Friday, May 27, 2016

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!
Advertisement
 
 
Advertisement
 
 

Advertisement

''சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு - மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கேசொந்தமான கையிருப்பு!வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''
என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.சுவைபட நகைத்தலே நகைச்சுவை. நல்ல கருத்து+சிரிப்பு= நகைச்சுவை என்றால் வரவேற்பிற்குரியது. எதிராளியின் மனதைப் புண்படுத்தாத வேடிக்கை, விளையாட்டு, தமாஷ், ஹாஸ்யம், கேலி என எல்லாமே நகைச்சுவை வகையைச் சார்ந்தவையே. இன்றைய மாற்று 
மருத்துவ முறைகளில் சிரிப்பும் ஒரு சிகிச்சை முறையாக ஏற்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல, 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவ உண்மைதானே. 'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். 
நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை 
சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.
யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. 
ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டே' என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் சிரிக்க 
ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவர். சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும். மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல் 
முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது. சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி 
அதிகரிக்கிறது. நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.
சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார். “நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன்” என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.
இறுக்கம் தளரும் 'ஹியூமர் தெரபி' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'இம்மியூனோ குளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு 
சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சிரிக்கும் போது, உடலில் 'எண்டோர்பின்' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.
தலைவர்களும் நகைச்சுவை உணர்வும் பெரும்பாலான தலைவர்களிடம், நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருந்தது. அவர்கள் எதிராளியின் குறைகளை ஆவேச வார்த்தைகளில் கண்டிப்பதை விட, நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் காட்டும் போது நல்ல பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். 
பால கங்காதர திலகரை உளவு பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு, ரகசிய போலீஸ்காரர் ஒருவரை சமையல்காரனாக அனுப்பியது. அவனும் ஆறுமாதமாக அவரிடம் வேலை பார்த்தான். அந்த ஆசாமி திலகரிடம், “எசமான், சம்பளம் போதவில்லை, கொஞ்சம் உயர்த்த வேண்டும்” என்றான்.
திலகர் சிரித்துக் கொண்டே, 'என்னப்பா இது, நான் மாதம் ஆறு ரூபாய் தருகிறேன், சர்க்கார் இருபத்தெட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்னும் திருப்தி
இல்லையா உனக்கு?' என்று கேட்டார். பிறகு அவனைக் காணவேயில்லை.ஆங்கிலேயர் ஒருவர் மிகுந்த ஆணவத்துடன் “சூரியன் ஒரு போதும் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று பெருமையடித்தார். உடனே சுபாஷ்சந்திர போஸ் “ஆமாம், பிரிட்டிஷ்காரனை இருட்டிலே விட்டு வைக்க, கடவுளுக்குக் கூட நம்பிக்கை இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறி மடக்கினார். 
காமராஜரிடம் கிராம மக்கள் வந்து “ஐயா, எங்களுக்குச் சுடுகாட்டுப் பாதை சரியாயில்லை. நாங்கள் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாய் ஒரு பாதை வேண்டும்,” என்றனர். 
அதற்கு அவர், “சரிதான், நீங்க வாழறதுக்குப் பாதை போட நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, செத்தவனுக்குப் பாதை போடச் சொல்றீங்க” என்றார் நகைச்சுவையாக.
நேருவின் நகைச்சுவை ஜவஹர்லால் நேருவின் காரை வழிமறித்து, அவரை இறங்கவைத்து, “சுதந்திரம் சுதந்திரம் என்று பேசுகிறீர்களே, சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டார் ஒருவர். 
நேரு அவருடைய தோளைத் தட்டித் கொடுத்து, “உனக்கு என்ன கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய்? ஒரு நாட்டின் பிரதம மந்திரியை வழி மறித்து உன் கருத்தை 
நீ சொல்ல முடிகிறதே, அது தானப்பா சுதந்திரம்” என்றார் நகைச்சுவை இழையோட.மகாத்மா காந்தியிடம் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக, “உங்க நாட்டு மக்கள் உங்களைப் போய் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, உங்களை விட திறமையான தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா'' என்று கேட்டார். அதற்கு காந்தி, “உங்களைப் போன்ற பிரிட்டிஷ்காரர்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று சிரித்தபடி கூறினார்.
ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறதாம். ஆனால் பெரியவர்களோ, 15 முறை தான் சிரிக்கிறார்களாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். 
ஆகவே, அனைவரும் சிரியுங்கள்…… சிரியுங்கள்… வாய்விட்டுச் சிரியுங்கள்!-பா. பனிமலர்தமிழ்த்துறைத் தலைவர்,இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி,
மதுரைpanimalartamil75@gmail.com

Thursday, May 19, 2016

இறவனை நம்புங்கள் - நன்றி: பக்தி குமுதம்-20160602


சூட்டை தணிக்கும் சூப்பர் பானம்!

சூட்டை தணிக்கும் சூப்பர் பானம்!
Advertisement
 
 
Advertisement
 
கடந்த வாரம்
 
 
Advertisement

பதிவு செய்த நாள்

08மே
2016 
00:00
சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், எங்கள் வீட்டு காலை உணவைப் பார்த்து, அதிர்ச்சியுடன் கேலியாகவும் பேசியதால், நாயகியருக்கு இந்த வாரக் கட்டுரைக்கான செய்தி கிடைத்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

