Thursday, May 19, 2016

புரிந்து போவதில் இல்லை: புரிந்து வாழ்வதில் தான் இருக்கிறது வாழ்க்கை

இன்று (மே, 15) உலக குடும்ப தினம்
வெளிநாடுகளில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, அதன் நதி மூலம், காரண காரியம், பலன், விளைவு என அனைத்தையும் தொகுத்து, ஓர் ஆவணமாக வைத்து விடுவர். அப்படி ஒரு ஆவணப் புத்தகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த முதியோரிடம், 'உங்கள் வாழ்நாளில், உங்களை மன வருத்தம் அடைய வைத்த சம்பவம் எது?' என்ற கேள்விக்கு, பெரும்பாலானோர் கூறியிருந்த பதில்...

குடும்பத்துடன் இன்னும் நேரம் செலவழித்திருக்கலாம்; தனியாக இல்லாமல் சேர்ந்து அன்பாய்
இருந்திருக்கலாம்.அப்படி இருப்பது தான் சந்தோஷம் என சொல்லும் தைரியத்துடன் இருந்திருக்கலாம். மொத்தத்தில் நான் சந்தோஷமாய் இருக்க நானே என்னை அனுமதித்திருக்கலாம் என்பதே...
இது அவர்களுக்கு காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம். ஆனால், இவர்களைப் பார்த்து நமக்கு சரியான நேரத்தில் தெளிவு ஏற்பட வேண்டாமா? இது வெளிநாட்டு முதியோர் மட்டுமல்ல; குடும்ப உறவு முறைகளோடு வாழ்கிற, நம் நாட்டு இளையவர்களும் நினைத்து ஏங்குகிற ஒரு விஷயம். ஒரு திட்டமிடாத வாழ்க்கையை தான், நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் என்பதை, உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு திட்டமிடல்
என்பது, பொருளாதாரத்தில் மட்டுமல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உறவினை போற்றிடு, உணர்வினை பகிர்ந்திடு, ஆதரவு தந்திடு, ஆனந்தம் கண்டிடு!
மக்களை சேர்த்திடு, மகிழ்வென வாழ்ந்திடு!
இந்த மூன்று வரிகளில் முக்காலத்தையும் சொல்லிருக்கின்றனர் நம் முன்னோர். நம் கூட்டுக் குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகும் இந்த சமயத்தில், நம் கூட்டுக் குடும்ப அமைப்பின் உன்னதத்தை மறந்து, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், பெண்கள் தினம், தம்பதியர் தினம், நண்பர்கள் தினம் என, தனித்தனியாக கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு தனி மனிதனும், தன் குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காகவே, 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, மே, 15ம் தேதியை குடும்ப தினமாக அறிவித்தது. எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும், எந்த வயதிற்கு பிறகும் குடும்ப உறவுகளையோ, குடும்ப அமைப்பையோ கைவிடாமல் ஆதரவளித்தும், ஆதரவு பெற்றும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, குடும்ப அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் இது சாதாரண விஷயமாய், தேவையில்லாத செய்தியாக இருக்கலாம். ஆனால் பொருளாதார தேவைக்காக, குடும்பத்தைப் பிரிந்து கண் காணாத ஊர்களில், நாடுகளில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தியும், தினமும் இது.ஆயிரம் வேலைகள் என ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டேஇருக்கும் அப்படிப்பட்ட குடும்பங் களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் கல்வி, வேலைவாய்ப்பில் தத்தம் குடும்பத்தினரின் பங்கை உணர்த்தவும் கண்டிப்பாய், இந்த நாளை குடும்ப தினமாக பாவித்து கொண்டாடுவதில் தவறொன்றுமில்லை.
மாறிவரும் உலகில், பல சவால்களை எதிர்நோக்கி உள்ள சூழ்நிலையில், அடுத்த தலைமுறையை உருவாக்குவதில், நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. ஆனால், அந்த பங்கை நாம் செவ்வனே செய்திட குடும்ப அமைப்பும், உறவுகளின் ஆதரவும், அன்பும், வழிகாட்டுதலும் அவசியம். நாம் சம்பாதிக்கிறோம்; நாமே திருமணம் செய்து கொள்கிறோம்; நாமே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம். இதில் எதற்கு பல நிபந்தனைகளுடன், கட்டுப்பாடுகளுடனான குடும்ப முறை என்று யோசிக்கும் மனநிலையில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும்.
