Thursday, December 5, 2019

மொபைல் போனை காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது தவறான பழக்கம் thanks to dinamalar

மொபைல் போனை காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது தவறான பழக்கம்


மொபைல் போன் பார்ப்பதால் விழித்திரை பாதிப்பு அதிகரித்து உள்ளதா?

மொபைல் போனில் உள்ள, நீல நிற ஒளியிலிருந்து வெளிப்படும் சில வேதி விளைவுகள், கண்ணில் உள்ள விழித்திரையை பாதித்து, சில சிதைவுகளை ஏற்படுத்துவது, ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது. எந்த அளவு நீல நிற ஒளி, எத்தனை நாட்கள் தொடர்ந்து கண்களில் பட்டால், இது போன்ற பாதிப்புகள் வரும் என்பதில், இன்னும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

கண்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன?
துாரத்தில் இருப்பதை பார்ப்பதற்கு வசதியாகவே, கண்களின் அமைப்பு இயற்கையிலேயே அமைந்துள்ளது. துாரத்தில் இருப்பதை பார்த்தால், கண்கள் ரிலாக்சாக இருக்கும். கண்களுக்கு அருகில் பொருட்கள் வர வர, தசைகள் அதிகளவில் வேலை செய்தால் தான், பிம்பங்களை தெளிவாக நம்மால் பார்க்க முடியும்.மொபைல் போனை பன்படுத்தும் போது, கண்களின் தசைகள் தொடர்ந்து வேலை செய்யும். குறிப்பிட்ட நேரத்தற்கு பின், கண்கள் சோர்ந்து, கண் எரிச்சல், நீர் வடிவது, தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கருவிழியில் ரத்த குழாய் இல்லாததால், கண் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் வழியாகவே, கண்களுக்கு ஊட்டச் சத்து கிடைக்கும்.ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும் போதும், கண் சுரப்பிகள் சுரக்கும் நீர், கண்களின் மேல் பகுதியில் உள்ள கருவிழியில், அடுக்கு போல் படரும். நிமிடத்திற்கு, 15 முறை இமைக்கும் போது, நீரில் இருந்து ஆக்சிஜனை, கருவிழி எடுத்துக் கொள்ளும்.மொபைல் போன் பார்க்கும் போது, அப்படியே வெறித்து பார்ப்போம். நம்மை அறியாமலேயே இமைப்பது குறைந்து விடும்.திரவ குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்றால் பரவாயில்லை; தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் பார்ப்பதால், கருவிழிக்கு ஆக்சிஜன் கிடைக்காது. எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் வறட்சியாகி விடும். இதனால், கண்களில் உறுத்தல், நீர் வருவது, மணல் போட்டு அறுப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும்

கிட்டப் பார்வை அதிகரித்து இருப்பது ஏன்?

இருபது ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், ஒரு வகுப்பில் இரண்டு அல்லது மூன்று பேர் கண்ணாடி அணிந்திருப்பர். இப்போது, 20, 30 என, எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீட்டிற்குள்ளேயே அமர்ந்து, மின் சாதனப் பொருட்களோடு விளையாடுவதே, இதற்கு முக்கிய காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெளியில் போய் விளையாடும் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை குறைவாக உள்ளது.தினமும், குறைந்தது ஒரு மணி நேரமாவது, குழந்தைகளை வெளியில் சென்று விளையாட, அனுமதிக்க வேண்டும். வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், மொபைல் போனே கதி என்று இல்லாமல் இருந்தாலே, கண்ணாடி போடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.விழித்திரையில், 'மேக்குலா' என்ற முக்கியமான பகுதி உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, இதில் உள்ள செல்கள் அழிந்து, நடுப்பகுதியில் பார்வை குறைந்து விடும். இரவில் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு, மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவோருக்கு, சீக்கிரமாகவே இப்பிரச்னை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, பிரச்னை வராது. ஆறு மாத குழந்தைக்கு கூட, சாப்பாடு ஊட்டும் நேரங்களில், மொபைல் போனை காட்டியபடியே ஊட்டுகின்றனர். இது, மிகவும் தவறான பழக்கம்.கடந்த, 10 ஆண்டுகளாகதான், அதிகளவில் மொபைல் பயன்படுத்துகிறோம் என்பதால், நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், மொபைல் யுகத்தில் பிறந்ததிலிருந்தே, ஊதா ஒளியை பார்த்தே வளரும் குழந்தைகளுக்கு, 30 வயதிற்குள் பாதிப்பு ஏற்படலாம்.கம்ப்யூட்டரில் பணிபுரிவோர் செய்ய வேண்டியது?தொடர்ந்து வேலை செய்யாமல், 20/20 விதியை பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி துாரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். அப்போது, கண்களில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.
- டாக்டர் திரிவேணி வெங்கடேஷ் கண் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை.)94444 44822

பணி, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், இன்றைய உலகில், குழந்தைகள் வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவாலான ஒன்றாகி உள்ளது. இதை எளிதில் கையாளும் முறை குறித்து விளக்குகிறார், தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனகுழந்தைகள் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம்.

சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கான பொது சிகிச்சை முறைகள் உள்ளதா?
சித்த மருத்துவம் என்பது, வாழ்வியல் முறையை சார்ந்தது. இதில், குழந்தைகளை பாதிக்கக்கூடிய நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், அதற்கான மருந்துகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் வளரும் விதம் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
சித்த மருத்துவத்தில், குழந்தைகள் வளரும் விதம், 10 பருவங்களாக பார்க்கப்படுகிறது. காப்பு, செங்கீரை, தாலாட்டு, முத்தம், சப்பாணி, வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபரை என, இவை வகைப்படுத்தப்படுகின்றன.இதில், முதல் ஏழு பருவங்கள், இரண்டு குழந்தைகளுக்கும் பொதுவானது. பெண் குழந்தைகளுக்கு மட்டும், இறுதி மூன்று பருவங்கள் மாறுபடும். இவை, அம்மானை, ஊஞ்சல், கழங்கு எனப்படும்.

பருவங்களை வகைபடுத்த காரணம்?
தாயின் கைகளுக்குள்ளேயே இருந்து குழந்தை வளரும் பருவம் காப்பு. அதற்கு அடுத்து, தவழும் பருவம் செங்கீரை. இவ்வாறு ஒவ்வொரு பருவமும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி திறனை அடிப்படையாக வைத்து, டாக்டர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. பின், அதற்கேற்ப மருந்துகள், உணவுகள் வழங்க பெற்றோருக்குஅறிவுறுத்தப்படுகிறது.

நோய் பாதிப்பு ஏற்பட காரணங்கள் என்ன?
தாயின் வயிற்றில் கரு உண்டானது முதல், அதன், 10 மாத வளர்ச்சிக்குள், தாயின் உணவுப் பழக்க வழக்கங்களால், குழந்தைக்கு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது, சித்த மருத்துவத்தில், அகக் கர்ணநோய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பின், வெளி உலக சீதோஷ்ண நிலைகளாலும், அவற்றிற்கு உடல் நலக்குறைவு ஏற்படும். இது, புறக் கர்ணநோயாகும்.இது தவிர, சளி, இருமல், ஜீரண கோளாறால் ஏற்படும் பாதிப்புகளான வாந்தி, கழிச்சல் முதலியனவும்,குழந்தைகளை தாக்கும் பிரதான நோய்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த நோய்களுக்கான மருந்துகள் என்ன?
அகம் மற்றும் புறக் கர்ண நோய் பாதிப்புகளுக்கு, உள், வெளி மருந்துகள் உள்ளன. உள் மருந்துகளை பொறுத்தவரை, மூலிகைகள் அடங்கிய சூரணங்கள், லேகியங்கள், மாத்திரைகளும், வெளி மருந்துகளில், மசாஜ், வர்மம் போன்றவையும் அளிக்கப்படுகின்றன.சளி, வாந்தி, கழிச்சல் உட்பட பிரதான நோய்களுக்கு தீர்வாக, பூண்டு, பெருங்காயம், ஜாதிக்காய், திப்பிலி, சுக்கு, அதிமதுரம் உட்பட, 11 மூலிகைகள் அடங்கிய, 'உறை மாத்திரை' மருந்தாக வழங்கப்படுகிறது. இதை, ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கலாம்.

நோய் தடுப்பு வழிகள் என்ன?
குழந்தைகளுக்கான நோய் பாதிப்புகளை தடுக்க, கால, நாள் ஒழுக்கம் என, இருமுறைகள் பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகின்றன.நாள் ஒழுக்கத்தில், குழந்தைகள், காலைக் கடன்களை கழிப்பது துவங்கி, தினசரி குளியலுக்கு பின், அவர்களின் தலைக்கும், வீடு முழுவதற்கும், சாம்பிராணி புகை போடுவது, வாரம் இருமுறை, எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது வரை, அனைத்தும் பெற்றோரால் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.கால ஒழுக்கத்தில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாந்திக்கு மருந்தும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பேதிக்கு மருந்தும் வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. பேதி மருந்தை பொறுத்தவரை, வேப்பிலைச் சாற்றை, கொடுத்தாலே போதும்.

தற்போதைய நிலையில் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பது எது?
நவீன தொழில்நுட்பம், குழந்தைகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. மொபைல் போன், டேப்லெட் உட்பட நவீன சாதனங்களால், மற்ற குழந்தைகளுடன் நெருங்கி பழகும் சூழல், முற்றிலும் தடைபடுகிறது. இதனால், அவர்கள், 'ஆட்டிசம்', அதிகபட்ச கவனச் சிதறல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை, குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், கபடி, தாயம், பல்லாங்குழி, நொண்டி, பச்சை குதிரை தாண்டுதல் உட்பட, நம் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாட அறிவுறுத்துவதால், மேற்கண்ட நோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை நாம் பாதுகாக்கலாம்.

பெற்றோருக்கு உங்களின் அறிவுரைகள்?
உணவு முறையை பொறுத்தவரை, பெற்றோர், துரித உணவுகளை தவிர்த்து, தினசரி, காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்களை உணவில் சேர்ப்பதுடன், நம் கை பதத்தில், வீட்டில் செய்யும் தின்பண்டங்களை சாப்பிட மட்டுமே, குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.அதேபோல், உளவியல் ரீதியான குறைபாடுகளை தடுக்க, குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவிட்டு, அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும், இரவு நேரங்களில், தலைக்கு மேல், மொபைல் போன், டேப்லெட் போன்றவற்றை வைத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்













நடைபயிற்சியின் நற்பலன்கள் என்னthanks to dinamalar

 'ஹார்ட் அட்டாக்' எதனால் வரும்?
நம் உடல் உறுப்புகளில் சீரான இயக்கத்திற்கு ரத்த ஓட்டம் வேண்டும். அதற்கு அவசியமான, இருதயத்திற்கான ரத்தநாளங்களின் உட்புறத்தில் கொழுப்புகள் படிவதால், அவற்றின்
உட்புற சுவர் கடினமாகிவிடும். அதனுடைய ஸ்திர தன்மையை இழந்துவிடும். இதனால் சீரான ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு, சிலநேரங்களில் கொழுப்பு அடைத்து 'ஹார்ட் அட்டாக்' ஏற்படுகிறது.

