Wednesday, May 11, 2016

நளாயினிகள்... நந்தினிகள்... - NanRi: Vikatan

நளாயினிகள்... நந்தினிகள்... உங்களை விட்டு விலகுவதுமில்லை... விட்டுக்கொடுப்பதுமில்லை!

“என்னை நான் தேடித் தேடி... உன்னிடம் கண்டுகொண்டேன்!” - ஆண் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரி, ஆண்கள் உலகின் ஜீவமொழி!

 
முக்காலே மூன்று வீதம் ஆண்கள்,  தங்களின் ஆளுமை வடிவத்தினைப் பெண்களுக்குள்ளேதான் கண்டெடுக்கின்றனர். ஆண்களின் உலகம் எப்போதும் பெண்கள் உலகத்தின் ஊடேதான் இயங்குகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு ஆளரவமற்ற திருப்பங்களிலும்,  தன்னைச் சார்ந்த ஆண்களுக்காகவே சுழலும் பெண்களின் உலகம், உள்ளே உற்றுப் பார்த்தால் ஆயுள் முழுமைக்குமான உலகளாவிய பாடங்களைத் தர வல்லது. சோகம், கோபம், கண்ணீர், மகிழ்ச்சி என அலாதியான உணர்ச்சிகள் அனைத்தையும் தங்களைச் சார்ந்த ஜீவன்களுக்காகத் தூக்கிப்போட பெண் என்பவளால் முடியும்.
 
ஒவ்வொரு காலகட்ட சுழற்சியிலும் உடைகளும், நாகரிகமும் மாறிக்கொண்டு இருந்தாலும் பெண் என்பவள் மனதளவில் இன்றும் ஒரே மாதிரியான கலவையாகத்தான் இருக்கிறாள். அவளால் மட்டும்தான் ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும் முடியும். 
 
உலகமே பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கும் வேளையிலும், வீட்டு பட்ஜெட்டினை துண்டுவிழாமல் பாதுகாக்கும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே கைவந்த கலை. வசதிகளின் வளர்ச்சி தாறுமாறாய் அதிகரித்திருக்கும் நிலையிலும் ஒரு குழந்தையை வளர்க்கவே மூக்கால் அழும் நமக்கு, ஓர் ஓலை வேய்ந்த குடிசை வீட்டில், விஷ ஜந்துக்கள் சுற்றும் தரையில், மருத்துவமனைக்குக்கூட வழியில்லாத கிராமத்தில் 16 குழந்தைகளைப் பெற்று, அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி அன்பையும், ஒரே மாதிரி வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்த தையல் நாயகி பாட்டி ஆச்சர்யம்தான்.
 
தாய், தந்தையற்று அனாதரவாய் நின்றபோதும், குட்டித் தங்கைக்காக நன்றாகப் படித்துக்கொண்டிருந்த படிப்பை விட்டுவிட்டு, திருப்பூர் கார்மென்ட்ஸுக்கு வேலைக்குச் சென்ற செல்விக்கு,  தங்கையை ஹாஸ்டலில் சென்று பார்க்கும் நாள் மட்டும்தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். 
 
சுரங்க நடைபாதையின் ஓரத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரத் தாத்தாவுக்கு, பையில் இருக்கும் ஒட்டுமொத்த சில்லரையையும் வழித்துப் போட்டுவிடும் அன்பான குணம் கொண்ட கவிதா, பக்கத்து வீட்டுப் பெண் அவசரத்துக்கு காப்பி பொடி கேட்டால்,  நின்றுகூட கேட்காமல் கதவை மூடிவிடுவாள். ஆனால், அதே பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்,  காலை டிபன் முதல் இரவு உணவுவரை அவள் கேட்காமலேயே கவிதா வீட்டிலிருந்து கிடைக்கும்.
 
பேருந்தின் ஆடைக் கசங்கல்களிலும், வியர்வை நாற்றத்திலும், கேவலமான ஆண்களின் இச்சை இடிபாடுகளிலும் தினம், தினம் உழன்று குடும்பமே பிரதானம் என்று வாழும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் காஸ்மெடிக் உலகம் பெண்களைக் குறிவைத்தாலும், முகத்துக்கு பவுடர்கூட போடாமல் வெற்று சாந்துப் பொட்டுடன், இதுவே அதிகம் என்பதாக நடைபோடும் பெண்களும் நிறைந்துதான் கிடக்கிறார்கள் இங்கு. 
 
