Tuesday, November 13, 2018

இந்த டிசைன் இப்படித்தானா?! thanks to vikatan.com

இந்த டிசைன் இப்படித்தானா?!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``தங்கைக்கு அண்ணனாக வளரும் ஆண் பிள்ளை, தன்னிடம் கூடுதல் பொறுப்பை உணர்கிறான். அவளுடைய எதிர்காலக் கனவுகளையும் சேர்த்தே அவன் தோளில் சுமக்கிறான். ஆனால், அவள் சார்ந்த அத்தனை முடிவுகளிலும் அவனது ஆதிக்கம் இருக்கும். தம்பியாக வளரும் ஓர் ஆண் பிள்ளைக்கு, அவன் அக்கா பல விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து ஒரு சின்னத் தாயாகவே அவனுக்காக மாறிப்போகிறாள். ஆனால், தாயாகி தன்னை வளர்த்தெடுப்பவள் மீதான ஆதிக்கமே அவன் இயல்பாக இருக்கிறது. வயது, உறவு என்பவற்றையெல்லாம் தாண்டி, ஓர் ஆணை எங்கும் எப்போதும் ஆதிக்க மனநிலையுடன் வளர்த்தெடுப்பதில் தன் தவற்றைக் குடும்பங்கள் சரிசெய்து கொள்ள வேண்டிய நேரம் இது’’ என்று சொல்லும் உளவியல் மருத்துவர் வசந்தா ஜெயராமன், அதற்கான ஆலோசனைகளை அளிக்கிறார்.
அம்மாவிலிருந்து ஆரம்பிக்கிறது!

“ஆண் குழந்தைக்குள், தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் தோன்ற முதல் காரணம், அவன் வீட்டின் சூழல். அப்பாவுக்கு அம்மா தரும் முக்கியத்துவமும் மரியாதையும் அம்மாவுக்கு அப்பா அவற்றை ஒருபோதும் தராமலேயே இருப்பதும், குழந்தையின் மனதில் ‘இந்த டிசைன் இப்படித்தான்’ என்று பதியவைத்துவிடுகிறது. அவனும் அதன் வார்ப்பாகவே வளர ஆரம்பிக்கிறான். கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் என எல்லா  உறவுகளிடமும் தன் அம்மா பொறுத்தும் அடங்கியும் செல்வதைப் பார்க்கும் ஆண் குழந்தை, நாளை தன் வாழ்க்கையில் வரும் பெண்களையும் அதே இயல்புகளுடன் எதிர்பார்ப்பவன் ஆகிப்போகிறான். எனவே, குடும்ப அமைப்பில் ஒவ்வோர் அம்மாவும் தனக்கான சுயமரியாதையை மீட்டெடுப்பதே, அவர்கள் அடுத்த தலைமுறைப் பெண்களுக்குச் செய்யக்கூடிய உதவி; அதைச் செய்யவேண்டியது அவர்கள் கடமை.

விதிகள் பொதுவானவைதானே?

ஆண், பெண் குழந்தைகள் சேர்ந்து வளரும் வீடுகளில் இருவருக்குமான விதிகள் பொதுவானவையாகவே இருக்க வேண்டும். பெண் குழந்தைகளைப்போலவே ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் வெளிப்படையாக இருக்கச் சொல்லிக் கேட்க வேண்டும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, எத்தனை மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்கிற கால அவகாசம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுபோல வகுக்கப்பட வேண்டும். அப்போதுதான், ‘நான் ஆம்பள, என்ன வேணும்னாலும் செய்யலாம், எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் முதலில் வெட்டப்படும். ஆண், பெண் என இருபால் குழந்தைகளையும் வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். சகோதரனின் துணியைச் சகோதரி மடிப்பதைப் போல, சகோதரியின் டம்ளர், தட்டை சகோதரன் கழுவிவைப்பதும் இயல்பாக வேண்டும். அப்போதுதான் நாளைய இல்லறத்தில் கணவன் மனைவி வேலைப் பகிர்வு என்பது சாத்தியப்படும்.

பாரபட்சம் கூடாது!


