Date: 20 FEBRUARY 2018
Time uploaded in London- 12-27
Written by London swaminathan
Post No. 4767
PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
தமிழில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு காரணமோ, ஒரு கதையோ உண்டு. பழமொழிகளே அழிந்து வரும் காலத்தில் கதைகள் மறைந்ததில் வியப்பில்லையே! மூன்று வெள்ளைக் காரர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை வெளியிட்டனர். அதற்கும் மேலாக உள்ள பழமொழிகளையும், அவற்றின் பின்னுள்ள கதைகளையும் வெளியிடுவதும், அவைகளை விஷயம் (Subject wise) வாரியாக வரிசைப்படுத்துவதும், பல்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகளுடன் அவைகளை ஒப்பிடுவதும், எல்லாத் தமிழ்ப் பழமொழிகளையும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதும் செய்ய வேண்டிய பணிகளாகும். இதற்கென தனித் துறையும் ஆராய்ச்சிக் களமும் தேவை. நிற்க.
மேலும் ஒரு பழமொழிக் கதையைக் காண்போம்.
‘எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்?’ ‘பண்டம் ஓரிடத்தில் பழி வேறு ஒரு இடத்தில்’ என்று தமிழில் பழமொழிகள் உள.
ஒரு ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தான். காலப் போக்கில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அரண்மனை போன்ற வீட்டைப் பராமரிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பெரிய மழை பெய்தபோது ஒரு சுவர் இடிந்து விழுந்தது. உடனே வேலையாட்களைக் கொண்டு புதிய சுவர் எழுப்பினான். அது ஈரப் பசையுடன், காயாமல் இருந்த காலத்தில் ஒரு திருடன் அந்த ஊருக்குள் புகுந்தான்.
இருட்டு நேரத்தில் அந்த வீட்டில் திருட வந்தான். காயாத சுவர் என்று தெரியாமல் அதில் கன்னம் வைத்தான் (ஓட்டை போட்டான்). அது முழுதும் இடிந்து அவன் மீது விழவே அவன் அப்படியே மூச்சுத் திணறி இறந்தான்.
அந்த நாட்டை ஆண்ட மன்னன் மஹா மூடன் என்பதால் எல்லோரும் அவனை ஏமாற்றிப் பிழைத்தனர். திருடர் கூட்டத்தில் ஒருவன் இதை அறிந்து, அந்த மன்னர் மீது வழக்கு தொடுத்தான். உனது நாட்டில் வீடுகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அதை நீங்கள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை எனது சகா ஒருவன் இறந்ததற்கு உங்கள் மோசமான ஆட்சியே காரணம்; எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்- என்றான்.
முட்டாள் அரசன் சொன்னான்,
கவலைப் படாதே, இப்பொழுதே வீட்டுச் சொந்தக் காரனை அழைத்துவர ஆணை இடுகிறேன் என்றான். அந்த வணிகனை உடனே சேவகர்கள் இழுத்து வந்தனர். ஏன் வீட்டை மோசமாகக் கட்டினாய்? ஒரு திருடனின் சாவுக்கு நீயே காரணம் என்றான்.
அந்த வணிகன் சொன்னான்,
நான் என்ன செய்ய? வீட்டில் சுவர் எழுப்பிய கொத்தனாரை அல்லவா தண்டிக்க வேண்டும்?- என்றான்
உடனே கொத்தனாரை இழுத்து வந்தனர். அடே! ஈரமான சுவரை எழுப்பி ஒருவனைக் கொன்றுவிட்டாயே! உனக்கு தொழில் சுத்தம் என்பதே கிடையாதா? என்றான் மன்னன்.
மன்னவா! என் மீது பிழை இல்லை. மண் மிதித்துக் கொடுத்த கூலியாள் கொடுத்ததை நான் அப்படியே வைத்து சுவர் எழுப்பினேன். அவனை அல்லவா விசாரிக்க வேண்டும்?- என்று சொன்னான்.
உடனே கூலியாளை அழைத்துவர மன்னன் பணி ஆட்களை ஏவினான்.
கூலியாள் வந்தவுடன் அதே கேள்வி.
