Thursday, July 16, 2015

மூலிகை இல்லம்: இன்சுலின் சுரக்க...

நன்றி: டாக்டர் விகடன் - 01 Aug, 2015
மூலிகை இல்லம்!இன்சுலின் சுரக்க...



 ர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. பெயரில் சர்க்கரை இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்தத் தவறினால், சில ஆண்டுகளில் இந்த நோய்ப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவோம் என, கசப்பான செய்தியைச் சொல்கிறார்கள்  மருத்துவர்கள். பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட, டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என்பது துயரம்தான். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் காரணமாக 25-35 வயதிலேயே பலருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, மூளை கணையத்துக்கு ஆணையிடும். உடனே, இன்சுலின் சுரந்து திசுக்கள் அந்த குளுக்கோஸைப் பயன்படுத்தத் துணைபுரியும். இன்சுலின் சுரப்பு இல்லாமல் போனாலோ, குறைந்தாலோ, வீரியம் குறைந்தாலோ, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே, சர்க்கரை நோய் என்கிறோம். நம் உடலில் சர்க்கரையின் அளவு 80-120 வரை இருப்பதுதான் சராசரி அளவு. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்யும்போது, 180-க்கு கீழ் இருக்க வேண்டும்.
உடல் பருமனானவர்கள், தொப்பை உள்ளவர்கள், அதிக மாவுச்சத்து, குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மரபியல் காரணங்கள் போன்றவற்றால், இன்சுலின் சுரப்பு பாதிக்கும்.
இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய, உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு மூன்று “இ” (Exercise, Eating, Emotional (உடற்பயிற்சி, உணவு முறை, மனநிலை) மிகவும் அவசியம். மூன்றில் ஒருவர் மட்டுமே இந்த மூன்று ‘இ’ யையும் சரியாகப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் இதில் இரண்டைக்கூட பின்பற்றுவது இல்லை.
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே.
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க...
அனைவருக்கும் உடல் உழைப்பு அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
உணவில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரதமும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளில் இந்த மூன்று சத்துக்களும் சரியான அளவில் இருக்கின்றன. இதைப் பிரதான உணவாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை அதிகமாக உடலில் சேராது. சாப்பிட்ட உணவு மெதுவாக செரிமானம் ஆவதால், இன்சுலின் தேவை அதிகம் இருக்காது.
கஞ்சி, கூழ், பழச்சாறு எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே, திரவ உணவை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், களி அடையாகச் செய்து சாப்பிடலாம்.
உணர்வுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றோ, வந்துவிடுமோ என்றோ பயந்து, கவலைப்பட்டு, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது. பயத்தை விரட்டி எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நோயை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்!

No comments:

Post a Comment