தனக்கென தனி மேனரிஸத்துடன் குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் வினுச்சக்ரவர்த்தி. ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காலமானார். சினிமா மீதான ஆர்வத்தால், ரயில்வே வேலையை உதறிவிட்டு திரைத்துறையில் வலம்வந்த வினுச்சக்ரவர்த்தியின் சினிமா மற்றும் குடும்ப நேசத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார், அவர் மகள் சண்முகப்பிரியா.
"சினிமா, குடும்பம் இரண்டையும் எப்போதுமே அப்பா சேர்த்துவைத்து பார்த்ததில்லை. இரண்டு உலகத்துக்கும் தனித்தனியே தகுந்த முக்கியத்துவம் கொடுத்தாரு. மூணு வயசுல இருந்து சில நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தவர், தொடர்ந்து சினிமா துறையிலதான் வேலை செய்யணும்னு ஆசைப்பட்டாரு. பி.காம் படித்தவர், எதேச்சையா மத்திய அரசின் ரயில்வே துறையில துணை ஆய்வாளரா வேலைக்குப் போக வேண்டிய சூழல். வாய்ப்பு கிடைச்சா சினிமா துறையில சேர்ந்திடலாம்னு காத்திருந்தார். ஒருமுறை ரெயில்ல போயிட்டு இருந்தப்போ, கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலை சந்திச்சு ரெண்டு பேரும் நண்பர்களானாங்க. அப்படியே சினிமா துறையில கொஞ்சம் கொஞ்சமா கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு. 'பரசக்கே கண்ட தின்மா'ங்கிற கன்னடப் படத்துக்கு கதை எழுதி அந்த படமும் பெரிய ஹிட் ஆச்சு. பின்னர் அந்த கதை, தமிழ்ல 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யா வெளியாகி ஹிட் ஆச்சு. ரயில்வே வேலையில லீவ் போட்டுட்டு சினிமாவுல கவனம் செலுத்தினா, மத்தவங்க தப்பா நினைப்பாங்களோன்னு நினைச்சு அந்த வேலையை விட்டுட்டாரு.
தொடர்ந்து முழு நேரமா சினிமாவுல மட்டும் கவனம் செலுத்தியவர், 'வண்டிச்சக்கரம்' படத்துக்கு கதை எழுதினதோடு, அதுல நடிக்கவும் செய்தாரு. அந்தப் படத்துல, நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள்ல குணசித்திரம், வில்லன், நகைச்சுவைன்னு எல்லாவிதமான கதாபாத்திரங்கள்லயும் நடிச்சாரு. சினிமா துறையில தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்க, அப்பா நிறைய கஷ்டநஷ்டங்களை சந்திச்சிருக்காரு. 'இந்த துறையில நிறைய அவமானங்களைச் சந்திக்கணும். இன்னிக்கு மதிக்கிறவங்க, நாளைக்கு மதிக்க மாட்டாங்க. அதனால என்னோட இந்த சினிமா துறை போகட்டும். எனக்கு அடுத்து நம்ம குடும்பத்துல வேற ஒருத்தரும் சினிமா துறைக்குள்ள வரக்கூடாது. அதனால என்னோட ரெண்டு பிள்ளைங்களும் நல்லா படிக்கணும். படிப்புக்கு ஏத்த வேலையோட நல்லபடியா வாழ்க்கையில செட்டில் ஆகணும்'னு எங்களை நல்லபடியா படிக்க வெச்சாரு. படிச்சு முடிச்சதும் என்னையும், தம்பியையும் வெளிநாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பினாரு.
எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் அங்க போனதும் உடனே வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லுவாரு. அடிக்கடி போன் பண்ணி, வீட்டுல இருக்குற எல்லோரைப் பத்தியும் விசாரிச்சுகிட்டே இருப்பாரு. குறிப்பா, ஷூட்டிங் போன இடத்துல கிடைக்கும் சிறப்பான உணவுகளை மறக்காம வாங்கிக்கிட்டு வருவாரு. எந்த நேரமா இருந்தாலும் வீட்டு வந்த உடனே, முதல் வேலையா அதை எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாரு. கிழிஞ்சுப்போன ஒரு தோசை சுட்டுக்கொடுத்தாலும், அதை இன்முகத்தோட அணுகி 'சூப்பரா இருந்துச்சுமா'ன்னு பாராட்டிப் பேசுவாரு. உற்சாகப்படுத்தியே காரியத்தைச் சிறப்பா செய்ய வைப்பாரு. செல்லம் கொடுக்குற அதே நேரம் நல்லா படிக்கலைன்னா மட்டும், கண்டிப்போட நடந்துக்குவாரு.
