‘தள்ளி’விட்டுவிடலாம். இரண்டுமே முக்கியம் எனும் போதுதான், ‘மேலாண்மை’ திறன் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், என்ன செய்வது..?
இரண்டு அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
1. பின்னுக்குத் தள்ளப்படும் செலவினத்தால் ஏற்படும் பாதிப்பு, சரி செய்யப்படக் கூடியதா..?
2. இரண்டு செலவுகளுமே, சரி செய்யப்பட முடியாத பாதிப்பு களை ஏற்படுத்தும் என்றால், இரண்டில் எது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும்..?
தாத்தா, பேரன் உதாரணம் பார்த்தோம். ‘வெளியில் சொல்ல முடியாத ஏமாற்றம்’, நீங்காத வடுவாய் மாறிவிடலாம். இந்த ஆபத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அழுது அடம் பிடிக்கிற பிள்ளையை, சமாதானப்படுத்தவும், அவனுக்கு வேண்டியதை வாங்கித் தரவும் கிடைக்கிற கால அவகாசம், பெரியவர் விஷயத்தில் இருக்கி றதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இப்போது பார்த்த இரண்டு அம்சங்களையும், பெரிய நிறுவனங்களும் அரசாங்கம் போன்ற வல்லமை பொருந்திய அமைப்புகளும், தம்முடைய வழிகாட்டு நெறிமுறைகளாகக் கொண்டால் அனைவருக்குமே நல்லது. அரசுகளின் நிதி ஒதுக்கீடு பற்றி பின்னர், விரிவாகக் காண இருக்கிறோம். அப்போது, இந்த இரண்டு அம்சங்களின் பயன்பாடு, அதன் நடைமுறை சாத்தியங்கள் குறித்து பார்ப் போம்.
முன்னுரிமையில் இருந்து, செலவு மேலாண்மையின் அடுத்தப் படிக்குச் செல்வோம். அதுதான்... ‘கடன்!’ கடன் வாங்க லாமா, கூடாதா..?
No comments:
Post a Comment