காபியும், டீயும் வீட்டுக்குள்ளே வந்த பின்னாடி தான், நம் பாரம்பரிய நீராகாரம் குடிக்கும் பழக்கம் நீர்த்து விட்டது. காலையில் நாங்கள் நீராகாரமும், பழைய சோறும் சாப்பிடுவதைப் பார்த்த உறவினர், சென்னை வெயிலை விட சூடாகி விட்டார். 
பழைய சாத நீராகாரம் என்பது, முதல் நாள் இரவில் சமைத்த சோற்றில் நீரூற்றி வைத்திருந்து, மறுநாள் காலை அந்த நீருடன் உப்பு, மோர் கலந்துக் குடிப்பது. இது உடல் உழைப்புக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கும். 
நம் தமிழகம் வெப்ப மண்டல பகுதி. அதனால் ஏற்படும் உடல் வெப்பத்தை, இது குறைக்கும். உடல் நலம் பாதுகாக்கும், இந்த வெயிலுக்கு ஏற்றது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் எத்தனைப் பேர் இதை பின்பற்றுகிறோம்? அப்படி செய்வோரை ஏதோ தீண்டத்தகாத மாதிரியே பார்ப்பது, கிண்டல் செய்வது என்று இருக்கும், நம் நாயகியருக்கு இந்த மாதிரியான சில விஷயங்களை, திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. நல்ல விஷயத்தை,
நாற்பது முறை சொன்னாலும் தப்பில்லை.
நம் நாயகியரிடம், பழைய சோற்றைப் பற்றிக் கேட்டால், 'இரவில் டிபன் தான் சாப்பிடுறோம். எங்கிருந்து சாதம் வடித்து தண்ணீர் ஊற்றி வைப்பது?' என, நம்மை திருப்பிக் கேட்கின்றனர். இந்த உணவு, நம் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காக என்பதை உணர்ந்து, நீங்கள் உங்களிடமிருந்து பழக்கத்தைத் துவக்கினால், உங்கள் வாரிசுகளும் பின்பற்றுவார்களே!

காலையில் மீந்த சோற்றை பிரிஜ்ஜில் வைத்து, மறுநாள் அதை சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தை விடுங்கள். அந்தச் சோற்றுடன், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு பிசைந்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், எண்ணெயில் வறுத்து சாப்பிட ஒரு பலகாரம் தயார். பழைய சோறு சாப்பிட்டால், உடல் பருமனாகும் என்று சொல்வது தவறு. மூச்சு முட்ட எதைச் சாப்பிட்டாலும் பிரச்னை தான். நெருப்பு போன்ற பித்தத்தின் குணத்தை குளுமையாக்கி, வன்முறை, குரோதம், பகை, ஆக்ரோஷம் போன்ற குணங்களை, நம்மிடமிருந்து அடியோடு நீக்கிவிடும் உணவு, இந்த பழைய சாதமும், நீராகாரமும். இந்த சித்திரை கோடை வெயிலில், உடலை குளிர வைத்து, தெம்பு கொடுக்கும் ஒரு உற்சாகப்பானம், இந்த பழைய சோற்றின் நீராகாரம் என்று, உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மண் பானையில் ஊறும் சோற்றின் நீரில் தான் வாசமும், தரமும் கூடுதலாக இருக்கிறது. 'இதில், நொதித்தலின் மூலம் உருவாகும் நுண்ணுயிர்கள் உடலுக்கு நன்மை செய்யும்; செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவும் இருக்கும்' எனவும் கண்டுபிடித்து கூறியுள்ளனர். நீர் கலந்த சோற்றுப் பருக்கையை கஞ்சி என்றும், அந்த உணவுப் பழக்கம் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும், புத்த சமய நூல்களிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமும் காலையில் பழையச் சோற்றைச் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதைத் தடுக்கலாம்; நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழையச் சோற்றை சாப்பிட ஆரம்பியுங்கள் இன்றே!

ஒரு கப் தயிரில்,
ஒரு வெங்காயம்,
தோல் நீக்கிய இஞ்சி,
விதை நீக்கிய பச்சை மிளகாய்,
கொத்துமல்லி,
கறிவேப்பிலை,
கல் உப்பு சேர்த்து
மிக்சியில் அரைத்து
வடிகட்டி, ஒரு சொம்பு
நீராகாரத்தையும்
கலந்துவிட்டால்,
'வெல்கம் ட்ரிங்க்' ரெடி!

ம.வான்மதி

புரிந்து போவதில் இல்லை: புரிந்து வாழ்வதில் தான் இருக்கிறது வாழ்க்கை

இன்று (மே, 15) உலக குடும்ப தினம்
வெளிநாடுகளில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, அதன் நதி மூலம், காரண காரியம், பலன், விளைவு என அனைத்தையும் தொகுத்து, ஓர் ஆவணமாக வைத்து விடுவர். அப்படி ஒரு ஆவணப் புத்தகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த முதியோரிடம், 'உங்கள் வாழ்நாளில், உங்களை மன வருத்தம் அடைய வைத்த சம்பவம் எது?' என்ற கேள்விக்கு, பெரும்பாலானோர் கூறியிருந்த பதில்...