* அறிகுறிகள் என்ன?

நடுநெஞ்சில் வலி ஏற்படுதல், மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதற்கு சிரமப்படுதல், அதீத சோர்வு, தோள்பட்டையில் இனம்புரியாத வலி ஏற்படுவது, வாந்தி எடுப்பதற்கான உமிழ்நீர் சுரத்தல், அபரிமிதமாக வியர்வை ஏற்படுவது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு 'அட்டாக்' ஏற்படுமா?

எழுபத்தைந்து சதவீதம் பேர் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு ரத்தநாளங்கள் அடைப்பின்
காரணமாக இறப்பை சந்திப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களைவிட சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 சதவீதம் 'ஹார்ட் அட்டாக்' வர வாய்ப்புண்டு. அதேபோல்
'ஸ்ட்ரோக்' (பக்கவாதம்) வருவதற்கும் மிக அதிக வாய்ப்பு. ஆனால் முறையான உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு முறை பழக்க வழக்கங்களால் இதனை விரட்டி விட, கட்டுக்கள் வைத்துக் கொள்ள முடியும்.

* இருதயத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க உணவு முறைகள்?

உணவு முறையும், காலம் கடந்து சாப்பிடும் பழக்கமும் உடலை கெடுக்கும் செயல்கள்.
முறையான உணவு உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அதிக சர்க்கரை சத்துக்கள் நிறைந்த மாம்பழம், பலா, வாழைப்பழங்களை தவிர்த்துவிட வேண்டும். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, வெள்ளரி, மாதுளை, அத்திப்பழம்' என சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்களை சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு ஏதாவது மூன்று பழங்களை, 4 முறை சாப்பிட வேண்டும். காய்கறிகள், தானியங்கள், பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றை சாப்பிடுவது அவசியம்.

* 'ஹார்ட்- அட்டாக்'முதலுதவிகள்என்னென்ன?

பாதிப்பு ஏற்பட்டவர்களை நடக்கவிடமால், படுக்க வைத்து உடனடியாக ருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.

* இருதய பாதிப்பை கண்டறியும் மருத்துவ முறைகள்?

'எலக்ட்ரோ கார்டியோ கிராம்', 'எக்கோ கார்டியோ கிராம்' பரிசோதனைகள் மூலம் பாதிப்பை கண்டறியலாம். 'கார்டியாக் என்சைம்ஸ்' மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

* நடைபயிற்சியால் என்ன பயன்?

ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி முக்கியம். 'ஹார்ட் அட்டாக்கை'
துரத்தும் கருவி நடைபயிற்சி. இதனை 40 நிமிடங்கள் தினமும் பழக்கப்படுத்தினால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் சிலர் பேசிக்கொண்டே நடந்து வீணாக்குகிறார்கள். சீரான வேகத்தில் யாருடனும் பேசாமல் நடந்தால் பலன் அதிகம் கிடைக்கும். நடை பயிற்சியால்
உள் உறுப்புக்களுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக சென்று செயல்பாடு அதிகரிக்கும். பிராண வாயு செறிவு ஏற்பட்டு உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட நடைபயிற்சி உதவுகிறது.


ரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுக்களை குறைக்கவும், ரத்த நாளங்களின் உட்புறச்சுவரான 'எண்டோதீலியம்' என்கிற பகுதியில் ஸ்திர தன்மை மேம்படவும் நடைபயிற்சி உதவும். இதுதவிர எலும்பு, தசை வலிமை பெறும். ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும்.
இதனால் நடைபயிற்சியை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

போதுமென்ற மனமே நிம்மதி thanks to dinamalar

போதுமென்ற மனமே நிம்மதி7
Shares
எந்த நேரமும் அறுந்து போகும் ஒற்றை நுாலில் தொங்கிக் கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. நுாலை கண்டவாறு சுற்றி சிக்கலாக்கி கொள்வதுதான் நமது வழக்கம். உறவு, பணம், பொருள் என சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. ஏதாவது ஒரு உறவை இழப்பின், அடுத்த நொடியிலேயே வாழ்க்கை சூனியமாக, பற்றற்றதாக மாறிவிடும்.


நிம்மதியாக வாழ

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஞானியைப் பார்க்கச் சென்றார் ஒருவர். அப்பொழுது அந்த ஞானி முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் அவ்வப்போது முகத்தைப் பார்த்துக் கொள்வதும், பின்பு எடுத்து வைப்பதுமாக இருந்தார்.

எல்லாம் துறந்த ஞானி அடிக்கடி தன்னை கண்ணாடியில் பார்த்து அழகு படுத்திக் கொள்கிறாரே என நினைத்து தயங்கியவாறே அவரிடம் ஏன் கண்ணாடியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என கேட்டார். அவர் சொன்னார் 'தம்பி, எனக்கு கவலை, பிரச்னை, துன்பம் வரும்பொழுதெல்லாம், யார் காரணம் என்று தெரிந்துகொள்வதற்காக இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்ப்பேன். யார் என்று தெரிந்து விடும். உடனே என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன். ஆகையால் தான் என்னால் கவலையின்றி இருக்கமுடிகிறது' என்றார். பிரச்னைக்கு நாம் தான் காரணம் என விளக்கினார்.


