டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்... ஏன்? எப்போது? யாருக்கு?
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை சுத்தமாகப் பராமரிக்கிறோம்; ஆசையாக வாங்கிய வாகனத்தைத் துடைத்து, சர்வீஸுக்குவிட்டு கண்டிஷனில் வைத்திருக்கிறோம்; நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்கும் கைப்பேசியை கண்ணாடிபோல் வைத்திருக்கிறோம். ஆனால், நம்மில் பலர் உடலைப் பராமரிப்பதில் மட்டும் போதிய கவனம் செலுத்துவதில்லை. உடல் அற்புதமான ஓர் இயந்திரம். நாம் உண்ணும் உணவைச் செரித்து, சத்துக்களைச் சேமித்து, நமக்கு சக்தியை அளிக்கும் அசகாய சூரன் அது. ஆனால், அந்தச் சத்துக்களோடு சில நச்சுக்களும் நம் உடலில் சேர்ந்துகொண்டே வரும். நாளாக ஆக, அவை நமக்கு நோய்களையும் கொண்டுவந்து தந்துவிடும். எனவே, நம் உடலில் சேரும் அவற்றை அடிக்கடி நச்சு நீக்கம் (Detoxification) செய்யவேண்டியது அவசியம்.
நச்சு நீக்கம் செய்யும் சில வழிமுறைகளை இங்கே விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் காயத்ரி...
நச்சு நீக்கத்தின் அவசியத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் விரத நாட்களை வகுத்தார்கள். விரதம் இருப்பது நச்சு நீக்கத்தில் ஒரு வழிமுறை. விரதம் என்றால், எதுவுமே சாப்பிடாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெறும் பழங்கள், பால் மட்டும் சாப்பிடலாம். விரதம் என்கிற பெயரில் இல்லாவிட்டாலும்கூட வாரத்துக்கு ஒரு நாளை நச்சு நீக்கம் செய்யும் நாளாகக் கருதி அதைப் பின்பற்றலாம்.
வேப்பிலைச் சாறு அருந்துவது, அகத்திக்கீரையை உண்பது, விளக்கெண்ணெய் குடிப்பது... ஏன் பேதிக்கு மருந்து சாப்பிடுவதுகூட ஒரு வகையில் நச்சு நீக்கம் செய்யும் வழிமுறைகள்தான். நச்சு நீக்கத்தை மசாஜ், விதவிதமான குளியல்கள் (வாழை இலைக் குளியல், சூரியக் குளியல், மூலிகைக் குளியல் போன்றவை), நல்ல சத்தான ஆகாரங்கள் சாப்பிடுவது என பல வழிகளில் செய்யலாம். ஒரு நாள் முழுக்க வெறும் திரவ உணவுகளைச் சாப்பிடுவதுகூட ஒரு வழிதான்.
நச்சு நீக்கம் செய்யும் சில வழிமுறைகள்...
* காலை - புதினா, வெள்ளரி, இஞ்சித் துண்டு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைத் தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி இரண்டு லிட்டர் நீரில் கலந்து பிறகு பருகலாம்.
* மதியம் - தேவையான அளவுக்கு பீட்ரூட், கேரட், புதினா ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்துப் பிறகு பருகலாம். இந்தச் சாறு உடல் எடையைக் குறைப்பதோடு, சோம்பலையும் விரட்டும்.
* கமலா ஆரஞ்சு ஜூஸுடன் கிர்ணிப் பழ ஜூஸ் சேர்த்து அதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
* இளநீருடன் சீரகத் தூள் சேர்த்துப் பருகலாம். இது, சருமத்தைப் பொலிவாக்கும்; உடலைக் குளுமையாக்கும். இது எனர்ஜி தரும் டிரிங்க்கும்கூட.
* பானகரம்: கொடாம்புளியைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை வடிகட்டி சிறிது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இது நீர்க்கடுப்பை விரட்டும். இடுப்புப் பகுதியில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சதையை நீக்கிவிடும்.
மேற்கூறப்பட்ட அனைத்தும் பொதுவான உடல்நிலை கொண்டவர்களுக்கானது.
சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு...
* நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேவையான அளவுக்கு எடுத்து, அத்துடன் நீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அடித்து, பிறகு பருகலாம்.
* முருங்கைக்கீரை, சீரகம் இரண்டையும் சேர்த்து மிதமான அளவுக்குக் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடிக்கலாம். இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அருமருந்தும்கூட.
* படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் கடுக்காய்ப் பொடியை மூன்று கிராம் அளவுக்கு எடுத்து, அதை ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் குடிக்கலாம். இதைத் தினசரி பருகிவந்தால், மலச்சிக்கலைப் போக்கும்.
* உடலும் மனமும் ஒன்றும் செயல்களே நமக்கு வெற்றியைத் தரக்கூடியவையாக அமையும். நச்சு நீக்கம் என்பதை உடலளவில் நிறுத்திவிடாமல், மனதுக்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளைத் தொடங்கும்போதும் சிலவற்றுக்கு `யெஸ்’ சொல்லவும் சிலவற்றுக்கு `நோ’ சொல்லவும் பழக வேண்டும். உதாரணமாக, `இன்று நான் ஸ்வீட் சாப்பிடமாட்டேன். அதற்குப் பதிலாக சத்தான காய்கறிகளைச் சாப்பிடுவேன்’ என்றுகூட முடிவு எடுக்கலாம்.
ஆக, ஒவ்வொரு நாளையுமே நச்சு நீக்கம் செய்யும் நாள் என நினைத்துச் செயல்பட்டால், நல்லனவெல்லாம் தரும்; ஆரோக்கியம் உறுதியாகும்.
No comments:
Post a Comment