Saturday, April 29, 2017

கொளுத்தும் வெயில்... வீட்டைக் குளுமையாக்கும் தொழில்நுட்பம்!

துரை.நாகராஜன்
கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வீடுகளெல்லாம் அனலாகத் தகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் 15 நிமிடங்கள் அறையில் அமர்ந்திருந்தால், குளித்து முடித்த மாதிரி உடல் முழுக்க வியர்த்துக் கொட்டுகிறது. வீட்டைச் சுற்றியிருக்கிற மரங்கள் அனைத்தையும் வெட்டித் தள்ளிவிட்ட நிலையில், வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி, அதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ‘காவ்யா ஹோம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ்.

‘‘செங்கல்லில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாகத்தான் இருக்கும். ஆனால், வெயிலின் தாக்கம் வீட்டுக்குள் அதிகமாக இருக்கும். தற்போது சந்தையில் செங்கல்லுக்கு மாற்றாக தெர்மோபிளாக்ஸ் என்ற கல் அறிமுகமாகியுள்ளது. இதை வைத்து வீடு கட்டும்போது வெயில் காலத்தில், வெப்பம் வீட்டுக்குள் வருவது தடுக்கப்படும். செங்கல் கொடுக்கும் உறுதித் தன்மையை இதுவும் கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு இது மிகவும் ஏற்றது. ஆனால், தெர்மோ பிளாக்ஸில் ஆணி அடிக்கும்போது கவனம் தேவை.
மொட்டை மாடியில் சாதாரணக் காவி நிற கற்களையே பெரும்பாலும் பதிக்கின்றனர். இந்தக் கல்லானது தண்ணீரை வீட்டுக்குள் புகவிடாமல் தடுத்து நிறுத்தும். தவிர, இவை வெப்பத்தைக்  கட்டுப்படுத்தாமல் உள்ளே இறங்கவிடும். இந்தக் காவி நிற  கற்களுக்குப் பதிலாக வெண்மை நிற கற்கள் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கின்றன. இந்த வெண்மை நிற டைல்ஸ் வெயில் பட்டு எதிரொலித்துவிடும். இதனால் இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் வீட்டின் அறைகள் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் அதிகமாக வியர்க்காது, வெப்பமும் தெரியாது. 

வெள்ளை டைல்ஸ்களைப் பதிக்க முடியவில்லை என்றால் வெயிலைத் தடுக்கும் வெள்ளை நிற பெயின்டை  மொட்டை மாடித் தளத்தின் மீது பூசலாம். ஆனால், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெயிலைச் சமாளிக்கக்கூடிய வகையில் கட்டுவது நல்லது. ஒருமுறை பணம் செலவழித்துவிட்டால் மீண்டும் பணம் செலவழிக்கும் நிலை வராதபடிக்கு வீடு கட்டுவது அவசியம். 

வீடுகளில்இருக்கும்ஜன்னல்களை, காற்றோட்டம் கொண்டவைகளாக அமைப்பது நல்லது. வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் காற்றை உள்வாங்குவதுபோல அமைக்கப்பட வேண்டும். வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள்  மீது  ஒருவித கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம். 
மேலும், வீட்டில் இடமிருந்தால், ஆங்காங்கே செடிகள் வளர்த்து வீட்டைப் பசுமையாக்கலாம். இதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். முக்கியமாக ஜன்னல்கள், வாசற்படிகள், பால்கனிகள் எனப் பல இடங்களிலும் செடிகளை வளர்த்தால், வீட்டில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். 

மேலும், இதில் மூலிகைச் செடிகளாக வளர்த்தால், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். மாடியில் தோட்டம் அமைப்பதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் திரைச்சீலைகள், கால்மிதிகள்,  தரை விரிப்புகள் என அனைத்தையும் பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால், வெட்டிவேர் மூலிகை நார்களாலான விரிப்புகள், கால்மிதிகள், திரைச்சீலைகள் என அனைத்தையும் பயன்படுத்துவதால், வீட்டின் வெப்பத்தை வெட்டிவேர் எடுத்துக்கொள்கிறது.

இனிமேல் புதிதாக வீடு கட்டுபவர்கள் கலர், டிசைன் எனப் பார்க்காமல், கட்டடத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியம். 

இதேபோல, ஏற்கெனவே வீட்டைக் கட்டியிருக்கும் பலரும் தங்கள் விருப்பத்துக் கேற்றவாறு இன்ஜினீயர்கள் ஆலோசனையுடன் மாற்றிக்கொள்ளலாம்” என்றார்.

வெயிலிலிருந்து தப்பிக்க இயந்திரங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல், இப்படியும் மாற்றி யோசித்து, நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதன் மூலம் வெயில் கொடுமையிலிருந்து தப்பிலாமே!

No comments:

Post a Comment