வாலறுந்த நரி

காட்டில் உள்ள நரி பக்கத்தில்இருக்கும் திராட்சை தோட்டத்திற்கு அடிக்கடி திருட்டுத்தனமாக சென்று திராட்சையை சாப்பிட்டு வந்தது. ஒருநாள் நரியை கையும் களவுமாக பிடித்த தோட்டக்காரன் அதன் வாலை ஒட்ட வெட்டி விட்டான். நரிக்கு அவமானமாகி விட்டது. எப்படிடா இந்த ஊரில் தலை காட்டுவது, என தயங்கியவாறு காட்டுக்குள் நுழைந்தது. எல்லா நரிகளும் அதனைப் பார்த்து சிரித்தன.

உடனே அந்த நரி சொன்னது, 'என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள், நான் கடவுளைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் சொன்னதால் தான் இந்த வாலை நறுக்கி விட்டேன்; நான் கடவுளின் அவதாரம்' என்றது.

நம்பாமல் எல்லா நரிகளும் வாலறுந்த நரியை பொறாமையாக பார்த்தன. ஒரு நரி மட்டும் அதனிடம், 'நானும் கடவுளைப் பார்க்கலாமா?' என கேட்டது.'அந்த தோட்டத்திற்கு சென்றால் கடவுள் இருப்பார்' என நரியை திராட்சை தோட்டத்துக்கு போகச் சொன்னது. புதிதாக வந்த நரியை பிடித்த அந்த தோட்டக்காரன் அதன் வாலையும் ஒட்ட வெட்டி விட்டான்.



சிக்கலில் தவிக்கிறோம்

கடும் கோபத்துடன் வந்த புதிய நரி, ஏற்கனவே வாலறுந்த நரியைப் பார்த்து, 'ஏன், என்னை ஏமாற்றினாய்?' என திட்டியது.அப்பொழுது பழைய நரி சொன்னது, 'எனக்கும் வாலில்லை. உனக்கும் வாலில்லை. காரணத்தை வெளியே சொன்னால் நமக்கு அசிங்கம். ஆகவே இந்த டயலாக்கைச் சொல்லி எல்லோரையும் திராட்சை தோட்டத்துக்கு அனுப்புவோம். அப்பொழுது தான் வாலில்லாத நரிகளை அதிகமாக்கி நாம் பெரும்பான்மை பெற முடியும்' என சொல்லியது.எல்லா நரிகளும் வால் இழந்தது போல் நாமும் நமது ஆசை மற்றும் தேவைகளுக்காக சந்தோஷத்தை அடகுவைத்து பெரும் தொகை கடன் வாங்கி பொருளாதார சிக்கலில் தவிக்கிறோம்.


நம்பிக்கை விதைப்போம்

ஒரு பெரிய கப்பல் வெளிநாட்டுக்கு புறப்பட்டது. பயணம் செய்பவர்களுக்கு இரண்டு பேருக்கு ஒரு அறை கப்பலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் முரட்டுத் தனமாக ஒருவன் இருந்தான். மற்றொருவன் சாதுவாக பணிவாக இருந்தான்.இருவரும் கை நிறைய பொருளும், பணமும் வைத்திருந்தனர். சாதுவாக இருந்தவனுக்கு அடுத்தவனைப் பார்த்து பயம். நம் அறையில் இருப்பவன் பக்கா முரடனாக இருக்கிறானே. இந்த பொருளை நம்மால் பத்திரமாக எடுத்துக் கொண்டு செல்ல முடியுமா என தயங்கியவாறு பொருளை எல்லாம் ஒரு பெட்டியில் வைத்து நேராக கப்பலின் பாதுகாப்பு அதிகாரியை அணுகி, 'நான் ஊர் சென்று சேரும் வரை இந்த பெட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதற்குள் பணமும் நகையும் இருக்கின்றன' எனக் கொடுத்தான்.


மற்றவர்கள் மேல் பழி

அதிகாரி, 'உன் அறையிலேயே வைத்து விட வேண்டியது தானே. பத்திரமாகத் தானே இருக்கும்' என்றார். 'இல்லை ஐயா. என் அறையில் என்னுடன் ஒரு மகாமுரடன் தங்கி இருக்கிறான். அவனை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. ஆகையால் இந்த பெட்டியை உங்களிடம் கொடுத்து வைக்கிறேன். ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கிறேன்' என்றான். 'கொஞ்ச நேரம் முன்புதான் உங்கள் அறையிலிருந்த அந்த முரடன், அவனுடைய பெட்டியை கொடுத்துவிட்டு போனான். என் அறையில் இருப்பவன் பார்ப்பதற்கு சாது மாதிரி தெரிகிறான், ஏமாற்றுகாரனாக இருப்பானோ என பயமாக இருக்கிறது, இந்த பெட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு போனான்' என்றார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் நம்பாமல் மற்றவர்மேல் பழி போட்டு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


நேர்மையே நிம்மதி

மருத்துவ முகாமில் ஒரு முதியவரை சந்தித்தேன். பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். டக்கென அடையாளம் தெரிந்தது. நன்கு மெலிந்திருந்தார். இனம் புரியாத சோகம் முகத்தில். 'நல்லா இருக்கீங்களா, உங்க பசங்க எப்படி இருக்காங்க' என்றேன். தனது மகன்களை எனது மருத்துவமனைக்கு முன்பு அழைத்து வருவார். மிகவும் வசதியானவர். பொதுப்பணித் துறையில் உயர்ந்த பதவியில் இருந்தவர்.