குடும்பத்துடன் இன்னும் நேரம் செலவழித்திருக்கலாம்; தனியாக இல்லாமல் சேர்ந்து அன்பாய்
இருந்திருக்கலாம்.அப்படி இருப்பது தான் சந்தோஷம் என சொல்லும் தைரியத்துடன் இருந்திருக்கலாம். மொத்தத்தில் நான் சந்தோஷமாய் இருக்க நானே என்னை அனுமதித்திருக்கலாம் என்பதே...
இது அவர்களுக்கு காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம். ஆனால், இவர்களைப் பார்த்து நமக்கு சரியான நேரத்தில் தெளிவு ஏற்பட வேண்டாமா? இது வெளிநாட்டு முதியோர் மட்டுமல்ல; குடும்ப உறவு முறைகளோடு வாழ்கிற, நம் நாட்டு இளையவர்களும் நினைத்து ஏங்குகிற ஒரு விஷயம். ஒரு திட்டமிடாத வாழ்க்கையை தான், நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் என்பதை, உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு திட்டமிடல்
என்பது, பொருளாதாரத்தில் மட்டுமல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உறவினை போற்றிடு, உணர்வினை பகிர்ந்திடு, ஆதரவு தந்திடு, ஆனந்தம் கண்டிடு!
மக்களை சேர்த்திடு, மகிழ்வென வாழ்ந்திடு!
இந்த மூன்று வரிகளில் முக்காலத்தையும் சொல்லிருக்கின்றனர் நம் முன்னோர். நம் கூட்டுக் குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகும் இந்த சமயத்தில், நம் கூட்டுக் குடும்ப அமைப்பின் உன்னதத்தை மறந்து, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், பெண்கள் தினம், தம்பதியர் தினம், நண்பர்கள் தினம் என, தனித்தனியாக கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு தனி மனிதனும், தன் குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காகவே, 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, மே, 15ம் தேதியை குடும்ப தினமாக அறிவித்தது. எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும், எந்த வயதிற்கு பிறகும் குடும்ப உறவுகளையோ, குடும்ப அமைப்பையோ கைவிடாமல் ஆதரவளித்தும், ஆதரவு பெற்றும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, குடும்ப அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் இது சாதாரண விஷயமாய், தேவையில்லாத செய்தியாக இருக்கலாம். ஆனால் பொருளாதார தேவைக்காக, குடும்பத்தைப் பிரிந்து கண் காணாத ஊர்களில், நாடுகளில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தியும், தினமும் இது.ஆயிரம் வேலைகள் என ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டேஇருக்கும் அப்படிப்பட்ட குடும்பங் களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் கல்வி, வேலைவாய்ப்பில் தத்தம் குடும்பத்தினரின் பங்கை உணர்த்தவும் கண்டிப்பாய், இந்த நாளை குடும்ப தினமாக பாவித்து கொண்டாடுவதில் தவறொன்றுமில்லை.
மாறிவரும் உலகில், பல சவால்களை எதிர்நோக்கி உள்ள சூழ்நிலையில், அடுத்த தலைமுறையை உருவாக்குவதில், நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. ஆனால், அந்த பங்கை நாம் செவ்வனே செய்திட குடும்ப அமைப்பும், உறவுகளின் ஆதரவும், அன்பும், வழிகாட்டுதலும் அவசியம். நாம் சம்பாதிக்கிறோம்; நாமே திருமணம் செய்து கொள்கிறோம்; நாமே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம். இதில் எதற்கு பல நிபந்தனைகளுடன், கட்டுப்பாடுகளுடனான குடும்ப முறை என்று யோசிக்கும் மனநிலையில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும்.
ஒரு மனிதன், சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லித்தருவது குடும்பமே. சமூகத்தின் ஆணிவேரே குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமூகம். நல்லதை கற்றுத் தருவது அல்லாததை சமாளிக்க சொல்லிக் கொடுப்பது குடும்பமே. குடும்ப அமைப்பில் இல்லாமல் தனித்தனி தீவாய் வாழ்கிறவர்களின் உறவுகளிடையே சகிப்புத்தன்மை குறைந்து, விரிசல் ஏற்படக் காரணமாகிறது. உறவுகளின் உன்னதம் தெரியாமல், இப்படி பல குடும்பங்கள் சேர்ந்தால், அது நாட்டையும் பாதிக்கும்.
அனைவரும் ஒரே குடும்பமாய் இருக்கும்பட்சத்தில் திறம்பட கட்டிக்காக்கும் நிர்வாக
வியலை, குடும்பத்தலைவிகள் பல்கலைக்கழகம் போகாமலேயே கற்றுத் வைத்திருந்தனர். சிரமங்கள் இருந்தாலும், சிக்கலில் மாட்டியதில்லை அன்று. இன்றைய பல சமூக சீர்கேடுகளுக்கு காரணமே, ஆரோக்கியமான அறிவுரை சொல்லி அணைத்துச் செல்ல பெரியோர் இல்லாத சூழல். தடுக்க யாரும் இல்லை எனும் நிலையில், அடுத்தவர் மெச்சும்படி வாழ வேண்டும் என்கிற வாழும் முறை. இளம் தலைமுறையினர் அதிகமாய் படித்து, அதைவிட அதிகமாய் சம்பாதித்து, புற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருந்தாலும் மன அமைதி, அடுத்த தலைமுறையினரின் வாழ்வு என, ஒரு பண்பட்ட அக வாழ்வில், தோல்வி தான் அடைந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் முதற்கொண்டு, அரசியல் தலைவர்கள் இப்போதெல்லாம் தாங்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில், 'கூடி வாழ்வதனால் கோடி நன்மை உண்டு' என்றே சொல்லி வாழ்த்துகின்றனர்.
கடைசியாக ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள், நாம் நல்லவர்களாய் இருப்பது, நம் அம்மா, அப்பா மட்டுமில்லை; நம் தாத்தா, பாட்டியின் வளர்ப்பும் சேர்ந்ததால் தான். அதேபோல் நம் பிள்ளைகளும் மிக நல்லவர்களாய் இருக்க, நம் வளர்ப்பும், கவனிப்பும் மட்டும் போதாது. பாட்டி வளர்த்த எந்த பேரப்பிள்ளையும் கெட்டுப் போனதாக சரித்திரம் கிடையாது.
ஐம்பது வருடங்களுக்கு முன், உங்கள் நாட்டில் ஏன், 'சைக்யாட்ரிஸ்ட்ஸ்' அதிகம் இல்லை என்று ஹாலிவுட் திரைப்பட விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நம் திரைப்பட இயக்குனர்
சுப்ரமணியனின் பதில்,உங்களுக்கு தேவை எங்களுக்கு தேவையில்லை.
எங்கள் நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் உயிர்ப்புடன் இருக்கும் வரை சைக்யாட்ரிஸ்ட்டே தேவையில்லை என்று சொன்னாராம், நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியனின் தந்தையான இயக்குனர் சுப்ரமணியன்.
இன்றுக்கூட ஆங்கிலத்தில் சித்தப்பா - சித்தி; பெரியப்பா - பெரியம்மா போன்ற உறவுகளுக்கு ஆன்ட்டி - அங்கிள் என்ற வார்த்தைகள் தான். தனிமனிதனின் சுதந்திரம் மற்றும் விருப்பு, வெறுப்புகளை இந்த சேர்ந்து வாழும் முறையால் இழக்கிறோம் என்று சொல்பவர்கள் உண்டு.
தனியாக என்றால் நாம் புறத்தில் மட்டுல்ல. அன்பு, பாசம், நேசம் என அகத்தினாலும் தனித்து விடப்பட்டிருக்கிறோம். பிரச்னைகள் வரும், ஆனால் பாதிப்புகள் அதிகம் இருக்காது.
மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் நம்மை மெல்ல மெல்ல மாற்றிவிட்டது என, காரணங்களை அடுக்காமல் முதலில் நம்மிடம் உள்ள தவறை சரி செய்ய முயல்வோம்.