சினிமாவுல அதிகமா வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சாலும், அவர் நிஜ வாழ்க்கையில ரொம்பவே பாசிட்டிவான குணம் கொண்டவர். முடிஞ்ச வரைக்கும் பொறுமையாகத்தான் எல்லோரிடமும் பேசுவாரு. ஒருகட்டத்துக்கு மேலதான் கொஞ்சம் கோபப்படுவாரு. மத்தவங்களுக்கு தெரியாத விஷயம், அவர் நல்லா பெயின்ட்டிங் பண்ணுவாரு; பாட்டுப் பாடுவாரு. ஓய்வே இல்லாம கதை எழுதிகிட்டோ அல்லது கதை சொல்லிகிட்டே இருப்பாரு. எங்களோட நல்லாவே ஷட்டில்காக் விளையாடுவாரு.
`உங்களுக்குன்னு தனி அடையாளத்தோட இருக்கணும். எந்த சூழல்லயும், 'நான் இன்னாரோட பொண்ணு, பையன்'னு நீங்க சொல்லிக்கக்கூடாது'னு சொல்லி வளர்த்தாரு. 'ரோட்டுல நடந்து போனாக்கூட, எங்கேயாச்சும் சாலையோரமா நிண்ணு ஏதாச்சும் வாங்கிச் சாப்பிட்டாக்கூட யாராச்சும் போட்டோ எடுத்துடுவாங்களோ'ன்னு பயப்படுறது என்னோட போகட்டும். நீங்க சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவாரு. அதன்படியே எங்கள எந்த ஒரு சினிமா ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் அழைச்சுகிட்டுப் போனதே கிடையாது. அதனாலேயே எங்களுக்கும் சினிமா மீது பெரிய ஆர்வம் இல்லாம போயிடுச்சு." என்பவர், அப்பா சினிமா மீது வைத்திருந்த பற்றுக்கு உதாரணம் சொல்கிறார்...
" உடம்பு சரியில்லாம படுக்கையில இருந்தப்பகூட, டி.வி-யில படம் பார்க்கும்போது 'இந்த ரோல்ல நான் நடிச்சிருந்தா ரொம்பவே நல்லா இருந்திருக்கும். எனக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்தா இன்னும் நடிச்சுகிட்டே இருப்பேன்'னு சொல்லிகிட்டே இருப்பாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அப்பாவை அட்மிட் பண்ணியிருந்தோம். டாக்டர்ஸ் நிறைய முயற்சி செஞ்சும், ஊசிபோட ஒத்துழைப்பு கொடுக்காம இருந்தாரு. 'வண்டிச்சக்கரம் படத்தை ரீமேக் செய்றாங்களாம். சிவகுமார் அங்கிள் நடிச்ச கேரக்டர்ல சூர்யா சாரும், நீங்க நடிச்ச கேரக்டர்ல சிவகுமார் அங்கிளும் நடிக்கிறாங்களாம். அதுக்காக உங்களப் பார்த்து கதைப் பேச சிவகுமார், சூர்யா ரெண்டு பேருமே ஒரு மணி நேரமா வெளியே வெயிட் பண்றாங்க. நீங்க ஊசிபோட்டுகிட்டா, உடனே உங்களப் பார்க்க உள்ளே வருவாங்க'ன்னு ஒரு பொய் சொன்னேன். அடுத்த கணமே, ஊசி போட ஒத்துழைப்புக் கொடுத்தாரு. `அவங்கள உடனே கூப்பிடு'ன்னு சொன்னாரு. சும்மா வெளியே போயிடுவந்து, 'நேரமாச்சுன்னு திரும்பி போயிட்டாங்க. மூணு நாள் கழிச்சு வர்றதா சொல்லியிருக்காங்க'ன்னு மறுபடியும் பொய் சொன்னேன். `சரிம்மா... அவங்க வரும் நாளப்போ ஞாபகப்படுத்து. ஷேவிங் பண்ணிகிட்டு ரெடியாகிடுறேன்'னு சரியா பேச முடியாத சூழல்லயும் கஷ்டப்பட்டு பேசினாரு.
உயிரோட இருந்தப்போ எங்கள நல்லபடியா பார்த்துகிட்டவரு, இப்போ இறந்தும் சாமியா எங்களப் பார்த்துக்குவாருன்னு நம்புறேன்'' என உருக்கமாகப் பேசுகிறார், சண்முகப்பிரியா.
No comments:
Post a Comment