'வருமானம் நல்லா இருந்தது டாக்டர். கூடுதல் வருமானம் உண்டு. உங்க கிட்ட கூட்டிட்டு வருவேனே அந்த இரண்டு பசங்களையும், அமெரிக்காவில் படிக்க வைத்தேன். என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் அவங்க படிப்பு வேலைக்கு செலவு பண்ணினேன். பணம், பணம் என என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கண்டுபிடித்து பணம் சம்பாதித்தேன்.

பசங்களும் வெளிநாட்டில் செட்டில் ஆக, நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், மனைவி திடீரென இறந்துவிட உடல் மற்றும் மனதளவில் பலகீனமானேன். பசங்க என்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இல்லை. இங்கு வருவதுமில்லை. நான் செய்து வந்த தொழிலையும் செய்ய முடியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக நஷ்டம் ஆகி ஓய்வுக்குப் பின் கடனாளி ஆனேன். ஒரு முதியோர் இல்லத்தில் காவலாளியாக தங்கியிருக்கிறேன். பென்ஷன் பணம் வட்டி கட்டவே சரியாக உள்ளது. நான் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. எத்தனை பேர் வேதனையுடன் இந்த பணத்தை கொடுத்திருப்பார்கள் என இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

மனைவி இறந்த ஒரே நாளில் என் வாழ்க்கை தலைகீழாகி விட்டது. நான் வாங்கிய லஞ்சப்பணம் எதிர்கால நிம்மதி தொலைத்து விட்டது. இனி கடவுள் விட்ட வழி. இன்று அனாதையாக காலத்தை கழித்து வருகிறேன்' என கலங்கினார்.


நிரந்தரமில்லை

பிள்ளை, பொருள், பணம் என நாம் சேர்க்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் நேர்மையாக நிம்மதி யாக வாழ முடியும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரை மட்டும்தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும். நாம் சேர்க்கும் பணம், பொருள், எல்லாவற்றையும் விட உடலளவிலும், மனதளவிலும் சந்தோஷமாக இருந்த கணங்களே, தருணங்களே என்றும் நிலைத்து நிற்கும்.-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்

மருத்துவ எழுத்தாளர், மதுரை.
98421 67567

Tuesday, December 3, 2019

குழந்தையில் பழகும் துாங்கும் பழக்கம் வாழ்க்கை முழுவதும் தொடரும் thanks to dinamalar.com

குழந்தையில் பழகும் துாங்கும் பழக்கம் வாழ்க்கை முழுவதும் தொடரும்

 


குழந்தைகளுக்கு துாக்கமின்மை பிரச்னை வருமா?
'என் குழந்தை, ராத்திரியில் துாங்கவே மாட்டேங்குது டாக்டர்' என்று சொல்லும் பெற்றோர், சமீபத்தில் அதிகரித்து உள்ளனர். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவு, போதுமான அளவு தண்ணீர் எவ்வளவு முக்கியமான அடிப்படை தேவையோ, அதற்கு சற்றும் குறைந்தது இல்லை, குறிப்பிட்ட மணி நேர துாக்கமும். இதை, பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை.





குழந்தைகளின் துாக்கமின்மைக்கு என்ன காரணம்?


திட்டமிட்டே எந்தக் குழந்தையும், துாக்கத்தை தவிர்ப்பது இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்து, பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம். மாலை வீடு திரும்பியதும், டியூஷன், சிறப்பு வகுப்புகளுக்கு செல்கின்றனர். அவற்றை முடித்து வீட்டிற்கு வந்ததும், மொபைல் போன், 'டிவி' ஆகியவற்றை பார்க்கின்றனர். நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என, பெற்றோரும் கண்டு கொள்வதில்லை.அதன்பின், தாமதமாக இரவு உணவு சாப்பிட்டு, தாமதமாக துாங்கி, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். இந்த பரபரப்பில், குழந்தைகளுக்கு போதுமான அளவு, துாங்குவதற்கு நேரமே இருப்பதில்லை.

இதனால் என்ன பிரச்னைகள் ஏற்படும்?
போதுமான அளவு துாக்கம் இல்லாத குழந்தையை, தினமும் குறிப்பிட்ட நேரம், ஆழ்ந்து உறங்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்தாலே, வித்தியாசத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். துாக்கம் இல்லாவிட்டால், வகுப்பில் கற்றுக் கொள்வது, மனதில் நிற்காது; மறந்து விடும். கேட்கும் கேள்விகளுக்கோ, விருப்பங்களுக்கோ சரியான பதில் தர முடியாது; எதிலும் ஆர்வம் இருக்காது. எது கேட்டாலும் பொறுமையில்லாமல், எரிச்சலாக பதில் சொல்வர். விளையாட்டில் ஆர்வம் இருக்காது. பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், நண்பர்களுடன் இணக்கமான உறவு இருக்காது.




ஆழ்ந்த துாக்கத்தால் ஏற்படும் பலன்கள்?


எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பர். எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்வது சுலபம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற தொற்றுகளை எதிர்த்து போராடும் வலிமை கிடைக்கும்; கற்பனை திறன் அதிகரிக்கும். எப்போதும், குழந்தைகளின் இயல்பான, உற்சாக மனநிலையில் இருப்பர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, அவர்களே சுலபமாக தீர்த்துக் கொள்ளும் திறன் வளரும்.

