Sunday, June 10, 2018

நம்மிடமே இருக்கு மருந்துவம்!: எண்ணெய் குளியல்! thanks to dinamalar.com

உடலை பராமரிப்பதற்கு, சிறந்த வழிமுறை, நல்லெண்ணெய் குளியல்!
இப்போது, நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகளைப் போல், நம் முன்னோருக்கு வரவில்லை. அதற்கு காரணம், அன்றைய வாழ்க்கை முறை; அதில், நல்லெண்ணெய் குளியலும் அடக்கம். வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான அளவில் இருக்க வைப்பதற்கு உதவுகிறது, எண்ணெய் குளியல். அத்துடன், சூட்டை சமமான நிலையில் வைத்து. உடலின் உள் உறுப்புகள் நன்கு செயல்பட காரணமாக இருக்கிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால், தோலின் மூலம் எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு, 'லிம்பாட்டிக்ஸ்' என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து, உடலுக்கு நன்மை பயக்கிறது.
'லிம்பாட்டிக்ஸ்' எனப்படும், நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.
'சிரசாசனம்' செய்யும் போது, தலை பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் எடுத்துச் செல்லப்பட்டு, மூளைப் பகுதி எவ்வாறு பலப்படுகிறதோ, அதேபோல, எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம், சீர் செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் நன்கு இயங்குகிறது. உடல் வெப்பத்தை சீராக பராமரிக்கும் பண்பு, எண்ணெய்க்கு உண்டு. இதனால், உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
தற்போதைய அவசர உலகில், பலருக்கும் மன அழுத்தம் மற்றும் பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இவற்றால், உடல் மற்றும் மூளை வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் விளைவுகள் தவிர்க்கப்படும்.
எண்ணெய் தேய்த்து, கால் மணி நேரம் முதல், அரை மணி நேரம் வரை, காலை இளம் வெயிலில் நின்ற பின், குளிக்கலாம்.
தலை முதல் உள்ளங்கால் வரை, பரவலாக நன்கு எண்ணெயை தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்று பொறுமையாக வட்ட வடிவில் தேய்த்தால், உள் உறுப்புகளில் வெப்பம் சரிவர பராமரிக்கப்படும். மேலும், மூட்டுகளுக்கு நெகிழும் தன்மையையும் கொடுக்கும். எண்ணெய் தேய்த்த பின், மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும்; குளிர்ந்த நீரில் குளித்தால், குளிர்ச்சியால் சளி தொந்தரவுகள் ஏற்படலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்த அன்று, பகலில் உறக்கம் கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள நவ துவாரங்களின் வழியாக, உடல் சூடு வெளிவரும், முக்கியமாக கண்களின் வழியாக வரும். இதை, பகல் துாக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றை தவிர்க்கவும். அதற்கு பதில், மிளகு ரசம் எடுத்துக் கொள்ளலாம்.
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளுமை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து, 30 வினாடி அடுப்பில் காய வைத்து, தேய்த்து குளிக்கவும்.
நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள், எண்ணெய் குளியல் செய்தால், ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காக பயப்படத் தேவையில்லை; எண்ணெய் குளியலை முறையாக பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

எண்ணெய் குளியல் தரும் நன்மைகள்
* முடி உதிர்தலை குறைக்கும்
* பார்வை பலப்படும்
* முதுமையை தாமதப்படுத்தும்
* ஆயுட்காலத்தை கூட்டும்
* தோலை பளபளப்புடன் வைக்கும்.
தகவல்: பொ.பாலாஜி கணேஷ்.

No comments:

Post a Comment