இளம் தலைமுறையினர் அதிகமாய் படித்து, அதைவிட அதிகமாய் சம்பாதித்து, புற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருந்தாலும் மன அமைதி, அடுத்த தலைமுறையினரின் வாழ்வு என, ஒரு பண்பட்ட அக வாழ்வில், தோல்வி தான் அடைந்து வருகின்றனர்.

Advertisement

Friday, May 13, 2016

மனமே நீ மாறிவிடு-9 - நன்றி: டாக்டர் விகடன் - 16 May, 2016


மனமே நீ மாறிவிடு - 9

ஓவியம்: ஹாசிப்கான்

நம் எண்ணங்கள் என்பவை உள்மன விவாதங்களே. ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும் இந்த விவாதங்கள் பலமாக நடக்கும். இவையே நம் செயல்களுக்குக் காரணங்களையும் புதிய அர்த்தங்களையும் கொடுக்கவல்லவை. நடக்கும் காரியத்தை எதிர்பார்ப்பதும், நடந்தவற்றில் இருந்து பாடம் கற்பதும் இந்த எண்ணங்களை வைத்துத்தான்.

`நான் காத்திருக்கும்போது மட்டும் எனக்கு பஸ் வராது’, `நான் சொன்னா யார் கேட்பா?’, `நம்ம ராசி, எல்லாமே ஏறுமாறாத்தான் அமையும்’... இப்படி, நமக்குள் பேசிக்கொண்டிருக்கிறோம். 

பெண்ணுக்குக் கல்யாணம் எனப் பத்திரிகை கொடுக்க வருகிறார் ஒருவர். `பையன் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டர்’ என்று சொல்கிறார். உடனே, நம் மனம் விவாதத்தைத் தொடங்கிவிடும். `நான் வேலைக்குச் சேர்ந்தப்ப, இவன் ஜஸ்ட் டெம்பரரி கிளார்க். ஐஸ்ஹவுஸ் அருகே ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தான். இனி இவனும் அமெரிக்கா போய் செட்டில் ஆயிடுவான். நாம மட்டும் இப்படியே இருக்கோம். எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். ஹூம்!’
இப்படி, ஒவ்வொரு நிகழ்வுக்கும் நமக்குள் ஒரு டயலாக் ஓடும். அந்த எண்ணஓட்டம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வின் சகல முடிவுகளும் இருக்கும். குறிப்பாக, நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லாததும் இந்த எண்ணங்களினால்தான். இந்த எண்ணங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், உங்கள் மனநலத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும்.

வாழ்க்கையின் சந்தோஷத்துக்கு இரு காரணங்கள்தான் உள்ளன. உங்கள் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பது ஒன்று. அவற்றை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பது இரண்டு. இதில், மகிழ்ச்சியை நிர்ணயிப்பதற்கு முதல் காரணம் 10 சதவிகிதம். இரண்டாவது 90 சதவிகிதம்.
இல்லாததை நினைத்து மருகுவதைவிட கிடைத்ததை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதுதான் ஒரு முதிர்ந்த மனதின் வெளிப்பாடு. நமக்கு நம் வாழ்வில் இல்லாதது அனைத்தும் தெளிவாக, வரிசையாகத் தெரியும். ‘நான் குள்ளம்’, ‘என் நிறம் சற்று கறுப்பு’, ‘எனக்கு ஆங்கிலம் வராது’, ‘என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை’, ‘என் வாழ்க்கைத்துணையால் நிம்மதி இல்லை’, ‘என் வேலையில் உயர்வு இல்லை’, ‘என் பிள்ளைகள் மதிப்பது இல்லை’, ‘உடல் உபாதைகள் என்னைப் படுத்துகின்றன’, ‘என் வாழ்க்கை முழுத் தோல்வி’...
இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகிறோம். ஆனால், கிடைத்தவற்றுக்கு நன்றி சொன்னோமா... அதனால் மகிழ்கிறோமா... இன்றும் உயிரோடு வாழ்தலே மிகப்பெரிய கொடை என்று உணர்ந்து நன்றி சொன்னோமா? கிடைத்ததை நினைக்காத மனம், இல்லாததை நேரம் தவறாமல் நினைக்கும்.
உடலில் ஒரு பாகம் பழுதடையும்போது, அது சீராக இயங்கினாலே போதும் என ஒவ்வொரு விநாடியும் துடிக்கிறோம், இல்லையா? அது சரியான மறுநாளே, அதை மறந்துவிடுகிறோம். சரியாக இயங்கும் அங்கங்களுக்கு நன்றி செலுத்த மாட்டோம். ஆனால், அவை பழுதுபட்டால் அதன் மீது முழுக் கவனம் செலுத்துவோம். இதுதான் மனதின் செயல்பாடு.
மகன் படிக்கவில்லை என்றால், புலம்புவோம், வேண்டுவோம், பிரார்த்திப்போம், சண்டை போடுவோம். ஆனால், அவன் முதல் இடம் பிடித்தால், அந்தச் சந்தோஷம் சிறிது நேரம்தான். பின் மனம் அடுத்த கவலையை நோக்கி நகர்ந்துவிடும். `இவ்வளவு மார்க் வாங்கியிருந்தாலும் ஸீட் கிடைக்கணுமே?’, `வெளியூர் காலேஜ்னா சாப்பாடு கஷ்டம்!’... இப்போது புரிகிறதா, நம் நிஜமான எதிரி எது என்று?  புறக் காரணங்களைத் தேடித்தேடிக் குற்றம் சொல்வோர் ஒன்றை மறந்துவிடுகின்றனர். புறக் காரணங்களை பரிசீலனை செய்யும் எண்ணங்களும் அது எடுக்கும் முடிவுகளும்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

