Tuesday, June 18, 2019

வாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம் thanks to dinamalar.com


வாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம்

 Added : ஜூன் 18, 2019 
5Shares

“வயிற்றுக்குசோறிடல் வேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”
என்பான் மகாகவி பாரதி. இந்த அழகிய உலகம் இயல்பாகச் சுழல வேண்டும் என்றால் அது பசிப்பிணி இல்லாத உலகமாக மாறவேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவேஆகும். தமிழரின் பண்பாட்டை ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு சேர எழுப்பும் குரல் விருந்தோம்பல் என்பதே ஆகும். சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினத்தை இன்று ( ஜூன்18) உலகமெங்கும் கொண்டாடிவருகின்றனர். 2016 ஆம் ஆண்டு ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் இந்த தினம் உலக அளவில் உணவுப் பிரியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இன்றைய நவீன உலகில் உணவின் வகைகளும் அவற்றின் பெயர்களும் ஏராளமாக இருந்தாலும் எத்தகைய உணவு தயாரித்தாலும் அது அறுசுவைக்குள் தான் இருக்கும் என்பதே நமது முன்னோர்கள் வகுத்த நியதியாகும். ஆறு சுவைகளுடன் கூடிய உணவே முறையான உணவு என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. நாக்கு அறியக் கூடியசுவை ஆறு என்று தமிழ் மருத்துவமும் கூறுகிறது. நவீன மருத்துவமோ ஆயிரக்கணக்கான சுவை நிறமிகள் நமது நாக்கிலே குடிகொண்டுள்ளதாக கூறுகிறது. உடலை இயக்குகின்ற தாதுக்களுடன் அறுசுவையும் இணைந்து நமது உடலை திடமாக வைக்க உதவுகிறது. ரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்என்ற ஆறு தாதுக்களால் ஆனதே இந்தஉடலாகும். இந்த ஆறு தாதுக்களும் சரியானஅளவில் உடலில் இருக்கவேண்டும். அவற்றைசரிவர இருக்கச் செய்வது இந்தஅறுசுவையே ஆகும்.
உயிர்வாழ உணவு

'யாகவராயினும் நா காக்க' என்பான் வள்ளுவன். இது வெறும் நாவடக்கம் என்பதற்காக மட்டும் அவன் கூறியதாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆறு சுவைகளுடன் கூடிய உணவினை நமது நாக்கு சுவைத்தே உள்ளே அனுப்பி வைக்கிறது. அதில் ஏதேனும் ஒருசுவை அதிகமானாலும் அது நமக்கு தீங்கையே தருகிறது. உண்ணும் உணவிலும் கவனம் தேவை என்பதையும் கருத்திலே கொள்ள வேண்டும். சுவைகளில் தலைமையானது உப்பு.உயிர்வாழ உணவு அவசியம்; அந்த உணவினை நல்ல உணர்வோடு உண்பது அவசியம் என்பதே மூதாதையர்களின் கருத்து. தமிழ்ப் பண்பாட்டின் அடிநாதமே விருந்தோம்பல் என்ற உயரிய பண்பிலிருந்தே தொடங்குகிறது. வீடுகள் தோறும் திண்ணைகள் அமைத்து வழிபோக்கர்கள் அதில் தங்கிச் செல்ல வழிவகை செய்து, அங்கிருக்கும் மாடங்களில் உணவும் தண்ணீரும் வைத்து விருந்தோம்பல் செய்த இனம் நம்முடையது.இறக்கும்போது கூட யாரும் பசியோடு இறந்திடக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு வாய்க்கரிசி போடும் வழக்கமே வந்தது. நம்முடைய வீடுதேடி வரும் விருந்தினர்களை மனம்கோணாமல் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை அறிந்து அதை அவர்களுக்கு சமைத்து பரிமாறி மகிழ வேண்டும் என்பதை இலக்கியங்களும் பேசி மகிழ்கின்றன. பெரியபுராணம் முழுக்கவே பல்வேறு இடங்களில் அடியவர்களுக்கு விருந்து படைப்பதையே சேக்கிழாரும், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தை மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனாரும் பாடியிருப்பதே பசிப்பிணி நீங்கிய உலகம் வேண்டும் என்பதற்கே.
காலை உணவு

நம்முடைய கலாசாரம் மேலைநாட்டு நாகரிகம் நோக்கி நகர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. காலையில் அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் அவசரத்தில் மிகவேகமாக கிடைக்கும் உணவினை மெல்லக் கூட நேரமின்மை காரணமாக அள்ளிப் போட்டோ இல்லை பயணத்திலோ சாப்பிடுகிறோம். காலை உணவுதான் நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய அவசரத்தில் பலரும் காலை உணவினைத் தவிர்த்து விடுகிறோம். காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கும் மூளையைப் பாதிக்கும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.காலையில் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் சக்தியை அளிப்பதாக உள்ளது. அதுவும் இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்யவே நாம் காலை உணவை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பதம்பார்க்க ஆரம்பித்துவிடும். உடலைக் குறைக்கிறேன் என்கிற போர்வையில் காலை உணவைத் தவிர்ப்பவர்களே குண்டாகி விடுகிறார்கள். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.
ரசனையோடு சாப்பிடுபவர்கள்