எத்தனை மணி நேரம் துாக்கம் அவசியம்?
மூன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள், பதினொன்று முதல், பதின் மூன்று மணி நேரம் துாங்க வேண்டும். ஐந்து முதல் எட்டு வயதிற்கு, பத்து முதல், பதினொன்று மணி நேரம் துாக்கமும், ஒன்பது முதல் பதினொன்று வயது வரை, ஒன்பது முதல் பதினொன்று மணி நேரமும், வளர் இளம் வயதான, பதின்மூன்று முதல் பதினேழு வயது வரை, ஒன்பது முதல் பத்து மணி நேர துாக்கமும் அவசியம். துாக்கம் என்றால், இரவு முழுவதும் இடையில் எழுந்திருக்காமல், ஆழ்ந்து துாங்க வேண்டும்.

ஆரோக்கியமான துாக்கத்திற்கு வழி முறைகள்?
குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க பழக்க வேண்டியது முக்கியம். அதிகபட்சம், 9:00 மணிக்கு முன், குழந்தைகளை துாங்க வைத்து விட வேண்டும். துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இரவு உணவை கொடுத்து விட வேண்டும். துாங்கப் போகும் முன், பசித்தால் பால் தரலாம்.மாலை நேரத்தில், ஒரு மணி நேரம் விளையாட அனுமதிப்பது, துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், மொபைல்போன், 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களை தராமல் இருப்பது மிகவும் முக்கியம்.

படுக்கை அறை, விரிப்புகள், திரைச்சீலைகள், போர்வை போன்ற, குழந்தைகள் பயன்படுத்தும் அனைத்தும், சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறை, சத்தம் இல்லாமலும், இருட்டாகவும் இருப்பது முக்கியம். அவசியம் இருந்தால், 'ஜீரோ வாட்ஸ்' விளக்குகளை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பய உணர்வு இல்லாமல், பாதுகாப்பாக துாங்குவதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும். குழந்தை பருவத்தில் உருவாகும் துாங்கும் பழக்கம், வாழ்க்கை முழுவதும் வரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

டாக்டர் லலிதா ஜானகிராமன்குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.)044 - 4200 1800

Saturday, November 30, 2019

டெங்கு' காய்ச்சலுக்கு மூலிகைகள் thanks dinamalar.com


பீஹார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. முதியவர் ஒருவர், காட்டில் தினமும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள், காலில், 'நறுக்'கென ஏதோ குத்தியது போல உணர்ந்தார்; குனிந்து பார்த்த போது, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.ஏதோ பூச்சி கடித்து விட்டது என நினைத்து, சுற்றும் முற்றும் பார்த்த போது, சில அடி துாரத்தில், கருநாகப் பாம்பு சுருண்டு, நெளிந்து கொண்டிருந்தது.உடனடியாக, பக்கத்திலிருந்த வேப்ப மர இலைகளை பறித்து, அப்படியே வாயிலிட்டு மென்று விழுங்கினார்.
கடிபட்ட இடத்தின் மீது, வாயில் இருந்த சாற்றை பூசினார்.கருநாகப்பாம்புசில நிமிடங்கள் கழித்து பார்த்த போது, அந்த கருநாகப் பாம்பு செத்துக் கிடந்தது. அதை ஒரு கம்பில் துாக்கியபடி, ஊருக்குள் சென்றார். மக்கள், இவர் கையில் உள்ள கருநாகப் பாம்பை பார்த்து, என்ன, ஏது என விசாரிக்க, நடந்ததை விவரித்தார்.சில நாட்கள் கழிந்தன. அதன் பிறகும் அந்த முதியவருக்கு ஒன்றும் நேரவில்லை. பாம்பு கடித்தும் ஒன்றும் ஆகாத அந்த முதியவர் பற்றி அறிந்த நிருபர்கள், அவரை தேடி, பேட்டி எடுத்தனர்.'பாம்பு கடித்த பிறகும், எப்படி நீங்கள் பாதிப்பின்றி இருக்கிறீர்கள்; உங்களை கடித்த பாம்பு, இறந்தது எப்படி?' என, அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர்.
படிப்பறிவு சிறிதும் இல்லாத அந்த பெரியவர் கூறியதாவது:இந்த காட்டில் தான், 40 - 50 ஆண்டுகளாக ஆடு, மாடு மேய்த்து வருகிறேன். என் அம்மா, 'காட்டில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவை கடித்து விட்டால், பாதிப்பு ஏற்படாமலிருக்க, சர்ப்பகந்தா, நிலவேம்பு, மலைவேம்பு செடிகளின் இலைகளை பறித்து சாப்பிடு' என்பார்.
அதன்படி, அவற்றில் ஏதாவது ஒரு மூலிகையை தினமும் பறித்து சாப்பிடுவேன். என் ரத்தத்தில் கலந்திருந்த, மூலிகைகளின், விஷ முறிப்பு சக்தி தான், பாம்பு கடித்த பிறகும் நான் சாகாததற்கு காரணம். என் உடலில் சேர்ந்திருந்த அந்த சக்தி தான், என்னைக் கடித்த பாம்பையும் கொன்றது.இவ்வாறு அவர் கூறினார்.இதிலிருந்து நாம் பெற வேண்டிய தகவல், உடம்பில், நோய் மற்றும் விஷம் எதிர்ப்பு சக்தி இருக்குமானால், கொடிய நாகப் பாம்பின் விஷம் கூட முறிந்து விடும்; கடித்த பாம்பும் இறந்து விடும் என்பதாகும்.இந்த முதியவர் உண்ட மூலிகைகளான, மலை வேம்பு, சர்ப்பகந்தா, நிலவேம்பு போன்றவை, தமிழக சித்தர்களின், மூலிகை மருத்துவத்தில் மிகச் சிறந்த நஞ்சு முறிப்பு மூலிகைகளாக பயன்படுத்தப் படுகின்றன.பல நுாறு ஆண்டுகளாக, மக்களை விஷக்கடிகளிலிருந்து மீட்ட, இந்த மூலிகைககள் தான், மனித குலத்தின் உண்மையான மெய்க்காப்பாளர்கள்.ஆனால், இவை பற்றிய வரலாற்று பதிவுகள், கிராமத்து கதைகளாகவும், பாடல்களாகவும், பழமொழிகளாகவும் இருப்பதால் அழிந்து வருகின்றன. இவற்றை ஆராய்ந்தாலே, 'டெங்கு' காய்ச்சல் மட்டுமல்ல, புற்றுநோய்க்கும் கூட மருந்து கண்டுபிடிக்க முடியும் என்பது, என் எண்ணம்.

