இல்லற வாழ்வின் வெற்றி
Advertisement
மாற்றம் செய்த நாள்
31மார்2016
05:02
பதிவு செய்த நாள்
மார் 31,2016 04:01
மார் 31,2016 04:01
இல்லறம் என்பது ஆண் -பெண் இருவரையும் மனத்தாலும், உயிராலும், உணர்வாலும் திருமணம் என்ற நிகழ்வின் மூலம் ஒன்றுபடுத்துவது. திருமணம் என்பது ஒரு சடங்கு. இல்லறம் என்பது இரு இதயங்களின் அன்பு மட்டுமே கொண்டு வாழும் உண்மையான வாழ்வு. நல்ல இல்லறத்தை உருவாக்க, அதாவது நல்ல குடும்பத்தை உருவாக்க நிறைய அன்பும், முகம் மலர்ச்சியும் போதும். இதை குறுந்தொகை பாடல் ஒன்று அழகாக விவரிக்கும்.
'செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'
இதன் பொருள் இல்லறத்தில் பாசம், பிரியம், பண்பு அன்புடன் உள்ளங்கள் கலக்க வேண்டும்... அதாவது செம்மண்ணில் பெய்த நீர்போல.
இல்லறத்தின் ஆன்மா கணவன் மனைவிக்குள் வலுவான நீடித்த பிணைப்புக்கு பலமான அஸ்திவாரம் அன்பும், பாசமும் மட்டுமே. எவ்வளவோ செல்வமும், சுதந்திரமும் இருந்தாலும் இல்வாழ்க்கையில் பண்பும், பயனும் பெற அன்பும் அறனும் வேண்டும். இல்லறம் வெற்றி
பெறுவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி உள்ளது.
மணவாழ்வில் சுயநலம் குறுக்கிட்டால் வெற்றி வாய்ப்புகள் குறையும் கணவனும், மனைவியும் உண்மை உள்ளவர்களாக இருப்பதே இல்லறத்தின் ஆன்மா. உண்மையும், அன்பும் கொண்டு ஒருவருக்காக ஒருவர் வாழும் பொழுதுதான் இல்லறம் நிச்சயமாக இனிக்கும். பிணைந்து ஒன்றிய அவர்களின் அன்பே வாழ்வின் வெற்றிக்கான ஏணிப்படிகள்.
நேசிக்கும் மனங்கள் :உண்மையும் அன்பும் இல்லாவிடில் மணவாழ்க்கை சீர்கெட்டுதான் போகும். மனைவி என்பவள் நல்ல கணவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைக்கும் பொழுது, தான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்வாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி நேர்மையான உண்மையான நேசிக்கின்ற மனம் தேவை.
ஆணோ, பெண்ணோ, தன்மனதை காயப்படுத்தி ஏமாற்று நாடகம் ஆடி மணம் புரிந்து கொண்டவர்களை மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, 'என்னை மன்னித்து விடு” என்று கூறும் சொற்கள் தாம்பத்திய உறவின் நெருக்கமான அன்பைக் காட்டுகிறது.
அழகான இல்லறம் உண்மையான இல்லறத்தில் உடல் அழகைவிட மன அழகே நிலைத்து நிற்கும், உண்மையான அன்பை தேய்ந்து விடாமல் காப்பது ஒவ்வொரு ஆணின், பெண்ணின் கடமை. உண்மையான அன்பிற்கு உதாரணமாக நாம் வளைந்து கொடுக்கின்ற நாணலைக் கூறலாம்.
அதாவது நாணல் புயல் காற்றிலோ, வெள்ளத்திலோ பாதிக்கப்படுவது இல்லை. அதுபோல எல்லா சூழ்நிலைகளிலும் கணவன், மனைவி வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.
இல்லற வாழ்வினை நமது முன்னோர்கள் புனிதமாக கருதி தெய்வீக உணர்வோடு, கணவனும் மனைவியும் விட்டுக் கொடுக்கும் குணத்துடன் வாழ்ந்தனர்.
மனைவி என்பவள் கணவனைத் தெய்வமாக மதித்து நடந்து கொண்டாள். உலகத்தை கணவன் மூலமே பார்த்தார்கள். அதாவதுகண் + அவன் என்பதே 'கணவன்” ஆனது.கணவனுக்கு உடல்நலம் பாதித்தால் கண்ணீர் மல்க எத்தனை தியாகமும் செய்து கடவுளிடம் வேண்டிக் காப்பாற்றினார்கள் என்பதை பல கதைகள் நமக்கு உணர்த்தி உள்ளது.
