வெளியிடப்பட்ட நேரம்:19:27 (27/04/2019)
கடைசி தொடர்பு:19:27 (27/04/2019)
உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் 5 டிப்ஸ் #Relationships
சந்தோஷமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒரேயொரு மூலப்பொருள், மற்றவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாகப் பயணிப்பதுதான். நேர்மறை மற்றும் ஆதரவுத் தரும் உறவுகள் சுற்றி இருந்தால் முழுமையான வாழ்க்கையை அடைந்துவிட முடியும். ஆனால், சிக்கலற்ற வாழ்க்கை அமைவதென்பது அவ்வளவு எளிதல்ல. நேர்மறை உறவுகளைப் பராமரிக்க உதவும் இந்த ஐந்து விஷயங்களைப் பின்பற்றினாலே ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.
வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள்:
எந்த ஓர் உறவையும் தக்கவைத்துக்கொள்வதில் இருக்கும் மிகப் பெரிய சவாலே, ஒவ்வொருவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கடப்பதுதான். தனிப்பட்ட மனிதனின் பார்வையில் இவ்வுலகம் முற்றிலும் வித்தியாசமானது. அனைவரின் எண்ண அலைகளும் ஒரே போன்று இருப்பதில்லை. ஓர் உறவினை கட்டமைக்கும்போதும், விருப்பு வெறுப்புகளால் பல்வேறு விதமானப் பிரச்னைகள் ஏற்படும். அளவுக்கு மீறிய எதிர்மறை எண்ணங்கள் சில உறவுகளை முறித்தும்விடுகின்றன. ஒரே எண்ண அலையில் பயணம் செய்பவர்கள் எளிதில் ஆறுதல் காண்கின்றனர். ஆனால், இவர்களுக்குத் தொடக்கத்தில் ஆறுதல் கிடைத்திருந்தாலும், நூறு சதவிகிதம் நேர்மறை ஆதரவு கிடைப்பதென்பது மிகவும் கடினம். மற்றவர்களிடம் இருக்கும் வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடினால் நிச்சயம் அந்த உறவுக்குள் சிக்கல் ஏற்படாது.
திறம்பட கேளுங்கள்:
ஒருவரின் உரையாடலை முழுமையாகக் காதுகொடுத்து கேட்பதென்பது உண்மையில் மிகவும் கடினமான விஷயம். இந்த நேரங்களில், பலரின் அலட்சியம் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கும். ஆரோக்கியமான உறவை உருவாக்க, ஒருவரின் உரையாடலைக் கேட்பதிலும் அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதிலும் இருக்கும் பங்களிப்பு அதிகம். ஒருவரின் உரையாடலை முழுமையாகக் கவனிக்கும்போதுதான், அவர்களின் தேவை, உணர்வு, சிந்தனை, ஏக்கம் முதலியவற்றை புரிந்துகொண்டு, அவர்களின் உலகத்தில் பயணிக்க முடியும். இது பலவீனமான உறவுகளையும் வலிமை வாய்ந்ததாக மாற்றும்.
நேரத்தைச் செலவிடுங்கள்:
மனதுக்கு நெருக்கமானவர்களோடு நேரத்தைச் செலவிடுவது அவர்களுக்காக நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. அமர்ந்து உண்ணும் அளவிற்குக்கூட நேரமில்லாத இந்த அவசர உலகில், சிறிது நேரம் மனம் விட்டுப் பேசுவதென்பது கடினம் ஆனால், அத்தியாவசியம். தொழில்நுட்ப வளர்ச்சியால், தூரம் என்பது சுருங்கிப்போனாலும், எந்த ஒரு உறவையும் வலுவாக்குவது அவர்களோடு இணைந்து பயணிக்கும் உண்மையான தருணங்கள்தான். என்றைக்குமே மனிதனின் மாற்று, தொழில்நுட்ப உபகரணங்களாகாது என்பதைப் புரிந்து நடந்து கொண்டால், வலுவான உறவை நிச்சயம் கட்டமைக்க முடியும்.
தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்:
மனதில் நினைப்பதை தெளிவாகச் சொல்ல கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். உறவுகளில் சிக்கல் வருவதற்குப் பல நேரங்களில் தெளிவான தகவல் பரிமாற்றம் இல்லாமல் போவதும் ஒரு காரணம். உதாரணமாக, அலுவலகங்களில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லையென்றால், பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அதேபோலத்தான் உறவு முறைகளில் பிரச்னைகள் அதிகமாக வருவதற்குத் தவறான தகவல் பரிமாற்றமும் காரணம். நாம் என்ன நினைக்கிறோம்? எதைச் சொல்கிறோம்? சரியாகத்தான் சொல்கிறோமா? என்பதை அறிந்து பேசினாலே, பாதி பிரச்னைகள் நீங்கும்.
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்:
விமர்சனம் என்பது பலருக்கும் பிடிக்காத ஒன்று. ஆனால், உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும், விமர்சனங்கள் கொடுப்பதும் நல்ல விஷயமே. எந்த சூழ்நிலையிலும் ஒருவரின் கருத்துகளை பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியம். மற்றவர்களுக்கு அது ஒரு நல்ல வழிகாட்டியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு கருத்தும், இலவச தகவலே. அதனை எடுத்துக்கொள்வதும், விடுவதும் அவரவர்களின் விருப்பம். ஆனால், கருத்துகளைப் பதிவு செய்வது அவசியம்.
No comments:
Post a Comment