`ஆண் குழந்தை நிறைய சம்பாதிக்க வேண்டும்' என்பதற்காக அவனை உயர்ந்த படிப்பு படிக்கவைப்பது, `பெண் குழந்தை திருமணமாகி அடுத்த வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே' எனப் பெயருக்கு ஒரு டிகிரி வாங்கவைப்பது... மலையேற வேண்டிய பாரபட்சப் பார்வை இது. அதேபோல, காலேஜ் டூர் முதல் டூவீலர் விருப்பங்கள்வரை, ஆண் பிள்ளையின் பட்ஜெட்டைக் கணக்குப் பார்க்காமல் இருப்பதும், ‘பொம்பளைப் புள்ளைக்கு  எதுக்கு அவ்வளவு செலவழிக்கணும்?’ என்று முட்டுக்கட்டை போடுவதும் தவறு. பின்னாளில், உங்கள் பெண் பிள்ளையை உங்கள் ஆண் பிள்ளை பாரபட்சமாக நடத்த நீங்களே காரணமாகிவிடா தீர்கள். சகோதர - சகோதரி உறவு என்றும் உயிர்ப்புடன் இருக்க இனிவரும் காலகட்டங்களில் சமத்துவம் அவசியம் தேவை.

அடி அறவே கூடாது!

கோபத்தில் அப்பா, அம்மாவை அடிக்கும் வீடுகள் இங்கு உண்டு. விளையாட்டில் சகோதரன், சகோதரியை அடித்தால், ‘சரி விடு, அண்ணன்/தம்பிதானே அடிச்சான்’ என்று சமாதானப்படுத்துபவர்கள்... அதுவே சகோதரி, சகோதரனை விளையாட்டுப் பொழுதுகளில் அடித்தால்கூட, ‘ஆம்பளப் புள்ளைய அடிக்கிறியா?’ என்று ஆத்திரப்படுவதையே பார்க்கிறோம். வன்முறையை ஆண்களின் இயல்பாக வளர விடுவது, இந்தக் குடும்ப அமைப்பே. இந்த வன்முறை விதை, ஆண் குழந்தைகளின் மனதில் அறத்தை அகற்றி விடுகிறது. பாலியல் சீண்டல் முதல் ஆசிட் வீச்சு வரை அவனுக்குள் குரூரம் வளர்வதற்கு, அவன் வீட்டில் அவன் பழகிய, ‘தவறில்லை’ என்று தட்டிக்கொடுக்கப்பட்ட வன்முறையே காரணமாக அமையலாம். பெண்ணை எக் காரணம்கொண்டும் அடிக்கக் கூடாது, துன்பப் படுத்தக் கூடாது, அவள் கண்ணீருக்குக் காரணமாகக் கூடாது என்பதையே ஆண் மகனின் இலக்கணங்களாகச் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆண் கல்வி அவசியம்!

சில சமூகங்களில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும்; பெண் குழந்தை களுக்கும்கூட. இது பழக்க வழக்கங்களில், உரிமைகளில் இருந்தாலும் கல்வியிலிருந்து ஓரளவு அகற்றப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பெண் பிள்ளைகள், பள்ளிக்கல்வி, கல்லூரி, உயர்கல்வி என்று முன்னேறுகிறார்கள். இன்னொரு பக்கம், அதே சமூகங்களில் கட்டுப்பாடின்றி வளரும் ஆண்கள், கல்வி யிலிருந்து விலகுகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தச் சமூகங்களில் பெண்கள் படித்தும் ஆண்கள் அவர்களுக்குச் சமமாகப் படிக்காமலும் இருக்கிறார்கள். தன்னைவிட படிப்பில் குறைந்த ஆணை மணக்க பெண்கள் மறுக்கிறார்கள். இந்தச் சூழலில் இது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுக்கிறது. எனவே, ஆண்களுக்குத் தரப்படும் ஒழுக்க விதிவிலக்குகளே, அவர்களைக் கல்வியிலிருந்து விலக்கிவைக்கும் காரணியாகவும் ஆகிவிடுகிறது என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

‘`கூந்தல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் விளக் கெண்ணெயை லேசாகச் சூடுசெய்து உச்சந்தலையில் தடவி, தலை முழுக்க மசாஜ் செய்யவும். இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலை தலையை அலச, வறட்சி நீங்கி, கூந்தல் பட்டுப்போலப் பளபளக்கும்.

No comments:

Post a Comment