அவன் செப்பினான்,
மஹாராஜா! நான் இளகலாக மண் கலந்து கொடுத்தது ஏன் என்றால், நான் பயன் படுத்திய மிடாவின் வாய், வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. அதைச் செய்த குயவனை அல்லவா விசாரிக்க வேண்டும்? என்று உரைத்தான்
குயவனை இங்கே இழுத்து வாருங்கள் என்று அரசன் ஆணை இட்டான்.
குயவனும் வந்தான்; அதே பல்லவி!
அவன் பதில் கொடுத்தான்,
மன்னவா! உண்மைதான்; மிடாவின் வாய் பெரிதுதான். அதற்குக் காரணம், அந்தப் பக்கம் வந்த ஒரு பேரழகிதான். அவளைப் பார்த்துகொண்டே மிடா செய்ததால் அது பெரிதாகிவிட்டது என்று நுவன்றான்.
அந்தப் பேரழகியை இழுத்துவாருங்கள் என்று உத்தரவிட்டான் மூட அரசன்
அவளும் மினுக்கி குலுக்கி வந்தாள்; அதே கேள்வி.
அவள் பகர்ந்தாள்,
ஒரு நகை செய்யும்படி தட்டானிடம் சொல்லி இருந்தேன்; அவன் சொன்ன நேரத்தில் என் வீட்டுக்கு வராததால் நானே அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போது குயவன் வீடு வழியாகப் போனது உண்மையே. ஆனால் இதற்குக் காரணமான தட்டானை அழைத்து விசாரிப்பதே முறை என்றாள்.
தட்டான் வந்து நகை விற்கும் செட்டியார் மீது பழியைப் போட்டான். அவரையும் அழைத்து வந்தனர் சேவகர்கள்.
அவருக்கு நிலைமை முழுதும் விளங்கி இருந்ததால் --- பூர்வ கதை தெரிந்து இருந்ததால்-- இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.
அந்த இரண்டு நண்பர்களும் அரண்மனைக்கு வெளியே மன்னருக்குக் கேட்கும் அளவுக்குப் பெரிய சண்டை போட்டனர். மன்னர், செட்டியாரை விசாரிப்பதற்குப் பதிலாக அந்த இரண்டு பேரையும் உள்ளே அழைத்து என்ன சப்தம்? என்ன சண்டை? என்று கேட்டான்.
அவர்களில் ஒருவன் மொழிந்தான்:
மன்னா! பாருங்கள்! நீங்கள் தண்டிப்பவனைக் கழுவில் ஏற்றிக் கொல்ல கழு மரம் தயாராக இருப்பதைப் பார்த்தவுடன் நான்தான் கழுவில் ஏறுவேன் என்கிறான். ஆனால் நான்தான் முதலில் வந்தேன். ஆகவே நான்தான் கழுவேறி இறக்க வேண்டும்; இதுதான் வாக்குவாதத்தில் முடிந்தது- என்றான்.
மன்னன் கேட்டான், நீங்கள் எதற்காகக் கழுவில் ஏற வேண்டும்?
மன்னரே, உங்களுக்குத் தெரியாத விஷயமா? இந்தக் கழுமரத்தில் இந்த நன்னாளன்று யார் முதலில் கழுவேறி இறக்கிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் அடுத்த அரசன் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்களே! விரைவில் இந்த நாட்டில் ஆட்சி மாறும் என்றும் பகர்ந்தார்களே? நான் இதோ தயார் என்றான்.
அதைக் கேட்ட அரசன் திடீரென்று ஆசனத்தில் இருந்து குதித்தான். எல்லோரும் விலகிப் போங்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு என்னைவிட வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிவிட்டு நேராகச் சென்று கழுவில் ஏறினான்; முட்டாள் மன்னவனின் ஆயுளும் பிரிந்தது. அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி!
பழி ஓரிடத்தில் பாவம் ஓரிடத்தில், பண்டம் ஓரிடத்தில் என்ற பழி ஓரிடத்திலென்ற பழமொழிகளுக்கு எல்லாம் மூலக் கதை இதுவே.
No comments:
Post a Comment