துன்பங்கள் நீங்க வழி; அனுமன் கண்டுபிடிப்பு (Post No.3789)by Tamil and Vedas |
Written by London swaminathan
Date: 5 APRIL 2017
Time uploaded in London:- 9-012am
Post No. 3789
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
கம்ப ராமாயணத்தில் ராமன் புகழைத் தேடிக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை; கண்டவிடமெல்லாம் அவன் நாமமே; அவன் புகழைப் பாடத் தானே ராமாயணம் இயற்றினான் கம்பன். ஆயினும் அதை அவன் சொல்லும் அழகு, அவன் சொல்லும் இடம், அதைச் சொல்ல அவன் பயன்படுத்தும் கதாபாத்திரம் இவைகளை எல்லாம் நோக்குமிடத்து ராமன் புகழைவிட கம்பன் புகழ் ஓங்கிவிடும்.
‘சீதையைக் கண்டுபிடி’ -- என்று ராமன் கட்டளையிட்டான். அதைச் சிரமேற்கொண்டு பறந்தான் இலங்கைக்கு; வழியிலோ பல இடையூறுகள் அவைகளையும் கடந்தான். இலங்கைக்குள் வந்த பின்னரும் மனதில் கொஞ்சம் சம்சயம்; அதாவது ஐயப்பாடு.
இப்படி இடையூறுகளாக வருகிறதே, நான் என்ன செய்வது! அப்போது அவனுக்கு மனதில் பளிச்சிடுகிறது ராம நாமம்:
“ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீர
ஏறும்வகை எங்கு உ ளது? "இராம!" என எல்லாம்
மாறும் அதின்மாறு பிறிதுஇல் என வலித்தான்”.
---கடல்தாவு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:-
இது என்னடா! கடும் துன்பங்கள் வழியில் ஏற்படுகின்றதே! அரக்கர்களோ தெளிவில்லாதவர்கள். கெடுதல் இல்லாத அறம் என்பதையே அறியாதவர்கள். இவர்கள் செய்யும் தீமைகளைக் கடந்து செல்ல நான் என்ன செய்வேன்? இதற்கு வழி என்ன? இராமன் - என்று சொல்ல எல்லாத் துன்பங்களும் நீங்கும். இதைத் தவிர வேறு வழி இல்லை - என்று கருதிய அனுமன், ராம நாமத்தை உச்சரிப்பதை உறுதியாகப் பிடித்துக்கொண்டான்.
அவ்வாறு ராம நாமத்தைச் சொன்ன அனுமனுக்கு எவ்வளவு பெரிய வெற்றியும், புகழும் கிடைத்தது என்பதை நாம் அறிவோம்.
ராம! நீ நாமமு ஏமி ருசிரா!
வாழ்க இராமன் திரு நாமம்.
No comments:
Post a Comment