`எனக்கு ஓவியம் கற்றுக்கொடுக்க யாரும் இல்லை. இருந்திருந்தால் நானும் ஓவியராகியிருப்பேன்’ என்று சொல்பவர்கள் உண்டு. கைகள் இல்லாமல் காலால் ஓவியம் வரைபவர்கள் உண்டு. எது உந்து சக்தி என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

உங்கள் மனம் உள்ளே போடும் இரைச்சலால் நீங்கள் வெளியில் உள்ள அமைதியை அனுபவிக்கத் தவறுகிறீர்கள். உங்களுக்குள் ஒலிக்கும் குரல், உங்களை அன்பாக நடத்தினால் நீங்கள் பிறரை அன்பாக நடத்துவீர்கள். உங்கள் உள் மன எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் வாழ்க்கை நம்பிக்கையோடு நகரும். 

உங்களால் உங்கள் புற உலகை மாற்றுவது சாத்தியம் இல்லை; உங்கள் அக உலகை மாற்றுவது சாத்தியம்; அவசியம். உங்கள் அக உலகம் மாறினால், உங்கள் புற உலகம் தானாக மாறும்.
- மாறுவோம்!

‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ - NanRi: டாக்டர் விகடன்


‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ

இளங்கோ... இன்று, ‘இன்ஸ்பைரிங் இளங்கோ’வாக உயர்ந்திருக்கிறார்; பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்திருந்தாலும், தன்னம்பிக்கையால் தனி உயரம் தொட்ட மனிதர்.  ஆங்கில ஆசிரியர்,  தன்னம்பிக்கைப் பேச்சாளர், பாடகர், தொழில்முனைவோர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளம்பரங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவர்  எனப் பல்வேறு முகம் கொண்டவர். 

“நமது கண் ஒரு கேமரா போன்றது. எப்படி ஒரு பொருள் நமது கண்ணுக்குத் தெரிகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது கண்ணுக்குள் விழித்திரை (ரெட்டினா) இருக்கிறது. நாம் பார்க்கும்  எந்தவொரு பிம்பமும் தலைகீழாகத்தான் ரெட்டினாவுக்க்ச் செல்லும், ரெட்டி
னாவில் பிம்பம் பட்ட பின்னர், ரெட்டினாவுக்கும் மூளைக்கும் இடையே சிக்னல்கள் சென்று அது என்ன என்று மூளைதான் அதை உருவகப்படுத்தும்.  ஆக, கண் என்பது ஒரு கருவிதான். மூளையால்தான் நாம் பார்க்கிறோம். 

எனக்கு  பிறவியிலேயே பார்வைக்குறைபாடு ஏற்பட்டதற்குக் காரணம் `ரெட்டினிடிஸ் பிக்மென்டேஷன்’ என்ற மரபியல் பிரச்னை. எனது தாய், தந்தை இருவரும் முறைவழிச் சொந்தங்கள். சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில நோய்கள் வருவதற்கான ரிஸ்க் அதிகம். அதில் ஒன்று, ரெடினிடிஸ் பிக்மென்டேஷன். 
எனக்கு மற்றவர்களைப் போலவே கண்கள் இருக்கின்றன. அதில் காட்சிகள் விழுகின்றன. அதனால், என்னை கண் தானம் செய்வதற்குக்கூட மருத்துவர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.  விழித்திரையில் பிம்பம் படும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் பின்னர், விழித்திரையில் இருந்து மூளைக்குச் செல்லும் பகுதியில் நியூரான்கள் பிறவியிலேயே பாதிக்கப்பட்டிருக்கின்றன. விளைவு,  பிறவியிலேயே பார்வை இழப்பு! 

பார்வை இழப்பு என்பதை நான் `பார்வைச் சவால்’ என்றே கருதுகிறேன். எந்தக் காலகட்டத்திலும் எனக்குப் பார்வை இல்லை என்பதை ஒரு பிரச்னையாகக் கருதியது இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு எந்தவொரு விஷயத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்காகக் கடுமையாக உழைப்பேன். 

