Friday, April 14, 2017


அறம் வெல்லும், பாவம் தோற்கும்: கம்பன் பொன்மொழி (Post No.3735)

by Tamil and Vedas
Written by London swaminathan

Date: 18 March 2017

Time uploaded in London:- 8-51 am

Post No. 3735

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com


ஒவ்வொரு புலவனும் ஒரு பேருண்மையை உலகிற்கு உணர்த்த கவிதையைப் படைக்கிறான். கம்பனின் நோக்கம் இராம நாமத்தின் புகழைப் பரப்புவதும், தர்மம் இறுதியில் வெல்லும் என்பதையும் பறை அறிவிப்பதே. இடையிடையே தமிழையும் தமிழ் வளர்த்த அகத்தியனையும் வாயார வாழ்த்திச் செல்வான்.

சுந்தர காண்டத்தில் அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்று பாடி, ராமாயணத்தின் முடிவை முன் கூட்டியே அறிவித்து விடுகிறான்:-

அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்றும் உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்  உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி என்னாப் புகழ்ந்த அவள் இறைஞ்சிப் போனாள்
ஊர்தேடு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:-
ஐயனே! பிரம்மா சொன்னபடியே நடந்தது விட்டது. அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதை இன்னமும் சொல்ல வேண்டுமோ? நீ நினைப்பன யாவும் நிறைவேறும். உன்னால் செய்து முடிக்க முடியாதது எதுவும் இல்லை. பொன்னகரான இந்ந்கருக்குள் செல்க - என்று லங்காதேவி கூறினாள். அனுமானை வணங்கி வாழ்த்திவிட்டுப் பிரம்மலோகத்துக்குப் போனாள்.

அனுமனும் இலங்காதேவியும் முதலில் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்தபின்னர் அவள் வாயிலிருந்தே வந்த மொழி இது.

இதற்கு முந்தைய பாடலில்
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் - என்ற வரி மூலம் ராவணனின் இலங்கை அழியப்போவது பற்றியும் கம்பன் பாடிவிட்டான்.

இதைப் படித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பகவத் கீதை வரிகளாகும்; அங்கும் கிருஷ்ணன், முன்கூட்டியே கௌரவர்களின் அழிவைச் சொல்லி விடுகிறான்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ் க்ருதாம்
தர்ம சம் ஸ்தாபனார்தாணாய ஸ்ம்பவாமி யுகே யுகே (4-8)

நல்லோரைக் காப்பாற்றுவதற்கும் தீயோரை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதாரம் செய்வேன் - என்பது கண்ணன் மொழி.
 
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியும் மஹா பாரதக் கருத்தை -- நோக்கத்தை, அழகாக இயம்புவான்:

"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்" எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மேன்மேலுங் காண்போம்இன்று
கட்டுண்டோம்பொறுத்திருப்போம்காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன்பேர் என்றான்

-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்

சிலப்பதிகாரத்தின் கருத்தை சொல்லில் வடிக்கும் இளங்கோ அடிகள் பகர்வார்:
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

-- பதிகம், சிலப்பதிகாரம்

பொருள்:
அரசியல் நெறியில் தவறு செய்தாரை தர்மமே, எமன் உருவில் வந்து தண்டிப்பதும், பத்தினிகளை உயர்ந்தோர் போற்றுவது உண்மை என்பதும், முன்வினைப் பயன் ஒருவரைத் தொடர்ந்து வந்து மறுபிறப்பிலும்  பயன் தரும் என்பதும் அறநெறிகள். இங்கே சிலம்பு மூலம் வினை வந்து தண்டித்தது. அதனால் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் பாட்டுடைச் செய்யுள் இயற்றுவோம்.

மணிமேகலையின் காவியக்கருத்தை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (11-92)

என்று சீழ்தலைச் சாத்தானார் செப்புவார்.

பசிப்பிணியால் வாடுவோருக்கு அன்னதானம் அளிப்பதே சிறந்த அறம்.

No comments:

Post a Comment