Saturday, May 28, 2016

தோல்விகள் சொல்லும் பாடம்


தோல்விகள் சொல்லும் பாடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
“ பத்தாவது முறையாகக் கீழேவிழுந்தவனைப் பார்த்துபூமி முத்தமிட்டு சொன்னதுநீ ஒன்பது முறை எழுந்தவன் என்று”உண்மைதான்! விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்கு அல்ல என்பதே தோல்விகள் நமக்குச் சொல்லும் பாடம்.
மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து(திருக்குறள்)தடைப்படும் இடங்களில் தளராது வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போல விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்பட்டு விலகிப் போகும். எருதினைப் போன்ற முயற்சி உடையவர்கள், 
தோல்விக்கே தோல்வி தந்து விடுவார்கள். நமது முயற்சிகளுக்கு தோல்விகள் என்றும் தடைபோடக் கூடாது. முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம், தோல்வியால் தான் சூழப்பட்டிருக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி யாருக்கும் சாத்தியப்படாது. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல, ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு!
தோல்வி தாங்கும் மனம்: தோல்வியே ஒருவர் அடைந்ததில்லை என்றால் அவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் என்று தான் அர்த்தம். நாம் நடக்கும் பாதை மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக் கூட மிதிக்கக் கூடாது என்று நினைப்பதில் அர்த்தமில்லை. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் என்பதை உணரவேண்டும்.
மனவியல் அறிஞர் யங், தோல்விகள் என்பவை அடையாளங்கள், முன்னோடிகள், வரும் நிகழ்ச்சிகளின் போக்கை தெரிவிக்கும் சூட்சுமங்கள் என்றும், மேலே செல்லுங்கள் அல்லது போகாதீர்கள் என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள் என்றும் குறிப்பிடுகிறார். தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு வேறு பாதையை ஆராய வேண்டும். வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். ஏனெனில் வெற்றி சிரித்து மகிழ வைக்கும். ஆனால் தோல்வியோ சிந்தித்து வாழ வைக்கும். பெரும்பாலானோர் வாழ்வில் திருப்பு முனை என்பது தோல்வியின் வடிவில் தான் வந்திருக்கிறது. அவற்றை நமது மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாகவே நினைத்தால், தோல்விகளால் நமக்கு பயன் உண்டு என்பதை உணரலாம்.
பாடம் கற்கலாம்: நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். தோல்வி என்னும் நேற்று மடிந்த வைக்கோல், இன்று நல்ல எருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்தால், தோல்வி என்பதை வரவேற்கலாம் அல்லவா! சமையல் நிபுணர்கள் இனிப்புகள் தயாரிக்கும் போது 
சிறிதளவு உப்பினைச் சேர்ப்பார்கள். அப்போது தான், இனிப்பின் ருசி அதிகப்படுமாம். உப்பு எனும் தோல்வி சேரும் போது தான், நமக்கு வெற்றியின் ருசி அதிகரிக்கும் என்பதை அறியும் போது தோல்வி என்பதை வரவேற்பதில் தவறில்லையே! ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு தோல்வியும், தம்மோடு அதற்கு சமமான அல்லது அதைவிடப் பெரிய பயனுக்கான விதையைச் சுமந்தே வருகின்றன என்று நெப்போலியன் ஹில் கூறுவதில் உண்மை இருப்பதை நாம் உணர வேண்டும்.
பொருள் சார்ந்த தோல்விகள், நம்முடைய முன்னுரிமைகளை மதிப்பீடு செய்யவும், எது நமக்கு முக்கியம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும், நமக்கென்று புதிய குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளவும் வழிசெய்யும்.உறவுகளுக்குள் ஏற்பட்ட தோல்விகள், நம்முடைய பண்புகளைப் பரிசோதிக்க நம்மை நிர்பந்திக்கும். அடுத்தவர்களைக் கையாள்வதில் உள்ள சமயோசிதங்களை நமக்கு போதிக்கும்.
அச்சம், கவலைகள் போன்றவற்றால் நம் மனதுக்குள்ளேயே ஏற்படும் தோல்விகளுக்கு நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பிப்போம். ஆறுதல் பெற வழிதேடுவோம். அந்தத் தேடலில் உள்ளார்ந்த அமைதியைக் காண்போம். மன அமைதி பெறுவோம். இவ்வாறாக பல்வேறு தோல்விகளிலிருந்து பல வகையான பாடங்களைக் கற்றுத் தெளியலாம்.
விழுந்து எழுந்தவர்கள்:ராபர்ட் புரூஸ் என்ற மன்னன் போரில் பல முறை தோல்வியுற்று குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது வலை பின்னிய சிலந்தியைப் பார்த்து சிந்தித்தான். வலை அறுந்து அறுந்து விழுந்தாலும், விடாமுயற்சியுடன் அது வலை பின்னியதைப் பார்த்து அவனுக்கு தன்னம்பிக்கை பிறந்தது. அதுவே பின்னாளில் அவனை வெற்றியாளனாக்கியது. அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வில் தோற்றவர். கணிதமேதை ராமானுஜம், மூன்று முறை இன்டர்மீடியட் தேர்வில் தோற்று, பிறகு கணிதத் துறையில் சாதனைகள் புரிந்தவர். மாபெரும் கவிஞர் ஷெல்லி, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டவர். 
ஆபிரகாம் லிங்கன் சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி, நகராட்சி தேர்தலில் தோல்வி, மாமன்றத் தேர்தலில் தோல்வி, கமிஷனர் தேர்தலில் தோல்வி, செனட்டில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று பல தோல்விகளுக்குப் பிறகே வெள்ளை மாளிகை அதிபராக உயர்ந்தார்.பொருளாதாரச் சறுக்கல்களை அடைந்த பிறகு தான் கார்ட்டூனிஸ்ட் வால்ட்டிஸ்னி உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மிக்கி மவுஸ் என்ற பாத்திரத்தை உருவாக்கினார். மருத்துவ ஆராய்ச்சி தோல்வியடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அலெக்ஸாண்டர் பிளமிங்கால் பெனிசிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பலமுறை தோல்வி கண்ட பிறகு தான் ஹென்றி போர்டு, சிறப்பான மோட்டார் காரைக் கண்டுபிடித்தார். அதிகமான தோல்விகளைச் சந்தித்த பெர்னாட்ஷா, தொன்னுாறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்று அறிந்து கொண்டதால் முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.வெற்றி வாசல் கண்டவர்கள்: வானொலி கண்டுபிடித்த மார்கோனி, கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்து அதை இத்தாலி ராணியிடம் தெரிவித்த போது அவர் அலட்சியப்படுத்தி விட்டார். பிறகு அது இருவருடங்கள் கழித்து, இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எட்மண்டு ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரும் பல தடைகளைச் சந்தித்த பிறகே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டவர்கள். 
ஆயிரம் தடவைகளுக்கு மேல் தோல்வியடைந்த பிறகே தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்தார். நுாறு சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர். 
இவர்கள் அனைவருமே தோல்விகளிடம் முகவரி கேட்டுச் சென்று தான் வெற்றியின் வாசலை அடைந்தவர்கள் என்பதை அறியும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன அன்றோ!
விதையானது தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலை தாம் விழுந்தாலும் உரமாக ஆவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்குத் தயங்கலாமா? விழுவோம்! எழுவோம்!-பா.பனிமலர்,தமிழ்த்துறை தலைவர்இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லுாரி

No comments:

Post a Comment