 
காதல் தோல்வியை வெளியே சொல்வது தப்பு, அடிக்கிற மாதிரி லிப்ஸ்டிக் போட்டால் தப்பு, பாலியல் சார்ந்த படங்கள் குறித்த பார்வை தப்போ தப்பு என்று,  பெண்கள் செய்தால் இவையெல்லாம் தவறு என்று நீண்டு கிடக்கும் பட்டியலை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொள்ள,  பெண்களால் மட்டுமே முடியும். திருமணத்துக்கு முன்புவரை நீண்ட, நெடிய நண்பர்கள் வட்டத்தில் இடம்பிடித்திருக்கும் பெண், கைப்பிடித்தவனுக்காக ஒரே நேரத்தில் அத்தனை நண்பர்களையும் துறந்து, தன் வருத்தம் மறைத்து,  அந்த வட்டத்தைவிட்டு வெளிவரும் திறன் பெற்றவள்.
 
நளாயினியாய் இருக்கட்டும், இந்தக் கால நந்தினியாய் இருக்கட்டும்... உண்மையாய் கணவனை நேசிக்கும் பெண்களால். அவன் தவறானவன் என்று தெரிந்தாலும் விட்டுவிலக முடிவதே இல்லை. இயல்பாகவே பெண்களின் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நேசத்தின் துளிகள் தாய்ப்பாலாய் வெளிவருவதாலோ என்னவோ, பெற்ற பிள்ளைகள் தன்னைவிட்டு ஒதுங்கினாலும், வெறுத்து ஒதுக்கினாலும் அவர்களை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை பெண்களுக்கு.
 
காமத் தேடல்களுக்கான போர்க்களமாகவே பெண், பார்வைக்குப் புலனாகிறாள். அதனாலேயே அவளுடைய அந்தரங்கம் என்பது மார்பகங்களும், மறைவுப் பிரதேசங்களும் மட்டுமே என்பதான முடிவுக்கு ஆண்கள் வந்துவிடுகிறார்கள். வெறும் வியர்வை சுரப்புக்காகவும், பிறந்த குழந்தையின் உணவுத் தேவைக்குமே படைக்கப்பட்ட மார்பகங்கள் காமத்தின்பால் சென்றடைவதே, பெரும்பாலான ஆண்களின் பெண்கள் குறித்த தவறான உருவகங்களுக்கு க்காரணம்.
 
‘‘ பெண் சுதந்திரம் அவளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்பதை சுஜாதா,  தன்னுடைய எழுத்தாக்கம் ஒன்றில் பதிவு செய்திருப்பார். அது முழுக்க, முழுக்க மெய்யான கூற்று. இன்றைய பெண்ணடிமைத் தளை  நீங்கிய ஒரு விடுதலையாக பெண்கள் நினைப்பதுகூட, அவளிடம் வலிந்து திணிக்கப்பட்டதுதான். 
 
அவள் உண்மையில் யார் என்ற கேள்விக்கு, இன்றுவரையில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே விடை. எந்த அளவீட்டாலும் அளவிட முடியாத ஓர் உலகம் அவளுடையது. அதனுள்ளே சென்றுபார்க்க நினைத்து தொலைந்துபோனவர்கள்தான் ஏராளம். வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே எந்தப் பெண்ணையும் கணித்துவிட முடியாது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிரித்து உரையாடும் அதே நேரத்தில், அவளுள்ளே சோகத்தின் இழை ஒன்று உள்ளோடிக்கொண்டிருக்கும்.  
 
தலைபோகும் அளவுக்கான பிரச்னைகளைக்கூட எளிதாகத் தீர்த்துவைக்கும் பெண்களுக்குத்தான், ஒரு கேஸ் சிலிண்டர் மாற்றுவது என்பது கடினமானதாக இருக்கும். பரபரப்பான வேலைக்கு நடுவில்கூட குழந்தை சாப்பிட்டுருப்பாளா, அவருக்கு தலைவலி சரியாகியிருக்குமா என்று குடும்ப உறுப்பினர்களின் கவலை அவளை ஆக்ரமித்திருக்கும்.
 
