Saturday, June 15, 2019



கர்வத்தின் கதி!
Advertisement
 
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
மதுரை நகரத்தில், ஒரு சுண்டெலி வசித்து வந்தது. அது, கர்வத்துடன் எப்போதும் சுய பெருமை பேசித்திரிந்தது. மற்ற எலிகளை மதிப்பதில்லை. 
அதைக் கண்டால், மற்ற எலிகள் எல்லாம் ஒதுங்கி ஓடி விடும். அதனால், அந்த எலிக்கு நண்பர்களே இல்லை. வீடுகளில் உணவைத் திருடித் தின்று கொழுத்திருந்தது. 
ஒருநாள் -
பக்கத்து கிராமத்தில் வசித்த உறவினர் எலியை பார்க்கப் புறப்பட்டது.
கிராமத்து எலிக்கு, விதவிதமான உணவு கிடைக்கவில்லை. ஆனால், வயலில் கிடைத்த தானியங்களை உண்டது; எளிமையாக வாழ்ந்தது. 
தன்னைப் பார்க்க வந்த, நகர எலியை வரவேற்று, உபசரித்த கிராம எலி, பயறு, சோளம், கம்பு போன்ற தானியங்களை கொடுத்தது. நகர எலிக்கு, அந்த உணவு வெறுப்பை தந்தது. 
'இந்த உணவை உண்டால் உடல் மெலிந்துவிடும்; உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது; என்னுடன் நகரத்துக்கு வா; நல்ல சுவையான உணவு தருகிறேன்...' என்று அழைத்தது.
அதை நம்பிய கிராம எலி, நகரத்துக்கு புறப்பட்டது. 
அவை, நகரில் ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைந்தன. அங்குள்ள ஒரு பொந்தில் தான், நகர எலி வசித்து வந்தது. அன்று மாலை வரை அலைந்தும் உணவு கிடைக்கவில்லை. பசி கொடுமையால் கிராம எலி வாடி வதங்கியது. 
'கொஞ்சம் பொறுமையாக இரு; இரவில் வகை வகையாக உணவு கிடைக்கும்...' என்று, நம்பிக்கை ஊட்டியது, நகர எலி.
இரவு வந்தது. பொந்திலிருந்து வெளியேறிய எலிகள், அந்த வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்தன. 
அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்த கிராம எலி வியந்தது. அதன் நாவில், எச்சில் ஊறியது. 
எதை சாப்பிடுவது என, புரியாமல் தவித்த கிராம எலி, 'இந்த உணவின் மணமே, ருசியைக் காட்டுகிறது. நானும் உன்னுடன் தங்கி விடுகிறேன்...' என்றது.
எலிகளின் சத்தம் கேட்டு, சமையல்காரர் அங்கு வந்தார். அவை, ஓட்டம் பிடித்தன. பொந்தின் அங்கே, ஒரு பூனை அமர்ந்திருந்தது; அதனால், உயிர் பிழைத்தால் போதும் என, தப்பி ஓடிய எலிகள், அன்று இரவும் உணவின்றி தவித்தன. அலைந்து திரிந்தன.
அப்போது கிராம எலி, 'எளிய உணவு என்றாலும், கிராமத்தில் பயம் இல்லாமல் சாப்பிடலாம். அதுவே எனக்கு போதும்...' என, புலம்பியபடி ஓட்டம் பிடித்தது. அதைக் கேட்ட நகர எலி, சிந்திக்கத் துவங்கியது. அதன் கர்வம் அடங்கியது.
குட்டீஸ்... பகட்டு நிலையானது அல்ல; எளிமையே நிலையானது; மகிழ்ச்சி தருவது. புரிந்து கொண்டீர்களா...

No comments:

Post a Comment