பள்ளிக்கூட ஆரம்ப நாட்களில்  எனக்கு கணக்கு பாடம் சரியாக வராது. ஒன்பதாவது படிக்கும் வரை கணக்கு பாடத்தில் மிகச் சுமாரான மதிப்பெண்களை மட்டுமே வாங்கினேன். ஒரு முறை ஆசிரியர் என்னை மனம் புண்படும்படி பேசவும், எனக்கு வருத்தமும் கோபமும் வந்தது. கணக்குப் பாடத்தை தீவிரமாகப் படித்தேன். 10-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்று, அதே ஆசிரியர் முன்பு கம்பீரமாக நின்றேன். அந்தக் கணம்தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.
லயோலா கல்லூரி மாணவன் நான். அந்தக் கல்லூரியில் ஒரு குரூப் எப்போதுமே ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுவார்கள். நான் தமிழ் மீடியத்தில் படித்தவன் என்பதால், எனது உச்சரிப்புகள் எல்லாம் மிகவும் சுமாராக இருக்கும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறி இருந்ததால், நான் அந்த குரூப்புடன் இணைந்து எப்போதும் ஆங்கிலம் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது சில மாணவர்கள் தவறான புரிதல்களால் என்னை ராக்கிங் செய்தார்கள். `கண்ணு தெரியாம வாழ்ந்து என்ன பண்ணப்போற?’ என்றார்கள்.  ஏன்தான் பிறந்தோம் என்று ஒரு கணம் தடுமாறினேன். ஆனால், சில விநாடிகளில், அந்த உத்வேகம் வந்தது. ‘நான் ஆங்கிலம் கற்க  முயற்சிக்கிறேன், நீ முயற்சியே செய்யாமல், என்னைக் கேவலமாகக் கேலி செய்கிறாய். நீயே இந்த உலகத்தில் ஜாலியாக வாழும்போது நான் வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே’ எனச் சொல்லிவிட்டு  நகர்ந்தேன். நாம் வாழ்க்கையில் புதிதாக எதை முயற்சித்தாலும் நம்மை நான்கு பேர் கேலி செய்வார்கள். ஆனால், அதைக் கண்டு மனம் வெதும்பிவிடக் கூடாது என்பதை உணர்ந்தேன். ஏட்டுக்கல்வியைவிடவும் அனுபவங்கள் நிறையப் பாடங்களைக் கற்றுத்தரும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நான் ஆசிரியராக பணியில் சேர்ந்த பிறகு, ஆங்கில மீடியத்தில் படித்தவர்களிலேயே பெரும்பாலானோர் சரியாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ சிரமப்படுகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பலருக்கும்  ‘தமிழும் தகராறு, இங்கிலீஷும் இடிக்கிறது’.  கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எனப் பலருக்கும் தனித்திறன் பயிற்சிகள் அவசியம் தேவை என்பதை உணர்ந்தேன். 2008-ம் ஆண்டில் ‘ஏஸ் பனேசியா லைஃப் ஸ்கில்ஸ்’ என்ற பெயரில் வாழ்வியல் மேலாண்மையை  பயிற்றுவிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கென பிரத்யேகப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். இந்த நிறுவனம் மூலமாகப் பலச் சாதனைகளைப் புரிந்துவருகிறோம்.
‘நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே பெரிது’ என்பதை  முழுமையாக உணர்ந்திருக்கிறேன். நமது எண்ணங்களும், நமது வார்த்தைகளும் சரியாக இருக்கும்போது நாம் மகிழ்ச்சியாக இயங்குவோம். எந்தக் காரணத்துக்காகவும் எந்தவொரு விஷயத்தையும் தாழ்வுமனப்பான்மையுடன் நான் அணுகுவது கிடையாது. என்னை நான் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன். உலகில் யாருக்காகவும் எப்போதும் வளைந்து கொடுக்காதது நேரம் மட்டும்தான். ஒபாமாவுக்கும் அம்பானிக்கும் நமக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரத்தைச் சரியாக நாம் பயன்படுத்த ஆரம்பித்தாலே, வாழ்வில் பாதி சிக்கல்கள் சரியாகிவிடும். உடலில் ஏற்படும் சவாலாக இருந்தாலும் சரி,  உறவுகள், வேலையில் ஏற்படும் சவாலாக இருந்தாலும்  சரி எந்தத் தருணத்திலும் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் வெற்றிகரமாக கடந்துவரும் திறன்படைத்தவர் என்பதை  மனதில் பதியவையுங்கள். மற்றவர்களிடமும் சரி, உங்களிடமும் சரி குறைகளைப் பார்த்து மனதை உழற்றாதீர்கள், நிறைகளை மேம்படுத்துங்கள். நேர்மறையாக அணுகுங்கள். வெற்றி உங்களுடையதே!
- பு.விவேக் ஆனந்த், படங்கள்: தி.குமரகுருபரன்
ஹெல்த்தியாக ஆரம்பியுங்கள்!

நாம் `குட் மார்னிங்’, `குட் ஈவினிங்’ என ஆங்கிலத்தில் சொல்வோம். அதற்கு பதிலாக `ஹெல்த்தி மார்னிங்’, `ஹெல்த்தி ஈவினிங்’ என மாற்றிச் சொல்லிப் பாருங்கள். உங்களையே அறியாமல் ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் வருவதை உணர முடியும். ஹெல்த்தி என்பதை மருத்துவக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.  ஃபிஸிக்கல் ஹெல்த்தி, சைக்காலஜிக்கல் ஹெல்த்தி, சோஷியல் ஹெல்த்தி, ஃபைனான்ஷியல் ஹெல்த்தி என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக் கலவையாகக் கருத வேண்டும். நாம் ஆத்மார்த்தமாக மற்றவர்களை காலை, மாலை, இரவு என ஒவ்வொரு பொழுதிலும் வாழ்த்தும்போதும் நம்மிடமும் நேர்மறை எண்ணவோட்டங்கள் அதிகரிக்கும்.

Wednesday, May 11, 2016

நளாயினிகள்... நந்தினிகள்... - NanRi: Vikatan

நளாயினிகள்... நந்தினிகள்... உங்களை விட்டு விலகுவதுமில்லை... விட்டுக்கொடுப்பதுமில்லை!

“என்னை நான் தேடித் தேடி... உன்னிடம் கண்டுகொண்டேன்!” - ஆண் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரி, ஆண்கள் உலகின் ஜீவமொழி!