 
டிவி சீரியல்களின் தோற்றப்பிழைபோல், பெண்கள் ஒரேயடியாய் அழுது தீர்ப்பவர்கள் கிடையாது. ‘எக்ஸ்ட்ரீம் லெவல்’ எனப்படும் உச்சகட்ட தன்னம்பிக்கைவாதிகளும் கிடையாது. வெளியில் எவ்வளவு சோகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்களால் ஒரு பிரச்னைக்கான கிளைத் தீர்வுகளைப் பற்றி ஆராய எளிதாக முடியும். விடையே கிடைத்திருந்தாலும் அதை சில நேரங்களில் தைரியமாக பரீட்சித்துபார்க்கத் துணியாததால்தான் அவர்களுக்கு சோகமும், தோல்வியும் சொந்தமாகிறது.
 
 'பெண் என்பவள் தேவதை, ஆண்களின் மார்புப் பதக்கமானவள், மென்மையானவள்' என்கிற போலியான நம்பிக்கைகளே அவளுடைய உலகத்தில் இடம்பெற்றுள்ளது. இவை ஒருவகையான ‘பாரடாக்ஸ்’ ( paradox) கோட்பாடுகள்தான். வடித்த கஞ்சி கையில் கொட்டிய வேதனையைக்கூட இங்க் தடவி ஆற்றிக்கொள்ளும் திடம் படைத்தவளால், குழந்தைக்கு ஒரு தீக்குச்சி சுட்டால்கூட தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் அவள் மென்மையானவள். எவ்வளவு துன்பத்தில் அழுது தீர்த்தாலும் கை சொடுக்கும் நேரத்தில் அதை மகிழ்ச்சியாக மாற்றித்தர அவளால் முடியும். அதனால்தான் அவள் தேவதை. வெற்று வசீகர வர்ணிப்புக்களைத் தாண்டி இந்த கோட்பாடுகளில் ஒளிந்திருக்கும் உண்மை இதுதான்.
 
கருவில்கூட ஆணுக்கு முன்பாகத் தோன்றி, ஆணாக மாற்றப்படுபவள் பெண். அவள் ஒரு சக மனுஷி, அவ்வளவே. ஓர் உயிர் ஜனிக்க உதவும் உதிரப்போக்கினைக்கூட தீட்டு என்பதாக மாற்றி, கருவறையில் அமர்ந்திருக்கும் மற்றொரு பெண் தெய்வத்தை பார்க்க அவளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இது போன்ற உண்மைக்குப் புறம்பான குறியீடுகளால்தான். மாதத்தின் 27 நாட்கள் ஓடி உழைக்கும் அவளுக்குத் தேவையான ஓய்வை அளிக்கவே படைக்கப்பட்டது அந்த மூன்று நாட்கள். அந்தப் புரிதல் இருந்துவிட்டால் பெண்களின் உலகம் இன்னும் எளிதல் வசப்படக்கூடியதுதான்.
 
பெண்களின் உலகம் என்பது அவள் மட்டும் சார்ந்ததில்லை. “எல்லோருக்கும் பெய்யும் மழை” என்பதாக பாரபட்சமின்றி அன்பு காட்டக்கூடியது அந்த உலகம். அதை கனவுலகமாக நினைத்து ஆராய்ந்துபார்த்து அறிவதைவிட, அவளோடு ஒன்றாக வாழ்க்கையில் கைகோத்து நடப்பதால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த நிகழ்வுலகம் அது. பெண்கள் உலகத்தின் சாவி, ஆண்களின் கையில்தான் உள்ளது. அதை சரியாகப் பயன்படுத்தினால் அந்த உலகம் என்றுமே வசப்பட்ட ஒன்றாக இருக்கும்.
 
செம்புலப் பெயல் நீர்போல பெண்ணோடு கலந்திருக்க,  அவளுடைய உலகின் வரைபடம் தேவையில்லை... ஒரு துளி அன்பே போதும்!

No comments:

Post a Comment