ஒரு மனிதன், சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லித்தருவது குடும்பமே. சமூகத்தின் ஆணிவேரே குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமூகம். நல்லதை கற்றுத் தருவது அல்லாததை சமாளிக்க சொல்லிக் கொடுப்பது குடும்பமே. குடும்ப அமைப்பில் இல்லாமல் தனித்தனி தீவாய் வாழ்கிறவர்களின் உறவுகளிடையே சகிப்புத்தன்மை குறைந்து, விரிசல் ஏற்படக் காரணமாகிறது. உறவுகளின் உன்னதம் தெரியாமல், இப்படி பல குடும்பங்கள் சேர்ந்தால், அது நாட்டையும் பாதிக்கும்.
அனைவரும் ஒரே குடும்பமாய் இருக்கும்பட்சத்தில் திறம்பட கட்டிக்காக்கும் நிர்வாக
வியலை, குடும்பத்தலைவிகள் பல்கலைக்கழகம் போகாமலேயே கற்றுத் வைத்திருந்தனர். சிரமங்கள் இருந்தாலும், சிக்கலில் மாட்டியதில்லை அன்று. இன்றைய பல சமூக சீர்கேடுகளுக்கு காரணமே, ஆரோக்கியமான அறிவுரை சொல்லி அணைத்துச் செல்ல பெரியோர் இல்லாத சூழல். தடுக்க யாரும் இல்லை எனும் நிலையில், அடுத்தவர் மெச்சும்படி வாழ வேண்டும் என்கிற வாழும் முறை. இளம் தலைமுறையினர் அதிகமாய் படித்து, அதைவிட அதிகமாய் சம்பாதித்து, புற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருந்தாலும் மன அமைதி, அடுத்த தலைமுறையினரின் வாழ்வு என, ஒரு பண்பட்ட அக வாழ்வில், தோல்வி தான் அடைந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் முதற்கொண்டு, அரசியல் தலைவர்கள் இப்போதெல்லாம் தாங்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில், 'கூடி வாழ்வதனால் கோடி நன்மை உண்டு' என்றே சொல்லி வாழ்த்துகின்றனர்.
கடைசியாக ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள், நாம் நல்லவர்களாய் இருப்பது, நம் அம்மா, அப்பா மட்டுமில்லை; நம் தாத்தா, பாட்டியின் வளர்ப்பும் சேர்ந்ததால் தான். அதேபோல் நம் பிள்ளைகளும் மிக நல்லவர்களாய் இருக்க, நம் வளர்ப்பும், கவனிப்பும் மட்டும் போதாது. பாட்டி வளர்த்த எந்த பேரப்பிள்ளையும் கெட்டுப் போனதாக சரித்திரம் கிடையாது.
ஐம்பது வருடங்களுக்கு முன், உங்கள் நாட்டில் ஏன், 'சைக்யாட்ரிஸ்ட்ஸ்' அதிகம் இல்லை என்று ஹாலிவுட் திரைப்பட விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நம் திரைப்பட இயக்குனர்
சுப்ரமணியனின் பதில்,உங்களுக்கு தேவை எங்களுக்கு தேவையில்லை.
எங்கள் நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் உயிர்ப்புடன் இருக்கும் வரை சைக்யாட்ரிஸ்ட்டே தேவையில்லை என்று சொன்னாராம், நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியனின் தந்தையான இயக்குனர் சுப்ரமணியன்.
இன்றுக்கூட ஆங்கிலத்தில் சித்தப்பா - சித்தி; பெரியப்பா - பெரியம்மா போன்ற உறவுகளுக்கு ஆன்ட்டி - அங்கிள் என்ற வார்த்தைகள் தான். தனிமனிதனின் சுதந்திரம் மற்றும் விருப்பு, வெறுப்புகளை இந்த சேர்ந்து வாழும் முறையால் இழக்கிறோம் என்று சொல்பவர்கள் உண்டு.
தனியாக என்றால் நாம் புறத்தில் மட்டுல்ல. அன்பு, பாசம், நேசம் என அகத்தினாலும் தனித்து விடப்பட்டிருக்கிறோம். பிரச்னைகள் வரும், ஆனால் பாதிப்புகள் அதிகம் இருக்காது.
மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் நம்மை மெல்ல மெல்ல மாற்றிவிட்டது என, காரணங்களை அடுக்காமல் முதலில் நம்மிடம் உள்ள தவறை சரி செய்ய முயல்வோம்.

இளம் தலைமுறையினர் அதிகமாய் படித்து, அதைவிட அதிகமாய் சம்பாதித்து, புற வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருந்தாலும் மன அமைதி, அடுத்த தலைமுறையினரின் வாழ்வு என, ஒரு பண்பட்ட அக வாழ்வில், தோல்வி தான் அடைந்து வருகின்றனர்.

Advertisement

No comments:

Post a Comment