 
முக்காலே மூன்று வீதம் ஆண்கள்,  தங்களின் ஆளுமை வடிவத்தினைப் பெண்களுக்குள்ளேதான் கண்டெடுக்கின்றனர். ஆண்களின் உலகம் எப்போதும் பெண்கள் உலகத்தின் ஊடேதான் இயங்குகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு ஆளரவமற்ற திருப்பங்களிலும்,  தன்னைச் சார்ந்த ஆண்களுக்காகவே சுழலும் பெண்களின் உலகம், உள்ளே உற்றுப் பார்த்தால் ஆயுள் முழுமைக்குமான உலகளாவிய பாடங்களைத் தர வல்லது. சோகம், கோபம், கண்ணீர், மகிழ்ச்சி என அலாதியான உணர்ச்சிகள் அனைத்தையும் தங்களைச் சார்ந்த ஜீவன்களுக்காகத் தூக்கிப்போட பெண் என்பவளால் முடியும்.
 
ஒவ்வொரு காலகட்ட சுழற்சியிலும் உடைகளும், நாகரிகமும் மாறிக்கொண்டு இருந்தாலும் பெண் என்பவள் மனதளவில் இன்றும் ஒரே மாதிரியான கலவையாகத்தான் இருக்கிறாள். அவளால் மட்டும்தான் ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும் முடியும். 
 
உலகமே பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கும் வேளையிலும், வீட்டு பட்ஜெட்டினை துண்டுவிழாமல் பாதுகாக்கும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே கைவந்த கலை. வசதிகளின் வளர்ச்சி தாறுமாறாய் அதிகரித்திருக்கும் நிலையிலும் ஒரு குழந்தையை வளர்க்கவே மூக்கால் அழும் நமக்கு, ஓர் ஓலை வேய்ந்த குடிசை வீட்டில், விஷ ஜந்துக்கள் சுற்றும் தரையில், மருத்துவமனைக்குக்கூட வழியில்லாத கிராமத்தில் 16 குழந்தைகளைப் பெற்று, அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி அன்பையும், ஒரே மாதிரி வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்த தையல் நாயகி பாட்டி ஆச்சர்யம்தான்.
 
தாய், தந்தையற்று அனாதரவாய் நின்றபோதும், குட்டித் தங்கைக்காக நன்றாகப் படித்துக்கொண்டிருந்த படிப்பை விட்டுவிட்டு, திருப்பூர் கார்மென்ட்ஸுக்கு வேலைக்குச் சென்ற செல்விக்கு,  தங்கையை ஹாஸ்டலில் சென்று பார்க்கும் நாள் மட்டும்தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். 
 
சுரங்க நடைபாதையின் ஓரத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரத் தாத்தாவுக்கு, பையில் இருக்கும் ஒட்டுமொத்த சில்லரையையும் வழித்துப் போட்டுவிடும் அன்பான குணம் கொண்ட கவிதா, பக்கத்து வீட்டுப் பெண் அவசரத்துக்கு காப்பி பொடி கேட்டால்,  நின்றுகூட கேட்காமல் கதவை மூடிவிடுவாள். ஆனால், அதே பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்,  காலை டிபன் முதல் இரவு உணவுவரை அவள் கேட்காமலேயே கவிதா வீட்டிலிருந்து கிடைக்கும்.
 
பேருந்தின் ஆடைக் கசங்கல்களிலும், வியர்வை நாற்றத்திலும், கேவலமான ஆண்களின் இச்சை இடிபாடுகளிலும் தினம், தினம் உழன்று குடும்பமே பிரதானம் என்று வாழும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் காஸ்மெடிக் உலகம் பெண்களைக் குறிவைத்தாலும், முகத்துக்கு பவுடர்கூட போடாமல் வெற்று சாந்துப் பொட்டுடன், இதுவே அதிகம் என்பதாக நடைபோடும் பெண்களும் நிறைந்துதான் கிடக்கிறார்கள் இங்கு. 
 
 
காதல் தோல்வியை வெளியே சொல்வது தப்பு, அடிக்கிற மாதிரி லிப்ஸ்டிக் போட்டால் தப்பு, பாலியல் சார்ந்த படங்கள் குறித்த பார்வை தப்போ தப்பு என்று,  பெண்கள் செய்தால் இவையெல்லாம் தவறு என்று நீண்டு கிடக்கும் பட்டியலை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொள்ள,  பெண்களால் மட்டுமே முடியும். திருமணத்துக்கு முன்புவரை நீண்ட, நெடிய நண்பர்கள் வட்டத்தில் இடம்பிடித்திருக்கும் பெண், கைப்பிடித்தவனுக்காக ஒரே நேரத்தில் அத்தனை நண்பர்களையும் துறந்து, தன் வருத்தம் மறைத்து,  அந்த வட்டத்தைவிட்டு வெளிவரும் திறன் பெற்றவள்.
 
நளாயினியாய் இருக்கட்டும், இந்தக் கால நந்தினியாய் இருக்கட்டும்... உண்மையாய் கணவனை நேசிக்கும் பெண்களால். அவன் தவறானவன் என்று தெரிந்தாலும் விட்டுவிலக முடிவதே இல்லை. இயல்பாகவே பெண்களின் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நேசத்தின் துளிகள் தாய்ப்பாலாய் வெளிவருவதாலோ என்னவோ, பெற்ற பிள்ளைகள் தன்னைவிட்டு ஒதுங்கினாலும், வெறுத்து ஒதுக்கினாலும் அவர்களை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை பெண்களுக்கு.
 
காமத் தேடல்களுக்கான போர்க்களமாகவே பெண், பார்வைக்குப் புலனாகிறாள். அதனாலேயே அவளுடைய அந்தரங்கம் என்பது மார்பகங்களும், மறைவுப் பிரதேசங்களும் மட்டுமே என்பதான முடிவுக்கு ஆண்கள் வந்துவிடுகிறார்கள். வெறும் வியர்வை சுரப்புக்காகவும், பிறந்த குழந்தையின் உணவுத் தேவைக்குமே படைக்கப்பட்ட மார்பகங்கள் காமத்தின்பால் சென்றடைவதே, பெரும்பாலான ஆண்களின் பெண்கள் குறித்த தவறான உருவகங்களுக்கு க்காரணம்.
 