இல்லறம் என்பது கடவுளின் படைப்பாகும். கோடிக் கணக்கான தம்பதியர்களின் வாழ்க்கை வெற்றிகரமாய் அமைந்து இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இல்லறம் நல்லறம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், கடினமான சோதனைகள் ஏற்பட்டாலும் இடர்பாடுகளிலும் இன்னல்களிலும் சிக்கித் தவிக்க நேரிட்டாலும் ஜெயித்தவர்களை நாம் காணலாம்
உதாரணமாக, ஒரு மகாத்மா உருவாக, மனைவி கஸ்துாரிபாய் அதன் பின் இருந்து இருக்கிறார்.
'இல்லறமல்லது நல்லறமில்லை” என்று எடுத்துரைத்த பாரதியார் உருவாக அவரது மனைவி செல்லம்மாள்.ராமகிருஷ்ணர் உருவாக அவரது மனைவி சாரதாதேவி.பாடகி எம்.எஸ்., சுப்புலட்சுமி உருவாக அவரது கணவர் சதாசிவம்.பெண்களிடம் தனிப்பண்பு ஒன்று உண்டு 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற பழமொழியை ஒதுக்கித் தள்ளாமல், கணவனிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் கண்டுபிடித்துப் போற்றும் இயல்பு இன்றும் போகவில்லை.
நம் நாட்டில் கணவன் இறந்த அதிர்ச்சியில் அடுத்த நிமிடமே உயிர் துறக்கும் மனைவி, அவ்வாறே மனைவி இறந்த மறு விநாடியே உயிர் இழக்கும் கணவனையும் நாம் பார்க்க
முடிகிறது. அத்தகைய அளவிற்கு இந்த உறவு புனித உறவாகப் பார்க்கப்படுகிறது.இல்லறத்தின் பெருமையைச் சொல்லி மாளாது.
பரிசுத்தமான இல்லறம் நடத்தும் அனைவரும் முக்தியை அடைகிறார்கள்.இவர்கள் படிப்படியாக விதவிதமான ஏறுமுகமான சுகத்தை அடைந்து கொண்டே மகா சந்தோஷத்தை அடைந்து விடுகிறார்கள்.இவ்வுலகில் இல்லற ஆத்ம சாதனை வெற்றி பெறுவது போன்று, மற்ற
சாதனைகள் இதற்குசுருங்கச் சொல்லப் - போனால்' இல்லறமே ஆத்ம சாதனை”இரண்டு ஜீவன்களும் ஒன்று இணைந்து ஒன்றாகி ஆத்மாவில் கலக்கின்றன.கணவன், தன் இறுதி மூச்சுவரை மனைவி என்பவள் தன்னோடு இணைந்து வருவாள் என்பதால், அவள் மனதில் எந்த குறையும் பார்க்காதபடி நடந்து கொள்ளவேண்டும்.
மனைவியும், தன் இறுதி மூச்சுவரை, கணவர் தான் துணை என்பதால், அவருடைய நலனே தனக்கு முக்கியம் என்று நினைக்க வேண்டும்.நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை நல்ல இல்லறம்; இல்லற வாழ்வை வலுப்படுத்த கருத்தொற்றுமையைச் கட்டிக் காப்போம். ஒருவருக்காக
மற்றவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.இல்லற அமைதி சமுதாய அமைதிக்கு வழிகோலிடும்.
சமுதாய அமைதி, நாட்டு நலனுக்கு வழிகோலிடும். நாட்டு நலன் உலக அமைதி எனும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.இல்லறத்தில் விட்டுக் கொடுப்பவர்கள், தோற்கிறவர்கள் அல்ல ஜெயிக்கிறவர்கள். கணவன் - மனைவி உறவை உயிராக மதியுங்கள். இல்லற வாழ்க்கை முடிவு அல்ல, தொடர்கிறது நம் வாரிசுகளின் வடிவில்.
-ஆர்.மைதிலிஎழுத்தாளர், மதுரை
98425 84933
No comments:
Post a Comment