சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் - சாணக்கியன் செப்பியது (Post No.4774)
சாணக்கியன் என்னும் பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். அவன் பல வியப்பான செய்திகளைச் சொல்லுகிறான். அவன் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த போதும் ஒரு குடிசையில் வாழ்ந்தான் அவன் பிராமணர்கள் பற்றி விளம்பும் பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் பாடல்கள்--
இதோ சில பாடல்கள்:
மயில்களும் பிராஹ்மணர்களும்
துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கணகர்ஜிதே
சாதவஹ பரசம்பத்தௌ கலஹ பரவிபத்திஷு
சாணக்கிய நீதி 7-9
பிராமணர்கள், சாப்பாட்டில் மகிழ்ச்சி அடைகிறார்கள்;
மயில்கள், இடி முழக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன;
நல்லவர்கள், மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவர்;
கெட்டவர்களோ, ஏனையோரின் கஷ்டத்தில் கூத்தாடுவர்.
xxxx
பிராஹ்மணன் ஒரு மரம்!
பிராஹ்மணன் ஒரு மரம்; அந்த மரத்தின் வேர்கள்- காலை, மதியம், மாலையில் செய்யும் த்ரி கால சந்தியா வந்தனம் (காயத்ரீ மந்திரம்);
வேதங்கள், அந்த மரத்தின் கிளைகள்;
ஆன்மீகச் செயல்பாடுகள் (யாக யக்ஞக்கள்) அதன் இலைகள்;
ஆகையால் மரத்தின் வேர்களைப் பாது, காருங்கள்;
வேர்கள் (சந்தியா வந்தனம்) அழிந்தால் கிளையும் இல்லை; இலையும் இல்லை!
விப்ரோ வ்ருக்ஷஹ தஸ்ய மூலம் ச சந்த்யா
வேதாஹா சாகா தர்ம கர்மாணி பத்ரம்
தஸ்மாத் மூலம் யத்னதோ ரக்ஷணீயம்
ச்சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம்
சாணக்கிய நீதி 10-13
xxxxx
பிராமணர்களின் பலம் அறிவு
Picture of Brain from Wellcome Centre, London
பாஹுவீர்யம் பலம் ராக்ஞோ ப்ராஹ்மணௌ ப்ரஹ்மவித் பலீ
ரூப யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம்
சாணக்கிய நீதி 7-11
புஜ பலம் (தோள் வலி) அரசனுக்கு பலம்;
வேதத்தில் வல்ல பிராஹ்மணனுக்கு அறிவு பலம்;
அழகு, இனிமை, இளமை ஆகியன பெண்களுக்கு ஈடு இணையற்ற பலம்
xxxx
Picture from Ratnagiri, by S Sivam
சொர்கத்துக்கு வழி
சொர்கத்துக்குப் போவோரின் நான்கு அடையாளங்கள் பூமியிலேயே
அவர்களின் செயல்பாட்டில் தெரிந்துவிடும் அவை யாவன:
அறப் பண்பு (தர்ம சிந்தனை), இனிய பேச்சு, கடவுள் வழிபாடு, பிராமணர்களுக்கு அன்னமிடுதல்
ஸ்வர்க ஸ்திதானாம் இஹ ஜீவலோகே
சத்காரி சின்னானி வசந்தி தேஹே
தானப்ரஸங்கோ மதுரா ச வாணீ
தேவார்ச்சனம் ப்ராஹ்மணதர்பணம் ச
சாணக்கிய நீதி 7-16
xxx
திருப்தி வேண்டும்
திருப்தி அடையாத பிராஹ்மணர்கள்,
மன நிறைவு அடையாத மன்னர்கள்,
வெட்கப்படும் விபசாரிகள்,
வெட்கமே இல்லாத குடும்பப் பெண்கள்
ஆகிய நால்வரும் விளங்கமாட்டார்கள்.