‘‘ பெண் சுதந்திரம் அவளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்பதை சுஜாதா,  தன்னுடைய எழுத்தாக்கம் ஒன்றில் பதிவு செய்திருப்பார். அது முழுக்க, முழுக்க மெய்யான கூற்று. இன்றைய பெண்ணடிமைத் தளை  நீங்கிய ஒரு விடுதலையாக பெண்கள் நினைப்பதுகூட, அவளிடம் வலிந்து திணிக்கப்பட்டதுதான். 
 
அவள் உண்மையில் யார் என்ற கேள்விக்கு, இன்றுவரையில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே விடை. எந்த அளவீட்டாலும் அளவிட முடியாத ஓர் உலகம் அவளுடையது. அதனுள்ளே சென்றுபார்க்க நினைத்து தொலைந்துபோனவர்கள்தான் ஏராளம். வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே எந்தப் பெண்ணையும் கணித்துவிட முடியாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிரித்து உரையாடும் அதே நேரத்தில், அவளுள்ளே சோகத்தின் இழை ஒன்று உள்ளோடிக்கொண்டிருக்கும்.  
 
தலைபோகும் அளவுக்கான பிரச்னைகளைக்கூட எளிதாகத் தீர்த்துவைக்கும் பெண்களுக்குத்தான், ஒரு கேஸ் சிலிண்டர் மாற்றுவது என்பது கடினமானதாக இருக்கும். பரபரப்பான வேலைக்கு நடுவில்கூட குழந்தை சாப்பிட்டுருப்பாளா, அவருக்கு தலைவலி சரியாகியிருக்குமா என்று குடும்ப உறுப்பினர்களின் கவலை அவளை ஆக்ரமித்திருக்கும்.
 
 
டிவி சீரியல்களின் தோற்றப்பிழைபோல், பெண்கள் ஒரேயடியாய் அழுது தீர்ப்பவர்கள் கிடையாது. ‘எக்ஸ்ட்ரீம் லெவல்’ எனப்படும் உச்சகட்ட தன்னம்பிக்கைவாதிகளும் கிடையாது. வெளியில் எவ்வளவு சோகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்களால் ஒரு பிரச்னைக்கான கிளைத் தீர்வுகளைப் பற்றி ஆராய எளிதாக முடியும். விடையே கிடைத்திருந்தாலும் அதை சில நேரங்களில் தைரியமாக பரீட்சித்துபார்க்கத் துணியாததால்தான் அவர்களுக்கு சோகமும், தோல்வியும் சொந்தமாகிறது.
 
 'பெண் என்பவள் தேவதை, ஆண்களின் மார்புப் பதக்கமானவள், மென்மையானவள்' என்கிற போலியான நம்பிக்கைகளே அவளுடைய உலகத்தில் இடம்பெற்றுள்ளது. இவை ஒருவகையான ‘பாரடாக்ஸ்’ ( paradox) கோட்பாடுகள்தான். வடித்த கஞ்சி கையில் கொட்டிய வேதனையைக்கூட இங்க் தடவி ஆற்றிக்கொள்ளும் திடம் படைத்தவளால், குழந்தைக்கு ஒரு தீக்குச்சி சுட்டால்கூட தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் அவள் மென்மையானவள். எவ்வளவு துன்பத்தில் அழுது தீர்த்தாலும் கை சொடுக்கும் நேரத்தில் அதை மகிழ்ச்சியாக மாற்றித்தர அவளால் முடியும். அதனால்தான் அவள் தேவதை. வெற்று வசீகர வர்ணிப்புக்களைத் தாண்டி இந்த கோட்பாடுகளில் ஒளிந்திருக்கும் உண்மை இதுதான்.
 
கருவில்கூட ஆணுக்கு முன்பாகத் தோன்றி, ஆணாக மாற்றப்படுபவள் பெண். அவள் ஒரு சக மனுஷி, அவ்வளவே. ஓர் உயிர் ஜனிக்க உதவும் உதிரப்போக்கினைக்கூட தீட்டு என்பதாக மாற்றி, கருவறையில் அமர்ந்திருக்கும் மற்றொரு பெண் தெய்வத்தை பார்க்க அவளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இது போன்ற உண்மைக்குப் புறம்பான குறியீடுகளால்தான். மாதத்தின் 27 நாட்கள் ஓடி உழைக்கும் அவளுக்குத் தேவையான ஓய்வை அளிக்கவே படைக்கப்பட்டது அந்த மூன்று நாட்கள். அந்தப் புரிதல் இருந்துவிட்டால் பெண்களின் உலகம் இன்னும் எளிதல் வசப்படக்கூடியதுதான்.
 
பெண்களின் உலகம் என்பது அவள் மட்டும் சார்ந்ததில்லை. “எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பதாக பாரபட்சமின்றி அன்பு காட்டக்கூடியது அந்த உலகம். அதை கனவுலகமாக நினைத்து ஆராய்ந்துபார்த்து அறிவதைவிட, அவளோடு ஒன்றாக வாழ்க்கையில் கைகோத்து நடப்பதால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த நிகழ்வுலகம் அது. பெண்கள் உலகத்தின் சாவி, ஆண்களின் கையில்தான் உள்ளது. அதை சரியாகப் பயன்படுத்தினால் அந்த உலகம் என்றுமே வசப்பட்ட ஒன்றாக இருக்கும்.
 
செம்புலப் பெயல் நீர்போல பெண்ணோடு கலந்திருக்க,  அவளுடைய உலகின் வரைபடம் தேவையில்லை... ஒரு துளி அன்பே போதும்!