அந்த வகையில், 2006 - 2007ல் நான் அறிமுகப்படுத்திய, நிலவேம்பு கஷாயம், இன்று, டெங்கு காய்ச்சலுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது என்பது, அனுபவ உண்மையாகி உள்ளது. எனினும், அதற்கான, இன்றைய நவீன ஆய்வு விளக்கம், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நம் அலட்சியமாகும்.நோய் எதிர்ப்புச் சக்தி நிலவேம்பு கஷாயத்தை, கொசு உற்பத்தியாகும் இடத்தின் மீது, 'ஸ்பிரே' செய்தாலே போதும்; டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தி குறையும். இனியாவது நிலவேம்பு, மலைவேம்பு, மாவிலை, நொச்சியிலையை கஷாயம் செய்து குடிப்பது போல, கொசு உற்பத்தியாகும் இடங்களில், ஸ்பிரே செய்யவும் வேண்டும்.அதுபோல, வேப்பெண்ணெயில், 'லெமன் கிராஸ் தைலம்' கலந்து, ஸ்பிரே செய்தாலும் கொசுக்கள் பரவாது.

மூலிகைகளை அருந்தி கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், ரத்தத்தை வலுப்படுத்திக் கொண்டால், நம்மை கொசு கடித்தாலும் இறந்து விடும்.நிலவேம்பு, மலைவேம்பு, வில்வம், அருகம் புல், சீந்தில், நெல்லி, மஞ்சள், கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு, பற்பாடகம், விஷ்ணு கரந்தை, கோரைக்கிழங்கு, சந்தனம், சித்தாமுட்டி, சித்திரமூலம், தாமரை போன்ற மூலிகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே போதும்; நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இவை, பக்க விளைவு தராத நல்ல மூலிகைகள். மேற்கண்ட மூலிகைகளை, ஒரு ஆய்வுத் திட்டமாக உருவாக்கி, 'அலோபதி' எனப்படும் ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவ நிபுணர்களும் இணைந்து, 'காய்ச்சலை ஒழிக்கும் மூலிகைகள்' என்ற தலைப்பில், ஆய்வு திட்டத்தை மேற்கொண்டால், டெங்கு காய்ச்சலை முற்றிலும் தடுக்கலாம்.இந்த ஆய்வுகளை, தனி மனிதனாக நான் மட்டுமே செய்ய முடியாது. சென்னையில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின், மருந்து ஆய்வுதுறை, தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்தா மருத்துவ கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள், இதை ஆய்வு திட்டமாக ஏற்று, ஆய்வு மேற்கொண்டால், மூலிகைகளின் தெய்வீக குணங்கள், பல நோய்களுக்கு மருந்தாகும்.நில வேம்புக் குடிநீர்அதுவரை பொதுமக்கள் அறிய வேண்டிய சில தகவல்கள்:நான் அறிமுகம் செய்த நில வேம்பு கஷாயம், இன்று நன்கு பயனாகி வருகிறது என்றாலும், இது மட்டுமே போதாது. பின் வரும், மூலிகை மருந்துகளையும் மக்கள் பயன்படுத்தலாம். விஷ்ணு கரந்தை - இதை தினசரி கஷாயம் போட்டு சாப்பிடலாம் சீந்தில் - இதையும் கஷாயமாக அருந்தலாம் பற்பாடகம் - இதையும் உலர்த்திப் பொடி செய்து, கஷாயம் செய்து அருந்தலாம் மலை வேம்பு - தினமும், ௧௦ - ௨௦ இலைகளைப் பறித்து, ௧௦ மிளகு சேர்த்து அரைத்து, ஒரு வேளை சுடு தண்ணீருடன் அருந்தலாம் கருந்துளசி - அரை பிடி எடுத்து, ஒன்றரை குவளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கி கொதிக்கும் போது, கிராம்பு - ௫, மிளகு - ௧௦ சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் ௨ ஸ்பூன் கலந்து, காலை - மாலை பருகலாம் வில்வம், வன்னி ஆகிய இரு மூலிகை இலைகளைப் பறித்து, உலர்த்திப் பொடி செய்து, அரை ஸ்பூன் எடுத்து, ஒரு குவளை கொதி நீரில் போட்டு, கஷாயம் செய்து பருகலாம்.சென்னை, அடையாறில் உள்ள, இந்திய மருத்துவ உற்பத்தி சங்கம் எனப்படும், 'இம்ப்காப்ஸ்' கடந்த, ௭௫ ஆண்டுகளாக, நம் பாரம்பரிய மருந்துகளை தயாரித்து வருகிறது. அங்கிருந்து, சுதர்சன சூரணத்தை வாங்கி, தினமும் காலை, மாலை, அரை ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீரில் பருக வேண்டும்.மேலும், தாளிசாதி சூரணம் என்ற மூலிகை மருந்தை, காலை, மாலை, அரை ஸ்பூன் தேனுடன் குழைத்து சாப்பிடலாம்.வசந்த குசுமாகரம் என்ற சித்த மருந்தை, காலை ஒன்று, இரவு ஒன்று என எடுத்து, வெற்றிலையுடன் சேர்த்து, தேன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட, டெங்கு காய்ச்சல் ஓடியே போய் விடும்.எனினும், இந்த மருந்துகளை, சித்த மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்வது நல்லது!தொடர்புக்கு: ௯௦௦௩௦ ௩௧௭௯௬