அசந்துஷ்டா த்விஜா நஷ்டா சந்துஷ்டாஸ்ச மஹீபுஜஹ
ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாஸ்ச குலாங்கணாஹா
சாணக்கிய நீதி 8-18
xxx
Picture by Lalgudi Veda
பிராஹ்மணன் அறிஞனா? இல்லையா?
பிராஹ்மணர்களின் அறிவுக்கு சான்றும் வேண்டுமோ!
வானத்தில் தூதர் யாரும் இல்லை;
எவரும் இதைப் பற்றிப் பேசவும் இல்லை;
முன்னரும் யாரும் சொல்லவில்லை;
எவரையும் தொடர்பு கொள்ளவுமில்லை;
வானத்தில் நிகழப்போகும் சூர்ய, சந்திர கிரஹணங்களை
முன்கூட்டியே சொல்கிற பெரிய பிராஹ்மணனை
அறிஞர் என்று சொல்லவும் வேண்டுமா?
தூதோ ந சஞ்சரதி கே ந சலேச்ச வார்தா
பூர்வ ந ஜல்பிதம் இதம் ந ச ஸங்கமோஸ்தி
வ்யோம்னி ஸ்திதம் ரவி சசி க்ரஹணம் ப்ரசஸ்தம்
ஜானாதி யோ த்விஜவரஹ ஸ கதம் ந வித்வான்
சாணக்கிய நீதி 9-5
xxx
பிராஹ்மணரைத் திட்டுவோர் குடும்பத்தோடு......
தன்னைத்தானே வெறுப்பவன் சாவான் (தற்கொலை);
மற்றவனை வெறுப்பவன் செல்வத்தை இழப்பான்;
மன்னனை (ஆட்சியாளரைப்) பகைப்பவன் அழிவான்;
பிராஹ்மணனை வெறுப்பவன் குடும்பத்தோடு அழிவான்.
சாணக்கிய நீதி 10-11
ஆத்மத்வேஷாத் பவேன் ம்ருத்யுஹு பரத்வேஷாத் தன க்ஷயஹ
ராஜத்வேஷாத் பவேன் நாசோ ப்ரஹ்மத்வேஷாத் குல க்ஷயஹ
(இது சாணக்கியனின் சுய அனுபவத்தில் கண்ட உண்மை; சாணக்கியன் ஒரு அவலட்சணமான முகம் உடைய ப்ராஹ்மணன்; அப்போது பிராஹ்மணர்களைக் கிண்டல் செய்யும் நந்தர்கள் ஆண்டு வந்தனர். ஒரு முறை அரண்மனை விசேஷத்தில் முதல் பந்தியில் கறுத்த நிறமுள்ள, அசிங்கமாமன முகம் உடைய பிராஹ்மணனைப் பார்த்த, நந்த வம்சத்தரசன், அவரை பாதி சாப்பிடும் போது தர தர வென்று வெளியே இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டான். அப்போது குடுமியை அவி ழ்த்துப் போட்டு, உனது ஆட்சியை வேர் அறுக்கும் வரை இந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் வீர சபதம் செய்தான்; மயில் வளர்க்கும் மூரா என்ற பெண்மணியின் மகனான சந்திர குப் தனை அழைத்து, பயிற்சி கொடுத்து, மாபெரும் படையை உருவாக்கி நந்த வம்சத்தின் 9 மன்னர்களையும் அடியோடு அழித்தான். அலெக்ஸாண்டர் படைகள் நடுங்கக்கூடிய அளவுக்கு மகத சாம்ராஜ்யத்தின் படைபலம் இருந்ததை பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிச் சென்றனர். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்து இருந்ததால் இதைச் சாதிக்க முடிந்தது; பின்னர் பிராமணர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது என்ற விதியின்படி குடிசையில் வாழ்ந்தான். சுயநலம் அற்றவரைக் கண்டு உலகமே நடுங்கும் அல்லவா? சாணக்கியன் என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்; எவருக்கும் கட்டளை இடும் தகுதி அவனுக்கு இருந்தது.
Brahmins at Pillayarpatti Temple
No comments:
Post a Comment