நன்றி: அவள் விகடன் - 28th ஜூலை 2015
காட்டுப்பாதையில் ஒருவன் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருக்கிறான். அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டு ஓடுகிறது. காலில் இருக்கும் முள்ளைப் பிடுங்கிப் போட்டுவிட்டு ஓடினால், வேகமாக ஓடமுடியும். சிங்கத்திடமிருந்தும் தப்பிவிட முடியும். ஆனால், முள்ளைப் பிடுங்கிப் போட நேரம் இல்லை என்று நொண்டி நொண்டி ஓடுகிறான்.
- சின்ன வயதில் என் காதில் விழுந்த உபன்யாச கதையொன்றின் சாரம்சம் இது.
இப்போது அன்றாடம் நம் காதுகளில் விழும் ஒரு சில ஏக்கங்களைப் பார்ப்போம்.
‘36 வயதினிலே படம் பார்த்ததில் இருந்து... கடையில் விற்கிற காய்கறிகள் மீது ஒருவிதமான அசூயையே வந்துவிட்டது. ஜோதிகா போல மாடியிலேயே காய்கறித் தோட்டம் போட சிலரைச் சந்திக்க வேண்டும். ஒரு மாதமாக முயற்சித்தும் வேறு வேலைகளால் வீட்டை விட்டே நகரமுடியவில்லை.’
‘கிளாஸ் பெயின்ட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், டைமே கிடைக்கமாட்டேங்குது!’
‘டூ-வீலர் ஓட்ட கத்துக்கணும்கிறது என் கனவு. ஆனால், அதை நனவாக்க காலமும் நேரமும் வரமாட்டேங்குது!’
- இப்படிப் பலரின் கனவுகள் மெய்ப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
கொஞ்சம் பழைய மீம்ஸ் டயலாக்தான். இந்த இடத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நினைவுப்படுத்துகிறேன்... ‘தூங்கும்போது வருவதற்கு பெயர் கனவு இல்லை. எது நம்மை தூங்கவிடாமல் செய்கிறதோ அதற்குப் பெயர்தான் கனவு!’ இதை இங்கே மீண்டும் நினைவுபடுத்துவதற்கு காரணம்... ஒரு விஷயத்தின் மீது உண்மையிலேயே அதீத ஈடுபாடு வந்துவிட்டால்... எத்தனை தடைகள் வந்தாலும் தாண்டிப்போய் இலக்கை தொட்டுவிடுவோம். இப்படி பல விஷயங்களைத் தொட்டும் இருக்கிறோம்.
`உலகத்தில் பிராப்ளம் என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் விடையும் இருக்கும். அதைக் கண்டுபிடிக்க நிறைய முயற்சியும், கொஞ்சம் சாமர்த்தியமும்தான் வேண்டும்’ என்பார்கள். இங்கே சாமர்த்தியம் என்கிற வார்த்தையை, ’டைம் மேனேஜ்மென்ட்’ என்றுகூட சொல்லலாம்.
‘நம் கையில் இருக்கும் நேரத்தைக்கூடவா நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாது?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால்... கனவுகள் நனவாவது சாத்தியமே!
உரிமையுடன்,
No comments:
Post a Comment