உண்மையிலே ரசனையோடு சாப்பிடுபவர்களை பார்க்கும்போது நமக்கு சற்றே பொறாமை எட்டிப்பார்க்கிறது. இலையில் சரியாக, அளவாக தண்ணீர் தெளித்து அனைத்தும் பரிமாறும் வரை பொறுமையாகக் காத்திருந்து அதன் பின்னர் முறையாக வரிசையாக ஒவ்வொன்றாக ரசனையோடு பாராட்டிக் கொண்டே சாப்பிடும் வழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும். அவ்வாறு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் இலையில் எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். அதே நேரம் வேண்டியதைக் கூச்சமின்றி கேட்டுச் சாப்பிடுவார்கள்.நம்மில் பலரும் அவசரத்தில் வேண்டாம் என்று மறுத்தால் ஏதேனும் சொல்லிவிடுவார்களே என்ற தயக்கத்தாலும் அதிகமாக வாங்கி இலையில் அப்படியே வைத்து விட்டு அதை நாகரிகம் என்று கருதி எழும் ஒரு மோசமான சுபாவம் கொண்டவர்கள்.அதிலும் வேண்டியதைக் கேட்டு விருப்பத்தோடு உண்ண வேண்டும் என்பதற்காகவே பபே விருந்தில் கூட நாம எத்தனை விரயம் செய்கிறோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வீணாக்கப்படும் உணவுகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு பகிர்ந்து கொடுத்தால் எத்தனை நலம் பயக்கும் நமக்கு என்பதை உணர்ந்தவர்கள்தான் அறிய முடியும்அவசரமான உலகம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஆனால் நமது உடலை சரிசெய்யும் உணவினை ஒழுங்காக சரியான நேரத்தில் உண்டால்தானே உடல்நலம் பெற இயலும். தொடர்ந்து உழைப்பதற்கான வேகம் கிடைக்கும்.அந்த வேகத்தையும் உழைப்பிற்கான அடிப்படையாக இருக்கும் உணவுத் தேடலையே நாம் நிராகரிக்கும்போது இலக்கை எப்படி அடைவது? நம்மில் எத்தனை பேர் வீட்டிலே அமர்ந்து சாப்பிடும்போது தொலைகாட்சியையோ அலைபேசியையோ பார்க்காமல் சாப்பிடுகிறோம். இல்லை என்ற பதிலைத்தான் வருத்தமோடு சொல்கிறோம். இன்னமும் நாம் உண்ணும் பழக்கத்தை முறைப்படுத்தவில்லையோ அல்லது முன்னோர்கள் கொடுத்ததை பின்பற்றவில்லையோ என்ற வருத்தமும் உண்டு. உணவினை உண்பதிலே ஒரு முறையை வைத்து உண்டு சரியாக வாழ்பவர்களால்தான் வெற்றியாளர்களாக வலம் வர முடியும்.
உணவே மருந்து

உணவே மருந்து; மருந்தே உணவு என்று சொல்கிறோம். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொள்ளும்போது எந்த நோயும் வரப்போவதில்லை. எனவே நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது என்றால் அது மிகையாகாத ஒன்றே ஆகும். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் உள்ளிட்ட நுால்களும் திருக்குறளுமே எப்படி உணவு உட்கொள்ள வேண்டும்? எவ்வகையான உணவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற செய்தினைச் சொல்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுாலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'
என்ற குறளை அவசரம் அவசரமாக மதியவேளையில் பள்ளியில் சத்துணவுத் தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட்டதை அரசுப்பள்ளிகளில் படித்த பலரும் அத்தனை எளிதாக மறந்திட இயலாது. அத்தனை அழகான சூழலை இனி உருவாக்கிடவும் முடியாது. அந்த குறளின் இலக்கணப்படியே அப்போது வாழ்ந்திருப்போம். நாம் கொண்டுவரும் தின்பண்டங்களை சக மாணவர்களோடு உண்டு மகிழ்ந்திருப்போம். எப்போதும் கூடி வாழ முயற்சிக்க வேண்டும். வள்ளுவரும் அதையேதான் கூறுகிறார். பகுத்துண்டு வாழ்வதையே அறமாகச் சொல்கிறது.
பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது. அதைவிட மகிழ்ச்சி ஒன்று நம்மிடையே உண்டு. அதுவே பகிர்ந்து உண்பதாகும். மாணவர்களாக நாம் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டதை எளிதாக மறந்துவிட இயலாது. ஒவ்வொரு முறையும் பகிர்ந்து உண்ணும்போது பசி இயல்பாகவே அடங்கிவிடும்.
--நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்99941 71074

No comments:

Post a Comment