Sunday, November 3, 2019

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? thanks dinamalar.com

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01நவ
2019
00:00
உணவு பழக்க மாற்றம், குழந்தைகளின் உடல் நலத்தை பாதித்துஉள்ளதா?
பள்ளி செல்லும் வயதில் உள்ள, 7 - 12 வயது குழந்தைகளில், 25 சதவீதம் பேருக்கு மேல், மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. இதற்கு, உடல்ரீதியில் பல காரணங்கள் இருந்தாலும், மாவுச்சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ள துரித உணவுகளை சாப்பிடுவதே, பொதுவான காரணம். ஏழு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கும், இப்பிரச்னை அதிகரித்து உள்ளது.

பிரச்னைக்கு உடல் ரீதியான காரணங்கள் என்ன?
குடல் அடைப்பு, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு, ஆசனவாய் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், பெருங்குடலில் உள்ள நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற, பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு களால், இந்தப் பிரச்னை வரலாம். 'மெட்டபாலிசம்' என்று சொல்லப்படும், உடல் உள் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களாலும், மலச்சிக்கல் பிரச்னை வரலாம்.மிகவும் கெட்டியான மலம், ஆசனவாய் வழியே வரும் போது, அந்த இடத்தில் புண் ஏற்படும். அடிக்கடி இது போல ஏற்பட்டால், வலிக்கு பயந்து, குழந்தைகள் மலம் கழிப்பதைத் தவிர்க்க முற்படுவர். எனவே, மலம் பெருங்குடலிலேயே தங்கி விடும். தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதாலும், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக இருந்தாலும், இப்பிரச்னை வரும்.பிறவியிலேயே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை, அறுவை சிகிச்சை மூலமும், மற்ற பிரச்னைகளை, சரியான மருந்துகள் தருவதாலும் சரிசெய்ய முடியும்.

இதனால் மனநல பாதிப்புகள் ஏற்படுமா?
தினமும் மலம் கழிக்காவிட்டால், பெருங்குடலில் வாயு உற்பத்தி ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இந்த வாயு, அப்படியே தங்கி, ரத்தத்தில் கலந்து, எந்த விஷயத்திலும் முழு ஈடுபாடு இல்லா மனநிலையை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ள குழந்தைகள், வகுப்பில், கொட்டாவி விட்டபடி, சோம்பலாக இருப்பர். இவர்களால், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. பிரச்னை வந்த பின், மனதளவில் ஏற்படும் மாற்றம் இது.மற்றொரு புறம், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களாலும், பழக்கத்தினாலும், 95 சதவீதம் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை ஏற்படுகிறது. மன பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் அரிதாக ஏற்படலாம்.பெற்றோரிடையே ஏற்படும் சண்டை, விவாதங்கள், கருத்து மாறுபாடுகளால் சத்தம் போடுவது, குழந்தைகளின் மனதில், அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும். இதனாலும், மலச்சிக்கல் ஏற்படலாம்.

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?
அதிக நார்ச்சத்து உள்ள, கீரை, காய்கறி, பழங்கள், தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அதிகமாக, மைதா மாவு சேர்ப்பது, நீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, மலம் கெட்டியாகி விடுகிறது.பால் வகை பொருட்கள், வறுத்த, பொரித்த உணவுகளை, குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும்.பிஸ்கெட், சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை, மைதா உள்ள உணவுகளுக்கு பதிலாக, நம் வழக்கத்தில் உள்ள பாரம்பரிய உணவுகளை, சாப்பிட பழக்குவது நல்லது. திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், குழந்தையை பழக்க வேண்டும்.

பழக்கத்தினால் பிரச்னையை எப்படி தவிர்க்கலாம்?
பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இரவில், அதிகபட்சம், 9:00 மணிக்குள் துாங்க வைத்து, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். காலையில் எழுந்ததும், கழிப்பறைக்கு செல்லும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்திய அமைப்பில் உள்ள, 'டாய்லெட்'டை பயன்படுத்த, பழக்க வேண்டும். இதனால், குழந்தைக்கு, அடிவயிற்றில் நன்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் எளிதாக கழிக்க வாய்ப்பு ஏற்படும்.

டாக்டர் கே. சரவணபவன்
குழந்தைகள் நல மருத்துவர்,
சென்னை
98412 89896